முன்னுரை

கடந்த பத்து வருட காலத்தில் இந்தியப் பங்குச் சந்தையில் பங்குப் பத்திரத் தீர்விற்கான நடைமுறைகள் வியக்கத்தக்க மாறுதல்களையும் பல புதிய யுக்திகளையும் சந்தித்து வந்துள்ளது.

இப்போது சந்தையில் வியாபார நாளிலிருந்து இரண்டு நாள் கழித்து (T+2) அனைத்துப் பத்திரங்களையும் தீர்வு செய்யும் முறை நடைமுறையில் இருந்துவருகின்றது. வியாபாரம் செய்யும் உறுப்பினர்களுக்கு தான் செய்யும் வியாபாரத்திற்கான பணத்தையும் / பத்திரங்களையும் இந்த T+2 ஒப்பந்த முறையில் உள் செலுத்துதல் / வெளிசெலுத்துதல் பட்டியல்படி தேசியப் பங்கு மாற்றகம் அறிவிக்கும். வேகமாக அதிகரித்து வரும் வியாபார அளவும், அதையும் விட வேகமாக அடிக்கடி மாறிக்கொண்டே வரும் விலைகளின் வேகமும் சந்தையில் வியாபாரம் செய்யும் நாளுக்கும் தீர்வு செய்யும் நாளுக்கும் இடையேயான காலத்தையும் தீர்வு இடரையும் அதிகரிக்கச்செய்கின்றன. இதை உணர்ந்த பங்கு மாற்றகங்களும் மற்றும் அதன் தீர்வகங்களும் தீர்வுக்கான காலத்தை இடர் மேலாண்மை மூலம் குறிப்பிட்ட நாளில் தீர்வு செய்யும் முறையை உறுதி செய்தது.

சந்தையில் நேர்மை மற்றும் முதலீட்டாளர் நலன் பாதுகாக்கும் வகையில் ஒழுங்குபடுத்துவர்கள் விரிவான முன்வைப்புத் தொகையையும் போதுமான முதலீட்டுத் தொகையின் தரத்தையும் வகுத்துக் கூறி இருக்கிறார்கள். ஒரு தீர்வு நாளன்று யாராவது ஒரு உறுப்பினர் பணம் அல்லது பங்குகளைத் தாராவிட்டாலும் கூட அவரிடமிருந்து பங்கு பணம் பெற வேண்டியவருக்கு அது நிச்சயமாய் கிடைக்குமாறு வழிவகை செய்யப்பட்டுள்ளது. தாராத உறுப்பினரிடமிருந்து பின்னர் அது வசூலிக்கப்பட்டுவிடும். தீர்வகங்கள் நிறுவப்பட்ட பின்னர் பங்குச்சந்தையில் வியாபாரம் செய்யும் அனைவரும் ஏதாவது ஒர் உறுப்பினர் பணம் / பங்குதனைக் கொடுக்கத்தவறினாலும் கூட தமக்கு வரவேண்டிய பங்கோ பணமோ நிர்ணயிக்கப்பட்ட நாளன்று வந்து சேர்ந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் வியாபாரம் செய்ய முடிகின்றது.

மின்னணு முறையில் பத்திரங்கள் மாற்றப்பட்ட பிறகு பங்குகளை ஒருவரிடமிருந்து மற்றொருவர் பெயருக்கு அதிவிரைவாக மாற்றம் செய்ய முடியும். இதன்மூலம் தேசியப் பத்திர வைப்பகம் வரையறுக்கப்பட்டது மற்றும் மத்தியப் பத்திர வைப்பகம் (இந்தியா) வரையறுக்கப்பட்டது என்ற இரண்டு பங்கு வைப்பகங்களும் தற்சமயம் இந்தியாவில் இருக்கும் 99 சதவிகிதப் பங்குகளை தீர்வு செய்கின்றன.

சுறுசுறுப்பாக விற்பனையாகும் அனைத்துப் பத்திரங்களையும் வைத்திருப்பது, வியாபாரம் செய்வது, தீர்வுசெய்வது, யாவும் மின்னணு மூலமே நடைபெறுகிறது. உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் தீர்வு முகமை மூலம் கணினியில் பதிவிறக்கம் செய்யப்படுகிறது. உறுப்பினர்களும் காப்பாளர்களும் தேவையான பத்திரங்களை அவரவர் கணக்குகளில் பங்குவைப்பகப் பங்கேற்பாளரிடம் தீர்வகம் குறிப்பிட்டுள்ள உள் - வரும் காலத்திற்குள் இருப்பு வைத்திருக்க வேண்டும். அப்பங்குவைப்பகம் அப்பங்குகளை உறுப்பினர் / காப்பாளரின் கணக்கிலிருந்து தீர்வகத்தின் குறிப்பிடப்பட்ட தீர்வுக் கணக்கிற்குக் குறிப்பிட்ட நேரத்தில் மாற்றிவிடும். பங்குத் தீர்வகம் தீர்மானித்த பட்டியலின்படி பத்திரங்களை வெளிச்செலுத்தும் நாள் அன்று தீர்வகம் வைத்திருக்கும் தீர்வகக் கணக்கிலிருந்து வைப்பகத்தினால் உறுப்பினர் / காப்பாளர் கணக்கிற்குத் தீர்வகம் அந்தப் பங்குகளை மாற்றிவிடும். அனைத்துத் தீர்வுகளிலும் பத்திரங்கள் உள் வரும் மற்றும் வெளிச் செல்லும் அதே நாளில் நிகழ்ந்து விடும்.

