தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம், படிகள், ஏனைய வசதிகள் மற்றும் இயற்கை எய்திய உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பெறும் நிதியுதவி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை முன்னாள் உறுப்பினர்களுக்கு வழங்கப்பெறும் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் ஏனைய வசதிகள் குறித்த விவரங்கள் 06-08-2025 அன்றுள்ளவாறு இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளன. 1. உறுப்பினர்கள் சம்பளம் : மாதமொன்றுக்கு ரூ.30,000/- ஏனைய படிகள் மாதமொன்றுக்கு ஈட்டுப்படி ரூ.10,000/- தொலைபேசிப் படி ரூ.7500/- தொகுதி படி ரூ.25,000/- அஞ்சல் படி ரூ.2,500/- தொகுப்புப் படி ரூ.5,000/- வாகனப் படி ரூ.25,000/- மொத்தம் ரூ.1,05,000/- தினப்படி சட்டமன்றப் பேரவை கூட்டத் தொடரில் கலந்து கொண்ட நாட்களுக்கும், சட்டமன்றப் பேரவைக் கூட்டம் தொடர்ந்து நடைபெறும்போது இரண்டு நாட்கள் முன்னருக்கும், ஒரு நாள் பின்னருக்கும் மற்றும் சட்டமன்றப்பேரவை குழு கூட்டம் நடைபெறும் போது ஒரு நாள் முன்னரும், பின்னரும் நாளொன்றுக்கு ரூ.500/- தினப்படி வழங்கப்படும். பயணப்படி இரயில் வழியாக இரயிலில் குளிர் பதன வசதி செய்யப்பட்ட இரண்டடுக்கு படுக்கை வசதி கொண்ட) பெட்டியில் சென்று வருவதற்கான இரயில் கட்டணத்துடன் கிலோ மீட்டர் ஒன்றுக்குப் பின்னக் கட்டணம் 10 காசுகள். சாலை வழியாக பேருந்து வழித்தடம் உள்ள வழிகள் மூலமாக பயணம் செய்ய கிலோ மீட்டர் ஒன்றுக்கு 25 காசுகளும், பேருந்து வழித்தடமில்லாத ஏனைய வழியில் பயணம் செய்ய கிலோ மீட்டர் ஒன்றுக்கு 50 காசுகளும் வழங்கப்படும். பயணச் சலுகைகள் பேருந்து பயணச் சலுகை: ஒவ்வொரு உறுப்பினருக்கும், உறுப்பினர் அடையாள அட்டை பேரவைச் செயலகத்தால் வழங்கப்பெறுகிறது. உறுப்பினர்கள், இந்த அடையாள அட்டையுடன் மாநில அரசுக்குச் சொந்தமான போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும், எந்தவொரு பேருந்து மூலமாக தமிழ்நாடு மாநிலத்தில் எந்தவொரு பகுதியிலும், எந்த நேரத்திலும் தனியாகவோ அல்லது அவருடைய கணவன்/மனைவியுடனோ அல்லது ஏதேனுமொரு பிற துணையுடன் பயணம் செய்யலாம். இந்தியாவின் எந்தவொரு இரயிலிலும், எந்தவொரு வகுப்பிலும், தனியாகவோ அல்லது அவருடைய கணவன் / மனைவியுடனோ அல்லது வேறு ஒரு உறவினருடனோ ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பயணங்கள் செய்வதற்காக, ஒவ்வொரு நிதியாண்டிலும், இரண்டு சம தவணைகளில் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் வழங்கத்தக்க வகையில் இரயிலில் பயணம் செய்வதற்கான படியாக ரூ.20,000/- வழங்கப்படுகிறது. சட்டமன்றப் பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு உறுப்பினரும் அவருடைய கணவன்/மனைவியுடன் அவர் வசிக்குமிடத்திலிருந்து சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் இடத்திற்கு வந்து மீண்டும் அவர் இருப்பிடம் திரும்பிச் செல்வதற்கு குளிர் சாதன அமைப்புடைய இரண்டடுக்கு படுக்கை வசதி கொண்ட இரயிலில் பயணம் செய்வதற்கான கட்டணத்தை ஒருமுறை பெறத் தகுதியுடையவராவார். தங்குமிட வசதிகள் ஒவ்வொரு உறுப்பினரும் மாதமொன்றுக்கு ரூ.250/- வாடகை செலுத்துவதன் பேரில் சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒதுக்கீடு பெற தகுதியுடையவராவார். தொலைபேசி வசதிகள் (i) அடுக்குமாடிக் குடியிருப்பு : உறுப்பினர்களின் விருப்பத்திற்கேற்ப சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களின் அடுக்குமாடி குடியிருப்புகளில் நேரடி தொலைபேசி வசதி அமைக்கப்படுகிறது. மேற்சொன்ன தொலைபேசியை நிறுவுவதற்கான கட்டணம் (Installation