முன்னுரை காவிரிப் பாசனப் பகுதிகளில் தற்போது நிலவி வரும் ஆள் பற்றாக்குறை சூழலில் நாற்றங்கால் தயாரித்தல், விதைத்தல், பராமரித்தல், நாற்று பறித்தல் மற்றும் நடவு போன்ற பணிகளுக்கான ஆள் தேவை தவிர்க்கப்படுவதால் புழுதி வயலில் நேரடி நெல் விதைப்பு (DSR), விவசாயிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நிலத்தை உழத் தேவை இல்லாததால் பயிர் வளர்ச்சிக்கான நீர்த்தேவை குறைகிறது. நடவுப்பணி முற்றிலும் தவிர்க்கப்படுவதால் மொத்த பயிர் காலத்தில் 10-15 நாட்கள் குறைக்கப்படுகின்றது. இத்தகைய சிறப்பம்சங்கள் உள்ளதால், இப்பகுதியில் அதிகரித்து வரும் பாசனநீர் பற்றாக்குறையினை சமாளிக்க புழுதியில் நேரடி நெல் விதைப்பு முறை பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. புழுதி விதைப்பிற்கு தேவைப்படும் நேரடி நெல் விதைப்பு கருவிகள் எளிதில் உள்ளூரில் கிடைத்தால் (உம்: தனியாக வாடகைக்கு) சிறு மற்றும் பெரு விவசாயிகள் இம்முறையை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாகும். 2 அல்லது 4 வீல்களை கொண்ட டிராக்டரால் இயக்கும் விதைப்புக் கருவி உலர்ந்த அல்லது சற்றே ஈரமான மண்பகுதிகளில் வரிசைகளில் விதைக்க சிறப்பாக பயன்படுகிறது. தமிழகத்தின் மத்திய கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காவிரிப் பாசனப் பகுதி மாநிலத்தின் நெற்களஞ்சியமாக திகழ்கிறது. இம்மண்டலத்தில் 3 பருவங்கள் உள்ளன. குளிர் காலம் (நவம்பர் மாதத்தின் தொடக்கத்திலிருந்து பிப்ரவரி மாதத்தின் மத்திய பகுதி வரை), கோடை காலம் (மார்ச் மாதத்திலிருந்து மே மாதத்தின் 3 ம் வாரம் வரை) மற்றும் பருவ மழை காலம் (ஜூனிலிருந்து டிசம்பர் வரை) - ஜூனிலிருந்து செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவ மழையும் அக்டோபரிலிருந்து டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை என இரண்டு வேறுபட்ட மழைகாலங்களும் நிலவி வருகின்றன. ஜனவரியிலிருந்து மே மாதம் வரை வறண்ட வானிலை காணப்படுகிறது. காவிரிப் பாசனப் பகுதியில் குறுவை, சம்பா தொடர்ந்து தாளடி மற்றும் கோடை என 4 பருவங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. குறுவை : (மே / ஜூன் முதல் செப்டம்பர் / அக்டோபர் வரை) குறுவை சாகுபடிக்கான பாசனநீர், மேட்டூர் அணையிலிருந்து கிடைக்கப் பெறுகின்ற காவிரி ஆற்று நீரையும் நிலத்தடி நீரையும் மற்றும் தென்மேற்கு பருவமழையின் போது கிடைக்கப்பெறுகின்ற மழைநீரையும் மட்டுமே முற்றிலும் சார்ந்துள்ளது. சம்பா : (ஆகஸ்ட் / செப்டம்பர் முதல் ஜனவரி வரை) குறுவை சாகுபடி மேற்கொள்ள வாய்ப்பில்லாத பகுதிகளில் காவிரி நீரை பாசனத்திற்கு பயன்படுத்தி வடகிழக்கு பருவமழையுடன் ஒரு போகமாக சம்பா பயிர் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. தாளடி : (செப்டம்பர் கடைசி / அக்டோபர் முதல் ஜனவரி / பிப்ரவரி) தாளடி நடவு வடகிழக்கு பருவமழையுடன் கூடுதலாக காவிரி ஆற்று நீரையும் சார்ந்துள்ளது. குறுவை அறுவடை செய்தவுடன் அதே வயல்களில் காவிரி நீரைப் பயன்படுத்தியும் வடகிழக்கு பருவமழையை பயன்படுத்தியும் இரண்டாவது பட்டமாக தாளடி சாகுபடி செய்யப்படுகிறது. நவரை / கோடை : (டிசம்பர் / ஜனவரி முதல் மார்ச் / ஏப்ரல்) உளுந்து, பச்சைப் பயறு போன்ற பயறு வகைப் பயிர்கள், எள், சூரியகாந்தி போன்ற எண்ணெய்வித்துப்பயிர்கள் மற்றும் மக்காச்சோளம் போன்ற தானியப் பயிர்கள் , நெல் தரிசாக, வயலில் உள்ள ஈரப்பதத்திலோ அல்லது இறவையிலோ சாகுபடி செய்யப்படுகின்றன. நிலத்தடி நீர் வாய்ப்புள்ள