நோக்கம்

இயக்கத்தின் அரசியல் கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்கள், இயக்கத்தின் சட்டம் மற்றும் விதிமுறைகள், பொதுப் பேரவையின் முடிவுகள் உள்ளிட்ட அனைத்தையும் நடைமுறைப்படுத்தவும், அவ்வப்போது எழும் அரசியல் சூழ்நிலைகளுக்கேற்ப முடிவுகள் எடுக்கவும், இயக்கத்தை வழிநடத்தவும், முழுமையான அதிகாரம் கொண்டப்பேரவையே மையப் பேரவையாகும்.

இப்பேரவை ஆறு திங்களுக்கொருமுறை பொதுச் செயலாளரின் தலைமையில் கூடும். தேவையையொட்டி, பொதுச் செயலாளரோ அல்லது மையப்பேரவையின் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கையெழுத்திட்டு கேட்டுக் கொள்வதன் அடிப்படையிலோ இடைப்பட்டக் காலங்களில் கூட்டப்படும்

பிரிவு 1

மையப்பேரவையில் இடம்பெறும் உறுப்பினர்கள்

பொதுச் செயலாளர் 1

துணைப் பொதுச் செயலாளர்கள் (2+1) 3

பொருளாளர் 1

அரசியல் தலைமைக்குழுச் செயலாளர், துணைச் செயலாளர் 2

மாநில அமைப்புச் செயலாளர்கள் 9

தலைமை நிலையச் செயலாளர்கள் 2

கருத்தியல் பரப்புச் செயலாளர் 1

தேர்தல் பணிக்குழு செயலாளர் 1

செய்தித் தொடர்பாளர் 1

அணிகள், மையங்கள், பிறதுணைநிலை அமைப்புகளின் மாநிலச் செயலாளர்கள் 17

பிற மாநில நிதிச் செயலாளர்கள் 5

சட்டமன்ற, நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் 5

மாவட்ட அமைப்புச் செயலாளர்கள் 32

பொதுச்செயலாளரால் நிரூபிக்கப்படும் உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் (5+15) 20

பிரிவு 2

மையப்பேரவையின் பணிகள்

அரசியல் தலைமைக்குழு, பொதுச் செயலாளர் உள்ளிட்ட ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் தலைமைக்குழு மையப் பேரவையால் அமைக்கப்டும். அவ்வுறுப்பினர்களில், அரசியல் தலைமைக்குழுச் செயலாளர் மற்றும் துணைச் செயலாளர் ஆகியோர் மையப் பேரவையிலிருந்தும், அரசியல் தலைமைக்குழுவிற்கான மற்ற ஆறு உறுப்பினர்கள் மையப்பேரவையின் வழிகாட்டுதலின்படியும் பொதுச் செயலாளரால் நியமிக்கப்படுவர்.

இயக்கத்தின் அரசியலறிக்கைகள், செயலறிக்கைகள், இயக்கத்தொடர்பான பிற அறிக்கைகள், செயல்திட்டங்கள் முதலியவற்றை திறனாய்வுக்கும், கலந்தாய்வுக்கும் ஒவ்வொரு பொதுப்பேரவையிலும் மையப் பேரவை முன் வைக்கும்.

அரசியல் சூழல்கள் மற்றும் இயக்கத் தொடர்பானச் சிக்கல்கள் குறித்து அவ்வப்போது கலந்தாய்வுகள் செய்யவும், முடிவுகள் எடுக்கவும், அம்முடிவுகளினடிப்படையில் இயக்கத்தை வழி நடத்தவுமானப் பணிகளை மையப்பேரவைச் செய்யும்.

ஒழுங்கு நடவடிக்கைக்குழு, தணிக்கைக்குழு, தேர்தல் பணிக்குழு மற்றும் தேவையினடிப்படையிலான இடைக்காலக் குழுக்கள் ஆகியவற்றை, மையப் பேரவையின் உறுப்பினர்களிலிருந்தே மையப் பேரவை அமைக்கும்.

