சுதந்திரத்திற்கு முந்தைய தேர்தல் முறை

தமிழ்நாட்டில் ஊராட்சிகளில் பரிணாம வளர்ச்சி குறித்த ஒரு வரலாற்றுச் சுருக்கம்:

தற்போதைய கிராம ஊராட்சிகளுக்கு முன்னோடிகளாக தமிழ்நாட்டில் விளங்கிய கிராம மன்றங்கள், பண்டைய காலத்தில் தோன்றியவை என்பதோடு உள்ளாட்சி அமைப்பிலான உயரிய வகையிலான தன்னாட்சி நிலையுடன் வரிவிதிப்பு உட்பட்ட அதிகாரங்களைக் கொண்டு சிறிய குடியரசுகளைப் போல் இயங்கி வந்தன. செங்கல்பட்டு மாவட்டம், உத்திரமேரூரில் அமைந்துள்ள வைகுண்ட பெருமாள் கோவில் சுவர்களில் காணப்படும் கல்வெட்டு சாசனம் இதற்கு தகுந்த சான்றாக விளங்குகிறது. கிராமங்கள் எவ்வாறு வார்டுகளாக (மண்டலங்கள்) பிரிக்கப்பட்டு "சபை" என்ற அமைப்புகள் மூலம் கிராம நிர்வாகம் செயல்பட்டது என்பதை இக்கல்வெட்டு சாசனம் விளக்குகிறது. ஒவ்வொரு வார்டுக்குமான பிரதிநிதிகள் குடத்தில் ஓலையிட்டு எடுக்கும் முறையில் (குடவோலை முறை) எவ்வாறு தேர்ந்தெருக்கப்பட்டனர் என்பதையும் இது விளக்குகிறது. இந்தியாவில் ஆங்கிலேயரின் வருகை வரை கிராமங்களின் அன்றாட பணிகளிலிருந்து மைய அதிகாரம் வெகுதொலைவில் இருந்தது. ஆங்கிலேய ஆட்சி கிராமங்களில் அதிக அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியது. தொழிற்சாலைகளில், நெய்யப்பட்ட துணிகள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களின் அறிமுகத்தால் கிராமத் தொழில்கள் நலிவடைந்தன.

கிராம கைவினைத் தொழிலாளர்களும் விவசாயத் தொழிலாளர்களும், தங்களது வேலை வாய்ப்பிலிருந்து வெளியேற்றப்பட்டதால் பெரும் எண்ணிக்கையில் வளர்ந்து வந்த நகரங்களுக்கு இடம் பெயர்ந்தனர். இதனைத் தொடர்ந்து கிராம பொருளாதாரம் மிகுந்த பாதிப்புக்குள்ளானது. நிர்வாகமும் ஆங்கிலேயர் ஆட்சியில் அதிக அளவில் மையப்படுத்தப்பட்டது. கிராமப்புறங்களில் நீதிபரிபாலனம் குடிமையியல் மற்றும் குற்றவியல் நீதி மன்றங்களின் வசமானது; கிராமங்களில் அமைதி ஏற்படுத்தும் பணிகளை காவல்துறை எடுத்துக் கொண்டது; நில வருவாய் நிர்வாகம் அரசின் தனி துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. கிராமவாசிகள் தங்களது பணிகளை தாமே நிர்வகித்துக் கொண்ட சுய சார்பு நிலையானது படிப்படியாக மறைந்ததோடு பயனுள்ள ஊரக அமைப்புகளாக விளங்கிய கிராமப் பஞ்சாயத்துகள் முக்கியத்துவத்தை இழந்து தாழ்ந்தன. மக்கள் சாதாரண உள்ளுர் பணிகளுக்குக் கூட மைய அதிகார அமைப்பை எதிர்நோக்கும் சூழல் உருவானது.

நாளடைவில், கூடுதலான மையப்படுத்துதல் பயனற்றது என்பது ஆங்கிலேய நிர்வாகத்தாலும் அறியப்பட்டது. முறையற்ற அரசு அமைப்பில் உள்ள குறைபாடுகளைக் களைய கிராம பஞ்சாயத்துகளே தலை சிறந்த தீர்வாக அமையும் என அவர்கள் உணர்ந்தனர். ’பொது நோக்கங்களை செயல்படுத்துவதில் மக்கள் தாமே முன்வந்து தரும் ஒத்துழைப்பு மிக அவசியம் என்பதையும் உணர்ந்தனர். இந்நோக்கில் புதிய முயற்சிகளை உருவாக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்திய பெருமை ரிப்பன் பிரபுவையே சாரும். உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தில் அலுவல்சாரா அமைப்பினரும் பங்கேற்கும் வகையில் 1882-ஆம் ஆண்டு இவர் இயற்றிய தீர்மானம், மெட்ராஸ் லோக்கல் போர்டு சட்டம் - 1884 இயற்ற வழிவகுத்தது.

