தேர்தல் பணியாளர்களுக்கான விரிவான பயிற்சித் திட்டங்கள் 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலின் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் உள்ள சுமார் நான்கு லட்சம் தேர்தல் பணியாளர்களை உள்ளடக்கிய பல்வேறு பங்குதாரர்களுக்கு விரிவான மற்றும் கட்டமைக்கப்பட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட தேர்தல் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மண்டல அலுவலர்கள், செலவினக் கண்காணிப்புக் குழுக்கள், வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச் சாவடி அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து தேர்தல் பணியாளர்களுக்கும் தேர்தல் நடைமுறையில் முழுமையான பயிற்சி அளிக்கும் வகையில் இந்த பயிற்சித் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சித் திட்டங்கள் தொடங்குவதற்கு முன்னதாக, முக்கியப் பங்குதாரர்களின் திறன், அறிவு மற்றும் தயார்நிலை ஆகியவற்றை மதிப்பிடுவதற்காக இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனம் [India International Institute of Democracy and Election Management (IIIDEM)] மூலம் மதிப்பீடுகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து, முதற்கட்ட மாநில அளவிலான பயிற்சிகள் பின்வருமாறு நடத்தப்பட்டன: வ.எண் பங்குதாரர்கள் பயிற்சி தேதிகள் முதல் வரை 1 மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (தேர்தல் நடத்துதல் குறித்து) 09.03.2026 10.03.2026 2 தேர்தல் நடத்தும் அதிகாரிகள்/உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் (தேர்தல் நடத்துதல் குறித்து) 03.03.2026 04.03.2026 3 தேர்தல் நடத்தும் அதிகாரிகள் (தொழில்நுட்ப பயன்பாடு) 06.03.2026 4 மாநில அளவிலான முதன்மைப் பயிற்சியாளர்கள் 24.02.2026 25.02.2026 அடுத்த கட்டமாக, மண்டல அலுவலர்கள், வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், ஒருங்கிணைப்பு அதிகாரிகள் போன்ற மாவட்ட மற்றும் கள அளவிலான தேர்தல் செயல்பாட்டாளர்களுக்கு பயிற்சிகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட அளவிலான பயிற்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தற்போதைய அறிவுறுத்தல்களின்படி, அவர்களின் நடைமுறை அறிவை வலுப்படுத்தும் நோக்கில் இப்பயிற்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இதில் 6,803 மண்டல அதிகாரிகள், 75,032 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், 2,25,096 வாக்குச்சாவடி அலுவலர்கள் உட்பட சுமார் நான்கு லட்சம் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அனைத்து நிலைகளிலும் உள்ள தேர்தல் தொடர்புடைய அலுவலர்கள் முறையாகப் பயிற்சி பெற்று, தேர்தலை சுதந்திரமான, நியாயமான மற்றும் திறமையான முறையில் நடத்துவதற்குத் தங்களைச் தயார்படுத்திக் கொள்வதை உறுதி செய்வதே இந்தப் பயிற்சித் திட்டத்தின் நோக்கமாகும். “தேர்தல் திருவிழா - தமிழகத்தின் பெருவிழா” தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9 ஆதாரம்: https://cms.tn.gov.in/cms_migrated/document/press_release/pr180326_t_005_CEO.pdf