அறிமுகம் செபி இந்தியப் பத்திர மற்றும் மாற்றகங்கள் வாரியம் பங்கு மாற்றகங்கள் மற்றும் பரஸ்பர நிதியகங்களை ஒழுங்குபடுத்தி மேற்பார்வை செய்கின்றது. இந்திய பத்திர மற்றும் மாற்றகங்கள் வாரியச் சட்டம் 1992இன் பிரிவு 3இன் கீழ் நிறுவப்பட்ட செபி இந்தியாவில் பங்கு மாற்றகங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் பெற்றுள்ளது. செபியின் பங்கு முதலீட்டாளர்களின் நலனைப் பாதுகாத்தல் பத்திரச் சந்தையின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துதல் – பங்கு மாற்றகங்கள் மற்றும் பிற பத்திரச் சந்தைகளில் வணிகத்தை ஒழுங்குபடுத்துதல் – பங்குத் தரகர்கள் மற்றும் துணைத்தரகர்கள் போன்றவர்களைப் பதிவு செய்தல் மற்றும் ஒழுங்கு படுத்தல் – சுய கட்டுப்பாட்டு நிறுவனங்களை தோற்றுவித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் – நேர்மையற்ற மற்றும் மோசடியான வர்த்தகத்தைத் தடை செய்தல் பங்குச் சந்தைகள், பங்குத் தரகர்கள், பரஸ்பர நிதியகங்கள், சுயகட்டுப்பாட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை தொடர்புடைய நபர்கள் போன்றவர்களிடமிருந்து தகவல்களைப் பெற்று விசாரணை மற்றும் தணிக்கை செய்தல் ஆகியவையாகும். இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரிசர்வ் வங்கி இந்தியாவின் மைய வங்கியாகும். இந்த வங்கி பல்வேறுவிதமான பணிகளைச் செய்கின்றது. உதாரணமாக, அரசின் முதலீட்டு வங்கியாகச் செயல்படுதல், வங்கிகளை ஒழுங்குபடுத்துதல், வங்கிகளுக்கு இடையே பணம் செலுத்தவும் பெறவும் வகை செய்தல், பத்திர வைப்பகம் மற்றும் மாற்றகமாகச் செயல்படுதல், அந்நிய செலவாணி மற்றும் கடன் பத்திரச் சந்தையை வழிநடத்துதல் மற்றும் கண்காணித்தல் போன்ற பல்வேறு பணிகளைச் செய்கின்றது. இந்திய ரிசர்வ் வங்கியின் பங்கு (RB) ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது. அரசாங்கத்திற்கு வங்கியாகவும், ஆலோசகராகவும், முகவராகவும் செயல்பட்டு அரசாங்கத்திற்குப் பல்வேறு விதமான சேவைகளை செய்கிறது. வணிக வங்கிகளைக் கட்டுப்படுத்தும் உயர் அதிகாரத்தையும் கொண்டு செயல்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் அந்நிய செலவாணியை இருப்பு வைத்திருக்கும் ஒரு பாதுகாவளராகச் செயல்படுகின்றது. அந்நிய செலவாணிக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பை நிலையாக வைத்திருக்க செய்கிறது. வங்கிகள் அளிக்கும் கடன்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. - அரசுக்குப் பணம் தேவைப்படும் போதும் வங்கிகளுக்குப் பணம் தேவைப்படும் போதும் கடன் தருகிறது. முன்னோக்கிய சந்தைகளின் ஆணையம் (FMC) முன்னோக்கிய சந்தைகளின் ஆணையம் பொருட்களின் (சரக்குகள்) முன்னோக்கிய மற்றும் எதிர்கால வர்த்தகத்தை ஒழுங்கு முறை மற்றும் மேற்பார்வை செய்வதற்காக நிறுவப்பட்டது. இந்த ஆணையம் முன்னோக்கிய ஒப்பந்தங்கள் (ஒழுங்குமுறை) சட்டம், 1952ஆம் ஆண்டின் கீழ் 1953ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. முன்னோக்கிய சந்தைகளின் ஆணையத்தின் பங்கு சந்தையில் நிதி நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த உதவியாக இருக்கும் ஒழுங்குமுறையை வழங்குகின்றது. மேலும் சந்தையின் செயல்பாட்டைத் திறம்பட மேற்பார்வையும் செய்கின்றது. அதாவது சந்தையில் அதிகமான செயல்திறன் கொண்ட ஒருவராலோ குழுவாக செயல்படக்கூடியவர்களாலோ ஏற்படும் முறை சார்ந்த இடர் மோசடிகளைத் தடுக்கிறது. சந்தை நிதானத்துடன் செயல்படுகின்றது என்பதை உறுதிசெய்யும் பணியிலும் ஈடுபடுகின்றது. (அதாவது எதிர்கால விலைகள் தேவை மற்றும் அளிப்பு என்ற இரண்டையும் அடிப்படையாக கொண்டு நிர்ணயிக்கப்படுகின்றதா? என்பதை உறுதிசெய்யும் கடமை இந்த