பாரத்நெட் திட்டம் - ஓர் பார்வை நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் (சுமார் 2.64 லட்சம்) பிராட்பேண்ட் இணைப்பை வழங்க பாரத்நெட் திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மின்னணு பாரத் நிதியின் கீழ் நாட்டின் ஊரக மற்றும் தொலைதூரப் பகுதிகளில் 4ஜி செல் கோபுரங்களை நிறுவுவதன் மூலம் இணைய அடிப்படையிலான தொலைத் தொடர்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்காக 4ஜி செறிவூட்டல் திட்டம் உட்பட நாட்டின் ஒவ்வொரு கிராமத்திற்கும் சேவை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. பாரத் நெட் திட்டத்தின் கீழ் கண்ணாடி இழை கேபிள் (OFC) செயற்கைக்கோள் இணைப்பு மூலம் கிராமங்கள் இணைக்கப்படுகின்றன. மேலும், அனைத்து கிராம பஞ்சாயத்துகள் மற்றும் கிராமங்களுக்கு தேவையின் அடிப்படையில் வைஃபை ஹாட்ஸ்பாட்கள், ஃபைபர் டூ தி ஹோம் (எஃப்.டி.டி.எச்) இணைப்புகள் போன்ற அகண்ட அலைவரிசை இணைப்பை வழங்க பாரத்நெட் திட்டம் படிப்படியாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் அனைத்து கிராமங்களுக்கும் அதிவேக அகண்ட அலைவரிசை இணைப்பை வழங்க திருத்தப்பட்ட பாரத்நெட் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட பாரத்நெட் திட்டம் ரூ.1,39,579 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் பாரத்நெட் திட்டம் "பாரத்நெட் திட்டம்" என்பது, தமிழ்நாட்டில் உள்ள 12525 கிராமப் பஞ்சாயத்துகளையும் "கண்ணாடி இழை கம்பிவடம்" மூலம் இணைத்து, அதிவேக அலைக்கற்றை வழங்கும் திட்டம். இத்திட்டத்தினை "தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET)" என்ற சிறப்பு நோக்கு நிறுவனம் இத்திட்டத்தினை செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் 1 Gbps அளவிலான அலைக்கற்றை அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளிலும் வழங்கப்படும். இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் மாவட்டங்கள் வாரியாக நான்கு தொகுப்புகள் (A, B, C & D) பிரிக்கப்பட்டு, தொகுப்புக்கு ஒருவர் என நான்கு திட்ட ஒருங்கிணைப்பாளர்களும், தணிக்கை மற்றும் ஆய்வு செய்ய மூன்றாமவர் முகமையும் (Third Party Agency-TPA) தெரிவு செய்யப்பட்டது. தொகுப்பு A-இன் கீழ், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் உள்ள 3095 கிராமப் பஞ்சாயத்துகளும், பாரத்நெட் திட்டத்தின் மூலம் இணைக்கப்பட்டு 1 Gbps அளவிலான அலைக்கற்றை சேவை வழங்கப்படும். மேலும், தொகுப்பு B-இல், நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு வழக்கு முடிவுக்கு வந்த பின்னர், தமிழகத்தில் உள்ள அனைத்து 12525 கிராமப் பஞ்சாயத்துகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும். தொகுப்பு C-ன் கீழ் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாமக்கல், கரூர், கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை மற்றும் தொகுப்பு D-ன் கீழ் கன்னியாகுமரி, மதுரை, இராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாரத்நெட் திட்டத்தின் மூலம், அனைத்து கிராமப்புறங்களுக்கும், குறைவான விலையில் மற்றும் தரமான டிஜிட்டல் (Digital) சேவைகள், மின்கல்வி (e-Education), தொலை மருத்துவம் (Tele Medicine), இணையதள இணைப்பின் மூலம் மூன்று விதமான சேவைகள் (Triple Play) ஆகிய சேவைகளை வழங்க முடியும். மேலும், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள், அதிவேக இணையதள சேவையினை பெற முடியும். இத்தகைய சேவைகளை வழங்குவதன் மூலம், ஊரக வேலைவாய்ப்பு மற்றும் அரசின் பல்வேறு திட்டங்கள் மக்களை விரைந்து சென்றடைய இத்திட்டம் வழிவகுக்கும். வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9