Charges) மற்றும் இரு மாதத்திற்கான வாடகையை அரசே செலுத்துகிறது. ஏனைய கட்டணங்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட உறுப்பினரே செலுத்த வேண்டும். (ii) இருப்பிடத் தொலைபேசி: ஒவ்வொரு உறுப்பினரும் தன்னுடைய இருப்பிடத்திற்கு தொலைபேசி இணைப்பு பெறத்தகுதியுடையவர். இதனை நிறுவுவதற்கான செலவை இச்செயலகமே ஏற்றுக் கொள்ளும். தொலைபேசியை நிறுவுவதற்கான வைப்புத் தொகையை செலுத்துவது தொடர்பாக உறுப்பினர், வட்டியில்லாமல் வசூலிக்கத்தக்க முன்பணத்தை இச்செயலகத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். மருத்துவ வசதிகள் ஒவ்வொரு உறுப்பினரும், அவருடைய குடும்ப உறுப்பினர்களும் மாநில அரசு பராமரிக்கும் மருத்துவமனைகளில் கட்டணமின்றி தங்கும் இடவசதியைப் பெறவும், மருத்துவச் சிகிச்சைப் பெறவும் தகுதியுடையவராவர். அவர்களுடைய மருத்துவச் சிகிச்சை தொடர்பாக வெளி அங்காடியில் வாங்கும் மருந்துகளுக்காகும் செலவுத் தொகை திருப்பிக் கொடுக்கப்படுகிறது. முக்கியமான அறுவை சிகிச்சைகளுக்கு நிதியுதவி மத்திய அரசு ஏதேனும், மாநில அரசு அல்லது மத்திய அரசின் நேரடி ஆட்சிப் பகுதியின் ஏதேனும் நிருவாகத்தினர் பராமரித்து வருகின்ற ஏதேனும் மருத்துவமனையில் அல்லது இந்திய அரசின் ஆட்சிப் பகுதியில் அமைந்துள்ள ஏதேனும் தனியார் மருத்துவமனையில், மாநில அரசுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவிப்பதன் பேரில் இருதயம், சிறுநீரகம் அல்லது உடம்பின் வேறு ஏதேனும் பாகம் தொடர்பாக, முக்கியமானதொரு அறுவைச் சிகிச்சை என மாநில அரசு கருதுகின்ற அறுவைச் சிகிச்சையை மேற்கொள்கிற சட்டமன்றப்பேரவையின் ஒவ்வொரு உறுப்பினரும், வரையறுக்கப்படுகின்ற அத்தகைய நிபந்தனைகளுக்குட்பட்டு, நிதியுதவி பெறுவதற்கு உரிமையுடையவராவர். ஏனைய வசதிகள் நூலகம்: சட்டமன்ற நூலகம், அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. அதன் சேவைகள் எல்லா உறுப்பினர்களுக்கும் கிடைக்கப்பெறுகின்றன. எழுது பொருட்கள் வழங்கல்: ஒவ்வோராண்டும், ஒவ்வொரு உறுப்பினருக்கும் ‘உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை’ என்ற வாசகத்தோடு மாநில அரசுச் சின்னம் பொறிக்கப்பட்ட பின்வரும் எழுது பொருட்கள் வழங்கப்படுகின்றன:- சிறிய கடிதத் தாள்கள் 3,500 பெரிய கடிதத் தாள்கள் 1,500 உறைகள் (நீள் சதுர அளவில்) 750 உறைகள் (சிறிய அளவில்) 1,500 சட்டமன்றப் பேரவை உறுப்பினர் நாட்குறிப்பேடு ஒன்று மற்றும் சுவரில் மாட்டக்கூடிய நாட்காட்டி இரண்டு. செயலக உதவி: உறுப்பினர்களுக்குத் தேவைப்படும் தட்டச்சுத் தேவையை நிறைவு செய்வதற்காக, சட்டமன்றப் பேரவைக் கூட்டம் நடைபெறும் போது மட்டும் கூடுதலாக ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சர்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர். இரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி : தென்னக இரயில்வேயுடன் இணைந்து உறுப்பினர்களின் வசதிக்காக, குடியிருப்பு வளாகத்தில் இரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு மையம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. பேருந்து போக்குவரத்து வசதிகள்: சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறும் காலத்தில் உறுப்பினர்களின் பயனுக்காக சென்னை சென்ட்ரல் / எழும்பூரிலிருந்து அரசினர் தோட்டத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களின் குடியிருப்பு வளாகம், சென்னை-2-ற்கும், அங்கிருந்து சட்டமன்றப் பேரவைச் செயலகம், சென்னை-9-க்கு இடையிலும் சிறப்பு பேருந்துகளை இயக்க சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்துடன் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. உணவக