நோக்கம்

பொதுப்பேரவை, மையப்பேரவை மற்றும் மாநிலப் பொதுக்குழு ஆகியவற்றின் முடிவுகள் அனைத்தையும் நடைமுறைப்படுத்தவும், அவ்வப்போது மாநில அளவில் எழும் அரசியல் சூழ்நிலைகளுக்கேற்ப முடிவுகளை மேற்கொள்ளவும், இயக்கத்தை வழிநடத்தவும், அதிகாரம் கொண்ட குழுவே மாநிலச் செயற்குழுவாகும்.

இச்செயற்குழு நான்கு திங்களுக்கொருமுறை மாநில அமைப்புச் செயலாளரின் தலைமையில் கூடும். தேவையையொட்டி, பொதுச் செயலாளர் அனுமதியோடு மாநில அமைப்புச் செயலாளரோ அல்லது மாநில செயற்குழு உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கையெழுத்திட்டுக் கேட்டுக் கொள்வதன் அடிப்படையிலோ இடைப்பட்டக் காலங்களில் சிறப்பு மாநிலச் செயற்குழு கூட்டப்படும்.

மாநிலச் செயற்குழுவில் இடம்பெரும் உறுப்பினர்கள்

மாநில அமைப்புச் செயலாளர்.

மாநிலச் செயலாளர்கள்.

மாநில பொருளாளர்.

மாநில துணைச் செயலாளர்கள்.

மாநிலச் செய்தித் தொடர்பாளர்.

அணிகள், பிறதுணைநிலை அமைப்புகளின் மாநிலச் செயலாளர்கள்

சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

மாவட்ட அமைப்புச் செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள்

பொதுச் செயலாளரின் ஒப்புதலோடு மாநில அமைப்புச் செயலாளரால் அனுமதிக்கப்படும் சிறப்பு அழைப்பாளர்கள்.

மாநிலச் செயற்குழுவின் பணிகள்

பொதுப்பேரவை, மையப்பேரவை மற்றும் மாநிலப் பொதுக்குழுவில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளையும் மாநிலச் செயற்குழு நடைமுறைப்படுத்தும்.

இயக்கத்தின் மாநில அளவிலான செயலறிக்கைகள், இயக்கத் தொடர்பான பிற அறிக்கைகள் மற்றும் செயல் திட்டங்கள் முதலியவற்றை திறனாய்வுக்கும், கலந்தாய்வுக்கும் ஒவ்வொரு மாநிலப் பொதுக்குழுவிலும், மாநில செயற்குழு முன்வைக்கும்.

அரசியல் சூழல்கள் மற்றும் இயக்கத் தொடர்பானச் சிக்கல்கள் குறித்து அவ்வப்போது கலந்தாய்வுகள் செய்யவும், முடிவுகள் எடுக்கவும், அம்முடிவுகளினடிப்படையில் இயக்கத்தை வழிநடத்தவுமானப் பணிகளை மாநிலச் செயற்குழு செய்யும்.

மாநிலச் செயற்குழுவின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினரின் ஒப்புதலோடு, இயக்கத்திற்கு எதிரான வகையில் சட்ட விதிமுறைகள் மீறும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மீது மாநிலச் செயற்குழு ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கும். அத்துடன், மாவட்ட அளவில் எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கைகளின் மேல்முறையீட்டுக் குழுவாகவும் மாநிலச் செயற்குழு செயல்படும்.

மாநிலச் செயற்குழுவின் ஒழுங்கு நடவடிக்கையினாலோ அல்லது வேறு காரணங்களாலோ காலியாகும் இடங்களுக்கு உரிய உறுப்பினர்களை மாநிலச் செயற்குழுத் தெரிவு செய்யும்.

வழக்கமான மாநிலச் செயற்குழு கூடும் ஒவ்வொரு முறையும், மாநிலப் பொருளாளர் முன்வைக்கும் வரவு, செலவு அறிக்கைகளை மாநிலச் செயற்குழு ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கும்.

இயக்கத்தின் மாநில அளவிலான அரசியல் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் ஆகியவற்றுக்கான செயல் திட்டங்களை மாநிலச் செயற்குழு வரையறுக்கும்.

விதிகள்

மாநிலச் செயற்குழுவின் விதி 1

மாநிலச் செயற்குழுவை நடத்துவதற்கு, செயற்குழுவின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பங்கேற்க வேண்டும். இவ்வெண்ணிக்கைக்குக் குறைவாக இருப்பின், முகாமையான முடிவுகள் மற்றும் தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது.

