நோக்கம்

குறைந்த அளவு இருபது உறுப்பினர்களைக் கொண்டு கட்டமைக்கப்படும் குழு அடிப்படை அமைப்புக் குழுவாகும், இதில் பெண்களும் சமஅளவில் உறுப்பினர்களாக இடம் பெற வெண்டும்.

குறைந்த அளவு ஐந்து பெண்களாவது இருத்தல் வேண்டும். இந்த அடிப்படை அமைப்புக் குழுவானது முகாம் என்று அழைக்கப்படும்.

முகாம் பொதுக்குழு

முகாம் அளவிலான உயர்நிலை அதிகாரம் கொண்டதே முகாம் பொதுக்குழுவாகும். இப்பொதுக்குழு ஆண்டுக்கு ஒருமுறை முகாம் செயலாளர் தலைமையில் முகாமிற்கு அடுத்த மேலமைப்புச் செயலாளர் அல்லது அவர் சார்பில் ஒரு பொறுப்பாளர் முன்னிலையில் கூடும்.

இடைப்பட்டக் காலங்களில் தேவையையெட்டி, முகாமிற்கு அடுத்த மேலமைப்புச் செயலாளரின் வழிகாட்டுதல் அல்லது ஒப்புதலின் அடிப்படையிலோ, முகாமின் உறுப்பினர்களில் மூன்றிலொரு பங்கினர் கையெழுத்திட்டுக் கேட்டுக் கொள்வதன் அடிப்படையிலோ சிறப்புப் பொதுக்குழுவைக் கூட்டலாம்.

பொதுக்குழுவின் மொத்த உறுப்பினர்களில் மூன்றிலொரு பங்கினர் பங்கேற்க வேண்டும். இவ்வெண்ணிக்கைக்குக் குறைவாயிருப்பின், முகாமையான முடிவுகளை எடுக்கவோ, தீர்மானங்களை நிறைவேற்றவோ கூடாது.

பொதுக்குழுவிற்கான இடம், நாள் மற்றும் நேரம் ஆகியவற்றைக் கூட்டம் நடத்துவதற்கு ஏழு நாட்களுக்கு முன்னதாக முகாம் செயலாளர் முகாம் உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

பொதுக்குழுவின் பணிகள்

முகாம் செயலாளர் முன்வைக்கும் ஆண்டறிக்கை மற்றும் நிதிச் செயலாளர் முன்வைக்கும் வரவு-செலவு அறிக்கை ஆகியவற்றைத் திறனாய்வு செய்து ஒப்புதல் அளித்தல்.

முகாம் செயற்குழு முன் வைக்கும் ஆண்டுச் செயல் திட்டத்தை ஆய்வு செய்து ஒப்புதல் அளித்தல்.

மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை முகாம் பொறுப்பாளர்களாக, முகாம் செயலாளர் ஒருவர், துணைச்செயலாளர்கள் இருவர் அல்லது மூவர், நிதிச்செயலாளர் ஒருவர் ஆகியோரையும், முகாம் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் வட்டார அமைப்புக்கான செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரையும் தெரிவு அல்லது தேர்வு செய்தல்.

ஆண்டுக்கு ஒருமுறை கூடும் பொதுக்குழுவில் காலியாகவுள்ள இடங்களுக்கு பொறுப்பாளர்களை நிரப்புதல் அல்லது நிரப்பியதற்கு ஒப்புதல் அளித்தல்.

பொதுக்குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள்

முகாம் பொறுப்பாளர்கள்.

முகாம் செயற்குழு உறுப்பினர்கள்.

முகாமிலுள்ள அனைத்து உறுப்பினர்கள்.

துணைநிலை அமைப்புகளின் முகாம் பொறுப்பாளர்கள்.

முகாமிற்கு அடுத்த மேலமைப்புச் செயலாளரின் ஒப்புதல் பெற்ற சிறப்பு அழைப்பாளர்கள்.

முகாம் செயற்குழு

முகாமிற்கு அடுத்த மேலமைப்புகளின் வழிகாட்டுதல்கள், முகாம் பொதுக்குழுவின் முடிவுகள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தவும், அவ்வப்போது முகாம் அளவில் எழும் அரசியல் சூழ்நிலைகளுக்கேற்ப முடிவுகளை மேற்கொள்ளவும், இயக்கத்தை வழிநடத்தவும், அதிகாரம் கொண்ட குழுவே முகாம் செயற்குழுவாகும்.

இச்செயற்குழு திங்களுக்கொருமுறை முகாம் செயலாளரின் தலைமையில் கூடும். தேவையையொட்டி, மேலமைப்புச் செயலாளரின் அனுமதியோடு முகாம் செயலாளரோ அல்லது முகாம் செயற்குழு உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கையெழுத்திட்டுக் கேட்டுக் கொள்வதன் அடிப்படையிலோ இடைப்பட்டக் காலங்களில் சிறப்பு முகாம் செயற்குழு கூட்டப்படும்.

