உலகளவில் மொத்தம் 152 வகையான நூற்புழுக்கள் வாழையை தாக்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் வேர் அழுகல் நூற்புழு, வேர் குடையும் நூற்புழு, வேர் முடிச்சு நூற்புழு மற்றும் சுருள் வடிவ நூற்புழு ஆகிய நான்கு வகையான நூற்புழுக்கள் பொருளாதார அடிப்படையில் அதிகம் விளைவிப்பதாக ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளது. நூற்புழுக்கள், வாழையின் வேர் மற்றும் கிழங்குகளைத் தாக்குவதால் மரம் மண்ணில் பிடிப்புத்தன்மை இழந்து, மேலும் வேரின் செயல்களான நீர் மற்றும் சத்துகளை உறிஞ்சும் தன்மையையும் இழப்பதால், சுமார் 20 முதல் 30 சதவீதம் மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது.

வாழை சாகுபடி செய்கின்ற அனைத்து மாநிலங்களிலும் குறிப்பாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, குஜராத், மஹாராஷ்டிரா, பீகார் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் நூற்புழுக்கள் தாக்கம் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

நூற்புழு தாக்குதலின் அறிகுறிகள்

வேர் குடையும் மற்றும் வேர் அழுகல் நூற்புழுக்கள் தாக்கிய வாழைப்பயிர்கள் பொதுவாக வளர்ச்சி குன்றி காணப்படும். வேர் மற்றும் கிழங்குகளின் மேல்தோல் பகுதியை துளைத்து கொண்டு உள்ளே சென்று, பின்பு அங்கேயே இனப்பெருக்கம் செய்வதால், கருஞ்சிவப்பு நிறத்தில் திட்டுக்கள் உண்டாகின்றன. அதுமட்டுமில்லாமல், வாழையின் வேரில் காணப்படுகின்ற கருஞ்சிவப்பு கோடுகள் ஒன்றோடொன்று இணைந்து, வேர் முழுக்க அழுகி காணப்படும். பாதிக்கப்பட்ட வேரை இரண்டாகப் பிளந்தால் நூற்புழுக்களின் தாக்கத்தால் வேரில் உட்பகுதி வரை வேர் அழுகல் இருப்பதைத் தெளிவாக காணலாம். ஆகவே தான், இவற்றை “வேர் அழுகல் நோய்” என்றும், இந்நோய் உண்டாக காரணமாக உள்ள நூற்புழுக்களுக்கு வேர் தாக்கும், வேர் குடையும் மற்றும் வேர் அழுகல் நூற்புழுக்கள் எனவும் கூறப்படுகின்றன. இதனால் நூற்புழுக்கள் தாக்கப்பட்ட வாழை மரத்திற்கு மண்ணில் பிடிப்புத்தன்மை இல்லாமல் போவதால் லேசான காற்றுக்கும் மரம் எளிதாக சாய்ந்து விடுகிறது. காயம் பட்ட வேர் மற்றும் கிழங்கில் பூஞ்சாணங்கள் நுழைந்து வாடல் நோய் உண்டாக இந்நூற்புழுக்களும் ஒரு முக்கிய காரணியாக உள்ளது.

நூற்புழுவினால் ஏற்படும் மகசூல் இழப்பு

நூற்புழுக்களின் தாக்கத்தால் அதிக மகசூல் இழப்பு ஏற்படுகிறது. நேந்திரன், ரொபஸ்டா, பூவன், நெய்பூவன், கற்பூரவள்ளி, ரஸ்தாளி போன்ற ரகங்களில், இவை அதிக அளவில் தாக்கி, சுமார் 30 முதல் 40 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுவதாக தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

