கற்றலின் நோக்கங்கள்

முன்னோக்கிய ஒப்பந்தங்கள் மற்றும் குறைபாடுகள்

முன்னோக்கிய சந்தை

முன்னோக்கிய ஒப்பந்தங்களுக்கும் எதிர்கால ஒப்பந்தங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள்

எதிர்கால ஒப்பந்தங்களின் வர்த்தகம் – கலைச்கொற்கள்

அறிமுகம்

நிதித் துறையில் எதிர்கால ஒப்பந்தங்களின் வர்த்தகமும், விருப்ப ஒப்பங்தகளின் வர்த்தகமும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக சமீப காலத்தில் மாறிவிட்டது. எதிர்கால ஒப்பந்தகள் (futures) மற்றும் விருப்ப ஒப்பந்தங்கள் (options) போன்ற வருவிக்கப்பட்ட நிதிச் சொத்துகள் பங்கு மாற்றகங்களில் பெருமளவில் வியாபரமாகின்றது. அதே சமயம் முன்னோக்கிய ஒப்பந்தங்கள் உடனடிப் பங்கு மாற்றகத்தில் சிறந்த முறையில் வியாபாரம் செய்யப்படுகின்றது. இங்கு நாம் முன்னோக்கிய ஒப்பந்தங்கள் மற்றும் எதிர்கால ஒப்பந்தங்கள் என்ற இரண்டையும் பற்றிப் பார்ப்போம். அதற்கு முன்னால் வருவிக்கப்பட்ட சொத்துகள் என்றால் என்ன? என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

வருவிக்கப்பட்ட சொத்துகளின் பொருள்

ஒப்பந்த நடைமுறைப்படி, ஒரு பொருளின் மதிப்பு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அடிப்படைப் பொருள்களில் (பங்குச் சந்தைக் குறியீடுகள், தங்கம், பங்குகள், மற்றும் நாணயங்கள் போன்றவை) இருந்து வருவிக்கப்பட்டால் அச்சொத்துகள் வருவிக்கப்பட்ட சொத்துகள் என்றழைக்கப்படுகின்றன. அடிப்படைச் சொத்துகளாக ஏற்கனவே கூறியபடி பங்குகள், பங்குச் சந்தைக் குறியீடுகள், ஒரு நாட்டின் செலவாணி, விளை பொருள்கள், தங்கம் மற்றும் வெள்ளி போன்ற எதுவும் இருக்கலாம். உதாரணத்திற்கு, இப்போது கோதுமையை வைத்திருக்கும் விவசாயி ஒருவர் அவற்றை விற்க விரும்பினால், எதிர்காலத்தில் ஏற்படும் விலை ஏற்றத் தாழ்வுகளைத் தவிர்ப்பதற்காக இப்போது ஒப்புக் கொண்ட விலையை ஏற்றுக் கொள்கிறார். இங்கு அந்த அடிப்படைப் பொருள்கள் என்பது கோதுமை மற்றும் எதிர்காலத்தில் கோதுமையை எந்த விலைக்கு விற்க முடியும் என்பதை முடிவு செய்யும் தற்போதைய விலையுமே ஆகும்.

இந்தியாவில் இந்திய பத்திர ஒப்பந்தங்கள் (ஒழுங்காற்று) சட்டம் 1956இன் படி வருவிக்கப்பட்ட சொத்துகள் என்பவை பின்வருவனவாகும்:

வருவிக்கப்பட்ட சொத்து என்பது ஒரு கடன் பத்திரத்தையோ பங்குகளையோ பிணையம் அல்லது பிணையில்லாத கடன்களையோ இடர் பத்திரத்தையோ வேறுபட்ட ஒப்பந்தத்தையோ வேறு எந்த வடிவமான பத்திரத்தையோ குறிக்கலாம்.

அடிப்படைச் சொத்துகளின் விலைகள் அல்லது விலை குறியீட்டு எண்கள் மூலம் தன் மதிப்பைப் பெறும் ஒர் ஒப்பந்தம் மற்றும் விலைகளின் மதிப்புகள்

வருவிக்கப்பட்ட சொத்துகள் இந்திய பத்திர ஒப்பந்தங்கள் (ஒழுங்காற்று) சட்டம் 1956இன் படி அங்கீகரிக்கப்பட்டும் அதில் செய்யப்படும் வியாபாரம் இதே சட்டத்தின் கீழ் வரைமுறைப்படுத்தப்பட்டும் வருகின்றது.