இச்சட்டம், சிறிய நகரங்களிலும், பெரிய கிராமங்களிலும் குறிப்பாக சுகாதார மற்றும் மின்வசதிகளை மேற்கொள்ளும் பொருட்டு 'ஒன்றியங்கள் உருவாக்க வகைசெய்தது. அதிகாரப் பரவலுக்கான அரசு மட்டக்குழுவின் வருகைக்குப் பிறகு ஒவ்வொரு ஒன்றியத்திற்குமான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். இவ்வொன்றியங்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், தேர்தல் நெறிமுறைகளை அறிமுகப்படுத்தவும் 'மதராஸ் அரசு முடிவு செய்தது. உள்ளுர் தலைவர்களை அலுவல் ரீதியான தலைவர்களாகக் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற பஞ்சாயத்துகளை மாவட்ட ஆட்சித் தலைவர்களின் கட்டுப்பாட்டின்கீழ் அமைக்கவும் முடிவு செய்தனர். சுமார் 1000 அதிகாரப்பூர்வமற்ற பஞ்சாயத்துகள் அமைக்கப்பட்டாலும் சட்டப்பூர்வ அடிப்படையில்லாததால் அவற்றின் நிலை வலுவிழந்தும் திருப்தியின்றியும் இருந்தது. மேலும், அவை மாவட்ட மற்றும் வட்ட போர்டுகளுடன் எவ்வித தொடர்புமின்றி இருந்தன. அதிகார பகிர்ந்தளிப்பிற்கான அரசுமட்டக்குழு சட்டப்பூர்வமான நிலையை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதால் அதற்கேற்ப 1920-ஆம் ஆண்டு 'மதராஸ் கிராம பஞ்சாயத்துக்கள் சட்டம் ஏற்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்தது. இச்சட்டம், 25 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்குரிமை அளித்ததோடு பஞ்சாயத்துகளின் அனைத்து உறுப்பினர் தேர்தலுக்கும் வழிவகுத்தது.

1930-ஆம் ஆண்டுவாக்கில் பஞ்சாயத்துகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு, மெட்ராஸ் லோக்கல் போர்டு சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட 'ஒன்றியங்களுக்கு நிகரான நிலையில் பஞ்சாயத்துகள் வைக்கப்பட்டதோடு கூடுதல் அதிகாரங்களும் வழங்கப்பட்டன. பின்னாளில் இவற்றை மேற்பார்வையிடுதல் மற்றும் கட்டுப்படுத்தும் அதிகாரம் லோக்கல் போர்டு சட்டத்தின்படி ஆய்வாளர் மற்றும் நகராட்சித் தலைவருக்கு வழங்கப்பட்டது.

சுதந்திரத்திற்கு பிந்தைய தேர்தல் முறை

மதராஸ் கிராம ஊராட்சிகள் சட்டம் 1950 நிறைவேற்றப்பட்டது சுதந்திரத்திற்கு பிந்தைய கால தொடக்கத்தில் காணப்பட்ட குறிப்பிடத்தக்க நிலையாகும். இந்த சட்டம் அரசியலமைப்பின் 40-வது பிரிவை செயல்படுத்தும் வகையில் இயற்றப்பட்டதாகும்.

சுதந்திர இயக்கத்தினுாடேயே தேசத்தந்தை மகாத்மாகாந்தி அவர்கள் கிராம மக்கள் "சுயராஜ்யத்தின் உண்மையான தன்மையைப் பெறும் வகையில் பஞ்சாயத்துராஜ் அமைப்புகள் போதிய அதிகாரங்களுடன் உயிர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வந்தார். காந்திஜியின் இந்த வலியுறுத்தலால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 40-வது பிரிவு (கிராம ஊராட்சிகளின் அமைப்பு) அறிமுகப்படுத்தப் பட்டது.