நூற்புழு பரவும் முறை

வேர் குடையும் மற்றும் வேர் அழுகல் நூற்புழுக்களின் வாழ்க்கை மூன்று அல்லது நான்கு வாரங்களாகும், வேர் குடையும் நூற்புழுக்களில் ஆண் நூற்புழுக்கள் எவ்வித வேர் பாதிப்பையும் ஏற்படுத்தாது. வேர் குடையும் மற்றும் வேர் அழுகல் நூற்புழுக்கள் 13 மற்றும் 8 மாதங்கள் வரை மண்ணில் தங்கி வாழும் தன்மையுடையவையாகும். இவை விதை கிழங்குகள் மூலம் பரவுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வரும் வடிநீர் மூலமும் புதிய இடங்களுக்கு பரவுகிறது. வேர் முடிச்சு நூற்புழுக்களின் வாழ்க்கை சுழற்சி 25 முதல் 30 நாட்களாகும். ஒரு பெண் புழு சுமார் 300-400 முட்டைகளை முட்டைகூடு பையும், வேரின் உட்பகுதியில் ஒட்டிக்கொண்டு உயிர் வாழ்கின்றன. இரண்டாம் இளநிலை பருவ புழுக்கள் வேரினைத்தாக்கி அங்கேயே மீண்டும் இனப்பெருக்கம் செய்கின்றன. இப்படி தொடர்ந்து வேர் முடிச்சு நூற்புழுக்கள் வேரைச்சார்ந்து இனப்பெருக்கம் செய்வதால், உள்பகுதியில் அடைப்பு ஏற்பட்டு மண்ணிலிருந்து மரத்திற்கு செல்லவேண்டிய சத்துக்கள் மற்றும் நீர் சரியாகப்போய் சேர்வதில்லை.

திசு வளர்ப்பு வாழை கன்றுகளையும் வேர் முடிச்சு நூற்புழுக்கள் மிக அதிகமாகத் தாக்குகின்றன. இவை இளம் வேர்களைத்தாக்கி வேர்முடிச்சு போன்ற அறிகுறிகளை திசு வளர்ப்பு வாழைக்கன்றுகளை பாலிதீன் பைகளில் வைத்திருக்கும் பொழுதே காணப்படுகிறது. இவற்றை கவனிக்காமல் நிலத்தில் நடவு செய்தால், வாழை வளர்வதற்கு அதிக நாள் எடுத்துக்கொள்ளும். ஒரு சில வாழைகள் வளரவே வளராது. அப்படி வளர்ந்தாலும், பூ விடுவது தாமதமாகும். அதன் மூலம் வருகின்ற வாழைத்தார்களின் காய்களும் மிகச்சிறியதாகக் காணப்படும்.

நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்

தற்பொழுது வாழை சாகுபடியில் இரசாயனம் அல்லாத மேலாண்மை முறைகள் பெரும்பாலான வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏனென்றால், இரசாயன முறைகள் அதிக விலையுடையவையாகவும் மண்ணில் தங்கி தீங்கு ஏற்படுத்துபவையாகவும் உள்ளன. நோய் எதிர்ப்பு திறன், உயிரியல் கட்டுப்பாட்டு முறைகள் ஆகியவை நூற்புழுக்கட்டுப்பாட்டில் அதிக பலனைத் தருவதில்லை. நோய் தாக்கப்பட்ட வயல்களிலிருந்து விதைக்கன்றுகளை எடுத்து நடும்பொழுது பாதிப்பிற்கு உள்ளாகின்றன. எனவே, நூற்புழு தாக்காத விதைக்கன்றுகளை பயன்படுத்துவது நூற்புழு மேலாண்மையில் ஒரு சிறந்த முறையாகும். உழவியல் மற்றும் இரசாயன முறைகளும் நூற்புழுக்களால் ஏற்படும் இழப்பைக் குறைக்க உதவுகின்றன.