பகுதிகளில் நெல், மக்காச்சோளம், பருத்தி போன்ற பயிர்களும் பயிரிடப் படுகின்றன. மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்படுவதை பொறுத்தே காவிரிப் பாசனப் பகுதிகளில் நெல் உற்பத்தி நிர்ணயிக்கப்படுகிறது. தாமதமாக பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டால் குறுவை அறுவடையும் சம்பா, தாளடி நடவுப் பணிகளும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள வேண்டியுள்ளதால் ஆள் பற்றாக்குறை அதிகரித்து சாகுபடி பணிகளும் தாமதமாகின்றன. நெல் உற்பத்தியில் கீழ்கண்ட முக்கிய சிரமங்கள் நிலவுகின்றன * மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் பாசன நீர் குறித்த நிச்சயமற்ற நிலை. * நடவு மற்றும் அறுவடை காலங்களில் ஆள் பற்றாக்குறை. * வடகிழக்கு அடைமழையின் காரணமாக குறுவை அறுவடையும் சம்பா / தாளடி நடவும் பாதிப்படைதல். * சம்பா / தாளடி பருவங்களில் நெல் சாகுபடிக்கு தேவையான சூரிய ஒளி குறைவாக கிடைத்தல். * போதிய வடிகால் வசதி இல்லாமை * சம்பா / தாளடி பயிர்கள் நீரில் மூழ்குவதால் பயிர் சேதம் மற்றும் மகசூல் இழப்பு புழுதி வயலில் நேரடி நெல் விதைப்பிற்கேற்ற சூழல் அ. மண் சேற்று நடவிற்கேற்ற வண்டல் மற்றும் களிப் பகுதிகளிலும் புழுதி விதைப்பும் செய்யலாம். காவிரிப் பாசனப் பகுதியில் அதிக களியுள்ள பழைய ஆற்றுப் பகுதிகளிலும், இருமண் கலந்த புதிய ஆற்றுப் பகுதிகளிலும் புழுதி விதைப்பு சிறப்பாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆ. காலநிலை குறுவைப் பருவத்தில் நெல் சாகுபடிக்கு உகந்த போதிய சூரிய ஒளி கிடைப்பதால் அப்பருவத்திலேயே புழுதி விதைப்பு மேற்கொள்வது சிறந்தது. முன் சம்பா பருவமும் புழுதி விதைப்பிற்கு உகந்ததே. ஆனால் பின் சம்பா மற்றும் தாளடி பருவங்களில் விதைக்கும் நேரத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இப்பருவங்கள் புழுதி விதைப்புக்கு உகந்ததல்ல. இ. நில அமைப்பு கோடை, குறுவை மற்றும் முன் சம்பா பருவங்களில் மழை பெய்ய வாய்ப்பில்லாத எல்லாவகையான நில அமைப்பும் இப்பருவங்களில் புழுதி விதைப்பிற்கு மிகவும் உகந்தது. பள்ளக்கால் பகுதிகளும் வடிகால் வசதியற்ற இடங்களும் தவிர்க்கப்பட வேண்டும். ஈ. கிடைக்கக் கூடிய பாசன நீர் குறுவைப் பருவத்தில் நிலத்தடி நீர் வசதியுள்ள பகுதிகளில் முன்கூட்டியே விதைத்து பருவமழை துவங்கும் முன்னரே அறுவடை செய்திடலாம். போதிய நிலத்தடி நீர் இல்லாத பகுதிகளில் மேட்டூர் அணையின் நீர் வரத்திற்காக காத்திருக்க வேண்டியுள்ளது. மேட்டூர் அணையில் உள்ள நீர் இருப்பைப் பொறுத்து ஜூன் 12ம் தேதி நீர் திறக்கப்படுவது வழக்கம். அணையிலிருந்து நீர் திறக்கப்பட்ட நாளிலிருந்து 7 முதல் 12 நாட்களில் நீர், காவிரிப் பாசனப் பகுதியை வந்தடைகிறது. இந்நீர் வயல்களுக்கு வந்தடைந்த பின் வேளாண் பெருமக்கள் நாற்றங்கால் தயாரித்து விதைப்பு செய்கின்றனர். பாசன நீர் தாமதமாவதனால் வடகிழக்கு பருவ மழையினால் குறுவைப் பயிர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றன. புழுதி விதைப்பு, நடவு பயிரை விட 7 முதல் 10 நாட்கள் முன்னதாகவே அறுவடைக்கு தயாராக இருப்பதால் குறுவையில் பருவ மழை தொடங்கும் முன்னரே அறுவடை செய்ய ஏதுவாகிறது. ஆதாரம்: விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச வேளாண் நிதிக்கான வளர்ச்சித் திட்டம் (IFAD) “வளங்களை சேமிக்கும் தொழில்நுட்பம்" திட்டம் (IFAD மானியம் எண் C - ECG-46-IRRI, துணை திட்டம் 2) மற்றும் தெற்காசியாவிற்கான தானிய திட்ட துவக்கத்தின் (CSISA) பதிப்பு