முக்கியமாக கவனிக்க வேண்டியவை --- விதைக்கும் போது அடியுரமாக தழை உரங்கள் இடுவதை தவிர்க்கவும். இது களையின் தாக்கத்தை கூட்டும் --- தழை உரங்களை குறைந்தது 3 பகுதிகளாக பிரித்து பயன்படுத்தவும். தழை (N), மணி (P) மற்றும் சாம்பல் சத்துடன்(K) துத்தநாக சல்பேட் நுண்ணூட்டம் (Zn) தழைச்சத்தின் அளவானது அடையக்கூடிய மகசூல் இலக்கு மற்றும் மண்ணின் உள்ளார்ந்த வளம் ஆகியவற்றை பொறுத்து எக்டருக்கு 100 முதல் 120 கிலோ வரை தேவைப்படுகிறது. ஒட்டுமொத்த பொது பரிந்துரையாக எக்டருக்கு மணிச்சத்து 50 கிலோ, சாம்பல் சத்து 50 கிலோ மற்றும் சிங்க் சல்பேட் 25 கிலோ என்பதாகும். தழைச்சத்தான யூரியா (N) தவிர அனைத்து உரங்களையும் விதைக்கும்போது இடலாம். கடினமான மண்ணில் உயர் விகிதத்தில் சாம்பல் சத்தை இடும்போது ஊடுருவலின் மூலம் இழப்பு ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க விதைப்பின் போது 50 சதம் கதிர் வெளிவரும் தருணம் 50 சதம் என இரண்டு முறையாக பிரித்து இடவேண்டும். விதைப்புக் கருவி மூலம் டிஏபி அல்லது தழை, மணி மற்றும் சாம்பல் சத்து வடிவங்களில் உரங்களை இடவேண்டும். சிங்க் சல்பேட்டை விதைக்கும்போது இடவில்லையெனில் 0.5 சத சிங்க் சல்பேட்டுடன் 1 சத யூரியா கலந்து இலைவழி உரமாக விதைத்த பின் 30ம் நாளும் கதிர் வெளிவரும் தருணமும் தோராயமாக 3-4 வாரங்கள் தொண்டைக் கதிர் வருவதற்கு முன்னதாக இடவேண்டும். தழைச்சத்து உரத்தினை 3 முதல் 4 சம அளவாக பிரித்து விதைத்த பின் 3 வாரம் முதல் கதிர் வெளிவரும் தருணம் வரை சமமான இடைவெளியில் இடவேண்டும். இருப்பினும் விதைக்கும் போது சில தழைச்சத்தை இட்டால் மீதமுள்ள அளவை இரண்டு அளவாக, 40 -50 சத அளவை தூர் வெடிக்கும் மத்திய தருணத்திலும் 50-60 சத அளவை கதிர் வெளிவரும் தருணத்திலும் இடவேண்டும். உயர் விளைச்சலைப் பெற மூன்றாவது அளவான 15-20 கிலோ தழைச்சத்தினை பூக்கும் பருவத்தின் ஆரம்பத்தில் இடவேண்டும். நீர்ப்பாசனத்திற்கு முன் உடனடியாக தழைச்சத்தை இடவேண்டும். மேற்சொன்ன பொது பரிந்துரை தனித்தனியான வயல்களுக்கு பொருந்தாது என்பதால் பயிரின் தேவைக்கேற்ப ஒரு குறிப்பிட்ட இடத்திற்கான உர மேலாண்மை முறையின் படி வேளாண் பெருமக்கள் உரமிடுதலை மேற்கொள்ளலாம். இம்முறையை சாகுபடி செய்யக்கூடிய ரகத்தில், அடையக் கூடிய மகசூல் இலக்குடன் குறிப்பிட்ட வயலின் மண், தொழு உரங்கள் மற்றும் பாசன நீர் ஆகியவற்றில் இயற்கையாக கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்து பங்களிப்பையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட இடத்திற்கான உர மேலாண்மை குறித்து மேலும் விபரம் தேவையெனில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வேளாண் தொழில்நுட்ப வலைவாசலை பார்க்கவும். இலை வண்ண அட்டை மூலம் நெற்பயிரின் இலைகளில் உள்ள தழைச்சத்தை கணக்கிட்டு அதற்கேற்ப துல்லியமாக பயிரின் தேவைக்கேற்றவாறு தழைச்சத்தை இடலாம். தழைச்சத்து தேவை இம்முறையில் குறைகின்றபோதும் விளைச்சல் குறையாமல் பராமரிக்கப்படுகிறது. நெல் ஆராய்ச்சி நிலையம், பிலிப்பைன்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட தர நிலைப்படுத்தப்பட்ட இலை வண்ண அட்டை உயர் ரக பிளாஸ்டிக்கில் 5 அங்குலம் நீளம் உள்ளது (படம் கீழே தரப்பட்டுள்ளது). இதில் நான்கு வண்ண பட்டைகள் மஞ்சள் கலந்த பச்சை நிறம் முதல் (எண் 2) கரும்பச்சை (எண் 5) வரை வடிவமைக்கப்பட்டுள்ளது. உயர் விளைச்சலைத் தரக்கூடிய இரகங்கள் மற்றும் வீரிய ஒட்டுரகங்களுக்கு புழுதிக்கால் நேரடி நெல் விதைப்பில் இலை வண்ண அட்டையில் முக்கிய