வசதிகள் : உறுப்பினர்களின் பயன்பாட்டிற்காக, சட்டமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பு வளாகம், உபவசதிக் கட்டிடத்தில் தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணியாளர்கள் கூட்டுறவு சங்க உணவகக் கிளை (சைவம்) ஒன்று இயங்கி வருகின்றது. மேலும், உபவசதிக் கட்டிடத்தின் பின்புறம் சில்லறை விற்பனைக் கடை தேநீர் மற்றும் குளிர்பானக் கடை, பேப்பர் கடை ஆகியன இயங்கி வருகின்றன. வங்கி வசதி : உறுப்பினர்களின் வசதிக்காக, குடியிருப்பு வளாகத்தில் தானியங்கி பணம் வழங்கும் இயந்திர (ATM) வசதியுடன் கூடிய இந்தியன் வங்கிக் கிளை ஒன்று செயல்பட்டு வருகின்றது. மருத்துவமனை வசதி: உறுப்பினர்களின் பயன்பாட்டிற்காக, அரசு பொது மருத்துவமனையுடன் இணைக்கப்பட்ட 24 மணிநேர மருந்தகம் ஒன்று குடியிருப்பு வளாகத்தில் அனைத்து நாட்களிலும் செயல்படுகின்றது. உடற்பயிற்சிக் கூட வசதிகள்: உடற்பயிற்சிக்கூட வசதிகள்: ஆண்/பெண் சட்டமன்ற உறுப்பினர்களின் பயன்பாட்டிற்காக அனைத்து வசதிகளுடன் கூடிய குளிர்சாதன வசதி செய்யப்பட்ட உடற்பயிற்சிக் கூடங்கள் இரண்டு தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன. அகத்தொலைபேசி வசதி (Intercom): உறுப்பினர்கள் தங்களது குடியிருப்புகளிலிருந்து விடுதி அலுவலகத்துடனும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அலுவலகத்துடனும் தொடர்பு கொள்ள 3 இலக்க எண் கொண்ட அகத்தொலைபேசி அனைத்து குடியிருப்புகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. தானியங்கி புகார் பதிவு வசதி (IVRS): உறுப்பினர்கள், தங்கள் குடியிருப்புகளில் ஏற்படும் பழுதுகள் மற்றும் பராமரிப்பு தொடர்பாக குரல் மூலம் புகார்களைப் பதிவு செய்வதற்கு ஏதுவாக, 555 என்ற அகத்தொலைபேசி எண்ணும் 044-2533 3701 என்ற தொலைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உறுப்பினர்கள் தங்களது புகார்களை பதிவு செய்துகொள்ளலாம். இப்புகார்கள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் வாயிலாக உடனுக்குடன் சரிசெய்யப்படுகின்றன. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி: சட்டமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பு வளாகத்தின் நான்கு தொகுப்புகளிலும் மேற்தளத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் (R.O. Plant) பொருத்தப்பட்டு, குடியிருப்புகளில் தங்கியுள்ள அனைத்து உறுப்பினர்களும் குழாய் மூலம் குடியிருப்பின் சமையலறைகளில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எல்.இ.டி. தொலைக்காட்சி மற்றும் குளிர்சாதன வசதி: சட்டமன்ற உறுப்பினர்கள் குடியிருப்புகள் அனைத்திலும் 32" எல்.இ.டி. தொலைக்காட்சி பெட்டி மற்றும் 2 டன் திறனுள்ள குளிர்சாதன இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளன. கம்பிவட தொலைக்காட்சி வசதி (Cable TV): அனைத்து குடியிருப்புகளிலும் தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி இணைப்பு செட் டாப் பாக்ஸ் உடன் வழங்கப்பட்டுள்ளன. இவ்விணைப்புகளுக்கான மாதச்சந்தா தொகை இச்செயலகத்தால் செலுத்தப்பட்டு வருகிறது. யோகா பயிற்சி: சட்டமன்றப் பேரவை கூடும் நாட்களில், குடியிருப்பில் தங்கியுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் குடியிருப்பு வளாகத்தில் உள்ள பூங்காவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் காலை நேரத்தில் யோகா பயிற்சி அளிக்கப்படுகின்றது. சிறுவர் பூங்கா: சட்டமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பு