தானியங்கள் நெல் (நடவு) குறைந்த வயதுடைய அதிக மகசூல் தரக்கூடிய சன்ன இரகங்களான ஏடீடி 36, ஏடீடி 45, ஏடீடி 53, ஏடீடி 55, ஏடீடி 57, கோ-51, கோ-54, ஏஎஸ்டி 16 மற்றும் சம்பா பருவத்தில் நடுத்தர வயது இரகங்களான டிகேஎம் 13, டிகேஎம் 15, விஜிடி 1, ஏடீடி 54, கோ 52, டிஆர்ஒய் 4, குறைந்த வயதுடைய பெருவட்டு இரகங்களான ஏடீடி 37, ஏஎஸ்டி 16 மற்றும் டிபிஎஸ் 5 இரகங்களைத் தேர்வு செய்ய வேண்டும். நாற்று இடுவதற்கு முன்பு கோடை மழையைப் பயன்படுத்தி பசுந்தாள் உரப் பயிர் மற்றும் பலதானிய பயிர் விதைத்து மடக்கி உழவேண்டும். களர் உவர் நிலத்திற்கு டிஆர்ஒய் 5 இரகம் பரிந்துரைக்கப்படுகின்றது. அதிக மழை பெரும் கன்யாகுமரி மாவட்டத்தில் குறைந்த வயதுடைய அதிக மகசூல் தரக்கூடிய பெருவட்டு இரகங்களான டிபிஎஸ் 5 மற்றும் ஏஎஸ்டி 16 இரகங்களைப் பயிரிடவும். நீர் பற்றாக்குறை பகுதிகளில் உழவு மேற்கொள்ள முடியாத சூழலில் சாகுபடி செலவினைக் குறைத்து, சரியான பயிர் இடைவெளியை மேற்கொள்ளவும் நேரடி நெல் விதைப்பு கருவியினைப் பயன்படுத்த வேண்டும். விதை மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த கார்பன்டாசிம் அல்லது பைரோகுய்லான் அல்லது ட்ரைசைக்ளோஜோல் கொண்டு லிட்டருக்கு 2 கிராம் ஒரு கிலோ விதைக்கு என்ற அளவில் விதைநேர்த்தி செய்ய வேண்டும். விதைகளை ஒரு கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் ஒரு கிலோ பாஸ்போபாக்டீரியா அல்லது ஒரு கிலோ அஜோபாஸ் கரைசலில் ஓர் இரவு ஊரவைத்து விதைக்கவும். அல்லது 125 மி.லி அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா அல்லது அஜோபாஸுடன் சிலிகான் அல்லது பொட்டாஷ் கரைக்கம் பாக்டீரியா கலந்து உலரவைத்து பின் விதைக்கவும். விதைகளை கிலோவிற்கு 10 கிராம் பேசில்லஸ் சப்டிலிஸ் ஒரு லிட்டர் தண்ணிரில் ஓர் இரவு ஊரவைத்தும் நாற்றின் வேர்களை எக்டர் நாற்றிற்கு 2.5 கிலோ பேசில்லஸ் சப்டிலிஸ் கரைசலில் 45 நிமிடங்கள் நனைத்து நடவு செய்யவும். அதிக உரப்பயன்பாடு மற்றும் உரச்செலவினைக் குறைக்க மண் பரிசோதனை அடிப்படையில் உரம் அளிக்கும் முறையைப் பயன்படுத்தலாம். நெல் பயிரில் கந்தக சத்து குறைபாட்டினை சரி செய்ய 40 கிலோ கந்தகத்தை ஜிப்சம் வாயிலாக நடவிற்கு முன்பே இட வேண்டும். இளம் பருவத்தில் துத்தநாக சத்து பற்றாக்குறை தென்பட்டால் (30 நாட்கள்) துத்தநாக சல்பேட்டினை 25 கிலோ/ஹெக்டேர் என்ற அளவில் தூவ வேண்டும். உப்புத் தன்மை மற்றம் பிரச்சனைக்குரிய மண்ணிற்கு 37.5 கிலோ/ஹெக்டேர் என்ற அளவில் தூவ வேண்டும் அல்லது தநவேப (TNAU) நெல் நுண்ணூட்டக் கலவை தொழு உரத்துடன் 1:10 விகிதத்தில் கலந்து 30 நாட்கள் தகுந்த ஈரப்பதத்தில் வைத்திருந்து நடவுக்கு முன் இடலாம். பொதுவாக காவேரி பாசனப்பகுதியில் அதிகளவில் காப்பர் நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறை தென்படும், நிவர்த்தி செய்ய ஹெக்டேருக்கு 5 கிலோ காப்பர் சல்பேட்டினைத் தூவ வேண்டும். நெல் வயல்களுக்கு நீர் தேவை அறிந்து காய்ச்சலும் பாயச்சலுமாக நீர் பாய்ச்ச வேண்டும். நெல்லில் குலைநோயைக் கட்டுப்படுத்த: விதை நேர்த்தி - ஒரு கிலோ விதைக்கு பேசில்லஸ் சப்டிலிஸ் 10 கிராம் என்ற அளவில் கலந்து விதைக்கலாம். நோய் அறிகுறி தென்பட்டால் டிரைசைக்லோசோல் 75 WP 500 கிராம்/ஹெக்டேர் அல்லது மெட்டோமினிஸ்டோபின் 20 SC 500 மிலி/ஹெக்டேர் (அ) அசாக்சிஸ்ட்ரோபின் 25 SC 500 மிலி ஹெக்டேர் என்ற அளவில் இலைவழியாகத் தெளிக்கலாம். கதிர் முதிரும் பருவத்தில் வரும் கழுத்து குலைநோயைக் கட்டுப்படுத்த ப்ரோயிகோனாஜோல் 25EC ஏக்கருக்கு 200 மிலி காலை நேரத்தில் தெளிக்கவும். நெற்பழ நோயைக் கட்டுப்படுத்த புடைப்பருவம் மற்றும் பால்கட்டும் பருவத்தில் ப்ரோபிகோனாஜோல் 25 EC லிட்டருக்கு 1 மிலி வீதம் தெளிக்கவும். தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்த க்ளோரான்ட்ரில்ப்ரோல் 18.5 SC ஏக்கருக்கு 60 மிலி வீதம் காலை நேரம் தெளிக்கவும் அல்லது அசிபேட் 75 சதம் SP ஹெக்டேருக்கு 670-1000 கிராம் தெளிக்கவும். அமில நிலங்களுக்கு மண் பரிசோதனைப்படி சுண்ணாம்பு இடவும். களர் நிலங்களுக்கு ஹெக்டேருக்கு 500 கிலோ ஜிப்சம் மற்றும் பாசியைக் கட்டுப்படுத்த ஹெக்டேருக்கு 5 கிலோ கால்சியம் சல்பேட் இடவும். மணிச்சத்து இடவேண்டாம் அல்லது குறைத்து இடவும். யூரியா மற்றும் பொட்டாஷ் உரங்களை 25 சதம் கூடுதலாக இடவேண்டும். தழை மற்றம் சாம்பல் சத்து உரங்களை நான்காக பிரித்து நட்ட 21ஆம் நாள், தூர் கட்டும் பருவம், பூங்கதிர் உருவாகும் பருவம் மற்றும் கதிர் வெளிவரும் தருணத்திலும் இடவேண்டும். நேரடி நெல் விதைப்பில் இலை வண்ண அட்டை பயன்படுத்தும்போது குறியீட்டு எண் 4 ஐ பயன்படுத்தவும். மணிச்சத்தை கடைசி உழவின்போது அல்லது பசுந்தாள்/கம்போஸ்ட் இடும்போது இடவேண்டும். நன்மை தரும் பூச்சிகளைக் கவர வயலைச் சுற்றி தட்டைப்பயறு சாகுபடி செய்யவும். சேற்று வயல் நேரடி விதைப்பு மண் பரிசோதனை மூலம் தேவையான உரம் கணக்கிட்டு இட வேண்டும். தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்தினை 25 சதவிகிதம், விதைத்த 21 நாட்களுக்குப் பிறகு, தூர் கட்டும் பருவம், பூங்கதிர் உருவாகும் பருவம் மற்றும் கதிர் வெளிவரும் தருணத்திலும் இட வேண்டும். இலை வண்ண அட்டையைப் பயன்படுத்தி தழை சத்து இடும் போது, அந்த அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு என்கிற எண்ணிற்குரிய உர அளவை இட வேண்டும். மொத்த மணிச்சத்தையும் கடைசி உழவின் போது இட வேண்டும் அல்லது பசுந்தாள்/பசுந்தழை பயிர்களை மடக்கி உழவு செய்யும் போது இடவேண்டும். நஞ்சையில் புழுதி விதைத்த மானாவாரி நெல் பரிந்துரை செய்யப்பட்ட உர அளவினை தழை, மணி மற்றும் சாம்பல் சத்து 50:25:25 கிலோ/ஹெக்டேர் என்ற அளவில் இட வேண்டும். அடியுரமாக 75௦ கிலோ தொழு உரத்துடன் 25 கிலோ பாஸ்பரஸ் உரத்தினை ஊட்டம் ஏற்றி கடைசி