மின்னணு நிதி மாற்றம் செய்வதற்காகத் தீர்வகக் கழகம் ஒரு சில குறிப்பிட்ட வங்கிகளைப் பரிந்துரை செய்துள்ளது. உறுப்பினர்கள் தங்களுடைய வங்கி கணக்குகளை அக்குறிப்பிட்ட வங்கிகளில் தான் பராமரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஒவ்வொரு உறுப்பினரும் எவ்வளவு பணத்தை செலுத்த வேண்டும்? என்று தீர்வகம் மின்னணு மூலம் அவர்களுக்கு தெரிவிக்கும். அவ்வாறு தெரிவிக்கப்பட்ட தொகையை உறுப்பினர்கள் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்தும் நாள் அன்று தேவையான நிதியைத் தயாராக வைத்திருக்க வேண்டும். தீர்வக முகமையாளர் தீர்வக வங்கிக்குச் செலுத்த வேண்டிய நிதியினை அனுப்பி வைப்பார். அதற்காக வங்கி உறுப்பினர் கணக்கைப்பற்று வைத்து முகமையாளர் கணக்கை வரவு வைக்கும். வெளிசெலுத்து நாளன்று, தீர்வு வங்கி முகமையாளர் கணக்கிலிருந்து நிதியை உறுப்பினர் பொறுப்புப்படி அதனை உறுப்பினர் கணக்கிற்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைச் சுழற்சியைக் குறிக்கும்.

தீர்வு நடைமுறை

தேசியப் பங்கு மாற்றகம் உறுப்பினர்களுக்கு வியாபாரம் செய்யும் வசதியை செய்து கொடுக்கிறது. ஆனால் தேசியப் பத்திரங்கள் தீர்வகக் கழகம் (NSCCL) வியாபார உறுப்பினர்கள் செலுத்த வேண்டிய நிதி / பத்திரங்களைத் தீர்மானிப்பது மட்டுமில்லாமல் அவர்கள் அவ்வாறு செலுத்துகிறார்களா? என்பதையும் உறுதி செய்கிறது. ஒவ்வொரு உறுப்பினரும் செலுத்த வேண்டிய பொறுப்புகளுக்குத் தேசியப் பத்திரங்கள் தீர்வகக் கழகம் சட்டப்படியான எதிராளியாக இருக்கிறது. மேலும், உறுப்பினர்களின் அனைத்துத் தீர்வுப் பொறுப்புக்களையும் (NSCCL) ஏற்றுக்கொள்கிறது. மற்றும் பணம் செலுத்த தவறும் உறுப்பினர்களைக் கூட பொருட்படுத்தாது எந்தவிதப் பாகுபாடும் இன்றி அனைவரது பொறுப்பினையும் ஏற்றுக் கொள்கிறது. இந்த பொறுப்பிற்கு, மறு அளிப்பு கோட்பாடு (Novation) என்று பெயர். தீர்வு வங்கிகளும் மற்றும் பத்திர வைப்பாளர்களும் சேர்ந்து காப்பாளர் / தீர்வு உறுப்பினர்கள் (வியபார உறுப்பினர்களுக்காகவோ அல்லது தன் சொந்த நடவடிக்கைகளுக்காகவோ தீர்வு செய்யப்படும்). மற்றும் வியாபார உறுப்பினர்கள் இடையே செலுத்த வேண்டிய நிதி பத்திரங்களுக்குத் தேவையான இணைக்கும் செயலை மேற்கொள்கிறது.

