தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்படும் நெற்பயிர்களைக் காக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றலாம்.

தண்ணீரை வடிகட்டுதல் மற்றும் பயிர் பராமரிப்பு

தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் வடிகால் வசதியை அதிகப்படுத்தி பயிர் மூழ்காத வகையில் நீரை வெளியேற்ற வேண்டும். அதனால், வேர்ப் பகுதிகளில் காற்றோட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இளம் நெற்பயிர்கள் கரைந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அவ்வாறன சமயங்களில் அதே ரகம் மற்றும் அதே வயதுடைய நாற்றுகளை கரைந்துபோன இடங்களில் மீண்டும் நடவு செய்ய வேண்டும்.

சற்று வயதான நெற்பயிராக இருந்தால் வயலில் அதிக தூர்கள் இருக்கும் குத்திலிருந்து சில தூர்களை பிடிங்கி கரைந்துபோன இடங்களில் நட்டு பயிர் எண்ணிக்கையை சரியாக பராமரிக்க வேண்டும்.

நெற்பயிர் தண்ணீரில் மூழ்குவதால் உண்டாகும் பாதிப்புகள்

தண்ணீர் தேங்கிய நிலையில் பிராணவாயு கிடைக்காமல் வேர்களின் சுவாச இயக்கம் பாதிக்கப்படும். பிராணவாயு பயிருக்கு சரிவர கிடைக்காமல் போவதால் அதை சார்ந்த நுண்ணுயிர்களின் செயல் குறைந்துவிடும் அல்லது நின்றுவிடும்.

மண் அதிகம் குளிர்ந்து விடுவதால் இயற்கையாக மண்ணில் காணப்படும் வெப்பம் குறைந்து மண் மீண்டும் வெப்பம் அடைய அதிக கால அவகாசம் எடுத்துக் கொள்ளும்.

இந்த குளிர்ந்த நிலையில் மணிச்சத்து, சாம்பல்சத்து, துத்தநாகம் மற்றும் தாமிரச்சத்துக்களை பயிர் எடுத்துக்கொள்ளும் அளவு குறைவதால் அவைகளின் பற்றாக்குறை உண்டாகும்.

இதனால் பயிரின் வளர்ச்சி தடைபடுகிறது.

மழைநீர் வடியும்போது நீருடன் மண்ணிலுள்ள தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து, போரான், சுண்ணாம்பு மற்றும் மாங்கனீசு சத்துக்களின் கரைதிறன் அதிகமாகி தண்ணீரோடு கரைந்து வெளியேறிவிடும்.

குளிர்ச்சியான வெப்பநிலையில் அங்ககப் பொருள்கள் பதனமாற்றமாகி சத்துக்களாக உருமாற்றம் ஆவது பாதிக்கப்படுவதால் பயிருக்கு கந்தகச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டு பயிரின் தோகைகள் மஞ்சள் நிறமாக மாறும்.

மண்ணில் இரும்புச்சத்து அதிகமாகி மாங்கனீசு சத்துக் குறைந்து இலைகளின் விகிதாச்சாரம் பாதிக்கப்பட்டு இரும்பின் அளவு அதிகமாவதால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். மாங்கனீசு சத்தின் பற்றாக்குறையினால் இலைப்புள்ளி நோய்கள் உண்டாகும்.

நிவர்த்தி முறைகள்

வெள்ளநீர் வடிந்தவுடன் தழைச்சத்து உரத்தை அம்மோனியா வடிவில் இடவேண்டும். அதற்கு யூரியாவை நேரடியாக பயிருக்கு அளிக்க வேண்டும்.

ஒரு ஏக்ருக்கு 22 கிலோ யூரியாவுடன் 18 கிலோ ஜிப்சம் மற்றும் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து 1 நாள் இரவு வைத்திருந்து மறுநாள் இத்துடன் 17 கிலோ மூரியேட் ஆப்பொட்டாஷ் கலந்து வயலில் சீராக இட வேண்டும்.

மணிச்சத்தை டிஏபி உரத்தின் மூலமாக 2 சத அளவில் தெளிக்கவேண்டும். நுண்ணூட்ட உரக்கலவையினையும் மேலுரமாக தெளிக்கவேண்டும்.

இலை வழி உரமாக அளிக்க வேண்டுமெனில், 2 கிலோ யூரியாவுடன் 1 கிலோ சிங் சல்பேட்டை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும். அல்லது 4 கிலோ டிஏபி உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து ஓர் இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் காலை வடித்து தெளிந்த நீருடன் 2 கிலோ பொட்டாஷ் உரத்தையும் சேர்த்து 190 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் தெளிக்கவேண்டும்.

ஆதாரம்: உழவரின் வளரும் வேளாண்மை