முக்கியக் கோட்பாடுகள் ஒரு விதைப் பரு சீவல்களிலிருந்து(Bud chips) நாற்றங்கால் அமைத்தல் இளம் (25-35 நாட்கள் வயதான) நாற்றுகளை எடுத்து நடவு செய்தல் வரிசைக்கு வரிசை 5 அடி இடைவெளியும், நாற்றுக்கு நாற்று 2 அடி இடைவெளியும் பராமரித்தல் சொட்டு நீர்ப் பாசனத்தின் வழி உரமிடுதல் இயற்கை சார்ந்த உரங்கள், பயிர்ப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு முறைகளுக்கு போதிய அளவு முக்கியத்துவம் அளித்தல் ஊடுபயிரிட்டு மண்வளம் மற்றும் மகசூல் அதிகரிக்க வழி செய்தல் நீடித்த நவீன கரும்பு சாகுபடியின் பயன்கள் தண்ணீர் உபயோகிப்புத் திறன் கூடுகிறது. சரியான அளவு உரங்களை உபயோகிப்பதன் மூலம் பயிர்களுக்கு ஊட்டச்சத்து பராமரிப்பு சிறப்பாக அமைகிறது. காற்று மற்றும் சூரிய ஒளி அதிக அளவு பயிர்களுக்கு கிடைக்கிறது. அதனால் கரும்பில் சாக்கரைக் கட்டுமானம் அதிகரிக்கிறது. மொத்த சாகுபடி செலவு குறைகிறது விவசாயிகளுக்கு ஊடுபயிர் மூலம் இரட்டை வருமானம் கிடைக்கிறது. மகசூல் அதிகரிப்பு நாற்று தயார் செய்ய கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் ஆறு மாதம் வயதுள்ள உயர் விளைச்சல் தரும் இரகங்களிலிருந்து மொட்டுக்களை சேகரிக்க வேண்டும். விதை மொட்டுக்களின் முளைப்புத் திறனைத் தூண்டும் வகையில் 1 கிலோ யூரியா 50 கிராம் கார்பென்டாசிம் 200 மி.லி.- மாலத்தியான் – 100 லி. நீரில் கலக்க வேண்டும். அதில் 5000 மொட்டுக்களை நன்கு நனையும்படி 15 நிமிடம் ஊறவைத்து பின் நிழலில் உலர வைக்க வேண்டும். இரசாயன முறை தவிர்த்து உயிரியல் முறையிலும் விதை நேர்த்தி செய்யலாம். இதற்கு டிரைக்கோடெர்மா விரிடி 2 கிராம் 1 லிட்டர் தண்ணீரில் கலந்து பின் விதை மொட்டுக்களை 15 நிமிடம் ஊறவைத்து பின் நிழலில் 15 நிமிடம் உலர வைக்கவும். விதை நேர்த்தி செய்த விதை மொட்டுக்களை கோணிப்பையில் இறுகக் கட்டி நிழலில் அடுக்கி வைக்க வேண்டும். இவற்றைக் காற்றுப் புகா வண்ணம் நன்கு மூடியிருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம். நன்கு மூடிய கோணிப்பைகளின் மீது பாரம் ஏற்றி 5 நாட்கள் அப்படியே இருத்தல் வேண்டும். இடையில் தண்ணீர் தெளிக்க வேண்டியதில்லை. முதலில் குழித் தட்டுகளின் பாதியளவில் கோகோ பீட் கொண்டு நிரப்ப வேண்டும். பின்பு விதை மொட்டுக்கள் மேல்நோக்கி இருக்குமாறு சற்று சாய்வாக அடுக்கி மீதி குழிகளை கோகோ பீட் கொண்டு நிரப்ப வேண்டும். குழித் தட்டுகளை வரிசையாகத் தண்ணீர் தெளிக்க வசதியாக வைக்க வேண்டும். தினசரி தண்ணீர் தெளிப்பது அவசியம். ஏக்கருக்கு சுமார் 300 சதுர அடி தேவை. நிழல் வலை அல்லது மர நிழலிலோ நாற்றுக்கள் வைக்க வேண்டும். நடவு செய்தல் மற்றும் இதர பராமரிப்புகள் நாற்றுகளை 5x2 இடைவெளியில் நடவு செய்ய வேண்டும் நட்ட 10, 20 வது நாள் சிறிதளவில் மேலுரம் இட்டு மண் அணைக்க வேண்டும் (யூரியா அல்லது அம்மோனியம் சல்பேட்). பிறகு களை எடுத்தல், மண் அணைத்தல், உரம், தண்ணீர் நிர்வாகம் போன்ற அனைத்து பராமரிப்பு வேலைகளையும் முறையாக செய்ய வேண்டும். 15க்கும் மேற்பட்ட தூர்கள் – 2 மாதத்திற்குள் உருவாகும். 