சமூகம் என்பது சமுதாயத்தின் ஓர் அங்கம். சமூதாயம் நம் முழு உடல் என்றால் சமூகம் என்பது அதிலுள்ள ஓர் அங்கம். சமுதாய மாற்றம் சமூகம் என்பது ஒவ்வொரு தனிமனிதரின் ஒழுக்கம், அகத்தூய்மை, பண்பாடு, கலாச்சாரம், படைப்புத்திறன், கலைத்திறன், அர்ப்பணிப்பு ஆகியவற்றின் பங்களிப்பில் கொண்டுள்ள கூட்டு உருவாக்கம். மக்களினம் அறிவு வளர்ச்சி பெற்று நாகரிகம் மிகுந்து வளர வளர சமுதாய உறவில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சமுதாயக் கொள்கைகளுக்கும் இன்றைய கொள்கைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை ஆராய்ந்தால் உண்மை புலனாகும். ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே'-என்று பாடினார் புலவர் பொன்முடியார். அரசனுக்காகப் போர்புரிந்து வெற்றி பெற்றுத் தருதலே அக்கடமையாக இருந்தது. இன்றோ, போர் முயற்சியில் ஈடுபடாமல் உலக அமைதியை எவ்வாறு நிலைநிறுத்துவது என்பதே இளைஞர்க்குக் கடமையாக முன் நிற்கிறது. அக்காலத்தில் பொருள் சேர்த்து வைத்துச் செல்வராய் விளங்கிய சிலருக்கு அடங்கி, உழைத்து, அந்த உழைப்பின் கூலியைச் செல்வரின் அருளுதவி என மதித்து நன்றியுணர்வோடு வாழ்ந்தனர். ஆனால், இன்றோ அதை உதவியாக எண்ணாமல் உழைப்பின் உரிமை என்று எண்ணுமாறு அரசு பல சட்டங்கள் இயற்றி வருகிறது. கல்வி முறை அன்றும் இன்றும் மாணாக்கர் என்பார் அக்காலத்தில் வைகறைப் பொழுதில் எழுந்து ஆசான் இல்லம் சென்று வழிபட்டு அவரை விட்டு நீங்காதவனாகி, அன்பு உள்ளத்தனாய் சித்திரத்தில் எழுதப்பட்ட பாவை போல் அசையாதவனாய் அவர் உரைத்தவை எல்லாம் மனத்தில் பொருந்த கேட்பவராய் இருந்தனர்.அவ்வாறே ஆசிரியரும் மாணவர்களை தம் பிள்ளைகளாகவே நடத்தி, கற்பிக்கும் முன்னர் தாம் வழிபடும் கடவுளை மனத்தில் இருத்தி, உரைக்கப்படும் பாடத்தை உள்ளத்தில் அமைத்துக் கொண்டு மாணாக்கர் உள்ளம் கொள்ளுமாறு கற்றுக் கொடுத்தனர். ஆசிரியர்-மாணவர் உறவு அன்றுபோல் இன்று இல்லை. இன்று மாணவர் கவனத்தைத் திசை திருப்ப ஊடகங்கள், தொலைக்காட்சிகள் போன்றவை நூல்கள் படிக்கும் ஆர்வத்தைக் குறைத்துவிட்டன. குழந்தை வளர்ப்பு முறை மக்கள் அறிவுடையராக இருத்தல், உலகத்து உயிர்களுக்கெல்லாம் தம்மினும் இனியதாகும் என்கிறார் திருவள்ளுவர். தம் மகனைச் சான்றோன் என உலகம் சொல்லக் கேட்ட தாய், ஈன்ற பொழுதினும் பெரிதும் உவப்பாள் என்றும் இவ்வறிவார்ந்த மகனைப் பெறுவதற்கு இவன் தந்தை என்ன தவம் செய்தானோ என்று யாவரும் சொல்லக் கேட்டு தந்தை இன்புறுவார் என்றும் திருவள்ளுவர் மக்கட்பேறு என்ற அதிகாரத்தில் குறிப்பிடுகின்றார். இக்கருத்தாக்கம் இன்றைக்கும் மிகப்பொருத்தமாக அமைந்துள்ளது. தம் இளம் பருவத்தில் தமக்கு ஏற்ற வசதி வாய்ப்புகள் இன்மையாலும் பொருளாதாரப் பயன்பாட்டில் பின்தங்கிய நிலையில் இருந்தமையாலும், போதிய இயற்கை அறிவு இருந்தும் உயர் கல்வி பெற இயலவில்லையே என்ற ஏக்கம் பெற்றோர்களுக்கு இருந்துவருகிறது. அக்குறையைப் போக்கஇ பல்லாற்றான் உழைத்து தம் மக்கட்கு உயர் கல்வி கொடுத்து மகிழ்ச்சியுறுகின்றனர். அன்று முதியோர் இல்லங்கள் என்ற அமைப்பு இருந்ததாக காணப்படவில்லை. இன்று, உடலும் உள்ளமும் நலிந்து முதியோர் இல்லத்தில் அல்லலுற்று கண் கலங்க, பிள்ளைகளோ எல்லா நலங்களும் பெற்று இனிய சூழ்நிலையில் தன் பெற்றோரை மறந்து வாழ்ந்து வருகின்றனர். தம் உடலை வருத்தி உழைத்து ஆளாக்கிய தம் பெற்றோரை முதியோர் இல்லங்களில் தவிக்கவிட்டு நல்வாழ்வு வாழ்ந்திடும் இப் பிள்ளைகளைப் பெறுதற்கு இவர் பெற்றோர் நற்றவம் ஏதும் செய்யவில்லையோ - என்னும் சொல்லை உண்டாக்குகின்றனர். நன்றி மறக்கும் இந்நிலையை மாற்றி முதியோர் இல்லங்கள் உருவாக்குதற்கு இடந்தராமல் அவர்களைக் போற்றுதல் இன்றைய இளைஞர்களின் தலையாய கடமை. இத்தகு செயற்பாடு நம் வருங்கால தலைமுறையினருக்கும் ஒருசிறந்த பாடமாக அமையும்.