2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு அட்டவணை இந்திய தேர்தல் ஆணையம் 15.03.2026 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலின் அட்டவணையை அறிவித்துள்ளது. அதன்படி வாக்குப்பதிவு அட்டவணை பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. SI. தேர்தல் நிகழ்வு தேதி 1. தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடும் நாள் (மற்றும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான ஆரம்ப நாள்) 30.03.2026 (திங்கள்கிழமை) 2. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் 06.04.2026 (திங்கள்கிழமை) 3. பெறப்பட்ட வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நாள் 07.04.2026 (செவ்வாய்கிழமை) 4. வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் 09.04.2026 (வியாழக்கிழமை) 5. வாக்குப்பதிவு நாள் 23.04.2026 (வியாழக்கிழமை) 6. வாக்கு எண்ணிக்கை நாள் 04.05.2026 (திங்கள்கிழமை) 7. தேர்தல் நடைமுறைகள் முடிவுபெறும் நாள் 06.05.2026 (புதன்கிழமை) தேர்தல் நடத்தை விதிகள் அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளான 15.03.2026 முதல் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் செயல்முறைகள் முடியும் வரை இவ்விதிமுறைகள் அமலில் இருக்கும். இவ்விதிமுறைகள் அனைத்து அரசியல் கட்சிகள், போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசுத் துறைகள் அனைத்திற்கும் பொருந்தும். எல்லா அரசியல் கட்சிகளும் மற்றும் வேட்பாளர்களும் தேர்தல் நடத்தை விதிகளை முறையாகக் கடைப்பிடித்து, சுதந்திரமான, நியாயமான, அமைதியான மற்றும் அனைவரது பங்கேற்பும் கொண்ட தேர்தலை நடத்துவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அனைத்து துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள், வாரியங்கள் மற்றும் கழகங்களின் தலைவர்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் குறித்து ஏற்கனவே விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 இன் பிரிவு 13CC படி தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து அதிகாரிகளும் மற்றும் காவல்துறை அதிகாரிகளும் இந்திய தேர்தல் ஆணையத்தின் பணியாளர்களாக கருதப்படுவார்கள். அவர்கள் எந்தவிதப் பாரபட்சமுமின்றி தங்கள் கடமைகளைச் சிறப்பாக நிறைவேற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 01.01.2026 தகுதித் தேதியை அடிப்படையாகக் கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் 23.02.2026 அன்று வெளியிடப்பட்டது. 15.03.2026 நிலவரப்படி தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்கள்: மொத்தம் : 5,69,17,979 (ஆண் வாக்காளர்கள் - 2,78,32,032, பெண் வாக்காளர்கள் - 2,90,78,291, மூன்றாம் பாலின வாக்காளர்கள் - 7,656). மேலும் 67,168 சேவை வாக்காளர்கள் (Service Electors) இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். தற்போது தொடர்ச்சியான திருத்தம் நடைபெற்று வருகிறது. புதிய வாக்காளர் சேர்க்கைக்கான படிவம் 6 மற்றும் முகவரி மாற்றத்திற்காக படிவம் 8-ஐ வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாளுக்கு முந்தைய 10 நாட்கள் வரை சமர்ப்பிக்கலாம். அனைத்து வாக்காளர்களும் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை முன்கூட்டியே சரிபார்த்து, தங்கள் பகுதி எண் (Part No) மற்றும் வரிசை எண் (Serial No) ஆகியவற்றைத் தெரிந்து கொண்டு, தங்களது வாக்குச்சாவடி இருப்பிடத்தை முன்கூட்டியே அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வாக்காளர் பட்டியலில் பெயரை அறிய இணையதள வாக்காளர் தேடல் வசதி மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலக உதவி மையம் மூலம் உதவி பெறலாம். இந்திய தேர்தல் ஆணையம், அனைத்து தகுதி பெற்ற வாக்காளர்களும் வாக்களிக்கும் வாய்ப்பைப் பெறுவதற்காக பல்வேறு கூடுதல் வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், 40% மேல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மற்றும் வீட்டிலிருந்தே கோவிட் சிகிச்சை பெறும் வாக்காளர்கள் தபால் வாக்கு மூலம் வாக்களித்து தேர்தல் அறிவிப்பு வெளியான 5 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர் விண்ணப்பம் பெற்றபின் அவர்களது தகுதியை சரிபார்த்து, தபால் வாக்குச் சீட்டை