உழவில் இட வேண்டும். தழை மற்றும் சாம்பல் சத்தினை இரண்டாகப் பிரித்து முளைத்த 20-25 மற்றும் 40-45 நாட்கள் கழித்து இடவும். தூர் கட்டும் பருவத்தில் ஈரப்பதம் இருக்குமானால் 25 கிலோ தழைச்சத்து மற்றும் 12.5 கிலோ சாம்பல் சத்தினை மூன்றாகப் பிரித்து முளைத்த 20-25, 40-45 மற்றும் 60-65 நாட்களில் இடலாம். பயிரின் வளர்ச்சி நன்கு இருந்து, கதிர் உருவாகும் தருணத்தில், 40 கிலோ தழைச்சத்தினைக் கூடுதலாக இடலாம். பின்னர் 1௦ நாட்களுக்கு நீர் இருப்பினை உறுதி செய்ய வேண்டும். இரும்பு சத்து பற்றாக்குறை மண்ணில் இரும்பு சல்பேட்டினை ஹெக்டேருக்கு 50 கிலோ அல்லது தநாவேப (TNAU) மானாவாரி நெல் நுண்ணூட்டக் கலவையை ஹெக்டேருக்கு 12.5 கிலோ இவற்றை ஊட்டமேற்றிய தொழு உரத்துடன் 1:10 விகிதத்தில் 30 நாட்கள் சரியான ஈரப்பதத்தில் மூட்டமிட்டு விதைப்பிற்கு முன்னரே இடவும். மானாவாரி நெல் துத்தநாகம் மற்றும் இரும்பு சத்து பற்றாக்குறை நிலத்திற்கு 25 கிலோ துத்தநாக சல்பேட் மற்றும் 50 கிலோ இரும்பு சல்பேட் ஒரு ஹெக்டேர் பரப்பிற்கு இடவும். பயிர் முளைத்த பிறகு மற்றும் வளர்ச்சி பருவத்தில் நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறை தென்பட்டால் 0.5 சதவிகிதம் துத்தநாக சல்பேட் அல்லது 1 சதவிகிதம் இரும்பு சல்பேட் சேர்த்து 0.1 சதவிகிதம் சிட்ரிக் அமிலம் விதைத்த 15, 25 மற்றும் 35 நாட்கள் கழித்து இலைவழியாகத் தெளிக்கவும். இறவை நஞ்சையில் புழுதி விதைத்த மானாவாரி நெல் பொது உர அளவான 75:25:37.5 தழை, மணி, சாம்பல் சத்தினை ஒரு ஹெக்டேருக்கு இட வேண்டும். 750 கிலோ தொழு உரத்தினை 25 கிலோ சூப்பர் பாஸ்பேட்டுடன் கலந்து ஊட்டமேற்றி அடியுரமாக இட வேண்டும். தழை மற்றும் சாம்பல் சத்தினை மூன்று அளவாகத் தெளித்து, முளைத்த 20-25, 40-45 மற்றும் 60-65 நாட்கள் கழித்து இட வேண்டும். ஒவ்வொரு பாகம் இடும்போதும், தழைச்சத்து 25 கிலோ, சாம்பல் சத்து 12.5 கிலோ என பிரித்துக் கொடுக்க வேண்டும். ஈரப்பதம் நன்கு இருந்து பயிரின் வளர்ச்சி நன்கு அமைந்திருந்தால் 40-45 நாட்களில் இடவேண்டிய தழைச்சத்தின் அளவினை 40 கிலோ வரை சேர்த்து இடலாம். இதனால் பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரிக்கும். நஞ்சையில் புழுதி விதைத்த இறவை நெல் 12.5 டன் தொழு உரம் அல்லது 750 கிலோ ஊட்டமேற்றிய தொழு உரத்தினை அடியுரமாக களிமண் உள்ள பகுதிகளான நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இட வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட உர அளவு 75:50:37.5 கிலோ/ஹெக்டேர். தழை மற்றும் சாம்பல் சத்தினை குறுகிய கால பயிருக்கு மூன்றாகப் பிரித்து விதைத்த 20-25, 40-45 மற்றும் 60-65 நாட்கள் இடைவெளியில் இட வேண்டும். மத்திய கால பயிருக்கு 4 ஆக பிரித்து விதைத்த 20-25, 40-45, 60-65 மற்றும் 80-85 நாட்கள் இடைவெளியில் இட வேண்டும். நிலத்தில் ஈரப்பதம் தேவையான அளவு இருக்கும் சூழலில் மற்றும் வாய்க்கால் பாசனம் தூர்கட்டும் பருவத்தில் கிடைக்கப்பெற்றால், பூங்கதிர் உருவாகும் பருவத்தில் (குறுகிய கால பயிறுக்கு விதைத்த 40-45 நாட்கள், மத்திய கால பயிறுக்கு 60-65 நாட்களுக்கு பிறகு) தழை சத்து 40 கிலோ, சாம்பல் சத்து 12.5 கிலோ இட்டு பயிர் வளர்ச்சியை ஊக்கப்படுத்தி அதிக மகசூல் பெறலாம். பயறு வகைகள் உளுந்து/பாசிப்பயிறு அதிக மகசூல் தரும் உளுந்து இரகங்கள் வம்பன் 8, வம்பன் 9, வம்பன் 1௦ மற்றும் வம்பன் 11, பாசிப் பயறு இரகங்கள், கோ 8 வம்பன் 3 வம்பன் 4, வம்பன் 5 மற்றும் கேகேஎம் 1, விதை நேர்த்திக்கு இமிடாகுளோப்ரிட் மற்றும் 5 மிலி/கிலோ விதை, போதிய அளவு பயிர்களின் எண்ணிக்கையை பராமரிக்க விதைப்பு இயந்திரம் மூலம் விதைக்க வேண்டும். சிறிய நீர் தெளிப்பான்களை அமைக்க வேண்டும். (மத்திய/மாநில அரசுகளின் மூலம் நுண்ணீர் பாசனத் திட்டத்தில் கொடுக்கப்படும்) களை முளைப்பதற்கு முன் களைக்கொல்லி தெளித்தல் அல்லது விதைத்து 15-20 நாட்களுக்கு முன்பு ஒரு முறை கைக்களை எடுக்க வேண்டும். பொறிகள் வைக்க வேண்டும். வறட்சி மேலாண்மைக்கு 2 சதவிகிதம் பொட்டாசியம் குளோரைடு + 100 பிபிஎம் போரிக் அமிலம் பரிந்துரைக்கப்படுகிறது. விதை கடினமாக்குதலுக்கு 100 பிபிஎம் ஜிங்சல்பேட் (10 கிராம்/1000 லிட்டர் தண்ணீர்) கரைசலில் 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதில் 1/3 பங்கு தண்ணீர், விதை முளைப்பதை அதிகரிக்கும் மற்றும் வறட்சியைத் தாங்கும். விதை நேர்த்திக்கு விதைகளை டிரைக்கோடெர்மா ஆஸ்பெரெல்லம் 4 கிராம் அல்லது பேசில்லஸ் சப்டிலிஸ் மற்றும் 10 கிராம் அல்லது கார்பெண்டாசிம் 2 கிராம்/கிலோ விதை. வேர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த ஹெக்டருக்கு 150 கிலோ வேப்பம்புண்ணாக்கு, டிரைக்கோடெர்மா ஆஸ்பெரெல்லம் விதை நேர்த்தி மற்றும் விதைத்த 30ஆம் நாள் ஹெக்டருக்கு 2.5 கிலோ டிரைக்கோடெர்மா ஆஸ்பெரெல்லம் மண்ணில் இடவும். நோய் எதிர்ப்புள்ள இரகங்களான வம்பன் 6, வம்பன் 7 மற்றும் வம்பன் 8 பயன்படுத்தவும். இமிடாகுளோப்ரிட் 17.8 SL 250 மிலி/ஹெ அல்லது தையாமீத்தாக்ஸாம் 75 WS 1 கிராம்/3 லிட்டர் தெளிக்கவும். காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த வரப்பு ஓரங்களில் ஆமணக்கு பயிரிடவும். குளோராட்ரானில் பிரோல் 18.5% SC 15௦ மிலி/ஹெ தெளிக்கவும். பொருளாதார சேத நிலையைத் தாண்டும் போது இது பரிந்துரைக்கப்படுகிறது. இலை வழியாக பிபிஎப்எம் மற்றும் 1 சதவிகிதம் கரைசல் (1௦ மிலி/லிட்டர் தண்ணீர்) தெளிப்பதன் மூலம் மானாவாரி சாகுபடியில் வறட்சியைக் கட்டுப்படுத்தலாம். நன்கு பூ எடுக்கும் தருணத்தில் இலைவழியாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பயறு அதிசயம் ஹெக்டருக்கு 5 கிலோ தெளிக்க வேண்டும் இயந்திரத்தின் மூலம் அறுவடை செய்யவும். துவரை துவரை இரகங்கள் கோஆர்ஜி 6, கோஆர்ஜி 7, கோஆர்ஜி 