தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் வருகை மற்றும் ஆய்வு 2026 ஏப்ரல் 20 முதல் 24 வரை நடைபெறவுள்ள சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டத்தில் (International Election Visitors Programme) பங்கேற்க வருமாறு, பல்வேறு நாடுகளின் தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் தலைவர்கள்/பிரதிநிதிகள் மற்றும் தூதரகத் தலைவர்களுக்குத் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பூடான், எகிப்து, மொரிஷியஸ், மால்டோவா, இந்தோனேசியா, பெனின், இலங்கை, பெரு, கானா மற்றும் நமீபியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் உட்பட 20 பிரதிநிதிகள், 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் நடைமுறைகளைப் பார்வையிட சென்னை வந்தடைந்தனர். இந்தப் பயணத்தின் போது, பிரதிநிதிகள் இன்று சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் பொருட்கள் அனுப்பும் மையத்தைப் பார்வையிட்டனர். மேலும், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் உள்ள மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் ஊடக கண்காணிப்பு மையங்களையும் அவர்கள் பார்வையிட்டனர். இக்குழுவினர், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அங்கிருந்த குழுவினருடன் கலந்துரையாடினர். நாளை, ஏப்ரல் 23, 2026 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தப் பிரதிநிதிகள் வாக்குச் சாவடிகளுக்கு நேரில் சென்று நேரடி வாக்குப்பதிவு நடைமுறைகளைப் பார்வையிட உள்ளனர்.இந்தியாவின் பிரம்மாண்டமான தேர்தல் உள்கட்டமைப்பு, நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் தேர்தல் மேலாண்மையில் புகுத்தப்பட்டுள்ள புதுமைகளை உலகிற்கு அறிமுகப்படுத்துவதே இந்த முன்முயற்சியின் முதன்மை நோக்கமாகும்இதன் மூலம் , மாநில தேர்தல் ஆணையம் பின்பற்றும் சிறந்த நடைமுறைகளை சர்வதேச பிரதிநிதிகள் அறிந்துகொள்வதுடன், அவற்றை தங்கள் நாடுகளில் செயல்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் ஆராய முடியும். "தேர்தல் திருவிழா - தமிழ்நாட்டின் பெருவிழா" தலைமைத் தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9 ஆதாரம்: த.தே.அ. த.நா. செ.வெ. எண்: 029