அறிமுகம்

இந்திய வேளாண்மை பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மையுடையது. அப்போதைய பயிர் இரகங்கள் மற்றும் பயிர் உற்பத்தி முறைகள் அனைத்து மக்களுக்கும் உணவளிக்க போதுமானதாக இருந்தது. 1950 மற்றும் 60-ம் ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. இதனை சரிசெய்யவே இந்தியா பசுமைப்புரட்சியில் காலடி எடுத்து வைத்தது.

இயற்கை வளங்களின் நீடித்த, நிலைத்த மேலாண்மை தொடர்பான திட்டமிடுதல் மற்றும் முடிவெடுத்தலில் உள் நாட்டு தொழில்நுட்பங்கள் (Indigenous Technologies) முக்கிய பங்கு வகிக்கின்றன. பசுமைப் புரட்சியின் விளைவாக விவசாய உற்பத்தி அதிக அளவில் இருந்த போதிலும் புதுமையான தொழில்நுட்பங்களை கடைபிடிக்க விவசாயிகள் அதிக அளவில் முதலீடு செய்ததால் அவர்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கி இருக்கின்றனர். எனவே, இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் நவீன தொழில்நுட்பங்களைக் காட்டிலும் பழமையான தொழில்நுட்பங்களே விவசாயிக்கு பொருளாதாரரீதியாக நன்மை பயக்கும். இது போன்ற தொழிற்நுட்பங்களை நம் முன்னோர்கள் கையாண்டதால் இன்றைய விவசாயிகளைப் போல் பூச்சிகள், நோய்கள் பெருக்கம் மற்றும் பொருளாதார ரீதியான பிரச்சனைகள் ஆகியவற்றை அவர்கள் எதிர் கொண்டதில்லை.

பூச்சி மேலாண்மையில் உள்நாட்டு தொழில்நுட்பங்கள்

பழமையை கடைபிடிக்கும் விவசாயிகள் இன்றும் தங்களிடம் உள்ள இடுபொருட்களைக் கொண்டு பயிர் சுழற்சி, பலபயிர் சாகுபடி, ஊடுபயிர் முறைகளை பின்பற்றுகின்றனர்.

எடுத்துக்காட்டு

துலுக்கமல்லியும் பருத்தியும் ஊடுபயிராகப் பயிரிடும் போது பருத்தியிலுள்ள அமெரிக்கன் காய்ப்புழுவை துலுக்கமல்லி கவர்ந்திழுக்கிறது.

கத்தரியுடன் வெங்காயம் ஊடுபயிராகப் பயிரிடும் போது கத்தரியில் வரும் தண்டு மற்றும் காயத்துளைப்பான் கட்டுப்படுத்தப்படுகிறது.

முட்டைகோசில் கொக்கிப்புழுவைக் கட்டுப்படுத்த வரப்போரத்தில் ரோஸ்மேரி, புதினா போன்ற செடிகளை நடலாம்.

இஞ்சி நடவு செய்த வயலின் ஓரத்தில் வளர்ந்திருக்கும் எருக்கு, இஞ்சியில் சேதம் விளைவிக்கும் புழுக்களை கவர்கிறது.

நிலக்கடலை பயிரிடப்பட்ட நிலத்தை சுற்றி தட்டைப்பயறு மற்றும் ஆமணக்கு பயிரிடும் பொழுது அவை நிலக்கடலையில் வரும் சிவப்பு கம்பளிப் புழுக்களை கவரும்.

பூச்சி மேலாண்மையில் தாவர பூச்சிக்கொல்லியின் பங்கு

வேம்பு

விதைகள் மற்றும் தூள் செய்யப்பட்ட வேப்பங்கொட்டைகளை கலந்து வைக்கும் பொழுது காப்ராவண்டு மற்றும் சிறிய தானியவண்டுகளை இது கட்டுப்படுத்துகிறது.

பூவரசு

இம்மரத்தின் இலைச்சாறு நெல்லில் படைப்புழுக்கள், கரும்பில் தண்டு துளைப்பான் மற்றும் தானிய பயிர்களில் வரும் காயத்துளைப்பான் ஆகியவற்றிற்கு சிறந்த ஊன் தடுப்பானாக செயல்படுகிறது.