8, கோ 9 மற்றும் வம்பன் 3 காரிப் பருவத்திற்கு ஏற்றவை. விதை நேர்த்திக்கு ஒரு கிலோ விதைக்கு டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் அல்லது பேசில்லஸ் சப்டிலிஸ் 1௦ கிராம் தொடர்ந்து ரைசோபியம் 4௦ கிராம் பரிந்துரைக்கப்படுகிறது. களை முளைப்பதற்கு முன் களைக்கொல்லி பெண்டிமெத்திலின் ௦.75 கிலோ/ஹெ (2.5 லி/ஹெ) விதைத்து 3 நாட்களில் 5௦௦ லி தண்ணீர் கலந்து தெளிக்கவும். தொடர்ந்து ஒரு கைக்களை 30-35 நாட்களில் பரிந்துரைக்கப்படுகிறது. சிறுதானியங்கள் மக்காச்சோளம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வீரிய ஒட்டு இரகங்கள் கோ 6, கோ 8 பயன்படுத்தவும். இயந்திர விதைப்பு, சொட்டு நீர் பாசனம் அமைத்தல் அதாவது ஜோடி வரிசை நடவுக்கு ஏற்ப படைப்புழுவிற்கு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மைக்கான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், மண் பரிசோதனை அடிப்படையில் உர பயன்பாடு, பசுந்தாள் உரப்பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்தல் மற்றும் மண்ணில் இடுதல், களைக் கருவி பயன்பாடு. இலை வழியாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மக்காச்சோள மேக்சிம் 7.5 கிலோ/ஹெ கதிர் வரும் சமயம் மற்றும் தானியங்கள் கதிரில் நிரம்பும் சமயம் தெளிக்கவும். இயந்திரத்தின் மூலம் அறுவடை மற்றும் தானியம் பிரித்தெடுத்தல். மானாவாரியில் தநாவேப நுண்ணாட்டக்கலவை ஹெக்டருக்கு 12.5 கிலோ இடவும். படைப்புழு மேலாண்மை: ஆழமான கோடை உழவு, கடைசி உழவில் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் சயான்ட்ராநிலிப்ரோல் 19.8 சதம் + தையோமெத்தாச்சாம் 19.8 சதம் விதைநேர்த்தி, தட்டைப்பயறு வரப்பு பயிராக சாகுபடி செய்தல், தோட்டக்காலில் சூரியகாந்தி அல்லது எள் மானாவாரியில் சோளம் வயலைச் சுற்றி மூன்று வரிசைகள், ஹெக்டருக்கு 12 இனக்கவர்ச்சிப் பொறி வைத்து கண்காணித்தல், முற்பருவத்தில் (15-20 நாட்கள்) லிட்டருக்கு 4 மிலி வீதம் க்ளோரோன்ட்ரிலிநிப்ரோல் 18.5 SC அல்லது 5 கிராம் ஃபளுபெண்டிஅமைட் 20 WG இடுதல், அதனைத் தொடர்ந்து தேவையறிந்து லிட்டருக்கு 5 மிலி அஜாடிராக்டின், 30-45 நாட்களில் ஹெக்டருக்கு 2.5 கிலோ மெட்டாரைஜியம் அனிசோபிலே (தநாவேப மா ஜிடியு ஐசோலேட்), 35-40 ஆம் நாள் தேவையறிந்து லிட்டருக்கு 4 கிராம் எமாமெக்டின் பென்ஜோஏட் 5 SG அல்லது 15 மிலி நோவோலியூரான் 10 EC அல்லது 0.5 மிலி ஸ்பைநெட்டோராம் 11.70 SC, பூக்கும் மற்றும் கதிர்விடும் பருவத்தில் தேவைப்பட்டால் லிட்டருக்கு 0.5 மிலி ஸ்பைநெட்டோராம் 11.70 SC அல்லது 4 கிராம் எமாமெக்டின் பென்ஜோஏட் 5 SG. சோளம் மானாவாரியில் சோளம் இரகம் கோ 30 - விதையளவு ஹெக்டருக்கு 15 கிலோ, விதைக்கும் முன் 6 மணி நேரம் 2 சதம் பொட்டாசியம் டைஹைட்ரஜன் பாஸ்பேட் கரைசலில் ஊர வைத்து நிழலில் உலர்த்தி விதைப்பதால் முளைப்புத்திறன் மற்றும் வறட்சி தாங்கும் திறன் அதிகரிக்கும். மண்ணில் ஈரப்பதம் காக்க சோளத்தை சமன்படுக்கையில் விதைத்து பின் பாத்தி கட்டவும். தீவனத்திற்கு சிஎஸ்வி 32 எஃப் (ஒருமுறை அறுவடை) கோ௭ஃபஎஸ் 31 (பலமுறை அறுவடை) மற்றும் சிஎஸ்வி 32 (எம் எஃப்) சோள இரகங்களை சாகுபடி செய்யலாம். சிறுதானியம் சாமை கோ 3, கோ 4, ஏடிஎல் 1, திணை கோ 7, ஏடிஎல் 1, பனிவரகு கோ 3, 5, வரகு கோ 3, தநாவேப 86, ஏடிஎல் 1, குதிரைவாலி கோ 2, மதுரை 1, கேழ்வரகு கோ 13, கோ 14, கோ 15, பையூர் 2, ஏடிஎல் 1, கம்பு கோ(சியூ) 9, கோ 10, சோளம் கோ 30, 32, கே 12 ஆகிய இரகங்கள் காரிப் பருவத்திற்கு தமிழ்நாடு முழுவதும் பரிந்துரைக்கப்படுகிறது. டிராக்டர் மூலம் இயங்கும் விதைக்கும் கருவியினை மானாவாரிக்கும், இயந்திர நடவு நீர் பாய்ச்சும் நிலத்திற்கு பயன்படுத்துவதால் போதிய பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்கலாம். நார் பயிர்கள் பருத்தி அதிக மகசூல் தரும், குறைந்த வயதுடைய (120 நாட்கள்) ஜீரோ மோனோபோடியம் பருத்தி இரகம் கோ 17 அடர் நடவு முறையில் 100 x 10 செமீ இடைவெளியில் நடவும். மண் பரிசோதனை அடிப்படையில் உரமிடவும், சொட்டு நீர் பாசனம் அமைக்கவும், உளுந்து, பாசிப்பயறு, பசுந்தாள் பயிர்களை ஊடுப்பயிராக இடவும். பொறி வைத்தல், பொறி பயிர் சாகுபடி, சாறு உறுஞ்சும் பூச்சி மற்றும் காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளை கடைப்பிடிக்கவும். பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவத்தில் ஏக்கருக்கு 200 லி தண்ணீரில் 2.5 கிலோ தநாவேப பருத்தி ப்ளஸ் தெளிக்கவும், பாரா/புதிய/திடீர் வாடல் நோய் மேலாண்மை: லிட்டருக்கு 10 கிராம் வீதம் 19:19:19 உரக்கரைசல் மற்றும் 0.04 சதம் நாப்தலின் அசிடிக் அமிலம் தெளிக்கவும். ஹெக்டருக்கு 20௦ கிலோ ஜிப்சம் மண்ணில் இடவும். லிட்டருக்கு 2 கிராம் காப்பர் ஆக்சி க்ளோரைடு மண்ணில் ஊற்றவும் அல்லது இலை வழி தெளிக்கவும். பருத்தி காய்ப்புழு மேலாண்மை: ஹெக்டருக்கு 100000 விகிதம் ட்ரைக்கோக்ரம்மாட்டோய்டியா பேக்ட்ரே முட்டை ஒட்டுண்ணியைப் பூக்கும் பருவத்திலிருந்து வாரம் ஒரு முறையாக மூன்று முறை விடவும். வேர் அழுகல் நோய்: விதைகளை கிலோவிற்கு 4 கிராம் ட்ரைகோடர்மா விரிடி அல்லது 10 கிராம் பேசில்லஸ் சப்டிலிஸ் கொண்டு விதைநேர்த்தி செய்யவும். ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பண்டாசிம் கலந்து விதைநேர்த்தி செய்யவும். பாதிக்கப்பட்ட செடியைச் சுற்றி 0.1 சத கார்பண்டாசிம் கரைசலை ஊற்றவும். எண்ணெய் வித்துக்கள் நிலக்கடலை காரிப் பருவத்திற்கு ஏற்ற இரகங்கள் டிஎம்வி ஜிஎன் 13, விஆர்ஐ ஜிஎன் 6, விஆர்ஐ 8, விஆர்ஐ 9, விஆர்ஐ 10, கோ 6, கோ 7, டிஎம்வி 14, தரணி, பிஎஸ்ஆர் 2 நுண்ணூட்டக் கலவை 12.5 கிலோ/ஹெ இடவும், விதை நேர்த்திக்கு பேசில்லஸ் சப்டிலிஸ் 10 கிராம்/கிலோ விதை அல்லது ட்ரைக்கோடர்மா ஆஸ்பரெல்லம் 4 கிராம்/கிலோ விதை. விதைப்பு இயந்திரம் மூலம் விதைக்கவும், ஜிப்சம் 4௦0 கிலோ/ஹெ விதைத்த 45 நாட்களில் இட்டு மண் அணைத்தும், ஆமணக்கு, பயறு வகை பயிர்கள் வரப்பு மற்றும் ஊடு பயிராக சாகுபடி செய்தல், பொறி வைத்தல். ஹெக்டருக்கு 5 கிலோ தநாவேப நிலக்கடலை ரிச் 500 லிட்டர் நீரில் கலந்து பாதி பூத்த பருவம் மற்றும் காய் உருவாகும் பருவத்தில் தெளிக்கவும். டிக்கா இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த லிட்டருக்கு 2 கிராம் கார்பண்டாசிம் மற்றும் மன்கோஜெப் கலவையைக் காலை நேரத்தில் தெளிக்கவும். வறட்சி மேலாண்மைக்கு 1 சத பிபிஎஃப்எம் அல்லது 0.5 சத பொட்டாசியம் க்ளோரைடு கரைசலை பூக்கும் பருவம் மற்றும் காய் உருவாகும் பருவத்தில் தெளிக்கவும். மண்ணில் ஈரப்பதத்தைத் தக்க வைத்து கொள்ள சிறு சிறு பாத்திகள் பரிந்துரைக்கப்படுகிறது. அதிகளவு சிகப்பு கம்பளி பூச்சி தாக்கம் இருக்கும் பகுதிகளில் ஒரு வரிசை தட்டைப்பயறு 5 வரிசை நிலக்கடலை என சாகுபடி செய்யவும். நிலக்கடலையில் வேரழுகல் நோயினைக் கட்டுப்படுத்த கார்பெண்டாசிம் 2 கிராம்/கிலோ விதை அல்லது டிரைக்கோடெர்மா அஸ்பெரில்லம் 4 கிராம்/கிலோ அல்லது பேசில்லஸ் சப்டிலிஸ் 1௦ கிராம்/கிலோ விதை என விதை நேர்த்தி செய்யவும். மண்ணில் பேசில்லஸ் சப்டிலிஸ் 2.5 கிலோ/ஹெ உடன் நன்கு மக்கிய தொழு உரம் 50 கிலோவினை மணலுடன் கலந்து விதைத்து 30 நாட்களில் இடவும். ஆமணக்கு வீரிய ஒட்டு இரகங்கள்: ஒய்ஆர்சிஎச் 1, ஒய்ஆர்சிஎச் 2, டிசிஎச் 519, ஜிசிஎச் 8. மானாவாரியில் 120 க்கு 90 செமீ இடைவெளி. ஒரு லிட்டர் தண்ணீரில் 0.5 மிலி கேஸ்டர் கோல்டு கரைசலைப் பூக்கும் பருவத்தில் தெளிக்கவும். சாறு உரிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த லிட்டருக்கு 1.5 மிலி பைஃபென்த்ரின் அல்லது 1000 பிபிஎம் அஜாடிராக்டின் காலை நேரத்தில் தெளிக்கவும். எள் பரிந்துரைக்கப்பட்ட இரகங்கள் கோ 1, பையூர், விஆர்ஐ 1, விஆர்ஐ 2, விஆர்ஐ 3, விஆர்ஐ 4, டிஎம்வி 7. சரியான விதைக்கும் தருணம் மே இரண்டாவது வாரம் முதல் ஜீன் இரண்டாவது வாரம். வேர் மற்றும் தண்டு அழுகல் நோயைக் கட்டுப்படுத்த விதை நேர்த்திக்கு டிரைக்கோடெர்மா ஆஸ்பரெல்லம் 4 கிராம்/கிலோ விதை அல்லது பேசில்லஸ் சப்டிலிஸ் 10 கிராம்/கிலோ விதை. வேப்பங்கொட்டை சாறு 4 சதவிகிதம் தெளிப்பதால் பூச்சி மற்றும் நோய் தாக்குதலைத் தவிர்க்கலாம். மாங்கனீஸ் பற்றாக்குறைக்கு ஹெக்டருக்கு 10 கிலோ மாங்கனீஸ் சல்பேட் தெளிக்கவும். கூடுதலாக வருமானம் பெற 6:1 என்ற விகிதத்தில் எள் மற்றும் துவரை ஊடுப்பயிராக சாகுபடி செய்யவும். சர்க்கரைப் பயிர்கள் கரும்பு இரகங்கள்: கோ 0212, கோ 11015 மண் வளத்தை அதிகரிக்க மற்றும் களை குறைக்க தக்கபூண்டு, சணப்பை பயிரினை ஊடுபயிராக அகல இடைவெளியில் நடப்பட்ட கரும்பில் சாகுபடி செய்யவும். இது குருத்து துளைப்பான் தாக்குதலைக் குறைத்து மகசூலை அதிகரிக்கும். கோ 8 பச்சைப்பயறு ஊடுபயிராக சாகுபடி செய்வதால் களையைக் கட்டுப்படுத்தலாம். வேலை பளுவினைக் குறைக்கவும், வேலையாட்கள் செலவைக் குறைக்கவும், ரோட்டாவேட்டருடன் இயங்கும் களைக்கருவி மற்றும் மண் அணைக்கும் கருவியினையும் பயன்படுத்தவும். ஹெக்டருக்கு 50 கிலோ தநாவேப நுண்ணாட்டக்கலவை ஊட்டமேற்றிய தொழு உரமாக இடவும். ஹெக்டருக்கு 2.5, 3.75 மற்றும் 5 கிலோ தநாவேப கரும்பு பூஸ்டரை 45, 60 மற்றும் 75 ஆம் நாள் 500 லிட்டர் தண்ணிரில் தெளிக்கவும். சோகை மூடாக்கு இடுவதால் குருத்து துளைப்பான் தாக்குதலைத் தவிர்க்கலாம். சோகை மூடாக்கின் மேல் வேஸ்ட் டீகம்போசர் தெளிக்கவும். 5 ஆம் மாதம் சோகை உரித்து சாலில் இடவும். இடைக்கணு புழுவைக் கட்டுப்படுத்த ஹெக்டருக்கு 10 இனக்கவர்ச்சிப் பொறி வைத்து கண்காணிக்கவும். 45 நாட்களுக்கு ஒருமுறை லூரை மாற்றவும் 4 ஆம் மாதம் முதல் ஹெக்டருக்கு 2.5 சிசி விகிதம் 15 நாட்களுக்கு ஒருமுறையாக 6 முறை ட்ரைக்கோக்ரம்மா கைலோநிஸ் முட்டை ஒட்டுண்ணியை விடவும். இரும்பு சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பெரஸ் சல்பேட் ஹெக்டருக்கு 25 கிலோ மண்ணில் இடவும் அல்லது 10௦ லிட்டர் தண்ணீரில் அரைக்கிலோ கரைத்து இலைவழி தெளிக்கவும். தோட்டக்கலை பயிர்கள் தக்காளி காரிஃப் பருவத்திற்கேற்ற இரகங்கள்: பிகேஎம் 1, சிடிஎச் 1 மற்றம் பையூர் 1. வீரிய ஒட்டு இரகங்களான கோடிஎச் 3, கோடிஎச் 4. குழித்தட்டு முறையில் நாற்றுகள் நடவுக்கு சிறந்தது. குழித்தட்டு முறைக்கு பேசில்லஸ் சப்டிலிஸ் அல்லது டிரைக்கோடெர்மா விரிடி மூலம் ஊட்டமேற்றிய தென்னை நார்கழிவுகளை பயன்படுத்தி நாற்றங்கால் மற்றும் நடவு வயலில் வரும் நோய்களிலிருந்து தக்காளி செடிகளைப் பாதுக்காக்கலாம். நட்ட 40 ஆம் நாள் முதல் 10 நாள் இடைவெளியில் மூன்று முறை 0.5 சத ஜிங்க் சல்பேட் தெளிக்கவும். நூற்புழு பாதிப்பு உள்ள பகுதிகளில் விவசாயிகள் கேந்திப்பூவை 8:1 என்ற விகிதத்தில் ஊடுப்பயிராக பயிரிடவும். மேலும், உயிரியல் நுண்ணுயிரிகளான பேசில்லஸ் சப்டிலிஸ், டிரைக்கோடெர்மா ஆஸ்பரில்லம் மற்றும் பர்பியுரியோசிலியம் லிலேசினம் 2 கிலோ/ஏக்கர் உடன் வேப்பம் புண்ணாக்கு அல்லது தொழு உரத்துடன் சேர்த்து நடவு செய்யும் முன் அல்லது 15- 30 நாட்கள் நடவுக்கு பிறகு இட வேண்டும். தக்காளி ஊசி துளைப்பானை (டையுடா அப்சல்யுட்டா) கட்டுப்படுத்த ஒரு ஹெக்டேருக்கு 4௦ இனக்கவர்ச்சி பொறிகள் வைக்க வேண்டும். பயிறுவகை பயிர்களை வரப்பு ஓர பயிராக பயிரிடலாம். இயற்கை எதிர் உயிரான டிரைக்கோகிரம்மா பிரிட்டியோசம் 40000/ஏக்கர் என்ற அளவில் ஒரு வார இடைவெளியில் வயலில் விடலாம். தக்காளி ஊசி துளைப்பான் பாதிப்பு அதிகமாக தென்பட்டால் அசாடிராக்டின் 1.0 சதவிகிதம் இ.