தீர்வு நடைமுறையில் உள்ள பல்வேறு படிகள்

(அ) பொறுப்புகளைத் தீர்மானித்தல் : தீர்வு நாளில் எதிராளி என்ன தரவேண்டும்? மற்றும் என்ன பொறுப்புகளை பெறவேண்டும்? என்று (NSCCL) தீர்மானிக்கிறது. வியாபாரத்தில் உள்ள இரண்டு எதிராளிகளுக்கு இடையே இடைப்பட்டிருக்கும் மைய எதிராளியாக (NSCCL) அமைகிறது. உறுப்பினர்களிடம் உள்ள பத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு அதன் நிகர நிலைமையையும், பத்திரங்களை பெறுவதையோ கொடுப்பதையோ மற்றும் பணத்தை பெறுவதையோ கொடுப்பதையோ வைத்து அதன் நிகர பொறுப்பினையும் (NSCCL) தீர்மானிக்கிறது.

(ஆ) நிதி மற்றும் பத்திரங்களை உள்-செலுத்துதல் : உறுப்பினர்கள் நிதியையும் பத்திரங்களையும் NSCCL-க்குள் கொண்டு வருகிறார்கள். அவர்கள் வைப்பாளரிடம் தேவையான பத்திரங்களைக் குறிப்பிடப்பட்ட கணக்குகளில் குறிப்பிட்ட உள்செலுத்தும் நாளுக்குள் வைத்திருக்க வேண்டும். அதேபோல உறுப்பினர்கள் தேவையான நிதியைக் குறிப்பிடப்பட்ட கணக்குகளில் குறிப்பிட்ட உள் செலுத்தும் நாளுக்குள் தீர்வு வங்கியரிடம் வைத்திருக்க வேண்டும். உறுப்பினர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய பொறுப்புகளுக்கு NSCCL தீர்வு வங்கிகளிடம் உறுப்பினர்களின் கணக்கைப் பற்றிவைக்கச்சொல்லி மின்னணு மூலம் அறிவுரைகளை அனுப்பும். இந்த அறிவுரைகளை வங்கிகள் பின்பற்றி உறுப்பினர்கள் கணக்கை பற்றும் மற்றும் NSCCL கணக்கை வரவும் வைக்கும்.

(இ) நிதி மற்றும் பத்திரங்களை வெளி - செலுத்துதல் நிதிப் பத்திரங்களில் உள்ள பற்றாக்குறையைச் சரி செய்வதற்கு வழிமுறையைக் கண்டபிறகு நிதி உபரியாக உள்ள வங்கியிலிருந்து நிதி குறைவாக உள்ள வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கியின் பணத்தீர்வகம் மூலம் மாற்றம் செய்வதற்கு வைப்பாளர் / தீர்வு வங்கிகளுக்கு வெளி - செலுத்தும் பத்திரங்களை /நிதியை மின்னணு அறிவுரைகள் மூலம் NSCCL அனுப்பி வைக்கும். வைப்பாளர்கள் மற்றும் தீர்வு வங்கியர் NSCCL கணக்கைப் பற்று செய்து உறுப்பினர்களின் கணக்குகளை வரவு செய்து தீர்வுகளை முடித்துக் கொள்கிறது. பாதுகாவலர் / உறுப்பினர்களுக்கு நிதி மற்றும் பத்திரங்களை வெளிச் செலுத்துவதன் மூலம் தீர்வு முழுமையாக முடிவடைகிறது.

(FE) இடர் மேலாண்மை:

ஒரு திறமையான தீர்வு முறைக்கு ஒரு சிறந்த இடர் மேலாண்மை முறை மிக அவசியமானதாகும். சந்தை தோல்விகளைக் கைப்பற்றி அவற்றைத் தொடர்ந்து கண்காணிப்பது மற்றும் உயர்த்துவது என்ற இடத்தில் இருந்து கொண்டு NSCCL ஒரு முழுமையான இடர் மேலாண்மை முறையைச் செயல்படுத்துகிறது. உறுப்பினர்களின் செயல்பதிவேடுகள், செயல்பாடுகள் மற்றும் அவர்களின் செயல்களின் நிகரமதிப்பு அவர்கள் செய்யும் நேரடி வணிகத்தின் மீது கண்காணிப்பு அவர்களுடைய நிலையை மற்றும் வெளிப்படையான சந்தை உறுப்பினரிடமிருந்து முன்வைப்புத் தொகையைப் பெறுவது, உறுப்பினர்கள் தங்கள் எல்லையை மீறும் போது அவர்களைத் தானாகவே செயல் இழக்க வைப்பது போன்ற பல்வேறு இடர் மேலாண்மைப் பணிகளை NSCCL கண்காணித்து வருகிறது.

தீர்வு முகமைகள்

NSCCL பங்கு மாற்றகங்களில் வியாபாரத் தீர்வுகளை தீர்வக உறுப்பினர்கள், காப்பாளர்கள், தீர்வக வங்கிகள் மற்றும் பங்கு வைப்பகங்கள் துணையுடன் பங்கு வர்த்தகத்தினைத் தீர்வு செய்து வருகின்றது. அவர்கள் ஒவ்வொருவருடைய பணிகளும் கீழே தரப்பட்டுள்ளன.