பால் வடியும் யூஃபோர்பியேசியே குடும்ப தாவரங்கள்

இக்குடும்பத் தாவரங்களின் தண்டு, கிளை, மொட்டு ஆகியவற்றில் காணப்படும் பூச்சிகொல்லி மற்றும் பூச்சிவிரட்டும் தன்மையால் அசுவிணி மற்றும் வெட்டுக்கிளி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். மேலும், இச்செடியின் இலை, விதைகள் மற்றும் வேர் போன்றவற்றை நீரில் ஊறவைத்து பெறப்படும் சாற்றினைத் தெளிக்கும் பொழுது காய்கறிப் பயிர்களில் வரும் புழுக்களையும், இளஞ்செடியில் வரும் கரையானையும் கட்டுப்படுத்தலாம்.

துளசி

துளசி இலை மற்றும் விதையிலிருந்து பெறப்படும் எண்ணெய் பெரும்பாலான பூச்சிகளுக்கு பூச்சிவிரட்டியாகவும், நஞ்சு மிகுந்ததாகவும், பூச்சியின் வளர்ச்சியை தடைசெய்வதாகவும் உள்ளது.

பயிர் பாதுகாப்பு

நெல் பயிர் பாதுகாப்பில் உள்நாட்டு தொழில்நுட்பங்கள்

ஒரு கிலோ அரைத்த பூண்டை 1 லிட்டர் மண்ணெண்ணையில் கலந்து இரவு முழுவதும் வைத்திருந்து வடிகட்டிய பின் 200 லிட்டர் நீருடன் கலந்து நெல் வயலில் தெளிக்கும் பொழுது புகையான் மற்றும் பச்சை தத்துப்பூச்சிகள் சிறந்த முறையில் கட்டுப்படுத்தப்படுகின்றன.

முருங்கை மரத்தின் பட்டைகள் மற்றும் கிளைகளை நசுக்கி வயலில் பரப்பும் பொழுது அது நெல்லில் தண்டு துளைப்பானை கட்டுப்படுத்துகிறது.

மாட்டுசாணம் மற்றும் பொடியாக்கிய சேனைக்கிழங்கை வயலில் உள்ள நீரில் கலக்கும் போது, இது காற்றில் விஷத்தன்மையை ஏற்படுத்தி கூட்டுப்புழுக்களை கொல்கிறது.

சோளப் பயிர் பாதுகாப்பில் உள்நாட்டு தொழில்நுட்பங்கள்

தட்டை, அவரை போன்றவற்றை ஊடுபயிராக சோளத்துடன் பயிர் செய்யும் பொழுது இவற்றின் விரட்டும் தன்மையுடைய வாசனையால் சோளத்தில் தண்டு துளைப்பானின் தாக்கத்தை வெகுவாக குறைக்கலாம்.

சாம்பலை பால்கதிர் பருவத்தில் தூவுவதனால் கதிர்நாவாய் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.

மக்காச்சோளப் பயிர் பாதுகாப்பில் உள்நாட்டு தொழில்நுட்பங்கள்

இரண்டிலிருந்து மூன்று கிலோ வரை தோலுரிக்கப்பட்ட வெங்காயச்சாற்றை நீருடன் கலந்து தெளித்தால் வர்ணமயமான வெட்டுக்கிளியைக் கட்டுப்படுத்தலாம். மக்காச்சோள வயலை சுற்றி மூன்று வரிசை நேப்பியர் புல்லை நடுவதால் அதிலிருந்து வெளிப்படும் வாசனை தண்டு துளைப்பானை கவர்வது மட்டுல்லாமல் அதில் உற்பத்தியாகும் பிசின் போன்ற திரவம் மற்ற பூச்சிகளையும் கவரும். அதுமட்டுமல்லாது வேலிமசாலை மக்காச்சோளத்தின் இடையே பயிரிட்டால் அதிலிருந்து வெளிப்படும் வாசனை மக்காச்சோளத்தில் தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்தும்.

கம்பு பயிர் பாதுகாப்பில் உள்நாட்டு தொழில்நுட்பங்கள்

ஐநூறு கிராம் வெல்லத்தை பத்து லிட்டர் நீரில் கலந்து கம்பு கதிரில் தெளிக்கும் பொழுது பூ வண்டுகளினால் ஏற்படும் சேதம் குறைகிறது.

தானிய பயிர்கள் பயிர் பாதுகாப்பில் உள்நாட்டு தொழில்நுட்பங்கள்

துவரையில் காய்த்துளைப்பானைக் கட்டுப்படுத்த மூன்று முதல் ஐந்து லிட்டர் மாட்டுக் கோமியத்தில் சமஅளவு மாட்டுச்சாணத்தை (4நாட்கள் நொதித்தலுக்கு உட்படுத்தியபின்) கரைத்து வடிகட்டி அதனுடன் 200 கிராம் சுண்ணாம்பைக் கலந்து அதை 50-80லிட்டர் நீர்த்த பின் தெளிக்கலாம்.