சி. (10000 பிபிஎம்) 2 மிலி/லிட்டர் அல்லது இன்டாக்ஸ்சோகார்ப் 14.5 எஸ்சி 8 மிலி/10 லிட்டர் அல்லது குளோரன்ட்ரனிலிப்ரோல் 148.5 எஸ்சி 3 மிலி/10 லிட்டர் அல்லது எமாமெக்டின் பென்சோயேட் 5 எஸ்சி 4 கிராம்/1௦ லிட்டர் அல்லது ஸ்பினிட்டோரம் 11.7 எஸ்சி 1.0 மிலி/லிட்டர் அல்லது ஸ்பினோசேடு 45 எஸ்சி 3.2 மிலி/10 லிட்டர் தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம். இலை சுருட்டை மற்றும் புள்ளி வாடல் நோய் பயிர்களுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தி விவசாயிகளுக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தும். பரப்பு உயிரிகளை கட்டுப்படுத்த தையாமீத்தாக்ஸாம் 25 WG 0.4 மிலி/லிட்டர் அல்லது சையன் டிரனில்புரோல் 10.26 OD 1.8 மிலி/லிட்டர் அல்லது இமிடாகுளோரைடு 17.8 SL 0.3 மிலி/லிட்டர் பயன்படுத்தி இலை சுருட்டை மற்றும் புள்ளி வாடல் நோயைத் தடுக்கலாம். இலைப்புள்ளி நோய்க்கு லிட்டருக்கு 2 கிராம் மான்கோஜப். இலை வழியாக லிட்டருக்கு 2 கிராம் தநாவேப ஃப்ரூட்டி ஃப்ரஷ் தெளிக்கவும். மிளகாய் மிளகாய் இரகம் கோ சிஎச் 1. ஒரு மாத குழித்தட்டு நாற்று பயன்படுத்தவும். ஒரு டன் தென்னை நார்க்கழிவுடன் ஒரு கிலோ அர்க்கா நுண்ணுயிர்க் கலவை கலந்து இடவும். ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் த்ரைகோடர்மா விரிடி மற்றும் 80 கிராம் விதைக்கு 8 கிராம் அசோஸ்பைரில்லம் கலந்து விதைக்கவும் ஹெக்டருக்கு 2.5 கிலோ பேசில்லஸ் சப்டிலிஸ் 50 கிலோ தொழு உரத்தில் கலந்து இடவும். சாறு உரிஞ்சும் பூச்சி மற்றம் காய் துளைப்பான்களைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையைக் கடைப்பிடிக்கவும். 60 க்கு 45 செமி இடைவெளி, ஹெக்டருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கு, ஹெக்டருக்கு 12 இனக்கவர்ச்சிப் பொறி, ஒரு சத அஜாடிராக்டின், 10 லிட்டருக்கு 4 கிராம் எமாமெக்டின் பென்ஜோஏட் 5 சத SG. இலைப்பேன் மற்றும் பிற சாறு உரிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த நீல மற்றும் மஞ்சள் நிற ஒட்டும் அட்டைகளை ஹெக்டருக்கு 12 வீதம் கட்டவும். லிட்டருக்கு 0.7 மிலி இமிடாக்ளோப்ரிட் தெளிக்கவும். வயலைச் சுற்றி இரண்டு வரிசை மக்காச்சோளம் அல்லது சோளம் விதைக்கவும். ஹெக்டருக்கு ஒரு விளக்குப் பொறி வைக்கவும். இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த லிட்டருக்கு 1 மிலி ப்ரோபிகோனஜோல் கரைசல் தெளிக்கவும். சின்ன வெங்காயம் இரகங்கள்: கோ 5. கோ 6. மே-ஜூன் மாதங்களில் நடவு, விதை நேர்த்தி செய்ய பேசில்லஸ் சப்டிலிஸ் 5 கிராம்/கிலோ, ட்ரைக்கோடெர்மா ஆஸ்பெரெல்லம் 5 கிராம்/கிலோவுடன் பயன்படுத்த வேண்டும். ட்ரைக்கோடெர்மா ஆஸ்பெரெல்லம் 2.5 கிலோ/எக்டேர் என்ற அளவில் வேர் உட்பூசணத்துடன் கலந்து நடவிற்கு முன் இடுவதின் மூலம் குருத்து அழுகல் நோயின் தாக்கத்தைக் குறைக்கலாம். நட்ட 30, 40 மற்றும் 50 நாட்களில் துத்தநாக சல்பேட் 0.5% மற்றும் மாங்கனீசு சல்பேட் 1% நுண்சத்துக்களை மூன்று முறை இலை வழி ஊட்டமாக கொடுக்கப்பட வேண்டும். நட்ட ஐந்து நாட்களுக்குப் பிறகு, இலை பேன் தாக்கத்திலிருந்து பாதுகாக்க வயலைச் சுற்றி இரண்டு வரிசைகளில் மக்காசோளப் பயிரினை ஒரு அடி இடைவெளியில் விதைக்க வேண்டும். ஹெக்டருக்கு 12 மஞ்சள் ஒட்டும் அட்டை கட்டலாம். லிட்டருக்கு 1.3 மிலி டைமெத்தோஏட் 30 EC அல்லது 2 மிலி மீத்தைல் டெமடான் 25 EC தெளிக்கவும். இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த லிட்டருக்கு 2 கிராம் மன்கோஜெப் அல்லது 2.5 கிராம் காப்பர் ஆக்சி க்லோரைடு கரைசல் தெளிக்கவும். ஐ.ஐ.எச்.ஆர். வெஜிடபிள் ஸ்பெசல் இரண்டு முறை தெளிக்கவும். கத்திரி கோயமுத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் சேலம் போன்ற பகுதிகளுக்கு கோ-1, கோ-2 இரகங்கள், கோ.பி.எச்.-1 மற்றும் கோ.பி.எச்.-2 போன்ற வீரிய இரகங்களையும், மதுரை மாவட்டத்திற்கு எம்.டி.யூ-1 என்ற இரகத்தினையும் தேனி மற்றும் மதுரை மாவட்டத்திற்கு பிகேஎம் 1 இரகத்தினையும் கடலூருக்கு பி.எல்.ஆர்-1, பி.எல்.ஆர்.(கத்திரி)-2 போன்ற இரகங்களையும் திருநெல்வேலிக்கு கே.கே.எம்.-1, கன்னியாகுமரி பகுதிக்கு வி.ஆர்.எம்.-1 இரகத்தினையும் திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு தநாவேப கத்தரி விஆர்எம் 1 இரகத்தினையும் பயிரிடலாம். அரிசி கஞ்சியுடன் டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம்/கிலோ அல்லது பேசில்லஸ் சப்டிலிஸ் 1௦ கிராம்/கிலோ மற்றும் அசோஸ்பைரில்லம் 40 கிராம்/கிலோ விதையுடன் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். ஏக்கருக்கு பேசில்லஸ் சப்டிலிஸ் 2.5 கிலோ மற்றும் 5௦ கிலோ தொழு உரத்துடன் கலந்து மண்ணில் இடுவதால் நோய் தாக்குதலை வெகுவாக குறைக்கலாம். கடைசி உழவின் போது 8-10 சதவிகிதம் வேப்ப எண்ணெய் கலந்த வேப்பம் புண்ணாக்கு ஏக்கருக்கு 100 கிலோ இடுவதினால் காய் மற்றும் தண்டு துளைப்பான் தாக்குதலைக் குறைக்கலாம். ஹெக்டருக்கு 12 இனக்கவர்ச்சிப் பொறி, லிட்டருக்கு 3 மிலி அஜாடிராக்டின் 1 சத EC அல்லது 1 லிட்டருக்கு 4 கிராம் எமாசெடின் பென்ஜோஏட் 5 SG. நட்ட 40 ஆம் நாள் முதல் 10 நாள் இடைவெளியில் 0.5 சத துத்தநாக சல்பேட் கரைசலை மூன்று முறை தெளிக்கவும். வெண்டை ஜீன்-ஆகஸ்ட் மாதங்களில் இரகமாக இருந்தால் 8 கிலோ மற்றும் வீரிய ஒட்டு இரகமாக (கோ 4 மற்றும் அர்க்கா நிகிதா) இருந்தால் 2.5 கிலோ விதை பயன்படுத்த வேண்டும். பார் நடவுக்கு 45 x 30 செ.