உழவியல் முறைகள்

வயலை மூன்று மாதங்கள் வரை தரிசாக வைத்தும், கோடை உழவு செய்தும், நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

வாழை விதைக்கன்றுகளை வேர் நீக்கி, மேல்தோல் சீவி, 55°செல்சியஸ் வெந்நீரில் அரை மணி நேரம் மூழ்க வைத்து நடுவதால் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

வேர் நீக்கிய விதைக்கன்றுகளை, வேப்பம் கரைசலான நிம்பிசிடின் அல்லது நீவின் (15 மில்லி/ லிட்டர்) தண்ணீரில் கலந்து அரை மணி நேரம் மூழ்க வைத்து நடலாம். பின்பு 3 மற்றும் 6 மாதங்களில் மரத்திற்கு, 250 கிராம் வேப்பம்புண்ணாக்கு மற்றும் எதிர் நுண் உயிரிகளான பேசிலோமைசிஸ் லிலாசின்ஸ் 30 கிராம் வீதம் இடுவதால் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

இரசாயன முறைகளைப் பயன்படுத்தியும் கட்டுப்படுத்தலாம். விதைக்கன்றுகளின் வேரை நீக்கி, கிழங்கின் மேற்பரப்பை சீவி, பின்பு 30 கிராம் கார்போஃப்யூரான் மருந்தைத்தூவி நிழலில் உலர்த்தி நடவு செய்யலாம்.

திசு வளர்ப்பு வாழையில் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த திசு வாழை நடவு செய்யும் முன்பு, நடவுக்குழிகளில் 20 கிராம் கார்போஃப்யூரான் என்ற குருணை மருந்தையோ அல்லது 10 கிராம் கார்டாப் ஹைட்ரோகுளோரைடையோ இட்டு நட வேண்டும். கன்று நட்டு 3 மற்றும் 6வது மாதங்களில் 40 கிராம் கார்போஃப்யூரான் குருணை மருந்தையோ அல்லது 500 கிராம் வேப்பம்புண்ணாக்கையோ, வாழை மரத்தை சுற்றி வேர் பாகத்தில் இட்டு பிறகு மண் அணைக்க வேண்டும். இப்படி செய்தோமானால், திசு வளர்ப்பு வாழையில் நூற்புழுக்கள் தாக்குதலும் குறைந்து வாழைத்தார்கள் குறித்த காலத்தில் ஈன்று அதிகமான மகசூலைப் பெறலாம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

மூன்று மற்றும் 6வது மாதங்களில், கார்போஃப்யூரான் 40 கிராம் அல்லது கால்டான்(10 கிராம்) அல்லது கார்டாப்(10 கிராம்)

உளுந்து, நெல், சணப்பை, கரும்பு போன்றவற்றுடன் பயிர் சுழற்சி செய்வதன் மூலம் நூற்புழுக்களை வெகுவாக கட்டுப்படுத்தலாம்.

சாமந்திப்பூ, கொத்தமல்லி, தட்டைபயிறு, பச்சைபயறு, சேனை, சேம்பு போன்ற பயிர்களை ஊடுபயிராக பயிரிடுவதன் மூலம் நூற்புழுக்களின் எண்ணிக்கையைக் குறைத்து அதிக மகசூலை அதிகரிக்கலாம்.

நூற்புழுவிற்கு எதிர்ப்பு சக்தி கொண்ட கற்பூரவள்ளி, மொந்தன், நாட்டுப்பூவன், குன்னன், பேய் குன்னன் மற்றும் பிடிமொந்தன் ஆகிய வாழைகளை சாகுபடி செய்யலாம்.