தட்டைப்பயறில் மஞ்சள் தேமல் நோயைக் கட்டுபடுத்த மோர் தெளிக்கலாம் (மோர் சிறந்த கடத்தி தடுப்பான் (barrier of vectors)). தட்டைப்பயறில் வரும் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கவருவதற்காக வயலில் பாலித்தீன் விரிப்பான்களை விரித்து அதன்மேல் ஆமணக்கு எண்ணெய்யை தடவி வைக்கலாம்.

கொண்டைக் கடலையில் கொத்தமல்லி மற்றும் ஆளிவித்தை ஊடுபயிராக பயிரிடும் போது காய்த்துளைப்பானைக் கட்டுப்படுத்தலாம்.

எண்ணெய் வித்துகள் பயிர் பாதுகாப்பில் உள்நாட்டு தொழில்நுட்பங்கள்

நிலக்கடலை

கடலையில் சிவப்பு கம்பளிப் புழுவைக் கட்டுப்படுத்த வயலைச் சுற்றி குழிபறித்து அதில் எருக்கம் இலைகளைப் பரப்பி இலைகள் மூழ்கும் அளவுக்கு நீர் நிரப்பிவிட்டால் கம்பளிப் புழுக்கள் குழியில் விழும் பொழுது நீரில் உள்ள நச்சுத் தன்மையால் அவை இறந்துவிடும்.

கடலை விதைத்த உடன் பறவைகள் கொத்தித் தின்பதை தடுக்க சேனைக்கிழங்கு தோலினை வயலில் ஆங்காங்கே தூவும்பொழுது சேனைக்கிழங்கு தோல் பாம்பு போன்று தோற்றமளிப்பதால் பறவைகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். இவ்வாறு பறவைகளால் ஏற்படும் சேதத்தைக் குறைக்கலாம்.

ஆமணக்கு

ஒரு கிலோ பொறித்த சோளத்தை ஆமணக்கு பயிரிடப்பட்ட வயலினைச் சுற்றிச் தெளிப்பதால் பறவைகள் கவரப்படுகின்றன. இவ்வாறு கவரப்பட்ட பறவைகள் ஆமணக்கு அரைகொக்கி புழுக்களை உண்பதால் இப்புழுக்கள் கட்டுப் படுத்தப்படுகின்றன. மேலும், இரண்டு கிலோ வேப்பிலையை இரண்டு லிட்டர் நீரில் ஊறவைத்து வடித்த நீரை (500 மி.லி. / 15 லிட்டர் நீர்) நீருடன் கலந்து தெளிப்பதன் மூலமும் இதனை கட்டுப்படுத்தலாம்.

தென்னை

தென்னையில் காண்டாமிருக வண்டுகளைக் கட்டுப்படுத்த மர உச்சியில் மணல் மற்றும் கல் உப்பினைத் தூவலாம். இவை காண்டாமிருக வண்டுகளின் நடமாட்டத்தைக் குறைத்து அவற்றை கட்டுப்படுத்துகின்றன.

பருத்தி பயிர் பாதுகாப்பில் உள்நாட்டு தொழில்நுட்பங்கள்

பருத்தியில் ஊடுபயிராக ஆமணக்கை பயிரிடும் போது புகையிலைப் புழுக்களும், மக்காச்சோளம் மற்றும் வெண்டை பயிரிடும் போது காய்ப்புழுக்களும் கட்டுப்படுத்தப்படுகின்றன. பருத்தியில் வெள்ளை ஈக்களையும் மற்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளையும் கட்டுப்படுத்த வெள்ளைத் துணியை துண்டுகளாக வெட்டி அதனை மஞ்சளில் நனைத்து காயவைத்தபின் அவற்றை ஆமணக்கு எண்ணெய்யில் நனைத்த வயலில் கட்டித் தொங்கவிடலாம்.

மேலும், வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த அரளிவிதை தூளையும், காய்புழுக்களைக் கட்டுப்படுத்த வேப்பவிதைத் தூளையும் வயலில் தூவலாம். சாம்பலைத் தூவுவதன் மூலம் அசுவிணி, இலைப்பேன் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

கரும்பு பயிர் பாதுகாப்பில் உள்நாட்டு தொழில்நுட்பங்கள்

கரும்பு நட்ட வயலில் வெள்ளை ஈக்களையும், எறும்புகளையும் கட்டுப்படுத்த 20 கிலோ வெங்காயத்தை அரைத்து அந்த விழுதை வயல்வெளியில் ஆங்காங்கு வைக்கலாம் அல்லது நீரில் கலந்து விடலாம்.

