வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கான தகுதிகளும், கல்வெட்டுகளும்

நம் பாரத தேசத்தில் தேர்தல்கள் என்றாலே அது ஜனநாயக முறையில்தான் என்பது அந்தக் காலத்தில் இருந்தே பின்பற்றப்பட்டு வரும் வழிமுறை. அத்தகைய தேர்தல்களுக்கு நம் தமிழகம் முன்னோடியாகத் திகழ்ந்திருக்கிறது என்பது ஆச்சரியமான ஒன்று.

நம் தமிழகத்துக்கு, அதாவது ஒரு மாநிலத்துக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயரிட்டவர் முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரை. அவர் வாழ்ந்த காஞ்சிபுரம் அருகே நமக்குக் கிடைத்த கல்வெட்டு, அந்தக் காலத்தில் தேர்தல் நடைமுறைகள் குறித்து என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

உத்திரமேரூர் குடவோலை முறைக் கல்வெட்டுகள்

காஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ள உத்திரமேரூரில் இரண்டு கல்வெட்டுகள் கிடைத்தன.

ஊர் பெருமக்கள் சபை இயங்கி வந்தது...

இச்சபை உழவு, கல்வி, மராமத்து வேலை, கோயில் பணி, வாணிபம் முதலானவற்றை நிர்வகித்தது...

சபை பல வாரியங்களாகச் செயல்பட்டது...

குடவோலை முறையில் அங்கத்தினர் தேர்வு செய்யப்பட்டது...

- எனச் சிறப்பாக இயங்கிய ஊராட்சி முறை பற்றி அந்தக் கல்வெட்டுகளில் குறிப்புகள் உள்ளன.

முதலாவது கல்வெட்டு, முதலாம் பராந்தகனின் 12-வது ஆட்சி ஆண்டையும் (கி.பி. 917), மற்றொன்று 14-வது ஆட்சி ஆண்டையும் (கி.பி. 919) சேர்ந்தது.

(உத்திரமேரூர், இரண்டாம் நந்திவர்மன் காலத்திலேயே (கி.பி. 750), உத்திரமேரூர் சதுர்வேதிமங்கலம் என்ற பெயரில் குறிப்பிடப்பட்டது).

குடவோலை முறை பற்றிப் பேசும் முதல் கல்வெட்டு 12 வரிகளைக் கொண்டது. இரண்டாவது கல்வெட்டில் 18 வரிகள் உள்ளன. கல்வெட்டுப் பாடத்திலிருந்து முதல் 5 வரிகள் மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கல்வெட்டுப் பாடம்

வரி 1.

ஸ்வஸ்திஸ்ரீ(;) மதிரை கொண்ட கோப்பரகேசரிவர்மர்க்கு யாண்டு பனிரண்டு ஆவது(;) உத்திரமேருச்சதுர்வேதிமங்கலத்து சபையோம் இவ்வாண்டுமுதல் எங்களூர் ஸ்ரீமுகப்படி ஆஞை

வரி 2.

யினால் தத்தனூர் மூவேந்த வேளான் இருந்து வாரியமாக ஆட்டொருக்காலும் ஸம்வத்ஸர வாரியமும் தோட்ட வாரியமும் ஏரிவாரியமும் இடுவதற்கு வ்யவஸ்தை செய்த

வரி 3.

பரிசாவது (;) குடும்பு முப்பதாய் முப்பது குடும்பிலும் அவ்வவ் குடும்பிலாரேய் கூடி காநிலத்துக்கு மேல் இறை நிலமுனையான் தன் மனையிலே அகம்

வரி 4.

எடுத்துக்கொண்டு இருப்பானை அறுபது பிராயத்துக்கு உள் முப்பது பிராயத்துக்கு மேல்பட்டார் வேதத்திலும் சாஸ்திரத்திலும் காரியத்திலும் நிபுணரென்னப்பட்டி

வரி 5.

ருப்பாரை அர்த்தசௌசமும் ஆத்ம சௌசமும் உடையராய் மூவாட்டின் இப்புறம் வாரியஞ் செய்திலாத்தார் வாரியஞ் செய்தொழிந்த பெருமக்களுக்கு...

