களர் / உவர் நில சீர்திருத்தம்

பாத்திகள் அமைத்தல்

பண்ணைக்கழிவு இடுதல்

ஜிப்சம் இடுதல்

நீரை தேங்க வைத்தல்

தமிழ்நாட்டில் சுமார் 4.5 லட்சம் எக்டர் பரப்பளவு களர், உவர் நிலங்களாக உள்ளது. தமிழ்நாட்டில் இவை செங்கல்பட்டு, சேலம், திருச்சிராப்பள்ளி, வட ஆற்காடு அம்பேத்கார், திருநெல்வேலி கட்டபொம்மன், தருமபுரி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் பரவலாகக் காணப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் சுமார் 6000 எக்டர் களர் உவர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலங்களில் மண்ணின் இயக்கநிலை PH மற்றும் நீரில் கரையும் உப்புகள் அதிகம் காணப்படுவதால், பயிரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, மகசூல் வெகுவாக குறைந்து விடுகிறது. ஒரு எக்டருக்கு அதிகப் பட்சமாக 1.5 டன் நெல் மகசூல் தான் கிடைக்கிறது. கிடைக்கும் மகசூலின் மதிப்பு சாகுபடி செலவுக்குக் கூட போதுமானதாக இல்லாததால் பெரும்பாலான விவசாயிகள் இந்நிலங்களில் பயிர் சாகுபடி செய்வதில்லை. இவையாவும் தற்போது ஆடு மாடு மேயும் தரிசு நிலங்களாகத்தான் பயன்படுகிறது. எனினும் ஒரு சில விவசாயிகள் இந்நிலங்களில் மழை காலத்தில் மட்டும் சுமாராக ஒரு பயிர் சாகுபடி செய்கின்றனர்.

களர் உவர் நிலங்களின் தோற்றம் மற்றும் பண்புகள்

மண் உற்பத்தியான பாறை வகைகள், உப்பு நீர் பாசனம், மேட்டு நிலங்களிலிருந்து வரும் உப்பு கலந்த கசிவு நீர், நீண்ட கால வேளாண்மை, மண் மேலாண்மைக் குறைபாடுகள் (வடிகால் வசதியின்மை) போன்ற பல காரணங்களால் மேல் மண்ணில் பல்வேறு உப்புகள் தேங்கும்போது சாதாரண மண் உப்பு மண் ஆகின்றது.

நிலத்தடி நீர் மண்ணின் நுண்ணிய துவாரங்கள் மூலம் உறிஞ்சப்பட்டு, மேல் பரப்பில் படிந்து மண்ணின் உப்பு நிலையை அதிகரிக்கச் செய்கின்றது. மழை அல்லது நன்நீர் பாசனம் அதிகம் உள்ள இடங்களில் வடிகால் சரியாக அமைந்தால் மண்ணில் உள்ள உப்பு, நீரில் கரைந்து அடித்தளத்திற்கு செஎறுவிடும் அல்லது நிலப்பரப்பினின்று வெளியேறிவிடும். இந்நிலை இல்லாத போது உப்புக்கள் மண்ணின் அடிப்பரப்பிற்கும் மேல் பரப்பிற்கும் மாறி மாறி சென்று வந்துக் கொண்டு அம்மண்ணிலேயே தங்கிவிடும்.

இவ்வாறு மண்ணின் உப்பு நிலை அதிகரித்து மண்ணின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியியல் பண்புகள் திரிபடைந்து, மண்ணின் வளம் குன்றி சாகுபடிக்கு ஏற்பில்லா நிலை உருவாகின்றது, உப்பு நிலை அதிகரிப்பதால் பாதிப்படைந்த மண்ணை மூன்று வகைகளாக பிரிக்கலாம். அவை

1) உப்பு அதிகமுள்ள உவர் மண்

2) சோடிய அயனிகள் அதிகமுள்ள களர் மண் மற்றும்

3) இரு நிலைகளையும் கொண்ட உவர் களர் மண் ஆகும்.

இத்தகைய களர் உவர் நிலங்களைச் சீர்திருத்த பல்வேறு தொழில்நுட்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. எனினும் இவை செலவினமிக்கதாகவும் ஆட் தேவை அதிகமுள்ளதாகவும் இருப்பது இந்நிலங்களைப் பண்படுத்துவதிலணொரு தேக்க நிலையை ஏற்படுத்தியுள்ளது. நிலம் முழுவதையும் பண்படுத்தாமல் குறிப்பிட்ட இடங்களை மட்டும் பண்படுத்தி மரச்சாகுபடி செய்வதன் மூலம் இந்நிலங்களை விரைவில் பயனுள்ள நிலங்களாக மாற்ற முடியும் என்று ஆராய்ச்சி காட்டுகின்றன.

நெல் நாற்றாங்கால் பராமரிப்பு

20 சென்ட் நாற்றாங்காலுக்கு ஒரு டன் தொழுஉரம்

விதையளவு

குறுவை சாகுபடியாக இருந்தால் எக்டருக்கு 60 கிலோ சம்பா சாகுபடியாக இருந்தால் எக்டருக்கு 40 கிலோ

விதை நேர்த்தி – ஒரு கிலோ நெல் விதைக்கு 10 கிராம் சூடாமோனாஸ் புளுரோசன்ஸ் உயிர் பாக்டீரியாவை கலக்க வேண்டும். அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா ஒவ்வொன்றும் 3 பாக்கெட் (600 கிராம்) அளவில் விதையுடன் கலக்க வேண்டும்.