பழமரங்களில் பூச்சி மேலாண்மையில் உள்நாட்டு தொழில்நுட்பங்கள்

மாவில் கொட்டை கூன் வண்டுகளை கட்டுப்படுத்த மிளகு அறுவடைக்குப் பின் கிடைக்கும் தட்டைகளை மாந்தோப்பில் எரிக்கலாம்.

கொத்தமல்லி, புதினா, இஞ்சி மற்றும் மஞ்சள் ஆகியவற்றை மாந்தோப்பில் பயிரிடுவதால் பெரும்பான்மையான பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

மாட்டுக்கோமியம் அல்லது புகையிலைச் சாறு ஆகியவற்றைத் தெளிப்பதால் திராட்சையில் பூச்சிகளையும் நோய்களையும் கட்டுப்படுத்தலாம்.

காய்கறி பயிர்களில் பூச்சி மேலாண்மையில் உள்நாட்டு தொழில்நுட்பங்கள்

கத்தரியில் வரப்போரப்பயிராக துலுக்கமல்லியை வளர்க்கும் போது தண்டு மற்றும் காய்த்துளைப்பான்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. நொதிக்க வைக்கப்பட்ட கோமியத்தை நீருடன் கலந்து தெளிப்பதால் மற்ற பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

காலிபிளவர் நர்சரியில் வரும் வண்டுகளின் இளம் பருவத்தை அழிக்க மண்ணெண்ணையைவண்டுகளால் ஏற்படுத்தப்பட்ட குழிகளில் ஊற்றி அழிக்கலாம்.

மலர்களில் பூச்சி மேலாண்மையில் உள்நாட்டு தொழில்நுட்பங்கள்

ரோஜாசெடியில் கரையான்களைக் கட்டுப்படுத்த ரோஜா இளநாற்றுகளை யூஃபோர்பியேஸியே குடும்பத் தாவரங்களிலிருந்து பெறப்படும் பால் போன்ற திரவத்தை நீரில் கலந்து பெறப்படும் கலவையில் நனைத்தபின் நடவு செய்யலாம்.

சேமிப்பு தானியங்களில் வரும் பூச்சிகளை கட்டுப்படுத்த உள்நாட்டு தொழில்நுட்பங்கள்

கொய்யா மர இலைகளை தூள் செய்து தூவுவதால் அரிசியில் கூன்வண்டுகளைக் கட்டுப்படுத்தலாம்.

கம்பு விதைகளை பூச்சிகளிலிருந்து பாதுகாக்க நொச்சி இலையுடன் கலந்து வைக்கலாம்.

உணவுதானியங்களை சேமித்துவைக்கும் முன் எலுமிச்சை சாறுடன் கலந்து பின் காய வைத்து சேமிக்கும் போது அவை பூச்சிகளுக்கு எதிர்ப்புத் திறன் பெற்றவையாக இருக்கும்.

ஆமணக்கு விதைகளை தூள் செய்து துவரம்பருப்புடன் கலந்து வைத்து அதனை பூச்சிகளிலிருந்து பாதுகாக்கலாம்.

சாம்பல், சாணம் மற்றும் கரி போன்றவை தானிய வகைகளை வண்டுகள் மற்றும் கூன் வண்டுகளின் தாக்குதலிலிருந்து பாதுகாக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

தட்டைப் பயறை மண்பானைகளில் சேமிக்கும் போது 1 அடுக்கு (2.5 செ.மீ.) தட்டைப்பயறும் 1 அடுக்கு சாம்பலும் (1 செ.மீ.) கலந்து வைப்பதால் பயறு வண்டுகள் சேதத்தை பெருமளவு குறைக்கலாம்.

தானிய வகைகளை சேமிக்கும் முன்பு அந்த இடத்தில் வைக்கோல், மிளகாய், மரத்தூள் மற்றும் மண்ணெண்ணை கொண்டு புகை மூட்டம் ஏற்படுத்தி பின்பு சேமிக்க அடுக்கி வைத்தால் சேமிக்கும் போது வரும் பூச்சிகளுக்கு முன் காப்பாக இருக்கும்.

சாம்பல், எலுமிச்சை, மிளகாய்த்தூள் ஆகியவை சேமிப்பு தானிய பூச்சிகளை சிறந்த முறையில் கட்டுப்படுத்துகின்றன.

ஆதாரம்: வேளாண் பூச்சியியல் துறை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641 003