அ) தேசியப் பத்திரங்கள் தீர்வு கழகம் (NSCCL) பங்கு மாற்றகத்தில் வர்த்தகம் நிறைவு பெற்ற பின்னர் நிகழக்கூடிய அனைத்து நடவடிக்கைகளுக்கும் NSCCL பொறுப்பேற்கிறது. தீர்வு மற்றும் பணம் செலுத்துதல் மற்றும் இடர் மேலாண்மை என்பன அதன் முக்கியப் பணிகள் ஆகும். இது உறுப்பினர்கள் செலுத்த வேண்டிய பொறுப்புகள், நிதி / பத்திரங்களை உள்-செலுத்துதல், நிதி / பத்திரங்கள் பெறுதல், நிதி / பத்திரங்கள் பற்றாக்குறையை சரி செய்தல், நிதி / பத்திரங்களை வெளிச் செலுத்துதல், தீர்வுக்கு பொறுப்புறுதி தருதல், முன்பணத் தொகையைப் பராமரித்தல் மற்றும் பெறுதல், கூடுதல் பிணையம், அடிப்படை மூலதனம், இதர நிதிகள் போன்ற பல்வேறு பணிகளைத் தீர்மானிக்கிறது.

ஆ) தீர்வக உறுப்பினர்கள் NSCCL தீர்மானிக்கின்ற தீர்வுப் பொறுப்பினை ஏற்றுக் கொள்வது இவர்களின் கடமையாகும். தீர்வுநாளன்று உறுப்பினர்கள் தங்களுடைய பொறுப்புகளைத் தீர்வு செய்வதற்கு தீர்வு வங்கிகள் வைப்பக பங்கேற்பாளர்களிடம் குறிப்பிடப்பட்ட கணக்குகளில் நிதி / பத்திரங்களை தேவையான அளவிற்கு வைத்திருக்க வேண்டும். இந்த மூலதனச் சந்தையில் மாற்றகத்தில் உள்ள அனைத்து வியாபார உறுப்பினர்களும் தீர்வகக் கழகத்தில் தீர்வக உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.

(இ) காப்பாளர்கள் பங்குச் சான்றிதழ் போன்ற சொத்துகளின் உரிமையைக் குறிக்கும் ஆதலால் ஆவணங்களைத் தன்னுடைய பாதுகாப்பில் பத்திரமாக வைத்திருக்கும் ஒரு நபரைக் காப்பாளர் எனக் கூறுகிறோம். காப்பாளர் வசம் உள்ள சொத்துகளின் முழு உரிமையும் அதன் உண்மையான உரிமையாளரிடமோ வாரிசுதாரரிடமோ அறங்காவளரிடமோ தான் இருக்கும். NSCCL இல் காப்பாளர் தீர்வு உறுப்பினரே தவிர வியாபார உறுப்பினர் அல்ல. வியாபார உறுப்பினர்களால் அவருக்கு கொடுக்கப்பட்ட வியாபாரத்தை தீர்வு செய்வதுதான் இவருடைய வேலையாகும். குறிப்பிட்ட வியாபாரத்தை தீர்வு செய்யலாமா அல்லது வேண்டாமா என்பதனை அவர் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

அவ்வாறு உறுதி செய்துவிட்டால், NSCCL அந்தப் பொறுப்பினைக் காப்பாளரிடம் கொடுக்கும் மற்றும் காப்பாளர்கள் அந்தத் தீர்வை அந்தத் தீர்வுநாளிலேயே முடித்துவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பாதுகாப்பாளர் அதனை மறுத்தால் அந்தப் பொறுப்பானது திரும்பவும் வியாபார / தீர்வு உறுப்பினர்களுக்கே சென்று விடும்.

பங்கு மாற்றகம்

விளக்கங்கள்

வியாபாரம் குறித்த தகவல்கள் (உடனுக்குடன் மற்றும் நாளின் முடிவில்) தேசியப் பங்கு மாற்றகத்திலிருந்து தேசியப் பத்திரத் தீர்வகத்திற்குத் தரப்படுகின்றது.

தேசியப் பங்குத் தீர்வகம் வியாபாரத்தின் முழு தகவல்களையும் தீர்வக உறுப்பினருக்கோ காப்பாளருக்கோ வலியுறுத்தி தெரிவித்துவிடும். அந்த வலியுறுத்தலின் அடிப்படையில் தேசியப் பங்குத்தீர்வகம் பலமுனை வலைத்தளம் மூலம் பொறுப்புகளைத் தீர்மானிக்கிறது.