மையப் பேரவையின் மொத்த உறுப்பினிர்களில் மூன்றில் இரண்டு பங்கினரின் ஒப்புதலோடு, இயக்கத்திற்கு எதிரான வகையில் சட்ட விதிமுறைகளை மீறும் மையப் பேரவையின் உறுப்பினர்கள் மீது மையப்பேரவை ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கும். அத்துடன், ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிற்கு மேல் சீராய்வுக்கான மேல் முறையீட்டுக் குழுவாகவும் மையப் பேரவை இயங்கும்.

மையப்பேரவையின் ஒழுங்கு நடவடிக்கையினாலோ அல்லது வேறு காரணங்களாலோ காலியாகும் இடங்களுக்கு உரிய உறுப்பினர்களை மையப்பேரவைத் தெரிவு செய்யவும்.

ஆண்டுக்கொருமுறை தணிக்கைக்குழு முன்வைக்கும் வரவு, செலவு அறிக்கைகளை மையப்பேரவை ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கும்

இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல உறுதுணையாக அமையும் வகையில் இயக்கக் கருத்தியலைப் பரப்பவும், இயக்கத்தின் போராட்ட நடவடிக்கைகளைப் பதிவு செய்யவும், இயக்கத்தின் ஆவணங்களாக நாளேடுகள், பருவ ஏடுகள், வெளியீடுகள் மற்றும் மின்னணு ஊடகங்கள் ஆகியவற்றை நிறுவிட, மையப்பேரவை பொதுச் செயலாளருக்கு ஒப்புதல் வழங்கும்.

இயக்கத்தின் அரசியல் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குள் ஆகியவற்றுக்கான செயல் திட்டங்களை மையப்பேரவை வரையறுக்கும்.

பிரிவு 3

அறக்கட்டளை

இயக்கத்தின் சொத்துக்களைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் இயக்கத்திற்கென அறக்கட்டளையை நிறுவ மையப்பேரவை ஒப்புதல் வழங்கும். பொறுப்பினடிப்படையில் இயக்கத்தின் பொதுச் செயலாளர், அறக்கட்டளையின் நிலையானத் தலைவராகவும், பொருளாளர் அறக்கட்டளையின் நிலையான உறுப்பினராகவும் இருப்பர்.

அறக்கட்டளையின் தலைவரே, தேவையான மற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை முடிவு செய்வார். அவர்களை நியமனம் செய்யவும், நீக்கவும் தலைவருக்கு அதிகாரம் உண்டு. நியமனம் செய்யப்படும் உறுப்பினர்களின் பொறுப்புக்காலம் மூன்றாண்டுகளாகும்.

விதி 1

மையப்பேரவையின் விதி 1

மையப்பேரவையை நடத்துவதற்கு மையப்பேரவையின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பங்கேற்க வேண்டும்.

இவ்வெண்ணிக்கைக்குக் குறைவாக இருப்பின், பேரவையை நடத்தக்கூடாது.

விதி 2

மையப்பேரவையின் விதி 2

மையப்பேரவையில் தீர்மானங்களை நிறைவேற்றவோ அல்லது வேறு ஏதேனும் முடிவுகளை எடுக்கவோ, மையப்பேரவையின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பங்கேற்க வேண்டும்.

இவ்வெண்ணிக்கைக்குக் குறைவாக இருப்பின், பேரவையில் தீர்மானங்களை நிறைவேற்றவோ, முடிவுகளை எடுக்கவோ கூடாது.

விதி 3

மையப்பேரவையின் விதி 3

பொதுச்செயலாளரோ அல்லது பொதுச்செயலாளரின் வழிகாட்டுதலின் படியோ, வழக்கமாகக் கூட்டப்படும் மையப்பேரவையின் கூட்டத்திற்கான அறிவிப்பைப் பதினைந்து நாட்களுக்கு முன்னதாகவும், இன்றியமையாதச் சூழல்களில் கூட்டப்படும்.

