செமிகான் இந்தியா 2026 மாநாடு புதுதில்லி துவாரகாவில் உள்ள யசோபூமியில் செமிகான் இந்தியா 2026 மாநாட்டை (SEMICON India 2026) 2026 செப்டம்பர் 17 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். உலகளாவிய சிப் தயாரிப்பாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், முதலீட்டாளர்கள் பங்கேற்கும் இந்த 3 நாள் நிகழ்வில், இந்தியாவின் செமிகண்டக்டர் உற்பத்தி சூழலியல் முழுமையாகக் காட்சிப்படுத்தப்பட உள்ளது. "சிலிக்கான் முதல் அமைப்புகள் வரை: செமிகண்டக்டர் சூழலியலை உருவாக்குதல்" என்ற கருப்பொருளின் கீழ் இந்த ஆண்டிற்கான மாநாடு நடைபெறுகிறது. சிப்களை உற்பத்தி செய்ய முடியுமா என்ற நிலையைக் கடந்து, அது சார்ந்த முழுமையான கட்டமைப்பை எவ்வளவு விரைவாக உருவாக்க முடியும் என்ற இலக்குடன் இந்தியா தற்போது செயல்பட்டு வருகிறது. செமிகண்டக்டர் சிப்களின் முக்கியத்துவம் கைப்பேசிகள், கார்கள், ஆளில்லா ட்ரோன்கள், விமானங்கள், மருத்துவ உபகரணங்கள், செயற்கைக்கோள்கள் என அனைத்து நவீன சாதனங்களுக்கும் அடிப்படையாக விளங்குவது சிறிய அளவிலான செமிகண்டக்டர் சிப்கள் ஆகும். தற்போது 4.3 டிரில்லியன் டாலர் மதிப்பைக் கொண்டுள்ள உலகளாவிய மின்னணு சாதன உற்பத்தித் துறையின் மிக முக்கிய அடித்தளமாக செமிகண்டக்டர் விளங்குகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட சிப் தட்டுப்பாடு காரணமாக வாகன உற்பத்தி ஆலைகள் முடங்கியதை அடுத்து, செமிகண்டக்டர் துறையில் தற்சார்பு அடைவதன் அவசியத்தை உலக நாடுகள் உணர்ந்தன. வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைச் சீர்திருத்தங்கள், வரிச் சலுகைகள் காரணமாக இந்தியாவில் மின்னணு சாதனங்களின் உற்பத்தி வரலாறு காணாத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இந்தியாவில் மின்னணுப் பொருட்கள் உற்பத்தி இந்தியாவில் மின்னணுப் பொருட்கள் உற்பத்தி 2014-15-ல் ரூ.1.9 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2025-26-ல் 7 மடங்கு அதிகரித்து ரூ.13.11 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி ரூ.38,000 கோடியிலிருந்து 11 மடங்கு உயர்ந்து ரூ.4.24 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. ஸ்மார்ட்போன் உற்பத்தி 33 மடங்கு உயர்ந்து ரூ.18,000 கோடியிலிருந்து ரூ.6.27 லட்சம் கோடியாகவும், ஏற்றுமதி 165 மடங்கு அதிகரித்து ரூ.1,500 கோடியிலிருந்து ரூ.2.59 லட்சம் கோடியாகவும் உயர்ந்துள்ளது. 2014-ல் முதல் 100 ஏற்றுமதிப் பொருட்களில் கூட இடம்பெறாத ஸ்மார்ட்போன்கள், 2025-26 நிதியாண்டில் நாட்டின் மிகப்பெரிய அளவிலான ஏற்றுமதிப் பொருளாக உருவெடுத்துள்ளன. நாட்டில் பயன்படுத்தப்படும் கைப்பேசிகளில் 99.2 சதவீதம் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதோடு, கைபேசி உற்பத்தியில் உலகளவில் இந்தியா 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. இத்துறை மூலம் 25 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மின்னணுப் பொருட்கள் உற்பத்தி மின்னணுப் பொருட்கள் உற்பத்தியின் அடுத்தகட்டமாக 2021-ல் ரூ.76,000 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் செமிகான் இந்தியா 1.0 திட்டம் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2026 ஜூலை மாதத்தில் ரூ.1,27,500 கோடி மதிப்பீட்டில் செமிகான் இந்தியா 2.0 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. சிப் வடிவமைப்பு, செமிகண்டக்டர் உபகரணங்கள், மூலப்பொருட்கள் தயாரிப்பு, ஆலைகள் அமைத்தல், நவீன பேக்கேஜிங், ஆராய்ச்சி மேம்பாடு, திறன் மேம்பாடு ஆகிய 6 முக்கியத் தூண்களின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 6 மாநிலங்களில் ரூ.1.64 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீட்டுடன் 12 செமிகண்டக்டர் உற்பத்தித் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அவற்றில் 3 உற்பத்தி ஆலைகள் ஏற்கனவே வணிக ரீதியான உற்பத்தியைத் தொடங்கிவிட்டன. செமிகண்டக்டர் திறன் மற்றும் பயிற்சி இத்துறையில் 85,000 செமிகண்டக்டர் பொறியாளர்களை உருவாக்கும் நோக்கில் புத்தொழில் திட்டங்கள் வாயிலாக 320 கல்வி நிறுவனங்களுக்கு மென்பொருள் கருவிகள் வழங்கப்பட்டு, இதுவரை 68,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 2026 ஏப்ரல் நிலவரப்படி 75 நிறுவனங்களால் 211 சிப்கள் வடிவமைக்கப்பட்டு, அவற்றில் 7 சிப்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. சி-டாக் (C-DAC) அமைப்பின் கீழ் தொடங்கப்பட்டுள்ள சிப்-இன் (ChipIN) மையம் மூலம் 500-க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த 1 லட்சத்திற்கும் அதிகமான பொறியாளர்களுக்கு அதிநவீன பயிற்சி வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. உலகளவில் விநியோகச் சங்கிலியைப் பாதுகாக்கும் நோக்கில் அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் இணைந்து 'பாக்ஸ் (Pax) சிலிக்கா' கூட்டமைப்பிலும் இந்தியா இணைந்துள்ளது. செமிகண்டக்டர் மாநாட்டின் சிறப்பம்சங்கள் யசோபூமியில் 15,000 சதுர மீட்டர் பரப்பளவில் நடைபெறும் இந்த மாநாட்டில் 600-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள், 300 சர்வதேச நிறுவனங்கள், 150-க்கும் மேற்பட்ட முன்னணி வல்லுநர்கள் பங்கேற்கின்றனர். 6 சர்வதேச அரங்குகள், 12 மாநில அரங்குகள், புத்தொழில் நிறுவனங்களின் கண்காட்சி, மாணவர்களின் ஹேக்கத்தான் நிகழ்வுகள் இதில் இடம்பெறுகின்றன. செமிகண்டக்டர் உற்பத்தியில் உலகளவில் முன்னணி நாடாக இந்தியாவை நிலைநிறுத்துவதற்கான புதிய தொடக்கமாக இம்மாநாடு அமையவுள்ளது. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2310311®=48&lang=1 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் அலுவலகம்