மீ., சொட்டுநீர் பாசன இரட்டை வரிசை நடவுக்கு 90 x 45 x 45 இடைவெளி இருக்க வேண்டும் ஒரு கிலோ விதைக்கு டிரைக்கோடெர்மா 4 கிராம் அல்லது பேசில்லஸ் சப்டிலிஸ் 10 கிராம் மற்றும் அசோஸ்பைரில்லம் 400 கிராம் அரிசி கஞ்சியுடன் கலந்து 20 நிமிடம் நிழலில் உலர வைத்து பின்பு விதைக்க வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 7 கிராம் இமிடாக்ளோப்ரிட் 70 WS விதைநேர்த்தி. ஹெக்டருக்கு 100 மிலி இமிடாக்ளோப்ரிட் 17.8 SL அல்லது 100 கிராம் தையோமெத்தாக்சேம் 25 WG தெளிக்கவும். விதைத்து 3வது நாளில் ஹெக்டருக்கு ஆக்ஸிபுரோர்பென் 1.5 கிலோ அல்லது மெட்டோலகுளோர் 0.75 கிலோ அல்லது புளுகுளோரலின் 1 கிலோ தெளித்து களைகளைக் கட்டுப்படுத்தலாம். நட்ட 45 ஆம் நாள் ஒரு சத யூரியா மற்றும் ஒரு சத பொட்டாஷ் தெளிக்கவும். மஞ்சள் நரம்பு தேமல் நோயைப் பரப்பும் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த 10 லிட்டருக்கு 5 கிராம் அஜாடிராக்டின் 0.03 WSP அல்லது 2 கிராம் தையாமெத்தக்சேம் 25 WG அல்லது 2 மிலி இமிடாக்ளோப்ரிட் 17.8 SL தெளிக்கவும். கொடி வகை பயிர்கள் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் பரிந்துரைக்கப்பட்ட இரகங்களான பூசணி: கோ-1, கோ-2, அர்க்கா சூர்யமுகி, அர்க்கா சந்திரன் புடலை: கோ-1, கோ-2, பி.கே.எம்.1, பி.எல்.ஆர்-1, பி.எல்.ஆர்-2, கோ.எச்.1 பீர்க்கன்: கோ-1, கோ-2, பி.கே.எம்.1, கோ.வி.எச்-1 சுரை: பூசா சம்மர் புரோலிபிக் நீளம், பூசா சம்மர் புரோலிபிக் வட்டம், பூசா மஞ்சரி, பூசா மேக்தூத், அர்க்கா பகார், தவேபக சுரை வீரிய ஒட்டு கோ-1 பாகல்: கோ-1, எம்.டி.யூ-1, அர்க்கா ஹரித், வி.கே.1, பிரியா மற்றும் பிரீதி வீரிய ஒட்டு இரகமான கோ.பி.கோ.எச்.1 டிரைக்கோடெர்மா 4 கிராம் அல்லது பேசில்லஸ் சப்டிலிஸ் 1௦ கிராம் ஒரு கிலோ விதையுடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும். கடைசி உழவின் போது அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா 2 கிலோ மற்றும் சூ பேசில்லஸ் சப்டிலிஸ் 2.5 கிலோ மற்றும் 5௦ கிலோ தொழு உரத்துடன் 100 கிலோ வேப்பம்புண்ணாக்கு கலந்து ஒரு ஹெக்டருக்கு இட வேண்டும். புடலைக்கு விதைத்த 10-15 நாட்கள் கழித்து வாரத்திற்கு ஒரு முறை எத்திரல் 100 பிபிஎம், மற்ற பயிர்களுக்கு 250 பிபிஎம் தெளிக்க வேண்டும். நன்கு வளர்ச்சி பருவத்தில் பி.பி.எப்.எம். 1 சதவீதம் தெளிக்க வேண்டும். அர்க்கா ஐ.ஐ.எச்.ஆர். காய்கறி நுண்ணூட்டக் கலவை 0.1 சதம் 30, 45 மற்றும் 70வது நாட்களில் தெளித்து மகசூலை அதிகரிக்கலாம். ஒரு செடிக்கு வேப்பம்புண்ணாக்கு 30 கிராம் வைக்க வேண்டும். ஹெக்டருக்கு பேசில்லஸ் சப்டிலிஸ் 2.5 கிலோ மண்ணில் இடுவதன் மூலம் நூற்புழு தாக்குதலைக் குறைக்கலாம். ஹெக்டருக்கு பழ ஈ. பொறி 12 வைத்து பழ ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம் ஹெக்டருக்கு 12 மஞ்சள் நிற ஒட்டும் பொறி வைத்து வெள்ளை ஈ, அசுவினி, தத்துப்பூச்சி போன்றவற்றை அழிக்கலாம். அஸ்விணி மற்றும் பிற சாறு உரிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த 1௦ லிட்டருக்கு 5 கிராம் அஜாடிராக்டின் 0.03 WSP அல்லது ஹெக்டருக்கு 100 கிராம் தையோமெத்தோஜாம் 25 WG அல்லது 100 மிலி இமிடாக்ளோப்ரிட் 17.8 SL தெளிக்கவும். சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த லிட்டருக்கு 1 கிராம் கார்பண்டாஜிம் 50 WP அல்லது 2 கிராம் நனையும் கந்தகம் நோய் அறிகுறி தென்பட்டவுடன் 15 நாள் இடைவெளியில் தெளிக்கவும். அவரை குத்து இரக அவரை ஆண்டு முழுவதும் பயிரிடலாம். பந்தல் இரக அவரை ஜூன், ஜூலை மாதங்களில் பயிரிடலாம். பழப் பயிர்கள் மா மாவில் பழ ஈயைக் கட்டுப்படுத்த மீத்தைல் யூஜுனால் பொறியை ஒரு ஹெக்டேருக்கு 12 என்ற எண்ணிக்கையில் அமைக்க வேண்டும். மாவில் நுண்ணூட்ட பற்றாக்குறை நிவர்த்திக்கு மா ஸ்பெஷல் 5 சதவிகிதம் இலைவழியாகத் தெளிக்க வேண்டும். குறுகிய கால பயறு வகைகள், காய்கறிகள், நிலக்கடலை போன்ற பயிர்களை மா காய்க்கும் பருவத்திற்கு முன் பயிரிடலாம். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் உரம் மற்றம் கம்போஸ்ட்டை மரத்திலிருந்து 45-90 செ.மீ. தள்ளி மண்ணிலிட்டு மூடவேண்டும். ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் கவாத்து செய்யவும். மாவில் சேமிப்பு கிடங்கில் வரும் ஆந்தரகோனஸ் இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த வெந்நீரில் (52o±1oC) பழங்களை 5 நிமிடம் மூழ்கி எடுத்து, பின்பு 8 சதவிகித தாவர மெழுகில் (ப்ருடாக்ஸ் (அ) வாக்ஸால்) நனைக்க வேண்டும். திராட்சை குளிர்காலத்தில் விளைச்சல் பெற மே, ஜூன் மாதத்தில் கவாத்து செய்யவும். மழைக்காலத்தில் பழங்களில் வெடிப்பு வருவதைத் தவிர்க்க மழைக்கு முன் 2 சத கால்சியம் க்ளோரைடு கரைசலைத் தெளிக்கவும். மாதுளை பழங்களில் வெடிப்பு வருவதைத் தவிர்க்க ஜூன் மாதத்தில் 15 நாள் இடைவெளியில் 1 சத திரவ பாரஃபின் இரண்டு முறை தெளிக்கவும். கொய்யா இரகம்: அர்க்கா கிரன் ஜீன் முதல் டிசம்பர் மாதம் வரை 5-6 மீட்டர் இடைவெளி விட்டு கொய்யாவை நடவு செய்யலாம். கொய்யாவை நடவு செய்யும் குழியில் 10 கிலோ சாண குப்பையும் 45 செமீ x 45 செமீ x 45 செமீ அளவுள்ள களிமண் உருளை செய்து குழியில் இட்டு விண் பதிய கன்று அல்லது ஒட்டு இரக கொய்யா கன்றுகளை நடவு செய்யலாம். கொய்யா வேர் முடிச்சு நூற்புழுவைக் கட்டுப்படுத்த மரத்தைச் சுற்றி சாமந்திப்பூ ஊடுபயிராக சாகுபடி செய்யவும். நூற்புழு பூஞ்சான முட்டை ஒட்டுண்ணியை போகோனியா க்ளாமிடோஸ்போரியாவை ஒரு மரத்திற்கு 60 கிராம் 5 கிலோ சணக்குப்பை மற்றும் 250 கிராம் வேப்பம்புண்ணாக்குடன் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாக மூன்று முறை இடலாம். பப்பாளி இரகம்: கோ 8. பப்பாளி நடவு செய்வதற்கு ஜீன் முதல் செப்டம்பர் மாதம் மிகவும் ஏற்றது. பப்பாளியில் ஆரம்ப காலத்தில் நச்சுயிரி நோயால் வரும் வளைய வடிவ இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த இள நாற்றுகளை வலை கூடாரத்தில் வைத்து பாதுகாத்தும், நடவு செய்யவுள்ள 3 நாட்களுக்கு முன்னால் பயிரில் ஊடுறுவிப் பாயும் பூச்சி மருந்தைத் தெளிக்கவும். பப்பாளியில் வேர் அழுகல் அல்லது வாடல் நோயைக் கட்டுப்படுத்த மண்ணில் 1 சதவிகித போர்டோ கலவை அல்லது மெட்டலாக்ஸைல் 0.2 சதவிகிதம் 2-4 முறை 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். மசாலா பயிர்கள் மிளகு பூ மற்றும் காய் உதிர்வதைத் தவிர்க்க மே, ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஒரு சத டை அம்மோனியம் பாஸ்பேட் தெளிக்கவும். மஞ்சள் மஞ்சள் இரகங்களான கோ 1, பிஎஸ்ஆர் 1, பிஎஸ்ஆர் 2, கோ 2, ரோமா, சுரோமா, சுவர்ணா, சுதர்சனா, சுகுணா, சுகந்தம், ரெங்கா, ரெஸ்மி, ராஜேந்திர சோனியா, கிருஷ்ணா, ஐஐஎஸ்ஆர் அலப்பி சுப்ரிம், ஐஐஎஸ்ஆர் கேதராம், ஐஐஎஸ்ஆர் பிரபா, ஐஐஎஸ்ஆர் பிரதிபா, ஐஐஎஸ்ஆர் பிரகதி, ஈரோடு மற்றும் சேலம் உள்ளூர் இரகங்கள் போன்ற மஞ்சள் இரகங்களைப் பயிரிடலாம். பேசில்லஸ் சப்டிலிஸ் 1௦ கிராம்/கிலோ அல்லது டிரைக்கோடெர்மா அஸ்பெரல்லம் 4 கிராம்/கிலோ கொண்டு கிழங்கு நேர்த்தி செய்யவும். மஞ்சள் கிழங்கில் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த பேசில்லஸ் சப்டிலிஸ் அல்லது டிரைக்கோடெர்மா அஸ்பெரல்லம் 2.5 கிலோ/ஹெக்டேர், 5௦ கிலோ/ஹெக்டேர் தொழு உரத்துடன் சேர்த்து நடவிற்கு முன் மற்றும் நட்ட 150 வது நாள் கழித்து மண்ணில் இட வேண்டும். அந்தந்தப் பகுதிக்கு ஏற்ப மஞ்சளில் ஊடுபயிராக வெங்காயம், மிளகாய், சேனைக்கிழங்கு, மல்லி மற்றும் வெந்தயம் போன்ற பயிர்களைப் பாத்திகளில், ஓரமாக 10 செமீ இடைவெளியுடன் நடவு செய்வதால் கூடுதலாக வருமானம் பெறலாம். நீர் தேங்கக் கூடிய பகுதிகளில் மேட்டு பாத்திகளில் நடவு மேற்கொள்ள வேண்டும். தோட்டப் பயிர்கள் தென்னை தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த ஒட்டும் பொறி, நீர் தெளித்தல் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு முறைகளைப் பயன்படுத்தலாம். விளக்கெண்ணெய் தடவிய மஞ்சள் நிற ஒட்டும் அட்டை ஏக்கருக்கு 5 கட்டுதல், ஏக்கருக்கு 100 என்கார்சியா க்வாடிலூபே (ஏக்கருக்கு 10 இலைத்துண்டுகள்) விடுதல், இளம் மரங்களுக்கு ஏக்கருக்கு 500 க்ரைசோபெர்லா ஜஸ்ட்ரோவி சில்லெம் முட்டைகள் விடுதல். ஐந்தாம் ஆண்டு முதல் மரத்திற்கு 50 கிலோ தொழு உரம் அல்லது கம்போஸ்ட் அல்லது பசுந்தாள் உரம் இடவும். மரத்திற்கு 1.3 கிலோ யூரியா, 2 கிலோ சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ பொட்டாஷ் உரங்களை ஜூன், ஜூலை மற்றும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் இரண்டு சம பங்காகப் பிரித்து இடவும். மரங்களுக்கிடையேயான இடைவெளியை ஜூன், ஜூலை மற்றும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் உழுதுவிடவும். தென்னை நுண்ணூட்ட உரத்தை மரத்திற்கு ஒரு கிலோ விகிதம் ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது சம பங்காகப் பிரித்து ஆண்டுக்கு இரு முறையோ இடவேண்டும். தநாவேப தென்னை டானிக் 40 மிலி 160 மிலி நீரில் கலந்து ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை வேர் மூலமாக அளிக்கலாம். இரப்பர் ஜூன், ஜூலை மாதங்களில் 120 x 45 x 60 செமீ இடைவெளியில் நடவும். முதல் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு வாழை, அன்னாசி ஊடுபயிர் செய்யலாம். ஹெக்டருக்கு 300 கிலோ அல்லது மரத்திற்கு 900 கிராம் 10:10:10 உரத்தினை ஏப்ரல், மே மற்றும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இடவும். பால் தொட்டிக்கு மேல் மழைக்கூண்டு வைக்கவும். சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த கந்தகம் கலந்த டால்க் (70:30) தூவவும். கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன் வளம் தாதுப்பு கலவை, தாதுப்பு கட்டி, வெள்ளை கழிச்சல் நோய்க்கான தடுப்பூசி, தீவன விதைகள் மற்றும் பிற சேவைகளுக்கு வேளாண் அறிவியல் மையத்தைத் தொடர்பு கொள்ளலாம். கறவை மாடுகள் மற்றும் எருமைகள் கால்நடைகளை நல்ல காற்றோட்டமுள்ள கொட்டகைகளில் அல்லது மர நிழல்களில் நிறுத்த வேண்டும். வெப்ப தாக்கத்தைக் குறைக்க கால்நடைகளை முன் பகல் மற்றும் மாலை நேரங்களில் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும். வெப்ப தாக்கத்தைக் குறைக்க எப்பொழுதும் குடிநீர் கிடைக்கச் செய்ய வேண்டும். கறவை மாடுகள் மற்றும் எருமைகளுக்கு காலை 11 மணி மற்றும் மதியம் 3 மணிக்கு குளிர்ந்த நீரைத் தெளிக்க வேண்டும். அவ்வப்பொழுது கால்நடைகளுக்கு வெப்ப தாக்கம் உள்ளதா என கண்காணிக்க வேண்டும். கால்நடைகளுக்கு தீவன திடல் அமைக்க வேண்டும். (10 சென்ட் மாதிரி தீவன திடல் - 4 செனட் CO 4, 3 சென்ட் - தீவன சோளம் (CO FS 29), 3 சென்ட் வேலிமசால் ஓரங்களில் மரவகை தீவனமான அகத்தி, சூபாபுல்லை நடவு செய்யலாம். யூரியா, கரும்பு ஆலைக் கழிவு (Pressmud) மற்றும் உப்பு பயன்படுத்தி வைக்கோலை செரியூட்டிக் கொடுப்பதால் கால்நடைகளுக்கு செரிமானம் அதிகரித்து உற்பத்தி பெருகும். மண்ணில்லா (ஹைட்ரோபோனிக்ஸ்) விவசாய முறையில் விளைவித்த தீவனங்களை வாய்ப்புள்ள இடங்களில் பயன்படுத்தவும். மழை காலத்திற்கு முன்பு கால்நடைகளுக்கு குடற்புழு தொற்று ஏற்படும் என்பதால், கால்நடைகளின் சாண மாதிரியை அருகில் உள்ள நோய் புலனாய்வு ஆய்வகம் அல்லது பல்கலைக்கழக மையத்தில் அளித்து பரிசோதனை செய்து கொள்ளவும். புற ஒட்டுண்ணியைக் கட்டுப்படுத்த ஒட்டுண்ணி நீக்க மருந்தைப் பயன்படுத்தவும். 