பங்குகளை ஒறுப்பிழப்பு செய்தல் - பொருள் அழைப்புப் பணத்தைச் செலுத்தாத காரணத்தால், ஒரு உறுப்பினரின் பங்குகளை நிறுமம் பறிமுதல் செய்தல் பங்கு ஒறுப்பிழப்பு (Forfeiture) எனப்படும். பங்குகளைப் பறிமுதல் செய்தவுடன், அவற்றை வைத்துள்ளவர் (அவற்றின் உரிமையாளர்) நிறுமத்தின் உறுப்பினர் எனும் தகுதியை இழந்து விடுகிறார். மேலும் அப்பங்குகள் மீது அதுவரை செலுத்தப்பட்டிருந்த தொகை அவர்கட்குத் திருப்பித்தரப்பட மாட்டாது. நிறுமமே அதனை வைத்துக்கொள்ளும். செல்தகு ஒறுப்பிழப்பின் (Valid forfeiture) இன்றியமையாத் தன்மைகள் நிறுமம் மேற்கொண்ட ஒறுப்பிழப்பு செல்லத்தக்கதாக இருக்க வேண்டுமாயின், கீழ்க்கண்ட நிபந்தனைகளை நிறுமம் நிறைவேற்றியிருக்க வேண்டும். நிறுமச் செயல்முறை விதிகள் பங்குகளை ஒறுப்பிழப்பு செய்யும் அதிகாரத்தை நிறுமத்திற்கு வழங்கியிருக்க வேண்டும். அழைப்புப் பணம் செலுத்தத் தவறியதால் மட்டுமே பங்குகளைப் பறிமுதல் செய்யலாம். பங்குநர்களிடமிருந்து பெற வேண்டியுள்ள வேறு எக்கடன் நிலுவைக்காகவும், பங்குகளை ஒறுப்பிழப்பு செய்யக்கூடாது. அழைப்புப் பணத்தைச் செலுத்துமாறு பணம் செலுத்தத் தவறிய உறுப்பினர்களுக்குக் குறைந்தது 14 நாட்கள் அறிவிக்கையாவது தரவேண்டும். மீண்டும் அழைப்புப் பணம் செலுத்தா நிலை தொடருமாயின், அவர் வைத்துள்ள பங்குகள் மறு அறிவிப்பின்றி பறிமுதல் செய்யப்படும் என்ற எச்சரிக்கை அவ்வறிவிக்கையில் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டிருக்க வேண்டும். பங்குகளை ஒறுப்பிழப்பு செய்து இயக்குநர் அவை தீர்மானம் நிறைவேற்றிப் பங்குகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். பங்குகளின் ஒறுப்பிழப்பிற்குப் பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட உறுப்பினரின் பெயர் உறுப்பினர் பதிவேட்டிலிருந்து நீக்கப்படும். ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட பங்குகளை மறுவெளியீடு செய்தல் (Re-issue of forfeited shares) பங்குகளைப் பறிமுதல் செய்யும்பொழுது அவை மீண்டும் நிறுமத்திற்கு வந்துவிடுகின்றன. எனவே பங்கு முதல் தொகை பறிமுதலுக்கு உள்ளான பங்குத்தொகை அளவிற்கு குறைந்துவிடும். நிறுமத்தின் சொத்தாக அவை கருதப்படும். ஆயினும் அப்பங்குகளை நிறுமம் மீண்டும் வெளியிடலாம். ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட பங்குகளை வட்டத்தில் (தள்ளுபடியில் - Discount) வெளியிடலாம். மறுவெளியீட்டில் வழங்கப்படும் தள்ளுபடி அப்பங்குகள் மீது முந்தையப் பங்குநரிடமிருந்து பெறப்பட்ட தொகையை மிஞ்சக்கூடாது. இயக்குநரவையில் தீர்மானம் நிறைவேற்றிய பின்னரே ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட பங்குகளை மறுவெளியீடு (Re-issue) செய்ய முடியும். யாருக்கு இப்பங்குகள் வெளியிடப் படுகின்றனவோ, அவர் நிறுமத்தின் உறுப்பினராகிறார். நிறும உறுப்பினர் பதிவேட்டில் அன்னாரின் பெயர் எழுதப்படும். பங்குகளை முனைமத்தில் (Premium) வெளியிடல் ஒரு நிறுமம் தன் பங்குகளை முனைமத்தில் (Premium) வெளியிடலாம். அதாவது அதன் வெளியீட்டு விலை(Issue price) முகமதிப்பைவிட (Face value) அதிகமாக இருக்கும். வெளியீட்டு விலைக்கும், குறைவாக உள்ள முகமதிப்பிற்கும் உள்ள வேறுபாடு முனைமம் என்று சொல்லப்படுகிறது. எடுத்துக்காட்டாக, முகமதிப்பு ரூ.10 உள்ள பங்குகளை ரூ.12-க்கு வெளியிட்டால், பங்கு முனைமம் ரூ.2 சாதாரணமாக, பங்கு முனைமத் தொகை ஒதுக்கீட்டுப் பணத்துடன் வசூலிக்கப்படுவது வழக்கம். நிறுமங்கள் சட்டம் பங்கு முனைமத் தொகையை முழுவதும் செலுத்தப்பெற்ற மேலூதியப் பங்குகளை (Fully paid bonus) வெளியிடவும் நிறுமத்தின் தொடக்கச் செலவுகளை (Preliminary expenses) நீக்கிக் கொள்ளவும் மீள்தகு முன்னுரிமைப் பங்குகளை அல்லது கடனீட்டுப் பத்திரங்களை மீட்கும்பொழுது செலுத்த வேண்டியுள்ள முனைமத் தொகையைச் சரிசெய்து கொள்வதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். பங்குகளை வட்டத்தில் (Discount தள்ளுபடி) வெளியிடல் - பொருள் பங்குகளை அவற்றின் முக மதிப்பிற்கும் குறைத்து வெளியிடப்படுதல், பங்குகளை வட்டத்திற்கு வெளியிடுதல் என்று கூறப்படுகிறது. எடுத்துக்காட்டாக பங்கொன்றின் முகமதிப்பு ரூ.10 எனவும், அது ரூ.8க்கு வெளியிடப்படுவதாகவும் கொண்டால், பங்கு வெளியீட்டுத் தள்ளுபடி ரூ.2 ஆகும். அதாவது வெளியீட்டு விலையினின்று முக மதிப்பைக் கழித்தால் கிடைக்கும் தொகையே பங்கொன்றின் வட்டம் அல்லது தள்ளுபடி என்பதை உணரலாம். பங்குகளை வட்டத்தில் வெளியிட சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அவை, வட்டத்திற்கு வெளியிடவுள்ள பங்குகள் முன்னரே வெளியிட்ட பங்கு வகையைச் சார்ந்ததாக இருக்க வேண்டும். ஆக, முதன்முதலில் வெளியிடும்பொழுதே ஒரு நிறுமம் தன் பங்குகளை வட்டத்தில் வெளியிடக்கூடாது. கூடுதல் முதல் திரட்ட மறுபடியும் அதே வகைப் பங்குகளை வெளியிடும்போது வட்டத்தில் வெளியிடலாம். சாதாரண தீர்மானத்தின் மூலம் இதற்கு (இவ்வாறு பங்குகளை வட்டத்தில் வெளியிட) அதிகாரம் தந்திருக்க வேண்டும். இதற்கு மைய அரசின் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். நிறுமம் நிறைவேற்றிய தீர்மானத்தில் உயர்ந்தளவு தள்ளுபடி வீதம் எவ்வளவில் இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட்டுக் காட்ட வேண்டும். பங்கு ஒன்றின் முகமதிப்பில் 10 விழுக்காடுக்கு இது மிகக் கூடாது. சில சிறப்பான சூழ்நிலைகளில், மைய அரசு இதை விடக் கூடுதல் வீதத்தில் வட்டம் அல்லது தள்ளுபடி இருக்க அனுமதி வழங்கும். நிறுமம் தொழில் தொடங்க உரிமை கிடைத்த நாளிலிருந்து குறைந்தது ஓராண்டாவது சென்றிருக்க வேண்டும். மைய அரசு அனுமதித்த நாளிலிருந்து இரு மாதங்களுக்குள் பங்குகளை வட்டத்தில் வெளியிட வேண்டும். கடனீட்டுப் பத்திரங்கள் (Debentures) நிறுமம் நீண்டகாலக் கடன்களைத் திரட்டும் வழிகளுள் மிகவும் பயன்படுத்துவது கடனீட்டுப் பத்திரங்களை வெளியிடும் முறைதான். ஒரு கடனை ஒப்புக்கொள்ளும் (அ) கடனை ஏற்படுத்தும் ஒரு ஆவணமே கடனீட்டுப் பத்திரம் என்று கூறப்படுகிறது. கடனீட்டுப் பத்திரம் என்ற சொல் ஒரு நிறுமம் அதனை (பத்திரத்தை) வைத்திருப்போரிடம் தான் பெற்ற கடனை ஒப்புக்கொள்ளும் பத்திரத்தைக் குறிக்கும். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் குறிப்பிட்ட வீதத்தில் வட்டி செலுத்துவதாகவும் அது கூறுகிறது. குறிப்பிட்ட காலக் கெடுவுக்குப் பின் அல்லது தன் விருப்பப்படி, கடனீட்டுப் பத்திரம் மூலம் பெற்ற கடனைத் திருப்பி அடைத்து விடுவதாகவும் நிறுமம் உறுதி அளிக்கிறது. அதில் பொதுவாக நிறுமத்தில் பொது முத்திரை பொறிக்கப்பட்டிருக்கும். கடனீட்டுப் பத்திரங்களில் வரிசை எண் இடம் பெற்றிருக்க வேண்டும். நிறுமச் செயல்முறை விதிகளில் கூறியிருப்பதற்கொப்ப அதன் இயக்குநர்கள் கையொப்பமிட்டிருக்க வேண்டும். கடனீட்டுப் பத்திரத்தில் வெளியீட்டு நாளையும், கடன் மீட்பு நாளையும் குறிப்பிட்டிருக்க வேண்டும். கடனீட்டுப் பத்திரங்களின் வகைகள் பதிவு செய்யப்பட்ட கடனீட்டுப் பத்திரங்கள் (Registered Debentures) குறிப்பிட்ட நபர் அல்லது நபர்கள் பெயர்களில் வெளியிடப்பட்டு, கடனீட்டுப் பத்திரதாரர்கள் பெயர்கள் நிறுமம் வைத்திருக்கும் கடனீட்டுப் பத்திரப் பதிவேட்டில் இடம்பெற்றிருக்குமாயின், அத்தகைய கடனீட்டுப் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்ட கடனீட்டுப் பத்திரங்கள் என்றழைக்கப்படுகின்றன. பங்குகளைப் பிறருக்கு மாற்றுவது போன்றே, இவற்றையும் மாற்றித்தர இயலும். வட்டியோ, கடனீட்டுப் பத்திரத் தொகையோ பதிவு செய்யப்பட்டுள்ள நபர்கட்கே தரப்படும். கொணர்பவர் கடனீட்டுப் பத்திரங்கள்(Bearer Debentures) கடனீட்டுப் பத்திரத்தை யார் கொண்டு வருகிறாரோ அவருக்குச் செலுத்தத் தக்க பத்திரங்கள் இவை. அன்னாரின் பெயர் கடனீட்டுப் பத்திரப் பதிவேட்டில் இடம் பெறுவதில்லை. இவை வைத்திருப்போர் கடனீட்டுப் பத்திரங்கள் என சொல்லப்படுகின்றன. வட்டி பெறுவதற்கான சீட்டுகள் (Coupons) இப்பத்திரங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். வட்டி செலுத்தற்குரிய நாளில், பத்திரத்தை வைத்திருக்கும் நபரிடமிருந்து, வட்டிக்கான சீட்டைப் பெற்றுக் கொண்டு வட்டித்தொகை செலுத்தப்படும். கொணர்பவர் கடனீட்டுப் பத்திரத்தை மாற்றுவதன் மூலம் பிறருக்கு மாற்றி தரலாம். பிணைக் கடனீட்டுப் பத்திரங்கள் (Secured Debenture) அல்லது அடைமானக் கடனீட்டுப் பத்திரங்கள் (Mortgage Debentures) நிறுமத்தின் முழுச் சொத்துக்களை அல்லது அவற்றுள் ஒருபகுதியை அடைமானமாக்கி அல்லது அவற்றின் மீது பிணையாகப் பொறுப்பு ஏற்படுத்தி வழங்கப்படும் கடனீட்டுப் பத்திரங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. நிலம் மற்றும் கட்டிடங்கள் போன்ற குறிப்பிட்ட நிலைச் சொத்துக்களை ஈடாக