வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில், வாடகைக்கு வழங்கப்படும் வேளாண் இயந்திரங்களை, விவசாயிகள் வீட்டிலிருந்தபடியே முன்பதிவு செய்ய இ-வாடகை ஆன்லைன் செயலியை 8.1.2022 அன்று தமிழக அரசு வெளியிட்டது. தமிழ்நாடு அரசு வேளாண் பெருமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் செயல்படுத்திவருகிறது. தற்போதுள்ள வேலையாட்கள் பற்றாக்குறையினை சமாளித்து, வேளாண் பணிகளை குறித்த காலத்தே செய்து முடிப்பதற்காக குறைந்தவாடகைக்கு வழங்கப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகள், வீட்டிலிருந்த படியே முன்பதிவு செய்ய இ-வாடகை செயலியை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இ-வாடகை செயலி பயன்கள் இதன் மூலம் விவசாயி பெருமக்கள் வேளாண்மைப் பொறியியல் துறை, கூட்டுறவு சங்கம் மற்றும் பிற விவசாயிகள் மூலம் வாடகைக்கு விடப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வீட்டிலிருந்தே முன் பணம் செலுத்தி வாடகைக்கு முன்பதிவு செய்யலாம். டிராக்டர், மினி டிராக்டர் இயந்திரத்திற்கு குறைந்தது 2 மணி நேரமும் அதிக பட்சமாக 20 மணி நேரமும், நெல் அறுவடை இயந்திரத்திற்கு குறைந்தது 1 மணி நேரமும் அதிக பட்சமாக 20 முன் பணமாக செலுத்தி வாடகைக்கு பெறலாம். பணத்தை UPI, நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு மூலம் செலுத்தி ஒப்புகை சீட்டையும் முன் பதிவு செய்த வேளாண் இயந்திரங்கள் விவரத்தையும் அறியலாம். விவசாயிகள் இயந்திர வாடகையினை வாடகைக்கு தேவைப்படும் குறைந்தது 36 மணி நேரத்திற்கு முன்னதாகவும் அதிகபட்சமாக 15 நாட்களுக்குள்ளும் முன் பதிவு செய்ய வேண்டும். விவசாயிகள் தாங்கள் முன்பணமாக செலுத்திய வாடகையினை ரத்து செய்ய விரும்பினால் முன் பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்து கொள்ள வேண்டும். மேலும் பயன்படுத்தப்படாத வாடகை தொகையினை பெற்றிட சம்பந்தப்பட்ட உபகோட்ட அலுவலகத்தினை தொடர்பு கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான வேளாண் இயந்திரங்களை இ-வாடகை செயலி மூலம் பிற விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கி பயன்பெறலாம். வாடகைக்கு வழங்க உள்ள வேளாண் இயந்திரங்களின் பதிவு சான்றிதழ், இயந்திரத்தின் தகுதி சான்றிதழ், காப்பீட்டு சான்றிதழ் மற்றும் தேவையான பிற ஆவணங்களை துல்லியமாகவும், உண்மையாகவும் இத்தளத்தில் பதிவேற்றம் செய்து, வேளாண் இயந்திரங்கள் சரியாக பராமரிப்பதை உறுதி செய்திட வேண்டும். வேளாண் இயந்திரங்கள் இயக்குபவர்கள் தகுந்த பயிற்சி பெற்ற மற்றும் காப்பீடு செய்யப்பட்ட இயந்திரங்கள் இயக்குபவராகவும் இருத்தல் வேண்டும். வாகன ஓட்டுநர் உரிமங்கள் நடப்பில் உள்ளதை உறுதிப்படுத்தல் வேண்டும். பதிவு மற்றும் இயந்திர விவரங்கள் ஆகிய சரியான தகவல்களை இத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும். இ-வாடகை தளத்தில் முன்பதிவு செய்யப்படும் பதிவுகளை உடனுக்குடன் ஏற்கவும் உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றி இயந்திரங்கள் இயக்கப்படுவதையும் உறுதி செய்தல், வேளாண் இயந்திரங்கள் இயக்குபவர் மீது எவ்விதமான குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லாததை உறுதி செய்தல் வேண்டும். வாடகைக்கு உபயோகித்துக்கொள்ளும் விவசாயிகளின் விவரங்கள் போன்ற அனைத்து தரவுகளையும் ரகசியத்தன்மையுடன் சேவை வழங்குநர் பாதுகாக்க வேண்டும். இத்தரவுகளை வேறு பிற நோக்கங்களுக்காக பயன்படுத்தக்கூடாது என்பதை சேவை வழங்குநர் உறுதி செய்திட வேண்டும். முன்பதிவின்போது உறுதி செய்யப்பட்ட சேவைக்கான தேதி மற்றும் நேரத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இச்செயலியின் மூலம், வேளாண்மைப் பொறியியல் துறையின் செய்திகள் மற்றும் திட்டங்களை விவசாயிகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும், விவசாயப் பெருமக்கள், தங்களுக்கு எற்படும் சந்தேகங்களை இச்செயலியின் மூலம் வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளவும் இயலும். இ-வாடகை பயன்படுத்தும் முறை இ-வாடகை வலைதளம் உழவர் செயலியின் மூலம் சேவையை பயன்படுத்துதல் இத்திட்டத்தின் மூலம், வேளாண்மையில் இயந்திரங்கள், கருவிகளின் பயன்பாட்டின் அவசியத்தை உணர்ந்து, வேளாண் பணிகளை குறித்த நேரத்தில் மேற்கொள்ளவும், வேளாண் தொழிலாளர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், பயிர் சாகுபடி செலவினைக் குறைக்கவும், நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வேளாண்மையை மேம்படுத்திடவும், வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுகின்றன. வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9