அறிமுகம்

பயிர்களைத் தாக்கக் கூடிய நூற்புழுக்களில் பெரும்பாலான நூற்புழுக்கள் நீண்டு உருளை போல இளநிலை நூற்புழுக்களும், சில இனத்தின் மூன்றாம், நான்காம் நிலை அடைந்த முதிர்ச்சியான புழுக்கள் வெண்மணி போலவோ அல்லது மொச்சை (அ) அவரை வடிவம் போலவோ இருக்கும். இவற்றின் சராசரி நீளமானது 0.3 மி.மீ முதல் 4மி.மீ வரை இருக்கும். நிலத்தில் ஒரே மாதிரியான பயிரை காலம் காலமாக பயிரிட்டுக் கொண்டே வருகையில், அந்தப் பயிரினைச் சார்ந்து வாழ்கின்ற நூற்புழுக்கள் எண்ணிக்கையில் மிகுந்து மண்ணிலேயே தங்கிவிடுகின்றன. இதனால் பயிரின் வளர்ச்சி நாளடைவில் குறைந்து, விளைச்சலும் குறைகிறது.

நூற்புழு தாக்குதலினால் பயிர் விளைச்சல் மட்டுமின்றி விளை பொருள் தரமும் இழந்து அடிமட்ட விலைக்கு விற்க வேண்டிய நிலை வேளாண் பெருமக்களுக்கு ஏற்படுகிறது கேரட் கிழங்கில் நூற்புழு தாக்குதலால் பக்க கிளைகள் கை, கால்கள் முளைத்தது போல் காணப்படும். எனவே சந்தை தரத்தை இழந்து விடுகிறது.

நூற்புழுக்களினால் ஏற்படுகின்ற விளைச்சல் சேதாரம் கணக்கீடு செய்யப்பட்டதில், முட்டைக் கூடு நூற்புழுக்களினால் 30 சதவீதம் உருளைக்கிழங்கிலும், வெண் நுனி இலை நூற்புழுவினால் வெள்ளைப் பூண்டில் 20 சதவீதம் எனவும், வேர் முடிச்சு நூற்புழுவினால் கேரட் பயிரில் 40 சதவீதம் எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

நூற்புழுக்களுக்கு தலை பாகத்தில் போர்வை போர்த்திய குத்தூசி போன்ற அலகு அமைப்பு உள்ளது. இதனைப் பயன்படுத்தி வேரிலிருந்து சாறை உறிஞ்சி வளர்ச்சிக்கு வேண்டிய உணவுச் சத்துக்களைச் செடிக்கு மேலே கொண்டு செல்ல விடாமல் இவை தடுத்து விடுகின்றன.

நூற்புழுக்களை செடியில் உணவு உட்டிகொள்ள இவை தேர்ந்தெடுக்கும் இடத்தைப் பொருத்து நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். அவையாவன 1. முழுமையான அகவேர் நூற்புழுக்கள் 2. வேரில் முழுமையாக உட்புகாத நூற்புழுக்கள் 3. புறவேர் நூற்புழுக்கள் 4. இலை, மொக்கு மற்றும் பூக்களை உண்ணும் நூற்புழுக்கள்.

நூற்புழு தாக்குதலினால் தோட்டத்தின் தோற்றத்தில் காணப்படும் வேறு பாட்டினையும், செடியில் காணப்படும் அறிகுறிகளையும் தெரிந்து, அதற்கேற்ப மருந்திட்டு செடியினைக் காத்தல் வேண்டும். தோட்டத்தில் ஆங்காங்கே திட்டு திட்டாக பயிர் வளர்ச்சியின்றி காணப்படும். நண்பகல் நேரத்தில் மண்ணில் ஈரம் இருக்கும் போதிலும் வாடியது போல் பயிர் காணப்படும். நிலத்தை அடைத்துக் கொள்ளும் செடியின் பருமன் குறைவாகக் காணப்படும். பயிர், உரிய காலத்திற்கு முன்பே முதிர்ச்சி நிலையை அடையக் கூடும்.

நூற்புழுவினால் தாக்கப்பட்ட செடியில் தென்படுகின்ற அறிகுறிகள்

உயரத்திலும் பருமனிலும் குறைந்த செடியின் வளர்ச்சி.

செடியில் குறைந்த பக்க கிளைகளின் எண்ணிக்கை.

இடைக்கணுவின் நீளம் குறைவுபடுதல்

இலைகள் பச்சையம் இழந்து பழுப்பு நிறமாக மாறுதல்

இலை ஓரங்கள் சிவப்பாகி மேற்புறமாக மடிதல்.

செடிக்கு மேலே கிளைகளெல்லாம் ஒன்று கூடி “காலிபிளவர்” போன்ற அமைப்பு உருவாதல்

இலை நுனி வெண்மை நிறமாகி கீழ் நோக்கித் தொங்குதல்.

உரு சிதைந்த மொக்குகள் அல்லது பூக்கள்.

மேற்கூறிய பாதிப்புகளை செடியைப் பார்த்து அறிந்த போதிலும் செடியின் வேரையும் சோதித்துப் பார்க்க வேண்டியது அவசியம். அவற்றில் தென்படும் அறிகுறிகளாவன :

சல்லி வேர்களற்ற கட்டை வேர்கள்

உதாரணம் : எலுமிச்சை அல்லது நாரத்தை நூற்புழுவினால் தாக்கப்பட்ட கமலா ஆரஞ்சு மரத்தின் வேர்கள்.

பாசி மணி போன்ற வேர் முடிச்சுகள்

உதாரணம்: வேர் முடிச்சு நூற்புழுவினால் தாக்கப்பட்ட கேரட், மிளகு, இஞ்சி வேர்கள்.

இளம் சிவப்பு அல்லது கருமையான கீறியது போல உள்ள காயங்கள் அல்லது தழும்புகள். கருகல் நூற்புழுவால் தாக்கப்பட்ட பீன்ஸ் மற்றும் பட்டாணி வேர்கள்.

வேரின் முனைகள் வளர்ச்சி தடைப்பட்டு உப்பிய தோற்றம் அவற்றின் மேல்புறம் பக்க வேர்கள் உருவாதல். அவையே நாளடைவில் ஹாக்கி ஸ்டிக் போல் வளைந்து காணப்படுதல். இதற்கு உதாரணம் புற வேர் நூற்புழுக்களினால் தாக்கப்பட்ட வெள்ளைப் பூண்டின் வேர்கள்.

வேரில் மணி போல் வெண்மை நிறமாகவோ மஞ்சள் நிறமாகவோ பெண் நூற்புழுக்கள் ஒட்டியிருத்தல்.

உதாரணம் : முட்டைக் கூட்டு நூற்புழுவினால் தாக்கப்பட்ட உருளைக்கிழங்கு வேர்கள்

வேர் நூற்புழுவின் தாக்குதலுக்குப் பிறகு, பூசணங்களின் தாக்குதலினால் வேர்கள் அழுகி விடுகின்ற நிலை.

உதாரணம்: நூற்புழுவினால் தாக்கப்பட்ட கருகல் பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு போன்றவற்றின் வேர்கள்.

ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்