அறிமுகம்

நாம் நகரத்தின் உயரமான ஒரு இடத்தில் இருந்து இரவு நேரத்தில் அந்நகரத்தைப் பார்க்கும் பொழுது, அங்குள்ள வீடுகளிலிருந்தும், தெருக்களிலிருந்தும் ஒளிரும் விளக்குகளின் வெளிச்சத்தைக் காணலாம். இவ்வெளிச்சம் குடியிருப்பின் வடிவமைப்பை எடுத்துக்காட்டுவதாக அமைகின்றது. விளக்குகளின் வெளிச்சம் பரவலாக இருப்பின் அது பெரிய நகரமாக இருக்கும். வெளிச்சங்கள் பரவலாகத் தெரியாப் பகுதிகள் கிராமங்களாகவோ, திறந்த வெளிகளாகவோ அல்லது வயல்வெளிகளாகவோ அமையும். பொதுவாக இந்த விளக்குகளின் ஒளி ஏதோ ஒருவித அமைப்பைக் கொண்டதாகக் காணப்படும். இத்தகைய அமைப்பினை புவியியலார் முறைப்படுத்தியுள்ளனர். குடியிருப்பின் அமைப்புகள், செயல்பாட்டின் அடிப்படையில் முறைப்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு குடியிருப்பின் வடிவமைப்பு, மலைகள், நீர்நிலைகள், சமவெளிகள், ஏனைய இயற்கைத் தோற்றங்களைச் சார்ந்து அமைகின்றது. உலகின் எல்லாப் பகுதிகளிலும், ஒரே மாதிரியான குடியிருப்புகளைக்காண இயலாது. அவைகள் இடத்திற்கிடம் மாறுபடுகின்றன. குடியிருப்புகள் மாறுபட்டு காணப்படுவதற்குப் பல காரணிகள் உள்ளன. இக்காரணிகளை ஆராய்வதற்கு முன்னர், குடியிருப்புகளின் தோற்றத்திற்கான காரணங்களை நாம் தெரிந்து கொள்வது அவசியம் ஆகும்.

குடியிருப்பின் தோற்றம்

பழங்கால மனிதன் நாடோடியாகத் திரிந்திருந்த காலத்தில் நிலையாகத் தங்குவதற்கு சமயம், கலாச்சாரம், இராணுவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் போன்றவைகள் காரணங்களாக அமைந்தன. இறந்தவர்களை புதைப்பதற்காகவும் அவர்களுக்குரிய சடங்குகளை மேற்கொள்வதற்காகவும், நிலையான ஒரிடத்தை ஏற்படுத்தினர். காலப்போக்கில், அவ்விடங்கள் சமய முக்கியத்துவம் பெற்ற இடங்களாயின. ஆண்கள் உணவிற்காக இடம் விட்டு இடம் பெயரும்பொழுது, பெரியவர்களும், பெண்களும், குழந்தைகளும் ஒரிடத்தில் நிலையாகத் தங்கி வீட்டிற்குத் தேவையானவைகளை உற்பத்தி செய்தனர். இவைகள் நாளடைவில் கலாச்சார முக்கியத்துவம் பெற்ற குடியிருப்புகளாக மாற்றமடைந்தன.

நிலையாகத் தங்க ஆரம்பித்த மதத் தலைவர்கள், ஆசிரியர்கள், பெண்கள், மற்றும் குழந்தைகள் ஆகியவர்களைக் காக்க பாதுகாப்பான சுவர்களை அமைத்தனர். வீரர்களை நியமித்து அவர்களுக்கானக் குடியிருப்புகளையும் அமைத்தனர். எனவே, அரசியல் மற்றும் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த குடியிருப்புகள் முதலில் தோன்றலாயின.

குடியிருப்பில் நிலையாகத் தங்க ஆரம்பித்தவர்களுக்காகவும் மனிதர்கள் உணவினைத் தேடவேண்டிய தேவை ஏற்பட்டது. எல்லாக் காலங்களிலும் தேவையான அளவு உணவு சேகரிக்க முடியவில்லை. எனவே உணவு கிடைக்கும் காலத்தில் அவற்றைச் சேகரித்து, சேமித்து வைக்க, சேமிப்புக் கிடங்குகள் ஏற்படுத்தப்பட்டன. இத்தகைய இடங்கள் நாளடைவில் பொருளாதார முக்கியத்துவம் பெற்ற குடியிருப்புகளாயின. பிறகு படிப்படியாக அனைவரும் நாடோடி வாழ்க்கையை விட்டு ஒரிடத்தில் நிலையாகத் தங்கத் துவங்கினர். இவ்வாறாகத்தான் நிரந்தரமான குடியிருப்புகள் தோன்றலாயின.