வருவிக்கப்பட்ட சொத்துகளின் சந்தையில் பங்கேற்பாளர்கள்

இழப்பைக் குறைப்பவர் (hedgers) ஊக வணிகர்கள் (speculators), விலை வேற்றுமை வணிகர் (arbitrageurs) என மூன்று வகையானவர்கள் இந்தச் சந்தையில் வியாபாரம் செய்கின்றார்கள்.

இழப்பைக் குறைப்பவர்கள் ஏதாவது ஒருவிதத்தில் அடிப்படைச் சொத்தின் விலை மாறுபாட்டால் இடர்பாட்டுக்கு உள்ளாவார். இவ்வாறு ஏற்படும் இடரைக் குறைக்க அல்லது நீக்க எதிர்காலச் சந்தை அல்லது விருப்பச் சந்தையை இவர் பயன்படுத்துகிறார்.

ஊக வணிகர்கள் எதிர்காலத்தில் ஒரு சொத்தின் விலைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை ஊகம் செய்து வியாபாரம் செய்ய முனைபவர்களாவார்கள். எதிர்கால ஒப்பந்தங்களும், விருப்ப ஒப்பந்தங்களும் அவருக்கு மேலும் ஊக்கத்தைத் தருகிறது. அதாவது இவ்வாறு ஊகிப்பதன் மூலம் அவர்கள் எதிர்பார்த்த இலாபத்தையோ அல்லது எதிர்பார்க்காத இழப்பையோ அதிகரித்துக் கொள்ளக்கூடும்

விலை வேற்றுமை வணிகர்கள் எனப்படுபவர்கள் இரு வேறு சந்தைகளுக்கு இடையே நிலவும் விலை வேறுபாட்டைப் பயன்படுத்தி ஆதாயம் பார்க்க முயற்சிப்பவர்களாவார்கள். அதாவது குறைவான விலைக்குப் பத்திரங்களை வாங்கி அதிக விலைக்கு விற்று இலாபம் ஈட்டுவர். உதாரணத்திற்கு ஒரு சந்தையில் ஒரு பொருளின் விலை 10 ரூபாயும் மற்றொரு சந்தையில் அதே பொருளின் விலை 12 ரூபாயும் இருந்தால் முதல் சந்தையில் 10 ரூபாய் கொடுத்து வாங்கி அடுத்த சந்தையில் 12 ரூபாய்க்கு விற்று லாபம் பார்ப்பது இவர்களுடைய நோக்கமாகும். இடரேதும் இல்லாத லாபம் பார்ப்பதுதான் இவர்களுடடைய நோக்கம்.

முன்னோக்கிய ஒப்பந்தங்கள்

முன்னோக்கிய ஒப்பந்தம் என்பது எதிர்வரும் காலத்தில் ஒரு அடிப்படைச் சொத்தை ஒரு குறிப்பிட்ட விலைக்கு வாங்கவோ விற்கவோ போடப்படும் ஒப்பந்தம் ஆகும். முன்னோக்கிய ஒப்பந்தங்கள் பொதுவாகப் பங்கு மாற்றகத்துக்கு வெளியே ஒருவருக்கு ஒருவர் நேரடியாக வியாபாரம் செய்துகொள்ளப்படுவதாகும்.

முன்னோக்கிய ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாவன:

- இது இருமுனை ஒப்பந்தம் என்பதால் எதிராளியினால் இடர் ஏற்படக்கூடும்.

தரம், தீர்வு செய்ய வேண்டிய நாள் மற்றும் முறை போன்றவையாகும். உதாரணமாக, ஒரு நபர் ஒரு நிறுமத்தின் பங்குகளை எதிர்காலத்தில் வாங்க நினைக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். அதற்குப் பதிலாக அவர் இப்போதே பங்கு மாற்றகங்களில் அந்நிறுமத்தின் பங்குகளை வாங்கலாம். எதிர்கால ஒப்பந்தங்களில் தரப்படுத்தப்பட்ட இனங்கள் பின்வருவனவாகும்:

- ஒவ்வொரு ஒப்பந்தத்திலும் குறிப்பிடப்படும் அடிப்படைச் சொத்தின் அளவு

- அடிப்படைச் சொத்தின் தரம்

- தரவேண்டிய நாள் மற்றும் மாதம்

- ஓர் அலகின் விலைப்புள்ளி மற்றும் குறைந்த பட்ச விலை மாற்றம்

- தீர்வு செய்யும் இடம்

முன்னோக்கிய வணிகத்திற்கும் எதிர்கால வணிகத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசங்கள்