மாநிலச் செயற்குழுவின் விதி 2

வழக்கமாகக் கூட்டப்படும் மாநிலச் செயற்குழுவின் கூட்டத்திற்கான அறிவிப்பைப் பத்து நாட்களுக்கு முன்னதாகவும், இன்றியமையாதச் சூழல்களில் கூட்டப்படும் மாநிலச் செயற்குழுவின் கூட்டத்திற்கான அறிவிப்பை ஐந்து நாட்களுக்கு முன்னதாகவும் மாநிலச் செயற்குழு உறுப்பினர்களுக்கு மாநில அமைப்புச் செயலாளர் தெரியப்படுத்த வேண்டும்.

மாநிலச் செயற்குழுவின் விதி 3

தவிர்க்கமுடியாதக் காரணங்களால் மாநிலச் செயற்குழுக் கூட்டங்களில் கலந்து கொள்ள இயலாதவர்கள் அதற்கானத் தகவலை மாநிலச் செயற்குழுக் கூட்டத்திற்கு முன்னதாகவோ அல்லது கூட்டத்தின் போதோ மாநில அமைப்புச் செயலாளருக்குத் தெரிவிக்க வேண்டும். அல்லது கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாமைக்கான விளக்கத்தை மாநிலச் செயற்குழுக்கூட்டம் நடைபெற்ற ஏழு நாட்களுக்குள் மாநில அமைப்புச் செயலாளரிடம் எழுத்தில் வழங்க வேண்டும்.

மாநிலச் செயற்குழுவின் விதி 4

மாநிலச் செயற்குழுக் கூட்டத்திற்குக் குறித்த நேரத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாவர்

மாநிலச் செயற்குழுக்கூட்டத்தில் தொடர்ந்து மூன்று முறை பங்கேற்காதவர்கள் மாநிலச் செயற்குழு உறுப்பினர் தகுதியைத் தானாகவே இழந்து விடுவர். அத்துடன் அவர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கான நடைமுறைகளுக்கும் ஆளாவர்.

மாநிலச் செயற்குழுவின் நடவடிக்கைகள் அனைத்தும் முறையாக ‘நிகழ்க் குறிப்பேட்டில்’ பதிவு செய்யப்பட வேண்டும். ‘வருகைப் பதிவேட்டையும்’ உறுப்பினர்கள் ஒப்படைக்கும் செயலறிக்கைகளுக்கான கோப்புகளையும் மாநிலச் செயற்குழுக் கையாள வேண்டும்.

மாநிலச் செயற்குழுவின் விதி 5

மாநிலச் செயற்குழு கூடும் ஒவ்வொரு முறையும், அதற்கு முன்னதாக நடைபெற்ற மாநிலச் செயற்குழுவின் நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள் குறித்துச்சுருக்க அறிக்கையினை மாநில அமைப்புச் செயலாளர் செயற்குழுவின் மீள்பார்வைக்கு முன்வைக்க வேண்டும்.

மாநில அமைப்புச் செயலாளர் உட்பட மாநிலச் செயற்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும், வழக்கமாகக் கூட்டப்படும் ஒவ்வொரு மாநிலச் செயற்குழுவிலும், இரண்டு மாநிலச் யெற்குழுவின் கூட்டங்களுக்கு இடைப்பட்டக் காலத்திற்குரியச் செயலறிக்கைகளையும், வரவு – செலவு அறிக்கைகளையும் மாநிலச் செயற்குழுவில் ஒப்படைக்க வேண்டும் தவறினால், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாவர்.

மாவட்ட அளவில் நடைபெறும் நிகழ்ச்சிகள் தொடர்பான புகைப்படங்கள், துண்டறிக்கைகள், ஒட்டிகள், ஒலி-ஒளி நாடாக்கள், செய்தி நறுக்குகள் மற்றும் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் மாவட்ட அமைப்புச் செயலாளர்கள் மாநிலச் செயற்குழுவில் ஒப்படைக்க வேண்டும்.

மாநிலச் செயற்குழுவின் வழிகாட்டுதலின்படி, ஒருங்கிணைக்கப்படும் மாநாடுகள், கருத்தரங்குகள், பேரணிகள், போராட்டங்கள் மற்றும் பிற பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கான வரவு – செலவு அறிக்கைகளை தொடர்புடைய பொறுப்பாளர்கள் பதினைந்து நாட்களுக்குள் பொதுச் செயலாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.

மாநிலப் பொதுக்குழு, மாநிலச் செயற்குழு மற்றும் சிறப்பு அமர்வுக்கான வரவு – செலவு அறிக்கைகளை அதற்கடுத்துக் கூடுகிற மாநிலச் செயற்குழுவில் பொருளாளர் ஒப்படைக்க வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக்குழு