வளாகத்தில் சிறுவர் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. இறகுப்பந்து விளையாட்டுத்திடல்: உறுப்பினர்கள் பயன்பாட்டிற்கென இறகுப்பந்து விளையாட்டுத் திடல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வாகன அனுமதி சீட்டுகள்: அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இரண்டு வாகனங்களுக்கு ஹோலோகிராம் பதிக்கப்பட்ட வாகன அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன. இலவச நாளிதழ்கள்: சட்டமன்றப் பேரவை கூடும் நாட்களில் சென்னையிலுள்ள சட்டமன்றப் பேரவை உறுப்பினர்கள் குடியிருப்புகளில், உறுப்பினர்கள் விரும்பும் இரண்டு நாளிதழ்கள் வழங்கப்படுகின்றன. சுழல் கைத்துப்பாக்கி வாங்குதல்: கான்பூர் சிறு ஆயுத தொழிற்சாலையில் தயாராகும் "0.32 சுழல் கைத்துப்பாக்கி (Revolver) முன்னுரிமை அடிப்படையில் செல்லத்தக்க ஆயுத உரிமங்கள் (Valid Arms Licence) பெற்றுள்ள அனைத்து சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களுக்கும் வழங்கப்படலாம் என்று மத்திய அரசு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் மேற்படி 0.32 சுழல் கைத்துப்பாக்கி வாங்க விரும்புகிற உரிய ஆயுத உரிமம் பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரும் சட்டமன்றப் பேரவைச் செயலகத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். சமையல் எரிவாயு ஒதுக்கீடு சட்டமன்றப் பேரவை உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் சென்னை மாநகரத்தில் ஒன்றும் மற்றும் அவர்கள் தொகுதியில் ஒன்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வழியாக சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படுகின்றன. சட்டமன்றப் பேரவை உறுப்பினர்கள் இச்செயலகத்தின் வழியாக விண்ணப்பம் செய்து சமையல் எரிவாயு இணைப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. கணினி வசதி: சட்டமன்ற உறுப்பினர்களின், தொகுதி அலுவலகங்களில் செயல்படும் இ-சேவை மையங்களில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் All-in-One கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. மரணமடைந்த சட்டமன்றப்பேரவை உறுப்பினர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அவசர கால ஊர்தி வசதி: சட்டமன்றப்பேரவை உறுப்பினர் ஒருவர், அவருடைய தொகுதிக்கு வெளியே ஏதேனுமொரு இடத்தில் எதிர்பாராமல் இயற்கை எய்தும் நேர்வில், இறந்த உறுப்பினரின் உடலை, அவருடைய சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்காக, வாடகை அடிப்படையில் கார் ஒன்றுக்கு ஏற்பாடு செய்து கொடுக்க அல்லது இதற்காக அவருடைய குடும்பத்தினர் மேற்கொண்ட செலவை ஈடுசெய்ய சட்டமன்றப் பேரவைச் செயலகம் ஏற்பாடு செய்யும். குடும்ப ஓய்வூதியம்: ஓய்வூதியம் பெறுவதற்கு உரிமையுடைய சட்டமன்றப் பேரவை/மேலவை உறுப்பினர் இயற்கை எய்தும் நேர்வில், அத்தகைய உறுப்பினரின் குடும்பத்தினர். வரையறுக்கப்படக் கூடிய நிபந்தனைகளுக்குட்பட்டு, அத்தகைய ஓய்வூதியத்தில் 50 சதவீதத்தை பெறுவதற்கு உரிமையுடையவர் ஆவர். அவர்களுக்கு தற்போது குடும்ப ஓய்வூதியமாக மாதம் ரூ.15,000/- வழங்கப்பட்டு வருகிறது. ஒட்டு மொத்தப்படி: பதவிக்காலம் முடிவடைவதற்கு முன், இயற்கை எய்தும் உறுப்பினரின் குடும்பத்திற்கு, ஒட்டுமொத்தப் படியாக ரூ.5,00,000/- வழங்கப்படுகிறது. முன்னாள் சட்டமன்றப்பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் ஓய்வூதியம்: ஒவ்வொரு சட்டமன்றப் பேரவை/மேலவை உறுப்பினருக்கும் மாதம் ஒன்றுக்கு ரூ. 