மண் பரிசோதனை மண் பரிசோதனை செய்வதன் மூலம் விவசாயிகள் தங்களுடைய விளைநிலத்தின் மண் வளம், தன்மைகளைப் புரிந்துகொள்ள முடியும். எந்த வகையான தானியங்களைப் பயிர் செய்ய முடியும். என்ன வகையான உரமும், ஊட்டச் சத்தும் மண்ணுக்குத் தேவைப்படுகிறது போன்ற நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ள முடியும். மண் அரிப்பு, மண் வளம் குன்றுதல் போன்றவற்றை அறிய மண் பரிசோதனை மிக அவசியம். பயிர் அறுவடைக்குப் பிறகும் கூட நாம் மண் பரிசோதனை செய்வதன் மூலம் தற்போதைய மண்ணின் வளத்தை அறிய முடியும். பொருளாதார அடிப்படையில் மண் பரிசோதனை செய்வதன் மூலம் தேவைக்கு அதிகமான உரமிடுதலைத் தடுக்க முடியும். அதிகம் வருவாய் தரக்கூடிய பயிர்களைத் தெரிவு செய்து விவசாயம் செய்ய முடியும். மண் வள அட்டை மண்ணின் தன்மை, பாசன நீர், பயிர் மற்றும் பிற உயிரியல் பண்புகளின் அடிப்படையில் மண்ணின் வளத்தையும் தரத்தையும் இந்த மண்வள அட்டை நிர்ணயிக்கிறது. விவசாயிகள் சொந்த அனுபவத்தையும், அறிவுத்திறனையும் கொண்டு மண்வளத்தைக் கண்காணிக்கவும், மேம்படுத்தவும் இந்த அட்டை ஒரு கருவியாகப் பயன்படுகிறது. காலப்போக்கில் மண்வளத்தில் ஏற்படும் மாற்றங்களையும் அதற்கான மேம்பாட்டு முறைகளையும் இந்த அட்டையில் பதிவு செய்து கொள்ளலாம். ஒரே நபர் இந்த அட்டையை தொடர்ந்து பூர்த்தி செய்து வந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த அட்டையின் மூலம் நிர்ணயிக்கும் மண்வளத்தின் தரம் பெரும்பாலும் விவசாயிகளின் அனுபவத்தைப் பொருத்ததேயன்றி எந்த ஆய்வகப் பரிசோதனையையும் அடிப்படையாகக் கொண்டதல்ல. ஒரு இடத்திலுள்ள மண்ணின் தரத்தினை மற்றொரு இடத்திலுள்ள மண்ணின் தரத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பது இந்த அட்டையின் நோக்கமல்ல. ஆனால், ஒரு மண் எந்த அளவுக்கு பயிர் உற்பத்தித் திறன் கொண்டது என்பதை இந்த அட்டையைக் கொண்டு அறிய முடியும். மண்வள அட்டையை உபயோகிப்பது எப்படி? மண்வகைகள், வயலின் சரிவு, பயிர் சுழற்சி, உர மேம்பாடு ஆகியவற்றை பொறுத்து ஒரு பண்ணையில் உள்ள நிலங்களை தனித்தனியே பிரித்து ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு அட்டையைப் பயன்படுத்தவும் ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு அல்லது மூன்று பொருத்தமான இடங்களை தேர்வு செய்து மண்ணின் பண்புகளை ஆய்வு செய்யவும் பின் அட்டையில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களின் அடிப்படையில் மண்ணின் தரத்தினை வளமானது, சுமாரான வளம், வளம் குன்றியது என்று தரம் பிரித்து அதற்கான கட்டத்தில் குறியிட்டு நிரப்பவும் மண்ணில் வேறு ஏதாவது குறைபாடுகள் இருப்பின் அவைகளை குறிப்புப் பகுதியில் விபரமாக எழுதவும் மண் வள அட்டை பயன்கள் மண் மாதிரி எடுத்து ஆய்வு செய்து, மண்வள அட்டை பெற்று, அதிகாரிகள் ஆலோசனைபடி உரமிட்டால் அதிக மகசூல் பெறலாம். விவசாயிகளின் நலன் மண்ணின் வளத்தைப் பொருத்தே அமைகிறது. பயிர் சாகுபடி செய்வதால் ஏற்படும் சத்துக் குறைபாடுகளைச் சரியான உர நிர்வாகத்தின் மூலம் சரிசெய்ய வேண்டியது அவசியம். சரியான உர நிர்வாகத்துக்கு முதலில் மண் பரிசோதனையே அடிப்படையாகும். சத்துகளின் அளவு வேறுபடுவதாலும், சத்துகளின் தேவை மாறுபடுவதாலும் மண் பரிசோதனையின் மூலமே பயிருக்கு ஏற்ப சரியான உர சிபாரிசு வழங்க முடியும். அதன்மூலம் தேவையான அளவு மட்டுமே உரமிடுவதால் குறைந்த செலவில் கூடுதல் மகசூல் பெறுவதோடு அதிகப்படியான உரச்செலவையும் குறைக்கலாம். மண்ணின் தன்மைகளை அறியவும், களர், உவர், அமில நிலங்களை சீர்திருத்தவும் பயிருக்குக் கிடைக்க வேண்டிய சத்துகளின் அளவை அறிந்து அதற்கேற்ப உரமிடவும் மண் பரிசோதனை மிகவும் அவசியமாகிறது. ஆண்டுக்கு ஒரு முறை மண் மாதிரிகள் எடுத்து ஆய்வு செய்ய வேண்டும். நெல், சோளம், பயறுவகைகள், எண்ணெய் வித்துகள் போன்ற பயிர்கள் சாகுபடி செய்ய அந்த நிலத்தில் 15 செ.மீ. ஆழத்திலும், கரும்பு, வாழை, போன்ற பயிர்கள் சாகுபடி செய்ய 30 செ.மீ. ஆழத்திலும், பழந்தோட்டப் பயிர்களாக இருந்தால் 3 அடி ஆழத்திலும் மேல் மண்ணை தவிர்த்து விடமால் "வி' வடிவில் வெட்டி சரிவு மண்ணை அப்புறப்படுத்திய பின் "வி' வடிவில் மேலிருந்து மண்ணைச் சுரண்டி எடுத்தல் வேண்டும். ஒரு வயலில் சுமார் 10 முதல் 12 இடங்களில் எடுத்து நன்கு கலக்கி குவாட்டரிங் முறையில் அரை கிலோ வரும்படி ஒரு துணிப்பையில் எடுத்து கொள்ள வேண்டும். சேகரித்த மண் மாதிரிகளை தனித்தனியாகக் கட்டிச் சுத்தமான துணிப்பைகளிலோ அல்லது பாலித்தீன் பைகளிலோ போட்டு உரிய அடையாளமிட்டு, விவசாயியின் பெயர், முகவரி, நிலத்தின் பெயர், சர்வே எண், அடையாளம், வட்டாரத்தின் பெயர், உர சிபாரிசு கோரப்படும் பயிர், பாசன நீரின் தன்மை, முன் சாகுபடி செய்த பயிர் போன்ற விபரங்களுடன் மண் பரிசோதனை நிலையத்துக்கு அனுப்ப வேண்டும். விவசாயிகள் சரியான தருணத்தில் மண் சோதனை செய்து மண்வள அட்டை பெற்று கொள்ள வேண்டும். அந்த அட்டையில் பரிந்துரைத்துள்ளபடி உரமிட்டு அதிக மகசூல் பெறலாம் ஆதாரம்: தமிழக வேளாண்மை மேம்பாட்டுக் கழகம்