எதிர்காலத்தில் நிலையற்ற விலையினால் ஏற்படும் இடரைப் பகிர்ந்தளிப்பதில் இந்த இரண்டு ஒப்பந்தங்களும் முக்கியமாக ஒரே மாதிரியான பொருளாதாரப் பணிகளைத் தான் செய்கிறது. இருந்த போதிலும், எதிர்கால ஒப்பந்தம் முன்னோக்கிய ஒப்பந்தத்தைக் காட்டிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

எதிர்கால வணிகம்

உடனடி விலை - உடனடிச் சந்தையில் விற்கப்படும் அச்சொத்தின் விலை (பணமாக்கும் சந்தை இரண்டாம் நிலைச் சந்தை / பங்குச் சந்தை என்றும் சொல்லப்படுகின்றது). எதிர்கால விலை - எதிர்காலச் சந்தையில் நிலவும் எதிர்கால ஒப்பந்த விலை. ஒப்பந்த சுழற்சி - இது எதிர்கால ஒப்பந்தங்கள் போடப்படும் காலத்தைக் குறிக்கும். தேசிய பங்கு மாற்றகத்தில் ஒரு மாதம், இரண்டு மாதங்கள் மற்றும் மூன்று மாத காலச்சுழற்சி அந்த மாதத்தின் கடைசி வியாழக்கிழமை அன்று முடிவடைகிறது. உதாரணத்திற்கு, ஜனவரி மாதத்தில் முடிவடைய வேண்டிய ஒப்பந்தம், ஜனவரி மாதக் கடைசி வியாழனன்று தீர்வு செய்யப்படும். அதற்கு அடுத்த நாள் (வெள்ளியன்று) புதியதாக ஏப்ரல் மாதத்தில் முடிவடையும் ஒப்பந்தங்கள் வியாபாரத்திற்கு அறிமுகப்படுத்தப்படும். முடிவுறும் நாள் இது எதிர்கால ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருக்கும் கடைசித் தேதியாகும். இந்தத் தேதிக்குப் பின்னால் இந்த ஒப்பந்தம் வியாபாரத்தில் இருக்காது. ஒப்பந்த அளவு : ஒர் ஒப்பந்தத்தின் கீழ் கொடுக்கப்பட வேண்டிய அடிப்படைச் சொத்தின் அளவை இது குறிக்கின்றது. இது பங்கீட்டு அளவு என்றும் அழைக்கப்படும்.

அடிப்படை (basis) எதிர்கால ஒப்பந்தங்களின் விலைக்கும் உடனடிச் சந்தையின் விலைக்கும் இடையேயுள்ள வித்தியாசம் தான் அடிப்படை எனப்படும். ஒவ்வொரு ஒப்பந்தந்திற்கும் ஒவ்வொரு விதமான சொத்து அளிப்பிற்கும் வேறுபட்ட அடிப்படை உள்ளது. சாதாரண சந்தையில் இந்த அடிப்படை நேர்மையாக இருக்கும். பொதுவாக எதிர்கால விலை உடனடி விலையை விட அதிகமாக இருக்கும்.

வைத்திருப்பதற்கான செலவு (cost of carry) உடனடி விலைக்கும் எதிர்கால விலைக்கும் இடையேயுள்ள தொடர்பினை வைத்திருப்பதற்கான செலவு எனக் கூறலாம். இருப்புச் செலவு மற்றும் நிதிச் சொத்துக்களில் முதலீட்டிற்கான வட்டி இவை இரண்டையும் கூட்டி நிதி சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வருமானத்தை கழித்தால் கிடைப்பது வைத்திப்பதற்கான செலவு.

முன்வைப்புத் தொகை (Initia Margin) எதிர்கால ஒப்பந்தங்களில் முதன்முதலில் ஈடுபடும்போது அக்கணக்கில் வைக்க வேண்டிய வைப்பீட்டு தொகையை முன் வைப்புத் தொகை என்று கூறலாம்.

குறியீட்டிலிருந்து சந்தை வரை எதிர்கால சந்தையில் ஒவ்வொரு வியாபார நாள் முடிவிலும் முதலீட்டாளரின் முன்பணத் தொகைக் கணக்கு எதிர்காலச் சந்தையின் முடிவு விலையை வைத்து சரிகட்டப்பட்டு இலாபம் நட்டம் வெளிப்படும். இதைத்தான் குறிப்பீட்டிலிருந்து சந்தை வரை எனக் கூறுகிறோம்.

ஆதாரம் : தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்