நோக்கம்

பல தனிப்பட்டவர்களைக் கொண்ட குழுவினர், ஒன்றுக்கு மேற்பட்ட தேர்வுக்கு உரியவற்றுள் ஒன்றையோ பலவற்றையோ, அவை பெறுகின்ற வாக்குகளின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பதற்காக அல்லது அவற்றுள் விருப்பத்துக்கு உரியவற்றை அல்லது வெற்றி பெறுவதைத் தீர்மானிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு செயல்முறையே வாக்களிப்பு முறை எனப்படுகின்றது. சனநாயக வழிமுறையில் பொதுப்பதவிகளுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது தொடர்பில் வாக்களிப்பு பெரிதும் அறியப்படுகின்ற ஒன்றாகும்.

சிறப்பாக, வாக்களிப்பு முறை என்பது, குறிப்பிட்ட தொகுதி வாக்குகளிலிருந்து வெற்றி பெறுவதைத் தீர்மானிப்பதற்கான வரையறுக்கப்பட்ட ஒரு வழிமுறையாகும். செயல்முறை முறைப்படி வரையறுக்கப்படுவது மட்டுமன்றி, வாக்குகள் எண்ணப்படும் முறை மற்றும் அது தொடர்பான விதிகள் அனைத்தும் முன்கூட்டியே அறிவிக்கப்படவும் வேண்டும். முறைப்படி வரையறுக்கப்பட்ட வாக்களிப்பு முறைகள் பற்றிய கோட்பாடு, வாக்களிப்புக் கோட்பாடு (voting theory) எனப்படுகின்றது. இது, அரசறிவியல், பொருளியல், கணிதம் போன்றவற்றின் துணைத்துறையாகக் கருதப்படக்கூடியது. வாக்களிப்புக் கோட்பாடு, 18 ஆம் நூற்றாண்டிலேயே வளர்ச்சியடையத் தொடங்கியது. இதன் மூலம், வாக்களிப்புத் தொடர்பான பல் வேறுபட்ட அணுகுமுறைகள் உருவாகியுள்ளன.

பெரும்பாலான வாக்களிப்பு முறைகள் பெரும்பான்மை ஆட்சியை அடிப்படையாகக் கொண்டவை. பெரும்பான்மை ஆட்சிமுறை எளிமையான ஒரு முறையாக இருந்தாலும், பலவகையான வாக்களிப்பு முறைகள் புழக்கத்திலுள்ளன. மொத்த வாக்குகளின் அரைப்பங்குக்கு மேல் பெறுவதே தேர்ந்தெடுக்கப்படும் என்பது பெரும்பான்மை ஆட்சி முறையின் அடிப்படையாக இருந்தாலும், இரண்டுக்கு மேற்பட்ட தேர்வுக்கு உரியவை மத்தியில் தேர்வு நடைபெறும்போது எவரும் அரைப்பங்குக்கு மேல் பெறும் சந்தர்ப்பம் இல்லாமற் போவதுண்டு. இவ்வாறான சமயங்களில் அரைப்பங்குக்கு மேற்பட்டவர்களின் விருப்பம் அறிவதற்கான வேறு ஒழுங்குகள் வாக்களிப்பு முறையில் சேர்க்கப்பட்டிருக்கும். சில முறைகளில் அதிக வாக்குகள் பெறும் விருப்பு தேர்ந்தெடுக்கப்படுவதும் உண்டு.

விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை

விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை (proportional representation) என்பது ஒரு குறிப்பிட்ட தொகுதி மக்களினால் அளிக்கப்பட்ட வாக்குகளில், வேட்பாளர்கள் பெறும் வாக்குகளின் விகிதாசாரத்துக்கு அமைய வெற்றியாளர்களைத் தெரிவு செய்யும் ஒரு தேர்தல் முறையாகும்.

நோக்கங்கள்

அளிக்கப்படும் வாக்குகளில் அதிகமான வாக்குகளைப் பெறுபவரைத் தேர்ந்தெடுக்கும் ஒற்றை உறுப்பினர் தொகுதித் தேர்தல் முறையில் உள்ள குறைபாடுகளை நீக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டதே இந்த முறையாகும். இம்முறை, பல்வேறு நாடுகளிலும் வேறுபட்ட முறைகளில் நடைமுறையில் உள்ளது. இவ்வாறு வேறுபாடுகள் காணப்பட்டாலும், பின்வரும் அடிப்படையான கொள்கைகளில் ஒன்றுபட்டுள்ளன.

எல்லா வாக்காளர்களும் நீதியான பிரதிநிதித்துவத்துக்கு உரிமையானவர்கள் என்பது.

எல்லாக் கருத்துக்களும் அவற்றுக்குள்ள ஆதரவுக்கு விகிதாசாரமான முறையில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட உரிமை உடையவை என்பது.

இவற்றுடன், பல்வேறு விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறைகளுக்கிடையே மேலும் பல ஒத்த இயல்புகள் காணப்படுகின்றன. அவற்றுட் சில:

பல உறுப்பினர் தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளமை.

ஒவ்வொரு தேர்தல் தொகுதி அல்லது தேர்தல் மாவட்டங்களிலும் அளிக்கப்படும் வாக்குகளின் விகிதாசாரத்துக்கு அமைய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படல்.

வகைகள்

தற்போது பல ஐரோப்பிய நாடுகளும், வளர்ந்து வருகின்ற வேறுபல நாடுகளும், விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையைப் பயன்படுத்தி வருகின்றன. நடைமுறையிலுள்ள முக்கியமான விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறைகள் பின்வருமாறு:

கட்சிப் பட்டியல் முறை

மூடிய கட்சிப்பட்டியல்

திறந்த கட்சிப்படியல்

கலப்பு உறுப்பினர் விகிதாசாரத் தேர்தல் முறை

மாற்றப்படக்கூடிய ஒற்றை வாக்கு முறை.

ஆதாரம் : தமிழ்நாடு தேர்தல் ஆணையம்