சிறு தானியங்கள்

விவசாயிகள் சிறு தானியங்கள் பயிரிட்டு அதிக லாபம் பெறலாம்

சிறுதானியங்கள் பொதுவாகவே குறுகிய கால பயிர்களாகும். இவை தானியப் பயிர்களாகவும், தீவனப் பயிர்களாகவும் பயிரிடப்படுகின்றன. இந்தப் பயிர்களின் தற்போதைய பயிரிடும் பரப்பளவு குறைவாக காணப்பட்டாலும் இவை மண் வளம் குறைந்த மானாவாரி நிலங்களில் பயிரிடுவதற்கு ஏற்ற பயிர்களாகும்.

300 முதல் 350 மி.மி. என்ற குறைவான மழையளவிலும் இந்தப் பயிர்கள் நன்கு வளரும் தன்மை உடையது.

மொத்த சாகுபடி பரப்பில் ஒரு சதவீத பரப்பளவில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. சாகுபடி செய்யப்படும் முக்கிய சிறுதானியங்கள் சோளம், கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, தினை, வரகு, சாமை, குதிரைவாலி, பனிவரகு உள்ளிட்டவை ஆகும்.

சிறுதானியப் பயிர்களின் சாகுபடி பரப்பு, உற்பத்தியை அதிகப்படுத்த பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

விதைப் பெருக்குத் திட்டம்

தரமான சான்று பெற்ற நெல், சிறு தானியங்களைப் பதிவு செய்யப்பட்ட விதைப்பண்ணை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து அரசால் நிர்ணயிக்கப்பட்ட விதை மாற்று சதவீதத்தின்படி விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

2013-14ஆம் ஆண்டில் 480 டன் சிறுதானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டது. மக்காச்சோளப் பயிரின் சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், உற்பத்தி திறனை உயர்த்துவதற்கும் பல்வேறு திட்டப்பணிகளுக்காக ரூ.118.01 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் ஊக்குவித்தலுக்காக ரூ.648.5 லட்சம் செலவில் சோளம், கம்பு, கேழ்வரகு, மக்காச்சோளம், தினை, வரகு, சாமை, குதிரைவாலி ஆகிய சிறுதானிய பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மானாவாரி நிலங்களில் சிறுதானியங்களின் சாகுபடியை உயர்த்துவதற்காக ரூ.157.50 லட்சம் செலவில் 3,150 ஹெக்டர் பரப்பில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யவும், திட்டமிடப்பட்டுள்ளது.

விதை கிராமத் திட்டத்தின்கீழ் 200 டன் தரமான ஆதாரச் சான்று சிறுதானிய விதைகள் 50 சதவீத மானியத்தில் ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் விநியோகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகள் சிறுதானியப் பயிர்களை சாகுபடி செய்து அதிக லாபம் பெறலாம்

ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மை துறை