குடியிருப்பு

மனிதனின் வாழ்விடங்களே குடியிருப்புகள் என அழைக்கப்படுகின்றன. குடியிருப்புகள் ஒவ்வொன்றும் புவி மற்றும் இயற்கைச் சூழலின் மீது மனிதனின் ஆதிக்கத்தினை வெளிப்படுத்தும் முத்திரையாக விளங்குகின்றன. குடியிருப்புகள் அனைத்திற்கும் அமைவிடங்கள் உண்டு. அந்த அமைவிடத்தின் பண்புநலன்கள் குடியிருப்புக்கு ஒரு வடிவமைப்பைத் தருகின்றன.

தலமும் சூழலமைவும்

குடியிருப்பின் அமைவிடம் இரண்டு காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றன. அவையாவன: தலம் மற்றும் சூழலமைவு.

தலமும், சூழலமைவும் கொண்ட குடியிருப்புகள் அமைப்பிலும் பண்பிலும் ஒன்றாகவே இருக்கின்றன. அமைவிடங்களின் பண்பையும், பரவலையும் தெரிந்துகொள்ள வகை செய்வது குடியிருப்புப் புவியியலின் நோக்கங்களில் ஒன்றாகும். மலைச்சரிவு, மலை உச்சி, குன்று, ஆற்றுப் பள்ளத்தாக்கு, ஆற்றுத் திடல், நீருற்று, குளம், சாலைகள் கூடுமிடம் மற்றும் சமய கட்டுமானங்கள் ஆகியவைகள் குடியிருப்புகள் அமைகின்ற முக்கியத் தலங்களாகும்.

தலம்

ஒரு குடியிருப்பு அமையும் இடம் தலம்’ எனப்படும். குடியிருப்புத் தலங்களின் சிறப்பையும் அவற்றின் வசதிகளையும் அறிந்து கொண்டால், அவைகள் அங்கு தோன்றியதற்கான காரணம் புரிந்து விடும். அக்காரணங்கள், குடியிருப்புகள் தோன்றுவதற்கு மட்டுமே உதவியாக இருக்கின்றன. வளர்ச்சியடைந்த பிறகு, அவை முக்கியத்துவம் இழந்து விடுகின்றன. எடுத்துக்காட்டாக, நீர் கிடைப்பதால் ஒரு குடியிருப்பு ஒரு குளத்தைச் சுற்றி உருவாகலாம். ஆரம்பத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்த ஒரு குளம், காலப்போக்கில் மக்கள்தொகை பெருக்கத்தினால் முக்கியத்துவத்தை இழந்துவிடலாம். இருப்பினும் அக்குடியிருப்புகள் இடம் பெயர்வதில்லை. ஆனால் புதிய நீர்நிலைகளை உருவாக்கிக் கொள்கின்றன. எடுத்துக்காட்டாக, கிணறுகள், குளங்கள் எனப்புதிய நீர்நிலைகள் தோன்றக்கூடும்.

வணிகத்தலம்

வேளாண் தொழிலில் விளைநிலங்களுக்கு அருகிலேயே உற்பத்திப் பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டன. இதனால், பண்ணைக் குடியிருப்புகள் விளைநிலங்களையே தலமாகக் கொண்டமைந்தன. பின்னர், இயந்திர விவசாயத்தினால் தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்த தானியத்தை விற்கவேண்டி வந்தது. எனவே, தானிய மூட்டைகள் பண்ணையிலிருந்து வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன. இவ்வாறு பல பண்ணைகளிலிருந்து உபரி தானியங்கள் ஒரு கிராமத்தில் சேகரிக்கப்பட்டன. இவ்வாறு சேகரிக்கப்பட்ட ஒரு கிராமத்தில் முறையான வணிகம் நடைபெறும்போது, அக்கிராமம் ஒரு வணிகத் தலமாக மாறிவிடுகின்றது.

வணிகக் குடியிருப்புகளில் பொருட்களை ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவதற்காக போக்குவரத்துச் சாலைகள் தேவைப்பட்டன. இதனால் உபரி உற்பத்தி உள்ள பகுதிகளில் வணிகத்தைப் பணியாகக் கொண்ட பல குடியிருப்புகள் தோன்றலாயின. ஆற்றங்கரை ஒரங்களிலும் பெரிய சாலை ஓரங்களிலும், பல முக்கிய சாலைகள் கூடுமிடத்திலும், இருப்புப் பாதைகள் இணையுமிடத்திலும் வணிகத்தை ஆதாரமாகக் கொண்டு பல குடியிருப்புகள் தோன்றலாயின.

சூழலமைவு

சூழலமைவு என்பது குடியிருப்பைச் சுற்றியுள்ள நிலத்தின் அமைப்பு மற்றும் சூழ்நிலையைக் குறிக்கும். நிலத்தோற்றம் மட்டுமன்றி சூரிய ஒளி, நீர்நிலத்தில் ஏற்படும் இடர்பாடுகள், சமூகநிலை போன்றவைகளும் சூழலமைவினைக் குறிக்கின்றன. ஐரோப்பிய நாடுகள் உயர் அட்ச மிதவெப்ப மண்டலத்தில் இருப்பதால், அங்கு வாழும் மக்களுக்கு வெப்பம் மிகவும் தேவைப்படுகின்றது. எனவே, அவர்கள் தங்களுடைய வீடுகளை கிழக்கு நோக்கிக் கட்டிக் கொள்கிறார்கள். இந்தியா ஒரு பருவக்காற்று நாடாக இருப்பதினால், தெற்குத் திசையை நோக்கி வீடுகள் அமைக்கப்படுகின்றன.