பின்னர் தீர்வகம் பொறுப்புகளையும் உள்-செலுத்தும் நிதி / பத்திரங்களுக்கான அறிவுரை ஆணையையும் பதிவிறக்கம் செய்து கொள்ளும்

தீர்வு வங்கிகள் தேவையான நிதியை உள் செலுத்தும் நாளுக்குள் தருவதற்குத் தயார் நிலையில் வைக்குமாறு அறிவுரை வழங்கும்.

பங்கு வைப்பகத்திற்குப் பத்திரங்களை உள் செலுத்தும் நாளுக்குள் தருவதற்குத் தயாராக வைத்திருக்குமாறு அறிவுரை வழங்கும்.

பத்திரங்களை உள் செலுத்துதல் : தேசியப் பங்குத்தீர்வகம் பங்கு வைப்பகத்தை தீர்வு உறுப்பினர்கள் / காப்பாளர்கள் கணக்கில் பற்று வைக்குமாறும் அதன் கணக்கை வரவு வைக்குமாறும் அறிவுறுத்தும். அதை வைப்பகங்கள் அவ்வாறே செய்து விடும்.

நிதியை உள் செலுத்துதல் (தேசியப் பங்குத் தீர்வகம் தீர்வு வங்கிகளைத் தீர்வு உறுப்பினர்கள் / காப்பாளர்கள் கணக்கில் பற்று வைக்குமாறும் அதன் கணக்கை வரவு வைக்குமாறும் அறிவுரை வழங்கும். அதைத் தீர்வு வங்கிகள் அவ்வாறே செய்து விடும்.

பத்திரங்களை வெளி செலுத்துதல் (தேசியப் பங்குத் தீர்வகம் பங்கு வைப்பகத்தை தீர்வு உறுப்பினர்/காப்பாளர் கணக்கை வரவு வைக்குமாறும் அதன் கணக்கைப்பற்று வைக்குமாறும் அறிவுறுத்தும், அதை வைப்பகங்களும் அவ்வாறே செய்து விடும்.

நிதியை வெளி செலுத்துதல் (தேசியப் பங்குத் தீர்வகம் தீர்வு வங்கியைக் காப்பாளர் / தீர்வு உறுப்பினர் கணக்கை வரவு செய்யுமாறும் மற்றும் அதன் கணக்கைப் பற்று செய்யுமாறும் அறிவுறுத்தும் அதனை அவ்வாறே தீர்வு வங்கிகளும் செய்துவிடும்.

தீர்வக வங்கிகள் காப்பாளர்களுக்கும் பங்குத் தீர்வக உறுப்பினர்களுக்கும் தகவல் அளித்தல்

ஈ) தீர்வு வங்கிகள் : தீர்வக உறுப்பினர்களுக்கும் தேசியப் பங்குத் தீர்வகத்திற்கும் இடையே பாலமாய் இருப்பது இந்த வங்கிகள்தான். ஒவ்வொரு தீர்வக உறுப்பினரும் இதில் ஏதாவது ஒரு வங்கியில் நேர்த்தியான தீர்வுக்கான கணக்கு ஒன்றைத் துவங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தீர்வுகளில் தீர்மானிக்கப்பட்ட உறுப்பினர்களின் பொறுப்புகளின் அடிப்படையில் தீர்வு உறுப்பினர்கள் அதற்கான நிதியை இத்தீர்வுக் கணக்குகளில் உள் செலுத்துதல் நேரத்திலும் மற்றும் வெளிச் செலுத்துதல் நோக்கில் நிதியைப் பெறவும், ஏற்பாடு செய்ய வேண்டும். பன்முகத் தீர்வு முறை கொண்ட வங்கிகளின் போட்டிகளினால் பல நன்மைகள் கிடைக்கின்றன. அவை புதிய பொருள்களை அறிமுகப்படுத்துவது, நடைமுறை மூலதன நிதி, எந்த இடத்திலும், வங்கி வசதிகள், உறுப்பினரின் விருப்பப்படி வங்கிகள் மூலம் கணக்கைத் தீர்த்துக் கொள்வது போன்ற பல்வேறு அதிகப்படியான பணிகளை இவ்வங்கிகள் உறுப்பினர்களுக்கு அளிக்கின்றன.

தீர்வகக் கழகம் என்ற அழைக்கப்படுகின்ற தேசியப் பத்திரத் தீர்வகக் கழகம் அனைத்து தீர்வு உறுப்பினர்களுக்கும் கீழ்க்கண்ட சேவைகளை ஒற்றைச் சாளர வழியில் தீர்வு வங்கிகள் செய்து தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

அதிக அளவு வியாபாரமும் தீர்வு உறுப்பினர்களும் இருக்கும் நகரங்களில் வங்கியின் பல்வேறு கிளைகள்

மின்னணு நிதி மாற்றம் போன்ற உயர்ந்த அளவு தானியங்கி வசதிகள்

நேர்த்தியான கிளை வசதிகள்

தீர்வகக் கழகத்தினை மென்பொருளுடன் இணைப்பது

கணக்குத் தகவல்களை இயல்பான நேரத்தில் பெறுவது போன்ற வசதிகள்.