கல்வெட்டுச் செய்தி

மதுரையைக் கைப்பற்றிய பரகேசரிவர்மனான முதலாம் பராந்தகனின் 12-ம் ஆட்சி ஆண்டிலும் (கி.பி. 917), 14-வது ஆட்சி ஆண்டிலும் (கி.பி. 919) உத்திரமேரூர் சதுர்வேதிமங்கலத்தின் சபை, கிராம நிர்வாகத்துக்குத் தேவையான குழுக்களை அரசாணையின்படி அமைக்கிறது.

அந்த அமைப்பின்படி, அரசு அதிகாரி ஒருவரும் உடன் இருக்க, ஒவ்வொரு ஆண்டும் சம்வத்ஸர வாரியம், தோட்ட வாரியம், ஏரி வாரியம், பொன் வாரியம், பஞ்சவார வாரியம் போன்ற வாரியங்கள் அமைக்கப்பட்டு, அதன் செயல்பாட்டுக்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.

தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களுக்கான தகுதிகள் என்ன? அவர்களது பதவிக்காலம் என்ன? என்பது போன்ற தகவல்களும் இக்கல்வெட்டில் விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன.

உத்திரமேரூர் சபையில் 30 குடும்புகளும், 12 சேரிகளும் உள்ளன. எனவே, அவை அனைத்துக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில், தேர்தலானது நடத்தப்பட வேண்டும். அவ்விதம் தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களின் தகுதிகள், தேர்வு முறைகள், தேர்வுக்குப் பின் நடைபெற வேண்டிய நடைமுறைகள் ஆகியவை, கல்வெட்டுகளில் தெளிவுற விளக்கப்பட்டுள்ளன.

முதல் கல்வெட்டில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு சில விதிமுறைகளின்படி ஊராட்சித் தேர்வு நடைபெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர், மீண்டும் 14-ம் ஆண்டு மேலும் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது, இடைப்பட்ட ஆண்டில் ஏதோ சிக்கல் ஏற்பட்டிருப்பதுபோல் தோன்றுகிறது. மேலும், உத்திரமேரூர் ஊராட்சித் தேர்தலை நாகசாமி போன்ற வரலாற்று ஆய்வாளர்கள், இது மக்களாட்சி முறையிலான ஊராட்சித் தேர்தல் என்று குறிப்பிடுகின்றனர்.

மேலும், இக்கல்வெட்டில் உறுப்பினர்களின் தகுதிகள் என்று குறிப்பிடப்படும்போது, சாஸ்திரத்தில் வல்லுநர்களாக இருப்பவர்கள் மட்டுமே இதில் உறுப்பினராகத் தகுதி படைத்தவர்கள் என சொல்லப்பட்டுள்ளது.

இதுபோன்ற தேர்தல் முறை (குடவோலை முறையிலான ஊராட்சித் தேர்தல்) வேறு எங்கும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. பாண்டிய மன்னன் மாறன் சடையனின் காலத்தைச் சேர்ந்த மானூர் (திருநெல்வேலி மாவட்டம்) கல்வெட்டும், பிரம்மதேய ஊர்களுக்கான சபைத் தேர்வுமுறை பற்றிப் பேசுகிறது.

நடனகாசிநாதன் அவர்கள், ஒட்டுமொத்தமாக கல்வெட்டுச்செய்திகள் பற்றிச் சொல்லும்போது, தமிழ்நாடு முழுவதுமே குடவோலை முறையிலான ஊராட்சித் தேர்தலே நடைபெற்றதாகக் குறிப்பிடுகிறார். எனவே, இதை மக்களாட்சி முறையிலான ஊராட்சித் தேர்தல் என்பதற்குப் பதிலாக ஊர்களின் சபைத் தேர்தல் என உரைப்பது சிறப்பாக இருக்கும்.

இனி கல்வெட்டுச் செய்திகளைக் காண்போம்.