இதேபோன்று, நீர்நிலைகளும் வீடுகள் அமையக் காரணமாக உள்ளன. இக்காலத்தில் வளர்ச்சி பெற்றுள்ள பல பெரிய நகரங்கள், நீர் நிலைகளுக்கு அருகே அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக, தேம்ஸ் நதிக்கரை சூழலமைவிலுள்ள இலண்டன் மாநகரத்தைக் கூறலாம். ஆற்றுச் சமவெளிகளிலும், வண்டல் விசிறிகளிலும் அடிக்கடி வெள்ளம் வருகின்ற காரணத்தினால் குடியிருப்புகள் அவ்விடங்களை விட்டு சற்று உயரமான இடத்தில் அமைகின்றன. எடுத்துக்காட்டாக, இந்தியாவில் யமுனை, சம்பல் நதி வெள்ளச் சமவெளிகளில் பள்ளத்தாக்குகளுக்கு இடையிலுள்ள மேட்டு நிலத்தில் குடியிருப்புகள் அமைந்துள்ளன.

தலம் மற்றும் சூழலமைவு ஆகியவற்றின் தனித்தன்மையினால் குடியிருப்புகளுக்கு சிறப்புத் தோற்றங்கள் கிடைக்கின்றன. மலைகள், பள்ளத்தாக்குகள், ஆறு போன்ற இயற்கைச்சூழல் அமைப்புகளைப் போல மனிதனால் உருவாக்கப்பட்ட, கலாச்சாரத் தோற்றங்களும் நிலத்தோற்றத்தின் பகுதிகளாக விளங்குகின்றன.

இதுவரை தலமும் சூழலமைவும் எவ்வாறு குடியிருப்பின் வடிவமைப்பை நிர்ணயிக்கின்றன என்பதைப் படித்தோம். இவ்வாறே, குடியிருப்பின் செயல்பணிகளை அடிப்படையாகக் கொண்டு அவைகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். அவையாவன: நாட்டுப்புறக் குடியிருப்பு மற்றும் நகர்ப்புறக் குடியிருப்பு நாட்டுப்புறக் குடியிருப்பு - கிராமிய வடிவங்கள் நாட்டுப்புற குடியிருப்பில் பல வடிவங்கள் உள்ளன. தனித்த பண்ணைவீடுகள் மற்றும் குக்கிராமம் ஆகியவைகளும் நாட்டுப்புற குடியிருப்பினைச் சார்ந்தவை. எனினும், நாட்டுப்புற குடியிருப்பின் முக்கியத் தோற்றமாகக் காணப்படுவது கிராமங்களாகும். நமது இந்தியாவும் கிராமங்கள் நிறைந்த நாடு. கிராமங்களை அவை அமைந்திருக்கும் தலம், சூழல், அளவு, மற்றும் வடிவம் ஆகியவைகளைக் கொண்டு பின்வருமாறு பிரிக்கலாம்.

நெருக்கமான கிராமம்

இந்த வகை கிராம அமைப்பில், கட்டிடங்களும், வீடுகளும் அருகருகே காணப்படும். மக்கள்தொகைச் செறிவு இவ்வகை கிராமத்திற்கு மறைமுகக் காரணியாகும்.

மையக்கரு கிராமம்

இவ்வகைக் கிராமங்கள் ஏதாவது ஒன்றை மையக்கருவாகக் கொண்டு வளர்ச்சி பெறுவன ஆகும். மையக்கருவாகக் குளம், ஏரி, கோவில் போன்றவை அமையலாம். இம்மையத்தைச் சுற்றி சாலைகளும், கட்டிடங்களும் மிகவும் நெருக்கமாக அமைகின்றன. பாலைவனத்தில் காணப்படும் பாலைவனச் சோலையைச் சுற்றிலும் குடியிருப்புகள் காணப்படும். இக்குடியிருப்புகளுக்கு மையக்கருவாக விளங்குவது நீர்நிலையாகும். தமிழ்நாட்டில் கோயிலை மையமாகக் கொண்டு வளர்ச்சியடைந்த நகரம் மதுரையாகும். இதை போன்றே கோட்டையையும், அரண்மனையும் மையமாகக் கொண்டு வளர்ச்சி பெற்ற குடியிருப்புகள் இந்தியாவில் ஏராளமாக உள்ளன. எடுத்துக்காட்டு, செயின்ட் ஜார்ஜ் கோட்டை சென்னை மாநகரத்திற்கு மையக்கருவாக இருந்தது பலருக்கு தெரிந்ததே.