30,000/- ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. மருத்துவ சிகிச்சை: முன்னாள் பேரவைத் தலைவர். முன்னாள் பேரவை துணைத் தலைவர், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் அரசு தலைமைக் கொறடா, முன்னாள் எதிர்கட்சித் தலைவர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் ஆகியோர்களுக்கு தற்போது உள்ள பேரவைத் தலைவர், பேரவைத் துணைத் தலைவர், அமைச்சர்கள், மற்றும் பாராளுமன்ற செயலாளர் ஆகியோருக்கு 1964-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை (மருத்துவ கவனிப்பு மற்றும் சிகிச்சை) விதிகளின்படி வழங்கப்படும் மருத்துவ செலவினங்கள் போன்று வழங்கப்படும். முன்னாள் சட்டமன்றப் பேரவை / மேலவை உறுப்பினர்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மாநில அரசு பராமரிக்கப்படும் மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு உரிமையுடையவர்கள் ஆவர். அதற்கான மருத்துவ அடையாள அட்டை ஒன்று கேட்பு விண்ணப்பத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. முன்னாள் சட்டமன்றப் பேரவை/மேலவை உறுப்பினர்கள், ஒவ்வொரு நிதியாண்டிற்கும் மருத்துவப்படியாக ரூ.1,00,000/- பெறுவதற்கும் உரிமை உடையவர்கள் ஆவர். இலவசப் பேருந்து பயணச்சீட்டு: முன்னாள் சட்டமன்றப் பேரவை மற்றும்சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கு மாற்றத்தகாத இலவசப்பேருந்து பயணச்சீட்டு ஒன்று வழங்கப்படும். அப்பயணச் சீட்டின் மூலம் மாநில அரசுக்குச் சொந்தமான போக்குவரத்துக் கழகம் இயக்குகின்ற அனைத்து பேருந்துகளிலும், தமிழ்நாடு மாநிலத்தின் அனைத்து பகுதிக்குள்ளும், எந்த சமயத்திலும், தனியாக அல்லது அவருடைய வாழ்க்கைத் துணைவருடன் அல்லது வாழ்க்கைத் துணைவியுடன் அல்லது அவருக்கு துணையாக ஒருவருடனோ பயணம் செய்ய உரிமையுடையவராவர். மேலும், ஒரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் படுக்கை வசதி கொண்ட குளிர்பதன பேருந்தில் பயணம் செய்ய நேரிடும் போது அவருடன் சேர்த்து பயணிக்கும் அவரது துணைவர்/துணைவி அல்லது அவருடன் துணையாக செல்பவருக்கு அப்பேருந்தில் பயணம் செய்ய இருக்கை வசதி மட்டுமே வழங்கப்படும். சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் விடுதி: சட்டமன்றப் பேரவை / மேலவை முன்னாள் உறுப்பினர்கள் சென்னை வரும் நேர்வில் தங்கிச் செல்வதற்கு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் விடுதி (Ex-Legislators' Hostel) செயல்பட்டு வருகிறது. அகத்தொலைபேசி, தொலைக்காட்சி, குளிர்ச்சாதன வசதியுடன் கூடிய இவ்விடுதியில் நாளொன்றுக்கு வாடகை ரூ.300/- வீதம் ஒரு மாதத்தில் 5 நாட்களுக்கு மிகாமல் தங்க அனுமதிக்கப்படுகிறது. இவ்வாடகை அவர்களது ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்து கொள்ளப்படுகிறது. குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுதல் சட்டமன்றப் பேரவை/மேலவை முன்னாள் உறுப்பினர்களுக்கு சென்னையில் நடைபெறுகின்ற குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின விழாக்களில் பங்கேற்பதற்காக அவர்கள் தமது சொந்த ஊரிலிருந்து சென்னை வருவதற்கும். சென்னையிலிருந்து மீண்டும் அவர்கள் தமது சொந்த ஊர் திரும்புவதற்கும் குளிரூட்டப்பட்ட இரண்டாம் வகுப்பு (A.C II Tier) இரயில் பெட்டியில் பயணம் செய்வதற்குண்டான கட்டணம் பெறுவதற்கு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்விழாக்களில் கலந்துகொள்ள சென்னை வரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் விழா நடைபெறும் நாள் மற்றும் அதற்கு முந்தைய, பிந்தைய நாட்களில் விடுதியில் (மூன்று நாட்கள் மட்டும்) வாடகையின்றி தங்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆதாரம் : தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம்