மானாவாரியில் காராமணி (தட்டைப் பயிறு வகையறா) சாகுபடி

பயறு வகைகளில் அதிக சத்துகளைக் கொண்டது காராமணி. இதில் 23.4 சதவீதம் புரதம், 1.8 சதவீதம் கொழுப்பு, 60.3 சதவீதம் கார்போஹைட்ரேட், கால்சியம் மற்றும் இரும்புசத்து ஆகியவை உள்ளன.

கால்நடைகளுக்கு ஏற்ற பயிராகவும் காராமணி உள்ளது. குதிரை மசாலை விடவும் மிகச் சிறந்தது. இதை தொடர்ந்து சாகுபடி செய்து பசுந்தாள் உரமாகவும் பயன்படுத்தலாம். இது மானாவாரிக்கு மிகவும் உகந்த பயிராகும்.

காராமணி ஆப்பிரிக்காவில் பயிரிடப்படுகிறது. உலக சாகுபடியில் 90 சதவீதம் ஆப்பிரிக்காவில் சாகுபடியாகிறது. மேலும் தென், வடஅமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவலாக பயிரிடப்படுகிறது.

இந்தியாவில் உத்தரபிரதேசம், பஞ்சாப், தில்லி, ஹரியாணா, தென்இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் அதிகம் பயரிடப்படுகிறது.

இதை ஆண்டு முழுவதும் பயிரிடலாம். இருந்தாலும் மார்ச்-ஏப்ரல், ஜூலை-ஆகஸ்ட் மாதங்கள் சாகுபடிக்கு மிகவும் சிறந்த பருவமாகும். தமிழ்நாட்டில் ஆடிப் பட்டத்தில் வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டங்களில் பயிரிட கோ-6, பையூர்-1, பூசா-152, கோ(சி.பி.)-7 ரகங்கள் சிறந்தவை.

கோ-6 பயிரை 55 நாட்களில் அறுவடை செய்யலாம். அனைத்து பருவங்களிலும் ஏக்கருக்கு 670 கிலோ மகசூல் பெறலாம்.

பையூர்-1 பயிரை 75 நாட்களில் ஜூன்-ஜூலை, பிப்ரவரி-மார்ச் மாதங்களில் பயிரிட்டு 900 கிலோ மகசூல் பெறலாம்.

பூசா-152 ரகத்தை 75 நாட்களில் அனைத்து பருவங்களிலும் பயிரிட்டு 1200 கிலோ வரை மகசூல் பெறலாம்.

பையூர்-1, கே.எம்.1, கோ-2, கோ-3 சாகுபடிக்கு ஹெக்டேருக்கு விதைஅளவு தனிப்பயிராக இருந்தால் 20 கிலோவும், கலப்புப்பயிராக இருந்தால் 10 கிலோவும் இருக்க வேண்டும். பயிர் எண்ணிக்கை ஹெக்டேருக்கு 3.50 லட்சம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ரகங்களுக்கு ஏற்றவாறு இடைவெளி 30-10 செ.மீ., 45-15 செ.மீ. இருப்பது போல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

காரமணியை பயிரிட நிலத்தை நன்கு உழுது மண்ணை பதப்படுத்த வேண்டும். நன்கு வடிகால் வசதியும் அமைக்க வேண்டும். ஆழமாக உழுவது மிகவும் நல்லது. காராமணி பயிருக்கு பரவலாக மழை பெய்யும் காலங்களில் நீர் பாய்ச்சத் தேவையில்லை.

இப்பயிருக்கு முதல் கைக்களை 10-15 நாட்களிலும், இரண்டாவது கைக்களை 25-30 நாட்களிலும் எடுக்க வேண்டும். இறவையாக சாகுபடி செய்யும்போது ஹெக்டேருக்கு பாசலின் 1.5 லிட்டர் என்ற களைக்கொல்லி மருந்தை 900 லிட்டர் தண்ணீரில் கலந்து விதைத்த 3-வது நாளில் தெளிக்க வேண்டும்.

காய்கள் 80 சதவீதம் விதை முற்றியவுடன் அறுவடை செய்து சில நாட்கள் சூரிய ஒளியில் காயவைத்து விதையை பிரித்து எடுக்க வேண்டும்.

ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மைத்துறை