தொகுப்பு அல்லது கொத்தாக அமைந்த கிராமம்

ஒரு கிராமத்திலிருந்து ஒரு குடும்பம் பிரிந்து சென்று வேறொரு இடத்தில் தனது குடியிருப்பை அமைக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். காலப்போக்கில், அதன் அருகில் பல வீடுகள் உருவாகி அது ஒரு கிராமமாகின்றது. இவ்வாறு ஒரு கிராமத்தின் அருகில் பல குடியிருப்புகள் தோன்றுகின்றன. நாளடைவில் அனைத்து குடியிருப்புகளும் கொத்தாக அமைந்த கிராமமாக மாறுகின்றன.

இரட்டை கிராமங்கள்

இவ்வகைக் குடியிருப்புகள் குழுமியதாகக் காணப்பட்டாலும், இரண்டு பகுதிகளாகக் காணப்படும். இவை ஒரு பாலத்தின் இரண்டு பக்கங்களிலோ அல்லது செங்குத்துச் சரிவின் மேல்பகுதி, கீழ்ப்பகுதிகளிலோ காணப்படும். சில வேளைகளில் இவைகள் தனித்தனியாக வளர்ச்சியடைந்து இருக்கும். ஒரே பெயரைக் கொண்டு இந்த இரட்டை கிராமங்கள் கீழ், மேல், கிழக்கு, மேற்கு என்ற அடை மொழியுடன் காணப்படும். அல்லது இரண்டு வேறுப்பட்ட பெயர்களைக் கொண்டதாகக் காணப்படும்.

நகர குடியிருப்புகள்

நகரக் குடியிருப்புகள் நாட்டுப்புற குடியிருப்புகளிலிருந்து மாறுபட்டவை. இவற்றில் உள்நாட்டில் முக்கியத்துவம் பெற்ற நகரங்களும், உலக அளவில் முக்கியத்துவம் பெற்ற நகரங்களும் உள்ளன. பழைய நகரங்கள், பழைய வேளாண் பகுதிகளிலிருந்து தோன்றியவை ஆகும். நவீன நகரங்கள் தொழில் வளர்ச்சியின் அடிப்படையில் இருபதாம் நூற்றாண்டில் தோன்றியவை. நகரங்கள் பலவிதமானப் பொருளாதார, சமூக சேவைகளைத் தருகின்றன. இதனால் பலவகையான நகரங்கள் தோன்றலாயின. அவை சுரங்கத்தொழில் நகரங்கள், கடற்கரை நகரங்கள் பொழுதுபோக்கு நகரங்கள் மற்றும் பல்கலைக் கழக நகரங்கள் போன்றவைகளாகும். பெரும்பாலான நகரங்கள் நெருக்கமான தெருக்களையும், உயரமானக் கட்டிடங்களையும் கொண்டதாகக் காணப்படுகின்றன. அவைகள் அதிக மக்கள் அடர்த்தியும் வேளாண்மையற்ற பிற செயல்களைக் கொண்டதாகவும் இருக்கின்றன. இருந்த போதிலும் மக்கள் பல்வேறு குழுக்களாக இணைந்து வாழ்கின்றனர். ஆனால் அவர்களிடையே நெருக்கமான சமூக உறவுகள் இல்லை. மனித நகர்வுகளும், சமூக நிலைத்தன்மையும், பல வகுப்பு அமைப்புகளும், வேறுபட்ட செல்வ நிலையுடைய மக்களும் கொண்டவை தான் நகரங்களின் பண்புகளாகும்.

நகரங்களின் வகைப்பாடு

நகர்ப்புறத்தை வேறுபடுத்துவதற்கு உலகின் எல்லா பகுதிகளுக்கும் பொருந்தக்கூடிய முறை எதுவுமில்லை.

ஒவ்வொரு நாடும் தனித்தனி முறைகளைப் பின்பற்றி வகைப்படுத்துகின்றன.

அவை

செயல்பாடுகள்,

மக்கள் எண்ணிக்கையின் அளவு,

நிர்வாக அமைப்புகள் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன. இந்தியா, இஸ்ரேல், இத்தாலிபோன்ற நாடுகளில் நகர்புறங்கள் வேளாண்மையல்லாத வேறு தொழில்களை மேற்கொண்டிருக்கும். அதே சமயத்தில் அதிகமான மக்கள் தொகை கொண்ட டென்மார்க், ஸ்வீடன், பின்லாந்து போன்ற நாடுகளில் நகர்ப்புறங்களின் மக்கள் எண்ணிக்கை ச.கி.மீட்டருக்கு 250 பேர்களுக்கு குறைவாகவே உள்ளன. ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குடியிருப்புகளை நகர்ப்புறம் என்றே அழைக்கின்றனர்.

எனவே நகரக் குடியிருப்புகளின் வகைகளும், வரையறைகளும் இடத்திற்கிடம் அவற்றின் செயல்பாடுகளுக்குத் தக்கவாறு மாறுபடுகின்றன.

மில்லியன் நகரங்கள்

ஒரு மில்லியன் அல்லது மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்களை 'மில்லியன் நகரங்கள்’ என்று கூறலாம். 1800 ஆம் ஆண்டில் இலண்டனும், 1850 - இல் பாரிசும், 1870 இல் நியூயார்க்கும் மில்லியன் நகரங்களாக இருந்தன. 1970 இல் 129 மில்லியன் நகரங்களும் தற்போது 180 மில்லியன் நகரங்களும் உலகில் உள்ளன. மில்லியன் நகரங்கள் பெரும்பாலும் நாட்டின் தலைநகரங்களாகவும், வணிகத் துறைமுகங்களாகவும், மேலும் பல செயற்பணிகளைக் கொண்டவையாகவும் காணப்படுகின்றன. சில குடியிருப்புகள் பழைய தலைநகரங்களாகும். எடுத்துக்காட்டாக, லெனின் கிராடு, ரியோடி ஜெனிரோ மற்றும் கொல்கத்தா.

நகரத்தின் வளர்ச்சியும் பிரச்சனைகளும்

ஒரு நகரத்தின் வளர்ச்சி அந்நகர மக்கள்தொகைப் பெருக்கத்தையும், அதன் விளைவாக ஏற்படும் நகர பரப்பளவின் அதிகரிப்பையும் பொருத்து அமையும். நகரங்களில் மக்கள்தொகை இரண்டு வழிகளில் பெருகுகின்றது. முதலாவதாக, இயற்கையான மனித இனப்பெருக்கம், இரண்டாவதாக கிராமங்களில் இருந்து வரும் குடியேற்றத்தால், மக்கள் தொகை பெருகிக் கொண்டு வருகின்றது. இதன் விளைவாக நகரின் எல்லைகளும் வெளிநோக்கி விரிவடைந்து வருகின்றன. இதனால் நகரில் வேலையில்லாத் திண்டாட்டம்,போக்குவரத்து நெரிசல், காற்று மாசடைதல் மற்றும் சுற்றுப்புறம் மாசடைதல் என்பவற்றால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

கிராம மக்களின் குடியேற்றம்

கிராம மக்கள் வேலைவாய்ப்பைத் தேடியும் பல்வேறு காரணங்களுக்காகவும் நகரங்களில் குடியேறுகின்றனர். கிராம மக்களின் நகரக்குடியேற்றம் எப்பொழுதும் பொருளாதாரத்தின் அடிப்படையில் அமைவதில்லை. இன்றைய தலைமுறையினர் கல்வி, நிர்வாகம் மற்றும் ஏனைய காரணங்களுக்காகவும் குடிபெயருகின்றனர். குறிப்பாக மேற்படிப்பிற்காகவும், வேலைவாய்ப்பிற்காகவும் நகரத்தை நோக்கி பெரும் எண்ணிக்கையில் நகருகின்றனர். சென்னை மாநகர மக்கள் எண்ணிக்கை இவ்வாறே நாளுக்கு நாள் பெருகி வருகின்றது.

எந்த ஒரு நகரவளர்ச்சியிலும் புறநகர்பகுதியின் வளர்ச்சியும் இணைந்தே காணப்படுகின்றது. நகரத்திலிருந்து வெவ்வேறு திசைகளில் செல்லும் நெடுஞ்சாலையை ஒட்டியே புறநகர் முதன்முதலில் வளர்ச்சி பெறுகின்றது. போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமே இத்தகைய வளர்ச்சிக்குக் காரணமாகும். இதனால் நகரங்களின் மையங்களில் இடநெருக்கடி காரணமாக மக்கள் நகரின் விளிம்புப் பகுதியை நோக்கி நகருகின்றனர். அதே சமயத்தில் மாநகருக்கு அருகில் உள்ள சிறுநகரங்களிலும், கிராமங்களிலும் மாநகர மக்கள் வீடுகளைக் கட்டிக் கொள்கிறார்கள். இதன் விளைவாக நகரின் பரப்பளவு பெருகி விடுகின்றது.

எடுத்துக்காட்டாக, நமது சென்னை மாநகரின் பரப்பளவும் மக்கள் தொகையும் ஆண்டுக்காண்டு வளர்ச்சியடைந்து வருகின்றன. 1971இல் 120 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் 3.5 மில்லியன் மக்கள் தொகையும் கொண்டிருந்த சென்னை மாநகரம் 1991 இல் 175 சதுர கிலோ மீட்டரும் 5.4 மில்லியன் மக்கள் தொகையும் கொண்டதாக வளர்ந்துள்ளது. மாநகராட்சி, பெருகிவரும் மக்கட்தொகைக் கேற்ப வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கத் திட்டமிட்டு செயல்படுகின்றது. அடிப்படை வசதிகளான குடிநீர் வழங்குதல், கழிவுநீர் கால்வாய் அமைத்தல், சாலைப் போக்குவரத்து வழிகளை ஏற்படுத்துதல் பராமரித்தல் போன்றவைகளைச் செய்கின்றது. ஆனாலும் போக்குவரத்து நெரிசல்கள் அதிகமாகி விபத்துகள் ஏற்படுகின்றன. இவைகளைத் தடுக்க நகரைத் திட்டமிடுபவர்கள், சாலை வழிகளின் குறுக்கே சுரங்கப்பாதைகள் அமைத்தல், ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்துதல், பெரிய வாகனங்களை நகரின் விளிம்பு பகுதிகளில் மட்டுமே செல்ல அனுமதித்தல் போன்றவற்றை மேற்கொள்கிறார்கள்

மாசடைதல்

நகரவளர்ச்சியில் மற்றொரு பிரச்சனை மாசடைதல் ஆகும். பெரிய நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகள், காற்று, நீர் ஆகியவை பல வழிகளில் மாசடைகின்றன. நகரங்களில் காணப்படும் தொழிற்சாலைகளிலும், வாகனங்களிலும், இருந்து வரும் புகை, தூசுகள் ஆகியவை காற்றை மாசடையச் செய்கின்றன. தொழிற்சாலை கழிவுகளும். வீட்டுக் கழிவுகளும், கடல், ஆறுகள் போன்ற நீர்நிலைகளில் கலப்பதால் நீர் மாசடைகின்றது. மேலும் பலவிதமான வாகனங்களாலும், தொழிற்சாலைகளாலும் ஏற்படும் ஒசைகள் அமைதியான சூழலைப் பாதிக்கின்றன. வாகனங்களிலிருந்து வரும் பல வகையான சப்தங்கள் மனித அமைதிக்கு கேடு விளைவிப்பவையாக உள்ளன. இதனால், காது கேளாமை, மன உளைச்சல், பய உணர்வு போன்றவைகள் நிகழ்கின்றன.

குடியிருப்புகள் அமைவதில் வசதிகளும் சேவைகளும் மிக முக்கியமானவை. அவ்வாறே ஒரு குடியிருப்பு அமைந்த பின்னர் ஒருசில வசதிகளையும் சேவைகளையும் தன்னுள் கொண்டதாக அமைகின்றது. ஆனால், இம்மாதிரியான வசதிகளும் சேவைகளும் குடியிருப்பின் அளவு, மக்கள்தொகை, அவற்றின் தேவை, வருமானம், பொருட்கள் வாங்கக் கூடிய திறன் என்பதான பல கூறுகளைச் சார்ந்து அமைகின்றன. ஒரு இடத்தின் வசதிகள் மற்றும் சேவைகள் குறித்து குடியிருப்புகள் சார்ந்த ஒரு கோட்பாடுதான் மைய இடக் கோட்பாடு என்பதாகும்.

மைய இடக்கோட்பாடு

குடியிருப்பு ஒரு மைய இடம்

மைய இடக்கோட்பாட்டின் படி ஒரு மைய இடம் அங்குள்ள மக்களுக்கும் சுற்றுப்புறத்திலுள்ள மக்களுக்கும் சேவைகளைச் செய்கின்றது. இம்மையத்தின் சேவைகளாகக் கடைகள், சந்தைகள், நிர்வாகங்கள், கேளிக்கைக் கூடங்கள் ஆகியவை காணப்படும். ஒரு மைய இடத்தின் சேவைகளில் வேறுபாடுகள் இருப்பினும் பெரிய குடியிருப்புகள் யாவையும் மைய இடங்கள்தான். எடுத்துக்காட்டாக, பெங்களூர், கோயம்புத்துார் இரண்டும் ஏறக்குறைய ஒரே அளவான நகரங்களாக இருப்பினும், பெங்களூர் சேவை அமைப்புகளினால், கோயம்புத்தூரின் நகரச் சந்தையை விட முக்கியமானதாக இருக்கின்றது. எல்லாக் குடியிருப்புகளும் மைய இடங்கள் எனக் கூற இயலாது. தனித்த பண்ணைகள், குக்கிராமங்கள், கிராமங்கள் ஆகிய குடியிருப்புகள் சேவைப்பணிகளைக் கொண்டிருப்பதில்லை. எனவே இவ்வகை குடியிருப்புகள் அருகில் உள்ள மைய இடங்களைச் சார்ந்தே உள்ளன.

குடியிருப்புகள் அதன் உருவத்திலும் முக்கியத்துவத்திலும் வேறுபடுகின்றன. இவ்வேறுபாடுகளைக் கண்டறிவதில் பிரச்சனைகள் உள்ளன. குடியிருப்புகளின் மக்கள் தொகையை அளவீடுகளைப் பயன்படுத்தி அறியலாம். இதைப்போன்றே, சேவைகளின் வகைகள், எண்ணிக்கைகள் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை ஆகியவற்றை அறிய அளவீடுகளைப் பயன்படுத்தலாம். இந்த அளவீடுகள் ஒன்றுக்கொன்று நெருக்கமானது. அதிக மக்கள்தொகை கொண்ட குடியிருப்புகளில் அதிக எண்ணிக்கையுள்ள பல வகையான கடைகளும், ஏனைய சேவைகளும், வேலை வாய்ப்புகளும் காணப்படும்.