திசு வளர்ப்பு வாழை

ஒருங்கிணைந்த நூற்புழு மேலாண்மை

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு மேலாண்மை முறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுவதே பொருளாதார ரீதியாக அதிக மகசூலை பெற்று தருகிற எளிய செயல்பாட்டு முறையாகும். எனவே, இந்த முறைப்படி, வாழை விதைக்கன்றுகளின் வேரை நீக்கி, கிழங்கின் மேல்தோலை நீக்கி, பின்பு நிம்பிசிடின் அல்லது நீவின் என்ற வேப்பம் கரைசலில் (15 மில்லி/ லிட்டர் தண்ணீர்) ½ மணி நேரம் மூழ்க வைத்து, பின்பு நிழலில் உலர்த்தி, வாழை கன்றுகளை நடவு செய்ய வேண்டும். அதன் பிறகு, 3 மற்றும் 6வது மாதங்களில், கார்போ பியூரான் குருணை மருந்து(40 கிராம்) அல்லது கால்டான்(10 கிராம்) இவற்றில் ஏதாவது ஒன்றை மரத்தைச்சுற்றி இட வேண்டும் அல்லது வேப்பம்புண்ணாக்குடன் (250 கிராம்) எதிர் நுண்ணுயிரிகளான பெசிலோமைசிஸ் லிலாசினஸ் மற்றும் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் ஆகியவற்றை 30 கிராம் வீதம் இடுவதன் மூலம் மண்ணிலும் வேரிலும் உள்ள வேர் அழுகல் மற்றும் வேர் முச்சு நூற்புழுக்களின் எண்ணிக்கை பெருமளவு குறைவதுடன் வாழைத்தார்களின் உற்பத்தியும் அதிகரிக்கிறது.

கேள்வி பதில்கள்

1. நூற்புழுக்கள் என்றால் என்ன? அதை எவ்வாறு பார்க்கலாம்?

நூற்புழுக்கள் என்பவை புழு போன்று வேரினைத் தாக்கி பயிருக்கு சேதம் விளைவிப்பவை. இதனை நம் கண்களால் காண இயலாது. நுண்ணோக்கி கொண்டு மட்டுமே காண முடியும்.

2. நூற்புழுக்கள் எவ்வாறு பெருத்த சேதத்தை ஏற்படுத்துகிறது?

நூற்புழுக்கள் தமது மெல்லிய நீண்ட கூர் பகுதியின் வழியே வேரினைத் துளைத்து அதன் செல்களைத் தின்றுவிடுகின்றன. இந்நூற்புழு துளையிட்ட வழியே பூஞ்சை, பாக்டீரியா போன்றவை நுழைவதாலேயே சேதம் அதிகரிக்கிறது.

3. வாழையை அதிகம் தாக்கும் நூற்புழுக்கள் யாவை? அதனால் எவ்வளவு சேதம் ஏற்படுகிறது?

பெரும்பாலான மண்ணில் வாடும் அனைத்து வகை நூற்புழுக்களும் வாழையைத் தாக்குகின்றன. 1) துளைக்கும் நூற்புழு - ரடோபோலஸ் போசிமிலி‌ஸ் 2) வேர்முடிச்சு நூற்புழு - மெலய்டோகைன் இன்கா‌க்னிட்டா 3) வேரழுகல் நூற்புழு - பிராட்டிலென்கஸ் காப்பியே 4) சுருள் நூற்புழு- வெறலிகாட்டிலென்கஸ் மல்டிசின்க்டஸ் வாழையைத் தாக்கும் முக்கிய பூச்சி வகை நூற்புழுக்களாகும். இதனால் 20% சேதம் ஏற்படுகிறது.

4. வாழையில் நூற்புழு தாக்கத்தால் பூஞ்சாண நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதா?

ஆம், வாழையைத் தாக்கி பெருமளவு சேதம் விளைவிக்கும் புஸேரியம் ஆக்ஸிஸ்போரம் வகை கியூபென்ஸ் என்ற பூஞ்சையானது நூற்புழுக்களுடன் அதாவது வேர் குடையும் புழு, வேரழுகல் புழு, வேர் முடிச்சுப் புழு போன்றவற்றுடன் இணைந்து தாக்கும். பூஞ்சை நூற்புழு தாக்குதலுக்குப் பின்போ அல்லது அதனுடன் இணைந்து தாக்குவது அதிக சேதத்தை விளைவிக்கும்.

ஆதாரம்: தேசிய வாழை ஆராய்ச்சி மையம்