அது கீழ்க்கண்டவாறு படிக்கப்படுகிறது:-

"தன்னாட்சியின் அங்கங்களாக செயல்படும் வகையில் உரிய அதிகாரங்களோடு அமைப்பையும் கொண்ட கிராம பஞ்சாயத்துகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்"

500 மற்றும் அதற்கு மேல் மக்கள் தொகை கொண்ட ஒவ்வொரு கிராமம் அல்லது குக்கிராமத்தில் கிராம பஞ்சாயத்துகளை அமைக்க மதராஸ் கிராம பஞ்சாயத்துகள் சட்டம் - 1950-ல் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கட்டாய அடிப்படை தேவை சார்ந்த சில பணிகளும் பல விருப்புரிமைப் பணிகளும் கிராம பஞ்சாயத்துகளிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால், எல்லா கிராமங்களும் இப்பஞ்சாயத்துகளில் அடங்கவில்லை.

இதனைத் தொடர்ந்து, நாடு தழுவியதொரு சமுக வளர்ச்சித் திட்டம் தொடங்கப்பட்டபோது உள்ளுர் சமுதாயங்களை வளர்ச்சிப் பாதையில் ஈடுபடுத்தும் வகையில் ஒரு திறமிகு அமைப்பு சார்ந்த நடைமுறையின் தேவை உணரப்பட்டது. 50-களின் பிந்தைய காலத்தில் ஏற்படுத்தப்பட்ட சமூக வளர்ச்சித் திட்டம் மற்றும் பஞ்சாயத்து ராஜ்கான ஆய்வுக்குழு (பல்வந்த்ராய் மேத்தா கமிட்டி என அனைவராலும் அறியப்பட்டது) மூன்றடுக்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்பை நிறுவ பரிந்துரை செய்தது. மத்திய அடுக்கான பஞ்சாயத் சமிதி (தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஊராட்சி ஒன்றியம்) அதிகாரப் பரவலின் ஒரு முக்கிய நிலையாக அமைந்தது. ஊராட்சி ஒன்றியத்தின் அதிகார எல்லையானது சமூக வளர்ச்சி வட்டாரத்தின் எல்லையை ஒத்ததாக இருந்தது. மாவட்ட அளவில் இன்றியமையாத ஒரு ஆலோசனை அமைப்பாக ஜில்லா பரிஷத் விளங்கியது. கிராம ஊராட்சியானது மூன்றடுக்கு அமைப்பில் அடிமட்ட நிலையில் அமையும்.

பல்வந்த்ராம் மேத்தா குழுவின் அறிக்கையினைத் தொடர்ந்து உடனடியாக தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1958 இயற்றப்பட்டது. இச்சட்டம், தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கிராம ஊராட்சிகள் அமைய வழிவகுத்தது. சுமார் 12,600 கிராம ஊராட்சிகள் தோற்றுவிக்கப்பட்டன. நகரச் சாயலைக் கொண்ட கிராமங்கள் பேருராட்சிகளாக வகைப்படுத்தப்பட்டன. ஒர் ஊராட்சி ஒன்றியத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு சமுதாய வளர்ச்சி வட்டாரத்தில் உள்ளடங்கிய அனைத்து கிராம ஊராட்சிகளும் பேருராட்சிகளும் இணைக்கப்பட்டு தொடக்கமாக 385 ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டன.

தமிழ்நாட்டில் மாவட்ட அளவில் மூன்றாவது அடுக்கு கொண்டு வரப்படவில்லை. மாறாக, தமிழ்நாடு மாவட்ட வளர்ச்சிக் குழுக்கள் சட்டம் 1958-ன்கீழ் ஒவ்வொரு வளர்ச்சி மாவட்டத்திலும் ஒரு மாவட்ட வளர்ச்சிக் குழு ஏற்படுத்தப்பட்டது. வளர்ச்சி நிர்வாகத்திற்கென பெரிய வருவாய் மாவட்டங்கள் இரண்டு வளர்ச்சி மாவட்டங்களாக உருவாக்கப்பட்டன. இந்த மாவட்ட வளர்ச்சிக் குழுக்கள் மாவட்டத்தின் சட்டபூர்வ மற்றும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்து அறிவுரை வழங்கவேண்டும். அதன் பின் முன்பிருந்த மாவட்ட மன்றங்கள் செயல்படவில்லை.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 73-வது திருத்தத்தினைத் தொடர்ந்து இயற்றப்பட்ட தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994-ன்கீழ் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி என்ற மூன்றடுக்கு பஞ்சாயத்து ராஜ் முறையை நிர்ணயித்துள்ளது.

ஆதாரம் : தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்