சென்ட்டிற்கு 2 கிலோ ஜிப்சம் இட வேண்டும்

சென்ட்டிற்கு 2 கிலோ டி.ஏ.பி. இட வேண்டும்

சென்ட்டிற்கு 100 கிராம் ஜிங்க் சல்பேட் இட வேண்டும்

நாற்று பறிப்பதற்கு ஒரு நாளைக்கு முன் ஒரு சென்ட்டிற்கு 1 கிலோ ஜிப்சம் இட வேண்டும்

பறித்த நாற்றினை அசோஸ்பைரில்லம் 5 பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா 5 பாக்கெட் அளவில் நீரில் கரைத்து 5 நிமிட நேரம் ஊற வைக்கவேண்டும்.

நடவு வயல் பராமரிப்பு

தழை உரம் தக்கைப்பூண்டு எக்டருக்கு 6.25 டன் அளவில் இடவேண்டும்.

ஒரு எக்டர் நிலத்திற்கு அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா ஒவ்வொன்றும் 10 பாக்கெட்டுகள் இடவேண்டும்.

களர் நிலத்திற்கு உகந்த நீலப்பச்சை பாசி 1 எக்டருக்கு 10 கிலோ அளவில் இடவேண்டும்.

சம்பா சாகுபடியில் அசோலா நீர்த்தாவரத்தினை 1 சென்டிற்கு 1 கிலோ என்ற அளவில் நடவின்போது இடவேண்டும். மூன்று வாரம் கழித்து முதல் களையின் பொழுது சேற்றில் உரமாக அமிழ்த்த வேண்டும்.

நாற்றுகளை சாதாரண வயலில் நடவு செய்யப்படும் நாட்களை விட கூடுதலாக அதாவது 35 நாட்கள் வயதுடைய நாற்றுகளை நடவு செய்தல் வேண்டும்.

நாற்றுக்களை ஒரு குத்துக்கு 5 நாற்றுகள் என்ற அளவில் நடவு செய்தல் வேண்டும்.

அடியுரமான மணிச்சத்தினை 70 சதம் இட்டால் போதுமானது.

எக்டருக்கு 20 கிலோ சிங்க் சல்பேட்டினை தொழு உரத்துடன் கலந்து ஊட்டமேற்றிய உரமாக இடவேண்டும்.

தழைச்சத்தினை அடியுரமாக இடுதலை தவிர்த்தல் வேண்டும். பச்சை கட்டியவுடன் அடியுரமாக இட வேண்டிய தழைச்சத்தினை இடவேண்டும்.

மேலுரமாக தழைச்சத்தினை இடும்பொழுது பச்சை வண்ண அட்டையினைப் பயன்படுத்தி இட வேண்டும்.

மத்திய கால ரகங்களில் , விதைப்பு செய்த 65ம் நாள் டி.ஏ.பி. 2 சதம் + 1 சதம் யூரியா + 1 சதம் பொட்டாஷ் கரைசலை இலை வழி உரமாக தெளித்தல் வேண்டும்.

நீர் நிர்வாகம் செய்யும்பொழுது 3 செ.மீ அளவில் நீர் நிறுத்தினால் போதுமானது.

நெல் நாற்றாங்காலில் நீரைப் பாய்ச்சும் சூழ்நிலையில் சென்ட்டிற்கு 100 கிலோ கரும்பு ஆலை அழுக்கு (அ) தக்கைப்பூண்டு (அ) வேப்பம் இலை இட்டால் நாற்றாங்கால் நெல் நாற்றுகள் நன்றாக வளர்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

நெல் வயல்களில் யூரியாவினை விட அமோனியம் சல்பேட்டினை தழைச்சத்தாக அளிப்பதால் கூடுதல் மகசூல் கிடைத்துள்ளது.

100 சதம் சிபாரிசு செய்யப்பட்ட தழைச்சத்துடன் வேப்பம் புண்ணாக்கு 5:1 என்ற விகிதத்தில் கலந்து நீலப்பச்சை பாசி எக்டருக்கு 10 கிலோ என்ற அளவில் இடுவதன் மூலம் 125 சதம் சிபாரிசு செய்யப்படுகின்ற தழைச்சத்திற்கு இணையான மகசூல் கிடைத்ததாக கண்டறியப்பட்டுள்ளது.

களர் நிலத்தில் பசுந்தழை உரமாக (அ) வேம்பு இலையினை எக்டருக்கு 7 டன் என்ற அளவில் இட்டு நெல் நடவு செய்வதம் மூலம் கூடுதல் மகசூல் கிடைத்துள்ளது.

செப்டம்பர் கடைசி வாரத்திற்குள் நெல் நடவு செய்வதன் மூலம் கூடுதல் மகசூல் பெற நல்ல சீதோஷ்ண நிலை நெல் பயிறுக்கு கிடைத்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

உப்புத்தன்மையினை தாங்கி வளரக்கூடிய சூரியகாந்தி, பருத்தி, கரும்பு, மிளகாய், கேழ்வரகு போன்ற பயிர்களை பயிர் செய்யலாம். சூரிய காந்தியில் கோ.4 என்ற ரகம் களர் உவர் தன்மையினை தாங்கி வளர்கிறது. கரும்பில் கோ.சி.6 என்ற ரகம் நன்றாக வளரும். குசும்பா என்ற எண்ணைய் வித்துப்பயிர் 7 இ.சி. என்ற அளவிற்கு தாங்கி வளரக்கூடியது. பருத்தியில் எல்.ஆர்.ஏ.5166 மற்றும் எம்.சி.யு.9 என்ற ரகமும் நன்றாக வளரும்.

மண் ஆய்வு செய்து நிலத்தின் தன்மையினை அறிந்து பயிர் சாகுபடி செய்தால் அமோக விளைச்சல் பெற்று விவசாயிகள் பொருளாதார நிலை மேன்மேலும் உயரும் என்பதில் ஐயமில்லை.

மண் வளம்

ஆதாரம்: கரும்பு ஆராய்ச்சி நிலையம், சிறுகமணி