மதிப்புக் கூட்டல் சேவைகளான இலவசப் பணப் பரிமாற்ற வசதியை உறுப்பினர்களுக்கு மையங்களைக் கடந்தும் தருதல்.

நடைமுறை மூலதன நிதியை வழங்குதல்

பங்குகளைக் கடனாக வழங்கும் சேவையைத் தருதல்

தொழில் முறை தீர்வு உறுப்பினர்களாகச் சேவை செய்தல் வைப்பகப் பங்கேற்பாளராகப் பணி செய்தல்

இதர மூலதனச் சந்தை சார்ந்த வசதிகள்

வங்கிப் பொறுப்புறுதி / கடன் வசதி அளித்தல் போன்ற பிற வங்கி சார்ந்த அனைத்துப் பணிகளும்

ஈ) பத்திர வைப்பகம் முதலீட்டாளர்களின் பத்திரங்களை மின்னணு வடிவில் வைத்திருப்போர் வைப்பகங்கள் என்று அழைக்கப்படுகின்றனர். Demat-கணக்கு வைத்திருக்கும் ஒருவர் அதன் பயனாளி உரிமையாளர் ஆகிறார். இணைக்கணக்குகளாக இருந்தால், அக்கணக்கை வைத்திருக்கும் அனைத்து நபர்களும் அதன் பயனாளி உரிமையாளர்கள் ஆவார்கள். வைப்பகங்கள் புறத்தோற்றமற்றப் பத்திரங்களின் தீர்வுக்கு உதவுகிறது. ஒவ்வொரு தீர்வக உறுப்பினரும் / காப்பாளரும் பத்திர வைப்பகத்தில் பொதுக்கணக்கு ஒன்றைத் துவங்கி அதனைப் பராமரிக்க வேண்டும். ஒரு வியாபார தினத்தின் தீர்வு நாளன்று அக்குறிப்பிடப்பட்ட கணக்கில் தேவையான பத்திரங்களை வைத்திருக்க வேண்டும். இந்த வைப்பகம் காப்பாளர் / தீர்வு உறுப்பினர் கணக்கிலிருந்து பத்திரங்களை ஒரு மின்னணுக் கோப்பு மூலமாகத் தேசியப் பத்திரத் தீர்வகக் கழகத்திற்கு மாற்றி விடுகிறது. இத்தீர்வுக் கழகம் தீர்மானித்த பட்டியலின்படி பத்திரங்கள் வெளிச்செல்லும் நாளன்று தீர்வகம் வைத்திருக்கும் தீர்வகக் கணக்கிலிருந்து வைப்பகத்தினால் உறுப்பினர் / காப்பாளர் கணக்கிற்கு மாற்றப்படும்.

ஊ) தொழில் முறைத் தீர்வு உறுப்பினர்கள் : தீர்வகக் கழகம் சிறப்பு பிரிவு உறுப்பினர்களை அனுமதிக்கிறது. அவர்கள் தொழில் முறை தீர்வு உறுப்பினர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தீர்வு மற்றும் பணம் செலுத்துதல் போன்ற வியாபார நடவடிக்கைகளை தனது வாடிக்கையாளர்களுக்காக (தனி நபர் மற்றும் நிறுவனங்கள் முதலியன) நிறைவேற்றுகின்றனர். இப்படி செய்யும்போது இவர்களுடைய செயல்பாடுகளும் பொறுப்பும் ஒரு காப்பாளரின் செயல்பாட்டை போலவே இருக்கும். இந்த வகை உறுப்பினர்கள் வணிக உறுப்பினர்களுக்காகத் தீர்வு மற்றும் பணம் செலுத்துதல் பணிகளையும் செய்கின்றனர். இந்த வகையில் தொழில் முறைத் தீர்வு உறுப்பினர்கள் அவர்களுடன் தொடர்புடைய வணிக உறுப்பினர்கள் செய்யும் வணிகங்களைத் தீர்வு செய்கின்றனர். இந்த வணிகத் தீர்வு செய்யும் பணி, தொழில்முறைத் தீர்வு உறுப்பினர்களுடையது தானே தவிர, வணிக உறுப்பினர்களுடையது அல்ல. ஒரு தொழில் முறை தீர்வு உறுப்பினர்களுக்கு வியாபார உரிமைகள் எதுவும் கிடையாது? ஆனால், தீர்வு உரிமைகள் உண்டு. அதாவது, அவர் தன் வணிகக் கூட்டாளி உறுப்பினர்களுக்கு மட்டுமே வியாபாரம் செய்ய முடியுமே தவிர, ஆனால் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு அல்ல.

தீர்வு செய்வதில் உள்ள இடர்கள்

தீர்வு முறையில் உள்ள இரண்டு வகையான இடர்களும் கீழே தரப்பட்டுள்ளன. 1. எதிராளி இடர் : தீர்வு சமயத்திலோ அதற்குப் பிறகோ நபர்கள் தங்கள் பொறுப்பினை நிறைவேற்றாவிட்டால் இதுபோன்ற இடர்கள் தோன்றுகின்றன. அவற்றில் இரண்டு பகுதிகள் உள்ளன. அவற்றில் ஒன்று தீர்வுக்கு முன்னர் ஏற்படும் மாற்று விலை இடர் மற்றும் இரண்டாவது தீர்வின்போது ஏற்படும் முதன்மை இடர் என்பனவாகும்.

(ஆ) மாற்றுவிலை இடர் என்பது வியாபாரத்தில் யாராவது ஒருவர் தன்னுடைய கடமையைச் செய்யத் தவறும்போது வருவதாகும், அவ்வாறு தவறும்போது தவறு செய்யாத நபர் தன்னுடைய பழைய நடவடிக்கையை இப்போதைய விலைக்கு மாற்றம் செய்யும் பொழுது பழைய நடவடிக்கைக்கும் மாற்றம் செய்த நடவடிக்கைக்கும் இடையே அவருக்குக் கிடைக்க வேண்டிய இலாபம் பறிபோகிறது. இதனால் தற்போதைய நடவடிக்கையின் விலை குறைவாகவோ அதிகமாகவோ இருக்கும்போது பத்திரங்களை விற்றவர் வாங்கியவருக்கு கிடைக்க வேண்டிய இலாபத்தை இழக்கிறார்கள். எனவே இரண்டு நபர்களுமே நிலையில்லா விலையை தாங்கள் எதிர்கொள்ள வேண்டும். இந்த வகை இடரை மேலாண்மை செய்ய வியாபார நாளிற்கும் தீர்வு நாளிற்கும் இடையேயுள்ள தூரம் குறைக்கப்படவேண்டும்.

(ஆ) இந்த முதன்மையான இடர் தீர்வின்போது ஒரு நபர் தன்னுடைய கடமையை நிறைவேற்றிவிட்டு எதிராளி நபர் தன்னுடைய கடமையிலிருந்து தவறுவதனால் ஏற்படுவதாகும். இந்த இடரில் பத்திரங்களை விற்றவர் பத்திரங்களைக் கொடுத்த பிறகும் பணம் பெறாமல் போவது மற்றும் வாங்கியவர் பணத்தைக் கொடுத்த பிறகும் பத்திரங்களைப் பெறாமல் போவதினால் இழப்பு ஏற்படுகிறது. இந்த வகை இடரை நீக்குவதற்குப் பணத்திற்கு எதிராகப் பங்கு ஒப்படைப்பு என்ற முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு வாங்குபவருக்கும் விற்பவராகவும் ஒவ்வொரு விற்பவருக்கும் வாங்குபவராகவும் தேசியப் பத்திரத் தீர்வகக் கழகம் மைய எதிராளியாக இருந்து செயல்படுவதால் மேலும் இந்த இடர் குறைக்கப்பட்டுள்ளது. எதிராளி இடரில் ஒரு வேறுபட்ட வடிவமாக இருப்பது நீர்மைத்தன்மை. இவ்விடர் தீர்வு நாளான்றோ, அதற்குப் பின்னரோ எவரேனும் ஒருவர் தான் செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்தாமல் இருப்பதால் உருவாகிறது. இந்த இடரில் தீர்வு நாளன்று விற்றவர் பத்திரங்களைக் கொடுத்த பிறகு பணம் பெறாமல் போவதும் வாங்கியவர் பத்திரங்களைப் பெற்ற பிறகு பணத்தை கொடுக்காமல் இருப்பதனாலும் கடன்வாங்க வேண்டியதாக இருக்கிறது. இந்த இடரில் மற்றொரு வடிவம் மூன்றாமவர் இடராகும். இந்த வகை இடர், வியாபார நபர்கள் மூன்றாமவர் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனுமதிக்கப்படுகிறது. அந்த மூன்றாம் நபர் தன்னுடைய பணிகளைச் செய்யத் தவறுவதால் இந்த இடர் ஏற்படுகிறது. உதாரணமாகத் தீர்வு வங்கிகள் தீர்வு சமயத்தில் உதவி செய்யாததால் தீர்வு தடைபடுகிறது. இந்த இடரைக் குறைத்து கொள்வதற்கு நபர்களைப் பல்வேறு வங்கிகளில் கணக்கைத் தொடங்கச் சொல்லலாம். அதுபோலவே ஏதேனும் ஒரு காப்பாளர் நொடிப்பு நிலையை அடைந்தாலோ கவனக் குறைவாக நடந்தாலோ ஏற்படும் இடரையும் குறைத்துக் கொள்ளலாம்.

2) அமைப்பு முறை இடர் : இந்த இடர் செயல் ரீதியான, சட்ட ரீதியான மற்றும் நடைமுறை ரீதியான இடர்களை உள்ளடக்கி இருக்கும். செயல் ரீதியான இடர் என்பது பிழைகள், மோசடி, இடைநிறுத்தம் போன்ற நடைமுறையில் உள்ள குறைபாடுகளால் ஏற்படுவதாகும். சட்ட ரீதியான இடர் என்பது சட்டமோ ஒழுங்காற்று விதிகளோ தீர்வு நாளில் தீர்வுப் பொறுப்புகளைச் செலுத்துவதற்குச் சாதகமாகவோ நிலையாகவோ இல்லாததைக் குறிக்கும். நடைமுறை ரீதியான இடர் என்பது ஒரு நபர் தான் செலுத்த வேண்டிய பொறுப்பினைச் செலுத்தத் தவறினால் அது தொடர்ச்சியாகச் செலுத்த வேண்டிய அடுத்த அடுத்த நபர்களின் பொறுப்பினையும் பாதிக்கும். இவ்வாறு தொடர்ச்சியாக ஏற்படுகின்ற தொடர் பாதிப்பினால் மொத்தத் தீர்வு முறையே தோல்வி அடைந்துவிடும். இந்த இடர்களைக் கட்டுப்படுத்தி நேர்மையான சந்தையைச் செயல்படுத்த விரிவான முன் வைப்புத் தொகை, போதிய தரமான மூலதனம் மற்றும் எதிராளி செலுத்த வேண்டிய தொகைக்கான தீர்வு உத்திரவாதம் தருதல், தீர்வு நடவடிக்கைகளுக்கான சட்டப் பாதுகாப்பு மற்றும் தொழில் தொடர்ச்சித் திட்டம் ஆகியவற்றைக் கட்டாயமாக்க வேண்டும்.

தீர்வுச் சுழற்சி

நேரடியாக முதலீட்டாளருக்கே பங்குகளை வழங்கும் வசதி

தேசியப் பங்கு தீர்வகம் பங்குகளை வாடிக்கையாளர்களுக்கும் வைப்பகங்ளுக்கும் நேரடியாகச் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. ஒவ்வொரு தீர்வு உறுப்பினரிடமிருந்தும் பங்குகளை வாங்க இருக்கின்ற மற்றும் பங்குகளைக் கொடுக்க இருக்கின்ற பயனாளர்களின் கணக்கு விவரங்களைக் கேட்டுப் பெற வேண்டும். உறுப்பினர்களிடம் பெற்ற அந்த தகவல்களின் அடிப்படையில், வைப்பாளர்களுக்குத் தீர்வகக் கழகம் பத்திரங்களை வெளியிடுவதற்கு அறிவுரை வழங்கும். ஆகவே, வாடிக்கையாளர்கள் வெளியிடும் நாளன்று பத்திரங்களை அவரவர் கணக்கில் நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம்.

நிதித் தீர்வை

இப்பொழுது தேசியப் பங்குத் தீர்வகம் வியாபரங்களைப் பணம் தந்து தீர்த்துவைக்கும் நோக்குடன் 13தீர்வுக்கான அங்கீகரிக்கப் பட்ட வங்கிகளைக் கொண்டிருக்கின்றது. அவையாவன கனரா வங்கி, ஹெச்.டி.எப்.சி வங்கி, இந்தஸ் இந்த் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, பேங்க் ஆப் இந்தியா, ஆக்சிஸ் வங்கி, ஐடிபிஐ வங்கி, ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கி, ஹெச்.எஸ்.பி.சி. வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, பாரத மாநில வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, சிட்டிபேங்க் ஆகும். ஒவ்வொரு தீர்வக உறுப்பினரும் ஒரு வங்கியில் தீர்வுக் கணக்குகளைப் பட்டியலிடப்பட்ட ஏதாவது ஒரு தீர்வு வங்கியில் கணக்கை வைத்திருக்க வேண்டும். குறிப்பிடப்பட்ட தீர்வு வங்கியின் கிளையில் பராமரித்து செயல்படுத்தி வரவேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அந்தத் தீர்வு கணக்குகளைத் தீர்வு மற்றும் பணம் செலுத்துதல் நடிவடிக்கை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்