3-6 மாத வயதுடைய கன்றுகளுக்கு தாது உப்பு கட்டிகளை கொட்டகைகளில் கட்டி தொங்கவிடுவதால், தாதுப்பு குறைபாட்டைக் கட்டுப்படுத்தலாம். பால் மாடுகளுக்கு தானுவாஸ் தாதுப்பு 30 கிராம் தினமும் தீவனத்தில் அளிக்க வேண்டும். வற்ற கறவை மாடுகளுக்கு தானுவாஸ் தாதுப்பு 15 கிராம்; தினமும் தீவனத்தில் அளிக்க வேண்டும். தினமும் தீவனத்துடன் (NaCl) சாதாரண உப்பு 30-50 கிராம் அளிப்பதால் பால் அளவு அதிகரிக்கும். பாலில் கொழுப்பு சத்து அதிகரிக்க மற்றும் மித அமில நோயைக் கட்டுப்படுத்த தினமும் தீவனத்தில் 30-50 கிராம் சமையல் சோடா உப்பைக் கலந்துவிட வேண்டும். நாள் ஒன்றுக்கு அசோலா 1-2 கிலோ வீதம் கறவை மாடுகளுக்கு அளிக்கலாம். பீர் பூசா கழிவுகளை தினமும் 1௦ சதம் வரை மாடுகளுக்குக் கொடுக்கலாம். தானுவாஸ் மாஸ்டி காட் தெளிப்பானைப் பயன்படுத்தி மடி நோய் வராமல் பாதுகாக்கலாம். விவசாயிகள் முறையாக தேர்வு செய்யப்பட்ட பாரம்பரிய மூலிகை மருத்துவ முறைகளைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். ஆடுகள் நல்ல காற்றோட்டமுள்ள கொட்டகைகளில் அல்லது மர நிழல்களில் பராமரிக்க வேண்டும். அந்தப் பகுதிகளில் கிடைக்கக்கூடிய தீவனங்களை முறையாக அளித்து அதனைப் பரவலாக்கம் செய்ய வேண்டும். மண்ணில்லா (ஹைட்ரோபோனிக்ஸ்) விவசாய முறையில் விளைவித்த தீவனங்களை வாய்ப்புள்ள இடங்களில் பயன்படுத்தவும். மழை காலத்திற்கு முன் சாண மாதிரியை அருகில் உள்ள நோய் புலனாய்வு ஆய்வகம் அல்லது பல்கலைக்கழக மையத்தில் அளித்து பரிசோதனை செய்து தக்க குடற்புழு நீக்க மருந்தினை பயன்படுத்தவும். துள்ளுமாரி தடுப்பூசியினை மே மாதத்தில் போடவேண்டும். நீல நாக்கிற்கான தடுப்பூசியினை ஜுலை மற்றும் ஆகஸ்டு மாதத்திற்குள் போட வேண்டும். பட்டியில் புதிதாக சேர்க்கப்படும் ஆடுகளில் பிபிஆர் அல்லது பிற நோய்த்தொற்று உள்ளதா என்று ஆய்வு செய்வதற்கு அந்த ஆடுகளை 23 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். ஜுன், ஜுலை மாதங்களில் ஏற்படக்கூடிய மேய்ச்சல் நிலங்களில் உள்ள பற்றாக்குறையைக் குறைப்பதற்கு சினைப்பிடித்த ஆடுகளுக்கு 25௦ முதல் 300 கிராம் அடர் தீவனம் கொடுப்பதன் மூலம் கருச்சிதைவு அல்லது ஊட்டச்சத்து குறை உள்ள குட்டிகளைத் தவிர்க்கலாம். மழை காலங்களில் தீவன மரக்கன்றுகளை நடவு மேற்கொண்டு பசுந்தழைகளை ஆடுகளுக்கு தீவனமாக கொடுக்கலாம். மேய்ச்சல் நிலங்களில் தீவன பற்றாக்குறை உள்ள சமயங்களில் ஆடுகளுக்கு பயிர் கழிவுகள், மரபுசாரா தீவனங்களாகிய மரவள்ளி இலைகள், வெங்காய பயிர் கழிவுகள், வாழை இலைகள் மற்றும் தண்டுகளை உணவாக அளிக்கலாம். அசோலாவை ஆடுகளுக்கு 250 முதல் 500 கிராம் வரை ஒரு நாளைக்கு பகுதி உணவாக அளிக்கலாம். ஒட்டுண்ணிகளின் பாதிப்பிலிருந்து பாதுக்காக்க ஒட்டுண்ணி கட்டுப்படுத்தும் மருந்தினை நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும். விவசாயிகள் முறையாக தேர்வு செய்யப்பட்ட பாரம்பரிய மூலிகை மருத்துவ முறைகளைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். கோழி வளர்ப்பு (நாட்டுக்கோழி) கோழிக்குஞ்சுகளை கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்திலோ அல்லது அனுமதி பெற்ற கோழிக்குஞ்சு பண்ணைகளிலோ வாங்க வேண்டும். கோழியில் வெள்ளைக்கழிச்சல் (இராணிகட்) நோய் வராமல் தடுக்க 7வது நாள் (F1 Strain) கண்ணில் விட வேண்டும். 28 வது நாள் லசோட்டா (Lasota) கண்ணில் விட வேண்டும் மற்றும் 56 வது நாள் RDVK தடுப்பூசி போட வேண்டும். கோழிகளுக்கு வெப்ப அயர்ச்சியைக் குறைக்க நெல்லி அல்லது மோர் கரைசல் அல்லது எலுமிச்சை சாறு போன்றவற்றை நல்ல சுத்தமான குடிநீரில் கலந்து கொடுக்க வேண்டும். கோழியின் வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஒரு சதவிகிதம் புரத அளவு (சோயா பீன்ஸ் மாவு) தீவனத்தில் கலந்து கொடுக்கவும். இரத்தக்கழிச்சல் நோயைத் தடுக்க கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி இரத்தக்கழிச்சல் தடுப்பு மருந்தை தக்க அளவில் தீவனத்தில் தொடர்ச்சியாக சேர்க்க வேண்டும். கோழிகளில் ஒழுகும் முட்டை இடுவதை தடுக்க ஒரு நாளைக்கு 3-5 கிராம் கடற்சிப்பி சுண்ணாம்பு கல்/குருணை அளிக்கவும். கோழிகளை இடமாற்றுவது, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வது, எடுத்து வருவது மற்றும் தடுப்பூசி போடுவது போன்ற வேலைகளை இரவு நேரங்களிலோ அல்லது பகலில் வெப்ப நிலை குறைவாக உள்ள நேரங்களிலோ செய்வது நல்லது. அசோலாவை ஒரு நாளைக்கு 50 கிராம்/கோழி என்ற விகிதத்தில் வழங்க வேண்டும். விவசாயிகள் முறையாகத் தேர்வு செய்யப்பட்ட பாரம்பரிய மூலிகை மருத்துவ முறைகளைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். மீன் வளர்ப்பு கெண்டை மீன் வளர்ப்பு கெண்டை மீன் வளர்ப்பில் 10 முதல் 20% நீரினை மாற்றி 10 முதல் 20% ஆழ்துளை கிணற்று அல்லது நல்ல ஓடை நீரினை சேர்க்க வேண்டும். ஒட்டுண்ணி இல்லாத குஞ்சுகளைத் தேர்வு செய்ய வேண்டும். மாதம் ஒரு முறையாவது நீரின் தரம் குறித்த ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக தீவனம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒட்டுமொத்த மீன்களின் எடையின் அடிப்படையில் தீவனம் அளிக்கப்பட வேண்டும். ஆக்சிடெட்ராசைக்ளின் ஒரு கிலோ குச்சி தீவனத்துடன் 1௦௦ மில்லி கிராம் என்ற அளவில் சேர்த்து 5 நாட்கள் கொடுக்க வேண்டும். இறால் வளர்ப்பு இறால் குஞ்சுகளை குளத்தில் விடுவதற்கு முன் கட்டாயமாக பி.சி.ஆர். ஆய்வு மேற்கொள்ள வேண்டும். குளத்தில் உள்ள நீரை, குஞ்சுகள் விடுவதற்கு முன்பாக கட்டாயம் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும். கிபிட் திலாப்பியா மீன் வளர்ப்பு நீரில் உள்ள பிராணவாயு குறைவுபடாமல் இருக்க நீரினை மாற்றி ஆழ்துளை கிணற்று நீரினை சேர்க்க வேண்டும். குளத்தில் உள்ள நீர் அதிக தரம் குறைவுபடாமலிருக்க, உர பயன்பாட்டை குறைத்து பகுதி அறுவடை மூலம் மீன்களின் ஒட்டு மொத்த எடையைக் குறைக்க வேண்டும். தேவைக்கு அதிகமான தீவனம் இடுவதைத் தவிர்க்க அவ்வப்போது தீவனம் இடும் தட்டை முறையாகக் கண்காணிக்க வேண்டும். அலங்கார மீன் வளர்ப்பு பாக்டீரியா நோய்கள் வராமல் தடுக்க, ஆக்சிடெட்ராசைக்ளின் ஒரு கிலோ தீவனத்துடன் 50 மில்லி கிராம் என்ற அளவில் சேர்த்து ஒரு வாரம் கொடுக்க வேண்டும். பாக்டீரியா நோய்களைக் கட்டுப்படுத்த பொட்டாசியம் பெர்மாங்கனேட் 0.5 பிபிஎம் மற்றும் 3% உப்பு கரைசலில் நனைக்க வேண்டும். கொடுவா மீன் வளர்ப்பு ஆரம்ப கட்டத்தில் அளவு பிரித்தல் செய்யப்பட வேண்டும். தீவனம் அளிப்பதில் பற்றாக்குறையைத் தவிர்க்கவும். ஆதாரம்: ஐசிஏஆர் (ICAR) காரிஃப் பருவ பயிர் சாகுபடிக்கான ஆலோசனைகள்