அடைமானம் செய்யப்பட்டிருப்பின், அது குறிப்பிட்ட பொறுப்பு எனப்படும். அவ்வாறின்றி நாள்தோறும் மதிப்பு மாறக்கூடிய சரக்கிருப்பு, ரொக்கம் போன்ற சொத்துக்கள் மீது பொறுப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பின் அது மாறுபடும் பொறுப்பு (Floating Charge) எனப்படும். பிணையற்ற அல்லது வெற்றுக் கடனீட்டுப் பத்திரங்கள் (Unsecured or Naked Debentures) நிறுமம் தன் சொத்துக்களை ஈடாகக் காட்டாமல், அவற்றைப் பிணையாக ஏற்படுத்தாமல் வெளியிடும் கடனீட்டுப் பத்திரங்கள் பிணையற்ற அல்லது வெற்றுக் கடனீட்டுப் பத்திரங்கள் எனக் கூறப்படுகின்றன. இவ்வகைப் பத்திரங்களை வைத்திருப்பவர் பிணை பெறாக் கடனீந்தோர் (Unsecured) நிலையில் உள்ளனர். மீள்தகு கடனீட்டுப் பத்திரங்கள் (Redeemable Debentures) குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பின் அல்லது நிறுமம் விரும்பியபோது கடனீட்டுப் பத்திரங்களை நிறுமம் மீட்டுக்கொள்ளக் கூடியதாக இருப்பின், அவை மீள்தகு கடனீட்டுப் பத்திரங்கள் எனப்படுகின்றன. மீள்தகா அல்லது நிலைக் கடனீட்டுப் பத்திரங்கள் (Incredeemable or Perpetual Debentures) கடனீட்டுப் பத்திரங்களை எப்பொழுதும் மீட்கவே முடியாது, அதாவது இக்கடனை நிறுமம் அடைக்க வேண்டியதில்லை என்ற பொருளை இவை உணர்த்துவதில்லை. இவற்றிற்குரிய பணத்தைப் பட்டுவாடா செய்து மீட்பதற்குக் காலக்கெடு எதுவும் குறிக்கப்படவில்லை ஆனால் இவ்வகைக் கடனீட்டுப் பத்திரங்களை, இவற்றின் மீது வட்டியைச் செலுத்த நிறுமம் தவறும்பொழுது மற்றும் நிறுமம் கலைப்பிற்குள்ளாகும்போது கட்டாயம் நிறுமம் மீட்டாக வேண்டும். மாற்றற்குரிய கடனீட்டுப் பத்திரங்கள் (Convertible Debentures) இவ்வகையான கடனீட்டுப் பத்திரங்கள் இதனை வைத்திருப்போர்க்கு ஒரு மாற்றுரிமையைத் தருகின்றன. அதாவது, குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர், குறிப்பிட்ட விகிதத்தில் இவ்வகைக் கடனீட்டுப் பத்திரங்களைக் கொடுத்துவிட்டு நிறுமத்தின் நேர்மைப் பங்குகளாகவோ முன்னுரிமைப்பங்குகளாகவோ மாற்றிக்கொள்ளலாம். இத்தகைய கடனீட்டுப் பத்திரதாரர்கள் மாற்றற்குரிய உரிமையைப் பயன்படுத்தின், நிறுமத்தின் கடனீந்தோர் என்ற நிலை மாறி, அதன் உறுப்பினர்கள் என்ற தகுதியைப் பெறுகின்றனர். இவ்வாறு மாற்றற்குரிய கடனீட்டுப் பத்திரங்கள் முழுவதும் மாற்றற்குரியதாக இல்லாமல், அவற்றின் ஒரு பகுதி மட்டும் மாற்றற்குரியதாகவும் (partly convertible) இருக்கலாம். மாற்ற இயலா கடனீட்டுப் பத்திரங்கள் (Non convertible Debentures) தங்கள் கடனீட்டுப் பத்திரங்களைக் கொடுத்துவிட்டு, மாறாக நேர்மை அல்லது முன்னுரிமைப் பங்குகளாக மாற்றிக்கொள்ளக்கூடிய உரிமை, கடனீட்டுப் பத்திரதாரர்கட்கு இல்லையெனில், அத்தகைய கடனீட்டுப் பத்திரங்கள் மாற்ற இயலாக் கடனீட்டுப் பத்திரங்கள் எனப்படும். ஆதாரம் – தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சசி மையம்