டிஜிட்டல் உலகையும் இயல் உலகையும் இணைக்கும் இணைய இயல் உலக அமைப்புகள் டிஜிட்டல் உலகையும் இயல் உலகையும் இணைக்கும் இணைய இயல் உலக அமைப்புகள் [Cyber-Physical Systems (CPS)], இயந்திரங்களை நுண்ணறிவுடன் உணரவும், பகுப்பாய்வு செய்து பதிலளிக்கச் செய்யவும் உதவுகின்றன. மத்திய அறிவியல் & தொழில்நுட்பத்துறையின் வழிகாட்டுதலின் கீழ், தேசிய அளவிலான பல்துறை சார்ந்த இணைய இயல் உலக ஒருங்கிணைப்புக்கான இயக்கம் (என்எம்- ஐசிபிஎஸ்) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் மூலம் ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழில்துறை, சர்வதேச அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டு உள்நாட்டுத் திறன்கள் மேம்படுத்தப்படுகின்றன. தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையங்கள், ஆராய்ச்சி பூங்காக்கள் மூலம், முக்கியமான துறைகளில் ஆராய்ச்சிகள் நடைமுறை பயன்பாடுகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிகள் புதுமையான, தற்சார்பு கொண்ட வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான பயணத்தை வலுப்படுத்துகின்றன. உணர்ந்து செயல்படும் நுண்ணறிவு இயந்திரங்கள் இயந்திரங்கள் வெறுமனே பணிகளைச் செய்வதிலிருந்து மேம்பட்டு, உணர்ந்து சிந்தித்துச் செயல்படும் அமைப்புகளாக மாறிவரும் சூழலில், சிபிஎஸ் முக்கியப் பங்காற்றி வருகின்றன. கணினித் தொழில்நுட்பங்களை இயல் உலக அமைப்புகளுடன் சென்சார், தகவல் தொடர்பு கட்டமைப்புகள் மூலம் இது இணைக்கிறது. இதன் மூலம் இயந்திரங்கள் தங்களைச் சுற்றியுள்ள சூழலை உணர்ந்து நிகழ்நேரத்தில் மாறும் நிலைமைகளுக்கு ஏற்பச் செயல்பட முடிகிறது. ஓட்டுநர் இல்லாத கார்கள் மனிதர்களின் நேரடித் தலையீடு இன்றிச் சாலைகளில் இயக்கப்படுவது இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். அதேபோல் ஸ்மார்ட் தொழிற்சாலைகள் உற்பத்திச் செயல்முறைகளைக் கண்காணித்துச் செயல்பாடுகளைத் தாமாகவே சரிசெய்கின்றன. மருத்துவ சாதனங்கள் நோயாளிகளைக் தொடர்ச்சியாகக் கண்காணித்து உரிய நேரத்தில் தேவையான சிகிச்சைகளை வழங்க உதவுகின்றன. தேசிய அளவிலான பல்துறை சார்ந்த இணைய இயல் ஒருங்கிணைப்புக்கான இயக்கம் தேசிய அளவிலான பல்துறை சார்ந்த இணைய இயல் ஒருங்கிணைப்புக்கான இயக்கத்திற்கு 2018-ம் ஆண்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. கல்வி நிறுவனங்கள், தொழில்துறை, அரசு, சர்வதேச அமைப்புகளை ஒருங்கிணைப்பதன் மூலம் அறிவியல் ஆராய்ச்சிகள் தேசிய முன்னுரிமைகளுடன் இணைக்கப்படுகின்றன. நாடு முழுவதும் உலகத் தரத்திலான பல்துறை சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு மேம்பட்ட ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த இயக்கத்தின் கீழ் 25 தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு மையங்கள் உருவாக்கப்பட்டுத் தொழில்நுட்ப மேம்பாடு, திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் ஊக்குவிப்பு, சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவை சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆராய்ச்சிகளை வணிகமயமாக்கும் நோக்கில் உயர் செயல்திறன் கொண்ட மையங்கள், ஆராய்ச்சி பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. இணைய-இயல் உலக அமைப்புகளின் சூழல் அமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகள் இணைய இயல் உலக அமைப்புகளின் சூழல் அமைப்பை வலுப்படுத்தும் வகையில், ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பல்வேறு உதவித்தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளம் ஆராய்ச்சியாளர்கள் பயனடைவதோடு, லட்சக்கணக்கான நிபுணர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. புத்தொழில் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் பல்வேறு பிராந்திய மொழிகளிகளிலும் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. சுகாதாரம், வேளாண்மை, சுரங்கத்தொழில், மேம்பட்ட தகவல் தொடர்பு, சைபர் பாதுகாப்பு போன்ற துறைகளில் இந்த நவீனத் தொழில்நுட்பங்கள் மூலம் பல்வேறு ஆக்கப்பூர்வமான பலன்கள் எட்டப்பட்டு வருகின்றன. இந்த விரிவான முயற்சிகள் நாட்டின் தொழில்நுட்பத் திறன்களை வலுப்படுத்தி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திச் தற்சார்புக்கான இலக்குகளை அடைய வழிவகுக்கின்றன. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2304858®=6&lang=11 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்