முகாம் செயற்குழுவின் பணிகள்

மேலமைப்புகளின் வழிகாட்டுதல்கள், முகாம் பொதுக்குழுவின் முடிவுகள் அனைத்தையும் முகாம் செயற்குழு நடைமுறைப்படுத்தும்.

இயக்கத்தின் முகாம் அளவிலான செயலறிக்கைகள், இயக்கத் தொடர்பான பிற அறிக்கைகள் மற்றும் செயல்திட்டங்கள் முதலியவற்றை திறனாய்வுக்கும், கலந்தாய்வுக்கும் ஒவ்வொரு முகாம் பொதுக்குழுவிலும், முகாம் செயற்குழு முன்வைக்கும்.

அரசியல் சூழல்கள் மற்றும் இயக்கத் தொடர்பானச் சிக்கல்கள் குறித்து அவ்வப்போது கலந்தாய்வுகள் செய்யவும், முடிவுகள் எடுக்கவும், அம்முடிவுகளினபடிப்படையில் இயக்கத்தை வழிநடத்தவுமானப் பணிகள் முகாம் செயற்குழு செய்யும்.

விதிகள்

அடிப்படை அமைப்புக் குழுவின் விதி 1

தவிர்க்கமுடியாதக் காரணங்களால் முகாம் செயற்குழுக் கூட்டங்களில் கலந்து கொள்ள இயலாதவர்கள் அதற்கானத் தகவலை முகாம் செயற்குழுக் கூட்டத்திற்கு முன்னதாகவோ அல்லது கூட்டத்தின்போதோ முகாம் செயலாளருக்குத் தெரிவிக்க வேண்டும்.

அல்லது கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாமைக்கான விளக்கத்தை முகாம் செயற்குழு கூட்டம் நடைபெற்ற ஏழு நாட்களுக்குள் முகாம் செயலாளரிடம் எழுத்தில் வழங்க வேண்டும்.

அடிப்படை அமைப்புக் குழுவின் விதி 2

முகாம் செயற்குழுக் கூட்டத்திற்குக் குறித்த நேரத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாவர்.

முகாம் செயற்குழுக் கூட்டத்தில் தொடர்ந்து மூன்று முறை பங்கேற்காதவர்கள் முகாம் செயற்குழு உறுப்பினர் தகுதியைத் தானாகவே இழந்து விடுவர். அத்துடன் அவர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கான நடைமுறைகளுக்கும் ஆளாவர்.

வட்டார அமைப்பின் விதி 3

முகாம் செயற்குழுவின் நடவடிக்கைகள் அனைத்தும் முறையாக நிகழ்க் குறிப்பேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.

முகாம் செயற்குழுவில் பங்கேற்போர் கையொப்பமிடும் வருகைப் பதிவேட்டையும் செயற்குழு உறுப்பினர்கள் ஒப்படைக்கும் செயலறிக்கைகளுக்கான கோப்புகளையும் முகாம் செயற்குழுக் கையாள வேண்டும்.

அடிப்படை அமைப்புக் குழுவின் விதி 4

முகாம் செயற்குழு கூடும் ஒவ்வொரு முறையும், அதற்கு முன்னதாக நடைபெற்ற முகாம் செயற்குழுவின் நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள் குறித்தச் சுருக்க அறிக்கையினை முகாம் செயலாளர் முகாம் செயற்குழுவின் மீள்பார்வைக்கு முன்வைக்க வேண்டும்.

முகாம் செயலாளர் உட்பட முகாம் செயற்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும், வழக்கமாகக் கூட்டப்படும் ஒவ்வொரு முகாம் செயற்குழுவிலும், முகாம் செயற்குழுவின் இரண்டு கூட்டங்களுக்கு இடைப்பட்டக் காலத்திற்குரியச் செயலறிக்கைகளையும், வரவு-செலவு அறிக்கைகளையும் முகாம் செயற்குழுவில் ஒப்படைக்க வேண்டும். தவறினால், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாவர்.

முகாம் அளவில் நடைபெறும் நிகழ்ச்சிகள் தொடர்பான புகைப்படங்கள், துண்டறிக்கைகள், ஒட்டிகள், ஒலி – ஒளி நாடாக்கள், செய்தி நறுக்குகள் மற்றும் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் முகாம் செயலாளர் வட்டார அமைப்புச் செயற்குழுவில் ஒப்படைக்க வேண்டும்.

மேலமைப்புகளின் வழிகாட்டுதலின்படி, ஒருங்கிணைக்கப்படும் அரசியல் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் பிற பொதுநிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கான வரவு – செலவு அறிக்கைகளை தொடர்புடைய பொறுப்பாளர்கள் பதினைந்து நாட்களுக்குள் முகாம் செயலாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு சட்டமன்ற பேரவை