பாசன நீர் மேலாண்மை முக்கியமாக கவனிக்க வேண்டியவை பயிர் வளரும் தருணத்தில் விதைக்கு அல்லது செடி வேருக்கு ஈரம் கிடைக்குமாறு மண் ஈரப்பதத்தில் இருக்க வேண்டும். கதிர் வெளிவரும் பருவம் முதல் பஞ்சு கட்டும் பருவம் தொடங்கும் வரை மண்ணை நிறைவான ஈரப்பதத்தில் வைக்க வேண்டும். தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருவதாலும் நிலத்தடி நீரை உறிஞ்சி பயன்படுத்த அதிக செலவாகும் என்பதாலும் நீர் மேலாண்மை யுத்திகளை பயன்படுத்தி குறைவான நீரில் உயர் விளைச்சலை அடைவது அவசியமாகிறது. நெற்பயிர் நன்றாக வளர்வதற்கும் உயர் விளைச்சலுக்கும் தொடர்ந்து நீர்கட்ட வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு பாசனத்திற்கும் இடைவெளியில் வயலை சில நாட்களுக்கு சற்று காயவிட்டு அவ்வப்போது பாசனம் செய்யலாம். (பாய்ச்சலும், காய்ச்சலும் என்ற நிலையில்) இது பயிர் வளர்ச்சிக்கான மொத்த நீர்த் தேவையை குறைக்கிறது. எங்கெல்லாம் நீர் பற்றாக்குறை உள்ளதோ, பாசனத்தை சிக்கனப்படுத்த வேண்டி உள்ளதோ அங்கெல்லாம் இது பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும் இரண்டு நீர்ப் பாசனத்திற்கு இடையில் அடிக்கடி வயல் அதிகமாக காய்ந்தால் நெல் மகசூல் பாதிக்கும். எனவே நீர்ப் பாசனத்தை கவனமாக மேற்கொள்ள வேண்டும். புழுதி விதைப்பு நெல்லிற்கான நீர்த்தேவை வானிலையையும் மண் வகைகளையும் பெரிதும் சார்ந்துள்ளது. குறைவான களி மற்றும் அதிக மணல் கொண்ட இலகுவான மண்ணில் மழை பெய்யாத போது அடிக்கடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். புழுதியில் நெல் விதைத்த பின் பயிர் நன்கு வளர்வதற்கு ஏதுவாக முதல் 3 வாரங்களுக்கு உறுதியாக நீர் வழங்க வேண்டும். வெயில் மற்றும் உலர்ந்த நிலையில் புழுதி விதைப்பு செய்யப்படுகின்றபோது விதைத்த அன்றோ அல்லது விதைத்த பின் 1 நாளிலோ நீர்ப் பாய்ச்ச வேண்டும். வேர் மண்டலத்தில் ஈரப்பதம் இருக்கும் பொருட்டு 3-5 நாட்கள் இடைவெளியில் அடுத்த 1 முதல் 2 பாசனம் அளிக்க வேண்டும். தூர் நன்றாக வெடித்து வரும் தருணம் மற்றும் தொண்டைக் கதிர் பருவம் முதல் பஞ்சு கட்டும் பருவம் வரை 15 செ.மீ ஆழம் வரை உள்ள மேல் மண் சற்று நிறைவான ஈரப்பதத்தில் இருக்குமாறு தேவையின் அடிப்படையிலும் நீர்ப் பாய்ச்ச வேண்டும். பிற பருவங்களில் மேல் மண் காயலாம். ஆனால் அதிகாலையில் நெற்பயிரின் இலை சுருண்டு போகும் அளவிற்கு எந்த சூழலிலும் விடக்கூடாது. களி மண்ணில் மயிரிழை அளவுக்கு வெடிப்பு வருவதே அடுத்த நீர்ப் பாசனத்திற்கான அறிகுறியாகும். ஆதாரம்: விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச வேளாண் நிதிக்கான வளர்ச்சித் திட்டம் (IFAD) “வளங்களை சேமிக்கும் தொழில்நுட்பம்" திட்டம் (IFAD மானியம் எண் C - ECG-46-IRRI, துணை திட்டம் 2) மற்றும் தெற்காசியாவிற்கான தானிய திட்ட துவக்கத்தின் (CSISA) பதிப்பு