2 அல்லது 3 தூர்கள் வந்தவுடன் முதலில் வந்த தாய்ச்செடியை வெட்டி நீக்க வேண்டும். அவ்வாறு நீக்கினால் அதிக பக்கத் தூர்கள் வெளிவரும் மற்றும் அனைத்து பயிர்களும் ஒரே சமயத்தில் கரும்பாக மாறும். நீடித்த நவீன கரும்பு சாகுபடியில் அதிக இடைவெளியில் இருப்பதால் ஊடுபயிராக காய்கறிகள், பயறு வகைகள், வெள்ளரி, தர்பூசணி, பசுந்தாள் உரப் பயிர்களை பயிர் செய்ய முடிகிறது. மேலும் ஊடுபயிர் செய்வதால் அதிக இலாபம், களைக் கட்டுப்பாடு மற்றும் மண்வளம் பெருக்க முடியும். மண் அணைத்தல் மற்றும் சோகை உரித்தல் நடவு செய்த 45 வது நாள் மற்றும் 90வது நாள் மண் அணைப்பு செய்தல் ஒளிச் சேர்க்கைக்கு, மேற்புறமுள்ள 8-10 இலைகளே தேவைப் படுகின்றன. எனவே, கீழ்ப்புறமுள்ள காய்ந்த மற்றும் சில காயாத இலைகளை 5 மற்றும் 7-வது மாதத்தில் உரித்து பார் இடைவெளியில் இட வேண்டும். சோகை உரிப்பின் பயன்கள் சுத்தமான பயிர் பராமரிப்பு பயிர்களுக்கிடையே காற்றோட்டம் அதிகரிப்பு பூச்சி தாக்குதல் குறை மற்ற பயிர் பராமரிப்பு பணிகள் எளிதாகின்றன. சொட்டு நீர் உரப் பாசனம் நீடித்த நவீன கரும்பு சாகுபடியின் மகசூல் அதிகரிக்க சொட்டு நீர் உரப் பாசனம் சாலச் சிறந்தது. மண்ணின் தன்மைக் கேற்ப நாள்தோறும் அல்லது அதிகபட்சமாக மூன்று நாட்களுக்கு ஒருமுறை சொட்டு நீர்ப் பாசனம் அளிக்கலாம். பத்து நாட்களுக்கு ஒரு முறை உரப் பாசனம் செய்ய வேண்டும். இவ்வகையில் 45 சதவீதம் பாசன நீரை(1200 மி.மி.) சேமிக்க உதவும். கேள்வி பதில் செவ்வழுகல் நோய்க்கு எதிர்ப்பு இரகங்கள் என்ன? கோ 85019, கோ 86249. தமிழ்நாட்டில் வறட்சி தாங்கி வளரக் கூடிய கரும்பு இரகங்கள் யாவை? கோ வி 92102, கோ.சி 90063, கோ.எஸ்.ஐ (எஸ்சி) 6, கோ.ஜி. (எஸ்.சி) 5, கோ.சி (எஸ்.சி) 22, கோ 86032, கோ எஸ்.ஐ 95071, கோ 86249, கோ ஜி 93076, கோ வி 94102, கோ 85019, கோ.எஸ்.ஐ (எஸ்.சி)6, கோ.ஜி (எஸ்.சி) 5, கோ.சி (எஸ்.சி) 22, கோ 86032, கோ 86027, கோ 97009, கோ எஸ்.ஐ (எஸ்.சி) 6, கோ ஜி (எஸ்.சி) 5, கோ சி (எஸ்.சி) 22, கோ.ஜி 94077, கோ.சி 671. தமிழ்நாட்டில் விதைக்கரணை கிடைக்கும் பகுதிகள் யாவை? தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியிடப்பட்ட இரகங்களின் விதைக் கரணைகள் கடலுார், சிறுகமணி மற்றும் மேலாலத்துார் கரும்பு ஆராய்ச்சி நிலையங்களில் கிடைக்கும். பிற ஆலைகளால் பயன்படுத்தப்படும் இரகங்களுக்கு அந்தந்த ஆலைகளைத் தொடர்பு கொள்ளவும். விரைவில் அறுவடைக்கு வரும் இரகங்கள் யாவை? விரைவில் அறுவடைக்கு வரும் இரகங்கள் கோ 658, கோ 62174, கோ 62198, கோசி 671, கோசி 771, கோசி 772, கோசி 8001, கோசி 85061, கோசி 86062, கோ எஸ்.ஐ 86071, கோசி 90063, கோசி 91061, கோ.ஜி 94077, கோ.எஸ் ஐ 95071, கோசி 98061, கோ 86010, கோ 86249 ஆகியவையாகும். தாமதமாக அறுவடைக்கு வரும் இரகங்கள் யாவை? தாமதமாக அறுவடைக்கு வரும் இரகங்கள் கோ 6304, கோசி 8201, கோசி 771, கோசி 778, கோசி 779, கோ 419, கோ 740,கோ 658, கோஜி 93076, கோ 85019, கோசி 99061, கோ 86032, கோசி(எஸ்.ஐ) 22. ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்