மையப்பேரவையின் கூட்டத்திற்கான அறிவிப்பை இரண்டு நாட்களுக்கு முன்னதாகவும் பேரவை உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

விதி 4

மையப்பேரவையின் விதி 4

தவிர்க்கமுடியாதக் காரணங்களால் மையப்பேரவையில் கலந்து கொள்ள இயலாதவர்கள் அதற்கானத் தகவலைப் பேரவையின் கூட்டத்திற்கு முன்னதாகவோ அல்லது கூட்டத்தின்போதோ பொதுச்செயலாளரிடம் அல்லது தலைமைச் செயலகத்தில் தெரிவிக்க வேண்டும்.

அவ்வாறு தகவல் கொடுக்க இயலாதவர்கள் அதற்கான விளக்கத்தை மையப்பேரவைக் கூட்டம் நடைபெற்ற ஏழு நாட்களுக்குள் எழுத்தில் வழங்க வேண்டும்.

விதி 5

மையப்பேரவையின் விதி 5

மையப்பேரவைக் கூட்டத்தில் தொடர்ந்து மூன்று முறை பங்கேற்காதவர்கள் மையப்பேரவை உறுப்பினர் தகுதியைத் தானாகவே இழந்து விடுவர். அத்துடன் அவர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கான நடைமுறைகளுக்கும் ஆளாக்கப்படுவர்.

மையப்பேரவைக் கூட்டத்திற்குக் குறித்த நேரத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக்கப்படுவர்.

விதி 6

மையப்பேரவையின் விதி 6

மையப்பேரவையின் நடவடிக்கைகள் அனைத்தும் முறையாக ‘நிகழ்க் குறிப்பேட்டில்’ பதிவு செய்யப்பட வேண்டும்.

மையப் பேரவையில் பங்கேற்போர் கையொப்பமிடும் ‘வருகைப் பதிவேட்டையும்’ உறுப்பினர்கள் ஒப்படைக்கும் செயலறிக்கைகளுக்கான ‘கோப்புகளையும்’ மையப்பேரவைக் கையாள வேண்டும்.

விதி 7

மையப்பேரவையின் விதி 7

மையப்பேரவை கூடும் ஒவ்வொரு முறையும், அதற்கு முன்னதாக நடைபெற்ற மையப்பேரவையின் நடவடிக்கைகளையும், முடிவுகளையும் பொதுச் செயலாளர் அறிக்கையாக முன் வைக்க வேண்டும்.

பொதுச் செயலாளர் உட்பட மையப்பேரவையின் உறுப்பினர்கள் அனைவரும், வழக்கமாகக் கூட்டப்படும் ஒவ்வொரு மையப்பேரவையிலும், இரண்டு மையப்பேரவைக் கூட்டங்களுக்கு இடைப்பட்டக் காலத்திற்குரிய முறையான செயலறிக்கைகளையும், வரவு-செலவு அறிக்கைகளையும் மையப்பேரவையில் ஒப்படைக்க வேண்டும். தவறினால், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக்கப்படுவர்.

மையப்பேரவையின் வழிகாட்டுதலின்படி, மாநில அளவில் ஒருங்கிணைக்கப்படும் மாநாடுகள், கருத்தரங்குகள், பேரணிகள், போராட்டங்கள் மற்றும் பிற பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கான வரவு – செலவு அறிக்கைகளை தொடர்புடைய பொறுப்பாளர்கள் மையப்பேரவையில் ஒப்படைக்க வேண்டும்.

இயக்கத்தின் மையப்பேரவை, பொதுப்பேரவை, சிறப்பு அமர்வுகள் ஆகியவற்றுக்கான வரவு – செலவு அறிக்கைகளை அதற்கடுத்துக் கூடுகிற மையப்பேரவையில் பொருளாளர் ஒப்படைக்க வேண்டும்

ஆதாரம் : தமிழ்நாடு சட்டமன்ற பேரவை