மதிப்பு 3 ஆக இருக்க வேண்டும். (சேற்றில் நடவு முறையில் பயிரிடப்படுகின்ற நெற்பயிருக்கு இலை வண்ண அட்டை இலை வண்ண அட்டையில் முன்னரே திட்டமிடப்பட்ட அட்டவணைப்படி, முக்கிய வளர்ச்சி பருவங்களுக்கு மேலோ அல்லது கீழோ வருமாறு சரிசெய்து தழைச்சத்தை அளிக்க வேண்டும். முக்கிய வளர்ச்சி பருவங்களுக்கு ஏற்றவாறு முன்போ அல்லது பின்போ வருமாறு அனுசரித்து இலை வண்ண அட்டை மூலம் அளவீடு 4 என பரிந்துரைக்கப்ப படுகிறது. இலை வண்ண அட்டை மூலம் தழைச்சத்து நிர்வாகத்தை (1) நிகழ் நேர அணுகுமுறை (2) குறிப்பிட்ட நேர அணுகுமுறை என 2 முறையில் பின்பற்றலாம். நிகழ்நேர அணுகுமுறையில் புழுதி நேரடி நெல் விதைப்பிற்கு விதைத்த 21 ம் நாளிலிருந்து ஒவ்வொரு 7 முதல் 10 நாட்களுக்கு தொடர்ந்து எடுக்க வேண்டும். கடைசி அளவீடு பூக்கத் தொடங்கும் போது எடுக்கப்பட வேண்டும். விதைத்த 21 ம் நாளிலிருந்து கதிர் வெளிவரும் நாள் வரை எப்பொழுதெல்லாம் இலை வண்ண அளவுக் குறியீடு முக்கிய அளவிற்கு குறைகிறதோ அப்போதெல்லாம் எக்டருக்கு 25-45 கிலோ தழைச்சத்து இடவேண்டும். (மண் வளம் அல்லது மண்ணிலிருந்து இயற்கையாக கிடைக்கக் கூடிய தழைச்சத்து அளவு குறைவாக இருக்கும்போதோ கூடுதல் விகிதாச்சாரத்தில் தழைச்சத்து அளிக்கப்படவேண்டும்) கதிர் வெளிவரும் தருணம் முதல் பூக்கும் பருவம் வரை இலை வண்ண அட்டை முக்கிய குறியீடு குறையும் போது எக்டருக்கு 25 கிலோ தழைச்சத்து இட வேண்டும். குறிப்பிட்ட நேர அணுகுமுறையில் மொத்த தழைச்சத்து தேவையை கணக்கிட்டு தழைச்சத்தை பிரித்து இட ஒரு அட்டவணையை தயாரிக்க வேண்டும். முன்னரே திட்டமிட்ட அட்டவணையின் படி தழைச்சத்து இடவேண்டும். எந்த அணுகு முறையில் இலை வண்ண அட்டையை பயன்படுத்தினாலும் பயன்படுத்துவதற்கு முன்னர் தமிழகத்தில் உள்ள இரகங்கள் மற்றும் குறிப்பிட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு நமக்கு நாமே அளவுத் திருத்தம் செய்துகொள்ள வேண்டும்.இலை வண்ண அட்டை வேளாண் துறைகளிலும், ஆராய்ச்சி நிலையங்களிலும் கிடைக்கின்றன. சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலைய இலை வண்ண அட்டை இரும்பு (Fe) புழுதி விதைப்பு நெல் இலகுவான வண்டல் மண்ணிலோ அல்லது மக்கிய தாவரப் பொருள் கலந்த மண்ணிலோ விதைக்கப் படும்போது இரும்புச் சத்து பற்றாக்குறையினால் பாதிக்கப்படுகிறது. இந்த பாதிப்பு குறைந்த மழைப் பருவங்களில் அதிகமாக உள்ளது. பயிரின் ஆரம்ப வளர்ச்சி காலத்தில் பயிர் மஞ்சளாகவும், வளர்ச்சியின்றியும் நாற்றுகள் இறந்தும் விடுவது இதன் அறிகுறியாகும். இந்த அறிகுறி தென்பட்ட உடனேயே 1 சத பெர்ரஸ் சல்பேட் கரைசலை பயிரின் மீது தெளிக்க வேண்டும். அறிகுறி மாறாமல் இருந்தால் ஒருவாரத்திற்கு பின் மீண்டும் இக்கரைசலை தெளிக்கவும். அறிகுறி தீவிரமான சூழலில், வயலில் தண்ணீர் தேங்குமாறு அல்லது நீர் நிறைவுற்ற நிலையை அடையுமாறு சில நாட்களுக்கு தண்ணீர் கட்டி பின் பெர்ரஸ் சல்பேட் தெளிக்க வேண்டும். இந்த அறிகுறி பின்னரும் பயிர் வளர்ச்சியின் போது தென்பட்டால் இது தானிய நூற்புழுவால் ஆகும். உடனடியாக வேரில் ஏதேனும் முடிச்சு தென்படுகிறதா என கவனிக்கவும். முடிச்சு தென்பட்டால் அந்த வயலை புழுதி நெல் விதைப்பிற்கு பயன்படுத்தக் கூடாது. ஆதாரம்: விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச வேளாண் நிதிக்கான வளர்ச்சித் திட்டம் (IFAD) “வளங்களை சேமிக்கும் தொழில்நுட்பம்" திட்டம் (IFAD மானியம் எண் C - ECG-46-IRRI, துணை திட்டம் 2) மற்றும் தெற்காசியாவிற்கான தானிய திட்ட துவக்கத்தின் (CSISA) பதிப்பு