பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டம் தொழில்வளம் பெருகுவதற்கான இணக்கச் சூழலை குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியின் மூலம் மேம்படுத்துவதிலும் அதன் மூலம் கட்டமைப்பான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் உறுதி கொண்டுள்ள தமிழ்நாடு அரசு சுய தொழில் புரிவதில் ஆர்வம் கொண்டோர் உதவி பெறத்தக்க மானியத்துடன் கூடிய கடனுதவித் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் 60% நிதிப்பங்களிப்புடன் பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டம் [PM Formalisation of Micro food processing Enterprises Scheme (PM FME Scheme)] செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்தல் வகைப்பாட்டின் கீழ் அடங்கும் பழச்சாறு, பழக்கூழ் தயாரித்தல், காய்கறிகள், பழங்கள், மீன் மற்றும் இறால் கொண்டு செய்யப்படும் ஊறுகாய், வற்றல் தயாரித்தல், அரிசி ஆலை, உலர் மாவு மற்றும் இட்லி, தோசைக்கான ஈர மாவு தயாரித்தல், அப்பளம் தயாரித்தல், உணவு எண்ணெய் பிழிதல், மரச் செக்கு எண்ணெய், கடலைமிட்டாய், முறுக்கு, பேக்கரி பொருட்கள், இனிப்பு மற்றும் காரவகைத் தின்பண்டங்கள் தயாரித்தல், சாம்பார் பொடி, இட்லி பொடி, ரசப்பொடி உள்ளிட்ட மசாலா பொடிகள் தயாரித்தல், காப்பிக் கொட்டை அரைத்தல், அரிசி மற்றும் சோளப் பொரி வகைகள், வறுகடலை, சத்துமாவு, பால் பதப்படுத்தல், தயிர், நெய், பனீர் உள்ளிட்ட பால்பொருட்கள் தயாரித்தல், பல்லின இறைச்சி வகைகள் பதப்படுத்தல், உண்ணத்தக்க நிலையிலுள்ள பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் தயாரித்தல் போன்ற தொழில்களைத் தொடங்கவும், ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் குறுந்தொழில் நிறுவனங்களை விரிவாக்கம் மற்றும் தொழில்நுட்ப மேம்படுத்தல் செய்யவும் பயன் பெறலாம். தொழில் தொடங்கவும் மேம்படுத்தவுமான தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டு, திட்ட அறிக்கை தயாரிக்கவும் வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. நிதி நிறுவனங்கள் மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவிக்கு ஏற்பாடு செய்யப்படுவதுடன் தொழில் நடத்திடத் தேவையான சட்டபூர்வ உரிமங்கள் மற்றும் தரச் சான்றிதழ்கள் பெறவும் சந்தைப்படுத்தலை மேம்படுத்தத் தேவையான உதவிகளும் வழங்கப்படுகின்றன. திட்டத்தின் பயனாளர்கள் இத்திட்டத்தின் கீழ் புதிதாகத் தொழில் தொடங்க ஆர்வமுள்ளோர், ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் குறு நிறுவனங்கள், சுய உதவிக் குழுவினர், உழவர் உற்பத்தியாளர் அமைப்பினர், உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் ஆகியோர் பயன் பெறலாம். ரூ. 1 கோடி வரையிலான திட்டத் தொகை கொண்ட உணவு பதப்படுத்தும் தொழில் திட்டங்கள் இத்திட்டத்தின் கீழ் உதவி பெறத் தகுதி பெற்றவை. திட்டத் தொகையில் 10% முதலீட்டாளர் தம் பங்காகச் செலுத்த வேண்டும். 90% வங்கிகளால் பிணையமில்லாக் கடனாக வழங்கப்படும். அரசு 35% மானியம், அதிகபட்சம் ரூ.10 இலட்சம் வரை வழங்கும். சுய உதவிக் குழுக்கள் சுய உதவிக் குழுவினர் உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 40000 வீதம் தொடக்கநிலை மூலதனமாக வழங்கப்படும். தனியான தொழில்திட்டங்களுக்கு வழங்கப்படும் மானியத்துடன் கூடிய கடனுதவி மட்டுமன்றி, உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொகுப்புக் குழுமங்களுக்குத் தேவையான பொதுக் கட்டமைப்பு வசதிகள் மற்றும் பொது வசதியாக்க மையங்களை ஏற்படுத்த திட்டத் தொகையில் 35% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன் பெற pmfme.mofpi.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினைப் பதிவு செய்யவேண்டும். வேளாண் மற்றும் பண்ணைப் பொருட்களின் மதிப்புக் கூட்டல் வேளாண் மற்றும் பண்ணைப் பொருட்களின் மதிப்புக் கூட்டலை மேம்படுத்துவதன் மூலம் உழவர், பால் உற்பத்தியாளர், கால்நடை வளர்ப்போர் மற்றும் மீனவர் தம் விளைபொருட்களின் விலை உயர்ந்து அவர் தன் வருமானமும் வாழ்க்கைத் தரமும் உயரும். அதுவல்லாமல் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளுக்கு பன்னாட்டுச் சந்தை வாய்ப்புள்ளதால் ஏற்றுமதி மூலமாகவும் நிறைந்த பயன் பெறலாம். சென்னை மாவட்டத்தின் தொழிலார்வம் கொண்ட இளையோரும் தொழில் முனைப்பு கொண்ட தொழில் நிறுவனங்களும் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டுமெனத் தமிழ்நாடு அரசு விரும்புகிறது. மாவட்டத் தொழில் மையங்களை அணுகவும் இதுவரை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வந்த பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டம் (PM FME Scheme) இனிவரும் காலங்களில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மாவட்டத் தொழில் மையங்கள் மூலமாகச் செயல்படுத்தப்படவுள்ளது. எனவே, ஆர்வமுள்ள தொழில் முனைவோர், தொழில் நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் இத்திட்டம் பற்றிய கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல்கள் பெற A-30, சிட்கோ தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-32 என்ற முகவரியில் அமைந்த தொழில் மற்றும் வணிகமண்டல இணை இயக்குநர் அலுவலகத்தினை நேரடியாகவோ அல்லது 9003084478 / 9444114723 ஆகிய எண்களில் தொலைபேசி வழியாகவோ அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சென்னை மாவட்டம்