வீட்டிலேயே வழங்கி, நிரப்பிய பின் திரும்பப் பெறுவார். தபால் வாக்கு வசதியினை பெறுவதற்கு படிவம் 12D ஐ பூர்த்தி செய்து தேர்தல் அலுவலரிடம் 5 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கீழ்கண்ட குறைந்தபட்ச உறுதி செய்யப்பட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. போதுமான எண்ணிக்கையில் நாற்காலிகள், உதவி மையம், வாக்குச்சாவடிகளில் போதுமான வெளிச்சம், மின்வசதி, கழிப்பறை வசதி, வழிகாட்டி பலகைகள், குடிநீர் வசதி, அணுகு சாலை வசதி உள்ளிட்டவைகள் இதில் அடங்கும். மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்காக சக்கர நாற்காலிகள் வசதி, தன்னார்வலர்கள், தேவையான மேசைகள் போன்றவை வழங்கப்படும். மேலும் பார்வை குறைபாடு, செவித்திறன் குறைபாடு மற்றும் பேச்சு குறைபாடு உள்ள வாக்காளர்களுக்காக பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் தேவைப்படும் வாக்குச்சாவடிகளில் நியமிக்கப்படுவர். மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் "Saksham App" மூலம் உதவி பெறலாம். 15.03.2026 முதல் தேர்தல் செலவுக் கண்காணிப்பு குழுக்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, காணொலி கண்காணிப்பு குழு உள்ளிட்ட குழுக்கள் 24 மணி நேரமும் பணியாற்றுகின்றன. மேலும் செலவினங்கள் கண்காணிப்பு குழுக்களும் செயல்படத் தொடங்கியுள்ளன. அரசியல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி வழங்கவும், கட்டணச் செய்திகளை கண்காணிக்கவும் மாநில அளவில் மற்றும் மாவட்ட அளவிலான ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மின்னணு ஊடகங்களில் வெளியிடப்படும் எந்த அரசியல் விளம்பரங்களுக்கும் இக்குழுக்களின் முன் சான்றிதழ் பெறாமல் வெளியிடப்படக்கூடாது. மாநில / மாவட்ட அளவில் செயல்படும் கட்டணமில்லா எண்: 1800-4252-1950 மற்றும் மாவட்ட தொடர்பு மையம் எண் 1950 ஆகியவை 24x7 என்ற கால அளவில் செயல்படுகிறது. வாக்காளர்கள் https://voters.eci.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் வாக்காளர் பட்டியல் விவரங்கள், வாக்குச்சாவடி இருப்பிடம், வாக்குச்சாவடி நிலைய அலுவலர் தொடர்பு விவரங்கள் போன்ற தகவல்களை அறியலாம். மேலும் ஆன்லைன் புகார்களை தேசிய குறைதீர்ப்பு சேவை மைய இணையதளம் மூலமும் பதிவு செய்யலாம். வாக்காளர்கள் தங்கள் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை அல்லது கீழ்கண்ட 12 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்களிக்க பயன்படுத்தலாம். ஆதார் அட்டை. MGNREGA பணி அட்டை. புகைப்படத்துடன் கூடிய அஞ்சல் அலுவலக / வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம். மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு அட்டை / ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டை. ஓட்டுநர் உரிமம். PAN அட்டை. தேசிய மக்கள் தொகைப்பதிவேட்டின் கீழ் இந்திய பதிவாளர் ஜெனரலால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை. இந்திய கடவுச்சீட்டு. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம். புகைப்படத்துடன் கூடிய மத்திய, மாநில அரசு / பொதுத்துறை நிறுவன ஊழியர் அடையாள அட்டை. அங்கீகரிக்கப்பட்ட நாடாளுமன்ற / சட்டமன்ற / சட்டமேலவை உறுப்பினர் அடையாள அட்டை. ஊனமுற்றோருக்கான அடையாள அட்டை (சமூக நீதி மற்றும் அதிகாரமளிக்கும் துறை, இந்திய அரசு). சுதந்திரமான மற்றும் வெளிப்படையான தேர்தலை உறுதி செய்ய பின்வரும் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவையாவன, வாக்குச்சாவடிகளில் கைப்பேசி பாதுகாப்பு அறை. தெளிவான வாக்காளர் தகவல் சீட்டு. வேட்பாளர்களின் வண்ணப்புகைப்படம் மற்றும் பெரிய எழுத்துருவில் வாக்குச்சீட்டு. அதிகபட்சம் ஒரு வாக்குச்சாவடிக்கு 1200 வாக்காளர்கள். வாக்குச்சாவடிக்கு 100 மீட்டர் தொலைவில் வேட்பாளர் முகாம் அமைத்தல். ECINET – ஒருங்கிணைந்த டிஜிட்டல் சேவை தளம். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 100% இணையவழி ஒளிபரப்பு. வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கான புகைப்பட அடையாள அட்டை. "தேர்தல் திருவிழா - தமிழ்நாட்டின் பெருவிழா" தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9 ஆதாரம்: https://cms.tn.gov.in/cms_migrated/document/press_release/pr160326_t_002_CEO.pdf