சம்வத்ஸர வாரியம், தோட்ட வாரியம், ஏரி வாரியம், பொன் வாரியம், பஞ்சவார வாரியம் என்று பிரிக்கப்பட்டிருந்தாலும், உறுப்பினர்களின் பணி என்ன என்பது நேரடியாகக் கொடுக்கப்படவில்லை. அதன் பெயர் கொண்டு ஸம்வத்ஸர வாரியம் - ஆண்டுக்கு ஒருமுறை கூடும் மேற்பார்வைக் குழு என்றும், தோட்ட வாரியம் – தோட்டப் பணிகளைக் கண்காணிப்பது என்றும், ஏரி வாரியம் - நீர் நிலைகளை நிர்வகிப்பது என்றும், பொன் வாரியம் - பொன்னின் மாற்றை காண்பதற்கும், பஞ்சவார வாரியம் - நில வரி வாரியம் (ஐந்தில் ஒரு பங்கு நில வருவாய் பெறும் குழு) என்றும் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படத் தேவைப்படும் தகுதிகள் (முதல் கல்வெட்டு)

கால் வேலிக்கு மேல் இறை கட்டும் நிலம் வைத்திருக்க வேண்டும்.

சொந்த மனையில் வீடு கட்டப்பட்டிருக்க வேண்டும்.

வயது 30-க்கு மேல் 60-க்குள் இருக்க வேண்டும்.

சாஸ்திரத்திலும் தொழிலும் காரியத்திலும் நிபுணராக இருக்க வேண்டும்.

நல்ல வழியிலான செல்வமும், தூய்மையான ஆன்மாவையும் பெற்றிருக்க வேண்டும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த வாரியத்திலும் உறுப்பினராக இருந்திருக்கக்கூடாது. அவ்வாறு வாரிய உறுப்பினராக இருந்தோரும், அவர்களது நெருங்கிய உறவினர்களும் உறுப்பினராக இயலாது.

சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படத் தேவைப்படும் தகுதிகள் (இரண்டாவது கல்வெட்டு)

கால் வேலிக்கு அதிகமான இறை செலுத்தக்கூடிய சொந்த நிலம் பெற்றிருக்க வேண்டும்.

அந்த நிலத்தில் சொந்த மனை இருக்க வேண்டும்.

வயது வரம்பு, முந்தைய கல்வெட்டில் 30-க்கு மேல் 60-க்குள் என்று இருந்தது. பின் அது மாற்றப்பட்டு 35-க்கு மேல் 70-க்குள் என்று வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மந்திரப் பிரமாணம் அறிந்து அதைப் பிறருக்கு எடுத்துச் சொல்பவனாக இருக்க வேண்டும்.

1/8 நிலமே இருந்தாலும், ஒரு வேதத்திலும் நான்கு பாஷ்யத்திலும் நிபுணராக இருக்க வேண்டும்.

நல்ல வழியிலான செல்வமும், தூய்மையான ஆன்மாவையும் பெற்றிருக்க வேண்டும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த வாரியத்திலும் உறுப்பினராக இருந்திருக்கக்கூடாது. அவ்வாறு வாரிய உறுப்பினராக இருந்தோரும், அவர்களது நெருங்கிய உறவினர்களும் உறுப்பினராக இயலாது.

ஏதாவதொரு வாரியத்தில் இருந்து கணக்கு காட்டாது சென்றவர்களும் அவர்களது உறவினர்களும் உறுப்பினராகக்கூடாது. (முதல் கல்வெட்டில் இவ்விதம் குறிக்கப்படவில்லை). தாயின் சிறிய, பெரிய சகோதரிகளின் மக்கள் - தந்தையின் சகோதரி மக்கள் - மாமன் - மாமனார் - மனைவியின் தங்கையை மணந்தவர் - உடன் பிறந்தாளை திருமணம் செய்தவர் - தன் மகளை மணம் புரிந்த மருமகன் - இதுபோன்ற சுற்றத்தினர் யாரும் தங்களது பெயர்களைக் குடவோலைக்கு எழுதுதல் கூடாது.