குடியிருப்புகளை அவைகளின் அளவு மற்றும் முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு நான்கு படிநிலைகளாக வரிசைப்படுத்தலாம். இவ்வாறாக வரிசைப்படுத்தப்படும் குடியிருப்புகளில் பெரியதும் முக்கியத்துவம் வாய்ந்த குடியிருப்புகள் மேல் மட்டத்திலும், சிறியதும் குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த குடியிருப்புகள் கீழ்மட்டத்திலும் காணப்படும். இதனைக் குடியிருப்புகளின் படிநிலை என அழைக்கின்றார்கள். இந்த படிநிலையில் அதிக எண்ணிக்கையில் குக்கிராமங்களும், கிராமங்களும் அடிமட்டத்தில் (படிநிலை நான்கு) காணப்படும். குறைந்த எண்ணிக்கையில் நகரங்களும் பெரிய நகரங்களும் கீழ்மட்டத்தில் (படிநிலை மூன்று) காணப்படும். சிறிய மற்றும் நடுத்தர நகரங்கள் மத்தியில் (படிநிலை இரண்டு) காணப்படும். குடியிருப்புப் படிநிலையின் மேல்மட்டத்தில் மாநகரங்கள் காணப்படும். எடுத்துக்காட்டாக, சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய குடியிருப்புகள் மேல்மட்டத்தைச் சார்ந்தவை ஆகும்.

வால்டர் கிறிஸ்டாலர் என்ற அறிஞர்தான் இம்மைய இடக்கோட்பாட்டை வெளியிட்டார். இக்கோட்பாடு குடியிருப்புகளின் அளவு மற்றும் இடைவெளிகளை விளக்குகின்றது. மலிவாகவும் தரமாகவும் பொருட்களை மற்றும் சேவைகளை மக்களுக்கு அளிப்பதை நோக்கமாகக் கொண்ட குடியிருப்புகள் எவ்வாறு பரவியிருத்தல் வேண்டும் என்பதை இக்கோட்பாடு தெளிவுபடுத்துகின்றது. மக்களுக்குத் தேவையான பொருட்களை மிக அருகாமையிலேயே பெறச் செய்வதன் மூலம் குடியிருப்பு பரவலைத் தரமானதாகச் செய்யலாம். குடியிருப்பின் வடிவமைப்புகளில் காணப்படும் தூரத்தின் செல்வாக்கினை மதிப்பீடு செய்வதற்காக பல எளிதான கருத்துகள் இக்கோட்பாட்டில் கூறப்பட்டுள்ளன.

எல்லா குடியிருப்புகளையும் மைய இடங்கள் எனக் கருதலாம். பொருட்களையும் சேவைகளையும் தருவதே அவைகளின் முக்கியப் பணியாகும்.

மக்கள் தேவைகளுக்காகப் பொருட்களையும் சேவைகளையும் அருகில் உள்ள குடியிருப்புகளில் இருந்தே பெரும்பாலும் வாங்குகின்றனர்.

குடியிருப்புச் சந்தைகள் அறுகோண வடிவமைப்புகள் கொண்டதாக இருக்கும். இக்குடியிருப்பு வளர்ச்சியுறும் பகுதி ஒரு சீரான சமநிலமாகும். இப்பகுதியில் மண், காலநிலை, நிலத்தோற்றம் ஆகியவைகள் சமமாக இருக்கும். மையத்திலிருந்து எல்லாத் திசைகளிலும் போக்குவரத்து செலவு ஒரே மாதிரியாக இருக்கும்.

மக்கள்தொகையும் சரியான இடைவெளியுடன் சீராகப் பரவியிருக்கும். எல்லா இடங்களும் எளிதாக அணுகக் கூடியதாக இருக்கும். மேற்கூறிய மைய இடக்கோட்பாட்டின் கருத்துப் பாவனைகளையும், விதிகளையும் பின்பற்றினால் ஒரு குடியிருப்பின் வடிவமைப்பு எவ்வாறு அமையும் என்பதை மைய இடக்கோட்பாடு விளக்குகின்றது.

இக்குடியிருப்பின் சேவைகளின் எண்ணிக்கையும், வகைகளும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் திறனைப் பொறுத்து அமைகின்றன. ஒவ்வொரு சேவை மையத்திற்கும் அவற்றுக்கு ஏற்ற வாடிக்கையாளர்கள் தேவைப்படுகின்றார்கள். அவர்களின் மிதமான எண்ணிக்கையை அவ்விடத்தின் குறைந்தபட்ச மக்கள்தொகை என அழைக்கிறோம். பெரிய குக்கிராமம் அல்லது கிராமங்களில் அஞ்சல் நிலையம், பெட்டிக்கடைகள், மளிகைக்கடைகள் ஆகிய சேவைகள் காணப்படும். இவைகளின் வழியாக அவசியமானப் பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் குறைவான வாடிக்கையாளர்களே காணப்படுகின்றனர். குறைந்த பட்ச மக்கள்தொகையாக 200 அல்லது 300 நபர்களையே இக்குடியிருப்புகள் கொண்டமையும்.

