உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்ய தானிய சேமிப்பு நாட்டின் விவசாய உற்பத்திச் சூழல் முன்னேற்றமடைந்து வரும் சூழலில், உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்ய நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக்கப்பட்ட தானிய சேமிப்பு உள்கட்டமைப்பு (Decentralised Grain Storage Plan in Cooperative Sector) அவசியமாகிறது. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் சேமிப்பு, கொள்முதல், விநியோக முறைகளை மேம்படுத்தும் நோக்கில் கூட்டுறவுத்துறையில் பரவலாக்கப்பட்ட தானிய சேமிப்புத் திட்டம் 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல்வேறு அரசுத் திட்டங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் கூட்டுறவு அடிப்படையிலான சேமிப்புக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்ட இத்திட்டம் தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களில் சேமிப்புக் கிடங்குகள் கட்டி முடிக்கப்பட்டு சேமிப்புத் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. தரம், வெளிப்படைத்தன்மை, செயல்பாட்டுத் திறன் ஆகியவற்றுக்கு இத்திட்டம் முக்கியத்துவம் அளிக்கிறது. நவீன சேமிப்பு வசதிகளின் தேவை இந்தியாவின் தானிய சேமிப்பு முறை பாரம்பரிய முறைகள், பரவலாக்கப்பட்ட உள்ளூர் அமைப்புகள், நவீன உள்கட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்துள்ளது. இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளது. மண் பானைகள், நிலத்தடியில் அமைக்கப்பட்ட சேமிப்பு தொட்டிகள் போன்ற பாரம்பரிய முறைகள் கிடங்குகளுடன் இணைந்து தொடர்கின்றன. நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தி அதிகரித்துள்ளதால் நவீன சேமிப்பு வசதிகளின் தேவை அவசியமாகிறது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உலகின் மிகப்பெரிய உணவுப் பாதுகாப்புத் திட்டங்களில் ஒன்றை இந்தியா செயல்படுத்தி வருகிறது. இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வலுவான தானிய சேமிப்புக் கட்டமைப்பு அவசியமாகிறது. மையப்படுத்தப்பட்ட சேமிப்பு உள்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கும் அதே வேளையில், பரவலாக்கப்பட்ட வசதிகளும் அவசியமானதாக உள்ளன. உற்பத்தி மையங்களுக்கு அருகில் சேமிப்பு வசதிகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை மத்திய கூட்டுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. கொள்முதல் மையங்களுக்கு இடையேயான போக்குவரத்துச் செலவைக் குறைக்கவும், உணவு தானியங்கள் வீணாவதைத் தவிர்க்கவும் இந்த வசதிகள் உதவுகின்றன. வேளாண் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் அரசுத் திட்டங்கள் வேளாண் உள்கட்டமைப்பு நிதித் திட்டம், வேளாண் சந்தைப்படுத்தல் உள்கட்டமைப்புத் திட்டம் போன்ற அரசின் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் இத்திட்டம் செயல்படுகிறது. அறுவடைக்குப் பிந்தைய உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க நிதி உதவியும், வட்டிச் சலுகையும் வழங்கப்படுகின்றன. உணவு தானிய சேமிப்பு வசதிகளைக் ஏற்படுத்த மூலதன மானியம் வழங்கப்படுகிறது. சிறு உணவுப் பதனப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்த மானிய உதவிகள் அளிக்கப்படுகின்றன. இத்திட்டங்களின் ஒருங்கிணைப்பு மூலம் கூட்டுறவுச் சங்கங்கள் ஒருங்கிணைந்த கிராமப்புற சேவை மையங்களாக உருவெடுக்கின்றன. விவசாயிகளுக்கான பல்துறை சேவை மையங்கள் தனிப்பயன் வாடகை மையங்கள் மூலம் விவசாயிகளுக்குத் தேவையான இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கப்படுகின்றன. நியாய விலைக் கடைகள் மூலம் உணவு தானியங்கள் விநியோகிக்கப்படுவதுடன், பதனப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களும் விற்கப்படுகின்றன. தானியங்களைச் சுத்தம் செய்தல், தரம் பிரித்தல் போன்ற பணிகள் மூலம் பொருட்களின் தரம் மேம்படுகிறது. அரசு முகமைகளுக்காகத் தானியங்களைக் கொள்முதல் செய்ய இந்தக் கிடங்குகள் உதவுகின்றன. கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தும் கூட்டுறவு அமைப்புகள் மாவட்ட கூட்டுறவு வளர்ச்சிக் குழுக்களால் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள் அடையாளம் காணப்பட்டு அங்கீகரிக்கப்படுகின்றன. தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. தேசிய, மாநில, மாவட்ட அளவில் ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுப் பணிகள் கண்காணிக்கப்படுகின்றன. இத்திட்டம் கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகிறது. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2306239®=48&lang=1 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்