ஆகமங்களுக்கு எதிராக பஞ்சமாபாதகங்கள் செய்தார், கொள்கையை மீறுபவன் (ஸம்ஸவர்க்கப்பதிதரை), பாவம் செய்தவர்கள், கையூட்டு பெற்றவர்கள் - அதற்கான பரிகாரங்களைச் செய்து தூய்மை அடைந்திருந்தாலும் உறுப்பினராகும் தகுதி அற்றவரே. அவர்களது உறவினர்களும் உறுப்பினராக ஆக இயலாது. கொலைக் குற்றம் செய்யத் தூண்டுபவர், கட்டாயத்தினால் கொலைக் குற்றம் செய்பவர் (சஹசியர்), அடுத்தவர் பொருளை அபகரிப்பவர், ஊர் மக்களுக்கு விரோதியாக இருப்போர் (கிராம கண்டகர்) ஆகியோரும் உறுப்பினராக ஆகத் தகுதி அற்றவர்களாவர்.

கழுதை ஏறியோரும், பொய் கையெழுத்திட்டோரும் உறுப்பினராக ஆகத் தகுதி அற்றோராவர்.

இதன்மூலம் உறுப்பினர்களுக்கான தகுதிகள் கடுமையாக இருந்துள்ளது தெளிவாகிறது.

தேர்தல் முறை

இவ்விதம் தகுதி உடைய உறுப்பினர்களின் பெயர்களைத் தனித்தனியே ஒவ்வொரு குடும்பும் ஓலையில் எழுதி ஒரு குடத்தில் இட்டு அதன் வாயைக் கட்டிவைத்துக்கொள்ள வேண்டும்.

தேர்தல் நாள் அன்று, மகாசபையில் ஊரில் உள்ள அனைவரும் கூடியிருக்க வேண்டும். ஊரில் உள்ள நம்பிமார்களும் (பூசாரிகள்) இருக்க வேண்டும். அதில் ஒருவர் உள் மண்டபத்தில் இருக்க வேண்டும்.

கூடி நிற்கும் நம்பிமார்களில் வயோதிகராக உள்ள ஒருவர், ஒரு குடும்பிலிருந்து ஓலை இடப்பட்டுள்ள ஒரு குடத்தைத் தூக்கி, எல்லோரும் நன்கு காணுமாறு மக்களிடம் காட்டுவார். அவ்விதம் காட்டிய பின், அக்குடத்தில் இருக்கும் ஓலைகளை வேறொரு குடத்திலிட்டு நன்றாகக் கலக்குவர்.

பின், ஏதும் அறியாத ஒரு சிறுவனைக் கொண்டு, ஒரே ஒரு ஓலையை மட்டும் எடுக்கச்செய்வர். எடுத்த ஓலையை, மத்யஸ்தன் தனது ஐந்து விரலையும் அகல விரித்து உள்ளங்கையில் வாங்க வேண்டும்.

வாங்கிய ஓலையை அவர் வாசிக்க வேண்டும். வாசித்த பிறகு, உள் மண்டபத்தில் இருக்கும் நம்பிமாரும் அதை வாசிப்பார். அவ்விதம் வாசித்த பெயரைப் பின்னர் எழுதிக்கொள்வர்.

இவ்விதமே 30 குடும்புக்கும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்களது கடமைகளை ஆற்றுவர்.

கல்வெட்டு ஆதாரம்

அமைவிடம் - உத்திரமேரூர், காஞ்சிபுரம் மாவட்டம்

அரசன் - முதலாம் பராந்தகன் (பொ.ஆ. 907 - 856)

ஆட்சி ஆண்டு - 12 மற்றும் 14

பொ.ஆ. - 919, 923

மொழி – தமிழ்

எழுத்து – 10-ம் நூற்றாண்டு தமிழும் கிரந்தமும்

இது 1000 வருடங்களுக்கு முன் இருந்த நிலை. தற்போதைய வேட்பாளர்களோ வாக்காளர்களோ பயமோ கவலையோ கொள்ளத் தேவையில்லை.

ஆதாரம் : தமிழ்நாட்டு வரலாற்றுக் குழு, தமிழ் வளர்ச்சி இயக்ககம், சென்னை.