இதே அடிப்படையில் அதிகபட்ச மக்கள்தொகை கொண்ட ஒரு குடியிருப்பின் சந்தைப் பரப்பு பெரியதாக இருத்தல் வேண்டும். இத்தகைய குடியிருப்பில் விற்கப்படும் பொருட்கள் தேவையானதும் விலை உயர்ந்ததுமான பொருட்களாகவும், ஆடம்பரப் பொருட்களாகவும் இருக்கும். எடுத்துக்காட்டாக, இம்மையங்களில் துணிகள், காலணிகள், மின்சாரக் கருவிகள், மோட்டார் வாகனங்கள் ஆகியவைகள் விற்கப்படலாம். அத்தியாவசியப் பொருட்களோடு ஒப்பிடும் பொழுது, ஆடம்பரப்பொருட்கள் ஒரு சில சமயங்களில் மட்டுமே வாங்கப்படுகின்றன. எனவே மிக முக்கியமான மேல்மட்ட குடியிருப்புகள், கீழ்மட்ட குடியிருப்புகளுடன் ஒப்பிடும்பொழுது பல வகையான ஆடம்பரப் பொருட்களையும் சேவைகளையும் கொண்டிருப்பதுடன், ஒரு பெரிய பரப்பைத் தனது சேவை அல்லது சந்தைப் பரப்பாகவும் கொண்டிருக்கும்.

எவ்வாறு ஒவ்வொரு மைய இடத்திற்கும் ஒரு குறைந்தபட்ச மக்கள் தொகை (threshold) தேவைப்படுகிறதோ, அவ்வாறே ஒவ்வொரு சேவைக்கும் ஒரு குறைந்த பட்ச தூரம் என்பதும் உண்டு. அதாவது ஒவ்வொரு பொருளும் வசதி அல்லது சேவை ஆகியவற்றின் தன்மைக்கேற்றவாறு ஒரு தூரத்திற்குள் மட்டுமே விலை போகின்றது. எடுத்துக்காட்டாக, ஒரு புறநகர் பகுதியில் இருக்கும் பெட்டிக்கடை ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குள் உள்ள மக்களுக்கு வேண்டிய பொருட்களை விநியோகம் செய்கின்றது.

வழக்கமாக இக்கடையில் பொருள் வாங்கும் ஒருவர் கடைக்குச் சென்று தமக்கு மிகவும் வேண்டிய ஒரு பொருளைக் கேட்பதாக வைத்துக் கொள்வோம். கடையின் நிர்வாகியோ, அப்பொருள் தற்போது கடையில் இல்லை எனக் கூறுகின்றார். அப்பொருள் மிகவும் தேவையானதாக இருந்தால்,பொருள் வாங்க வந்தவர் இன்னும் சிறிது தூரம் சென்று இன்னொரு கடையில் வாங்குவதற்கு தயங்கவில்லை எனில் அந்தப் பொருளுக்கு அது "குறைந்தபட்ச வெளிதுரம்” (Outer range of a good) என்ற முடிவுக்கு நாம் வரக்கூடும். இக்கருத்து மையவிடக் கோட்பாட்டின் முக்கியக் கருத்துக்களில் ஒன்றாக அமைகின்றது.

மேலும் கிரிஸ்டாலரின் கோட்பாடு, சந்தைப் பரப்பை அடிப்படையாகக் கொண்டு, குடியிருப்புகளின் நிலையை வகைப்படுத்துகின்றது. இக்கோட்பாட்டினை முழுவதுமாக நகரங்களின் நிலைகளுடன் ஒப்பிடமுடியாது. ஏனெனில் அவர் கூறிய அறுங்கோண வடிவில் இயற்கையில் எந்த நகரச் சந்தைப் பரப்பும் காணப்படவில்லை, மேலும் நிலப்பரப்பில் பலவித நிலத்தோற்றங்கள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, மலை, ஆறு போன்ற இயற்கைத் தோற்றச் சூழ்நிலைகளில் மக்கள்பரவல் சீராக இருப்பதில்லை, இதுபோன்ற பல தோற்றங்களினால் கிறிஸ்டாலர் கோட்பாடு இயற்கையோடு ஒப்பிடும்போது முரண்படுகின்றது. இருப்பினும் கிறிஸ்டாலர் கோட்பாடு குடியிருப்புகளை வகைப்படுத்தப் பயன்படுகின்றது.

உதாரணமாக, தமிழ்நாட்டில் காணப்படும் நகரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது எல்லா மாவட்டத் தலைநகரங்களும் முதல் மட்ட நகரமாகவும் (மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம்) இன்னும் பிற, அதனைச் சுற்றி இரண்டாம் மட்ட நகரங்களாகக் காணப்படுகின்றன. இத்தொடரின் அடுத்த பகுதியில் எஞ்சிய கிராமங்கள் காணப்படுகின்றன.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வி நிறுவனம், சென்னை