ஆணையத்திடம் இருக்கின்றது) மற்றும் - வாடிக்கையாளர் / சந்தையில் உறுப்பினரல்லாதவர்களின் உரிமையைக் காக்க உதவுகின்றது. காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு முகமை (RDA) காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு முகமை (RDA) காப்பீட்டுத் தொழிலை மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறை செய்வதற்காக உருவாக்கப்பட்டது. இது ஒரு தன்னாட்சி பெற்ற காப்பீடு ஒழுங்குமுறை நிறுவனமாக 2000ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. (IRDA வின் பங்கு காப்பீடு வணிகத்தைக் கட்டுப்படுத்துவது, ஊக்குவிப்பது, மற்றும் முறையான வளர்ச்சிக்கு உறுதி செய்வது காப்பீட்டுச் சந்தையின் வளர்ச்சியை எளிதாக்குவது காப்பீட்டுச் சந்தைகளையும் உள்நாட்டு நிதிச் சேவைகளையும் ஒருங்கிணைக்க உதவுவது. இந்தியக் காப்பீட்டுச் சந்தையை உலகக் காப்பீட்டுச் சந்தையுடன் ஒருங்கிணைப்பது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு முகமை (PFRDA) ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு முகமை எனும் நிறுவனம் புதிய ஓய்வூதிய திட்டத்தை மேற்பார்வை மற்றும் கட்டுப்பாடு செய்வதற்காக நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் இந்திய அரசால் 2003ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி துவங்கப்பட்டது. PFRDALPIG பங்கு தனி மனிதன் தன்னுடைய வயதான காலத்தில் பத்திரங்களின் மூலம் வருமானம் பெருவதற்காக ஒரு ஒய்வூதியத்திட்டத்தை நிறுவுதல், வளர்த்தல் மற்றும் நெறிப்படுத்துதல் போன்ற பணிகளைச் செய்வது - ஒய்வூதிய நிதித் திட்டத்தில் சேரும் சந்தாதாரரின் நலனைப் பேணுவதும், அதனைச் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதும். பத்திரச் சந்தை ஒழுங்குமுறைக் கட்டமைப்பு செபி சட்டம் 1992 இயற்றப்பட்டதன் மூலம் இந்தியப் பங்கு மற்றும் மாற்றக வாரியம் அ) பங்கு முதலீட்டாளர் நலனை பாதுகாப்பதற்காகவும் ஆ) பத்திரச் சந்தையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காகவும், இ) பத்திரச் சந்தையை ஒழுங்கு படுத்துவதற்காகவும் சட்டப்படியான அதிகாரங்களைக் கொண்டதாக நிறுவப்பட்டது. பத்திரச் சந்தையை ஒழுங்கு முறை செய்யவும், அபிவிருத்தி செய்யவும் சுயாட்சி பெற்ற ஒரு வாரியமாகச் செபி திகழ்கின்றது. பத்திர ஒப்பந்தங்கள் (ஒழுங்காற்று) சட்டம் 1956 இந்தச் சட்டம் மத்திய அரசுக்குச் சட்ட ரீதியாக அ) பங்கு மாற்றகங்களை அங்கீகாரம் செய்யவும், தொடர்ச்சியான கண்காணிப்பில் வைக்கவும் ஆ) பத்திர ஒப்பந்தங்களை ஒழுங்குபடுத்துதல் இ) பத்திரங்களைப் பங்கு மாற்றகங்களில் பட்டியலிடுதலை ஒழுங்குபடுத்துதல் போன்றவற்றிற்கான அதிகாரத்தினை வழங்குகின்றது. பங்கு வைப்பக சட்டம், 1996 பங்கு வைப்பகச் சட்டம், 1996 பத்திர வைப்பகங்களை ஏற்படுத்தி அதன்மூலம் பங்குகளைத் தடையேதுமில்லாமல் துல்லியமாகவும் வேகமாகவும் முதலீடாளர் மத்தியில் மாற்றிக்கொள்ள வகை செய்யும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது. இதன் முக்கிய நோக்கங்களாவன அ) வரையறுக்கப்பட்ட பொதுநிறுமங்களின் பங்குகளைத் தடையேதுமில்லாமல் சில விதிகளுக்குட்பட்டு ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்ள வழிவகை செய்வது ஆ) பங்கு பத்திரங்களை மின்னனு முறையில் மாற்றி பாதுகாப்பது இ) பங்கு முதலீட்டாளர்களின் உரிமை குறித்த பதிவுகளைப் பத்திரமாகப் பாதுகாப்பது போன்றவையாகும். நிறுமச் சட்டம் 1956 இச்சட்டம் பத்திரங்களின் வெளியீடு, ஒதுக்கீடு, மற்றும் பங்கு மாற்றம் போன்றவை குறித்தும் மேலும் அதனோடு தொடர்புடைய பிற நிறும மேலாண்மை பற்றியும் தெரிவிக்கிறது. நிறுமங்கள் பொது வெளியீட்டில் கடைப்பிடிக்க வேண்டிய நிலையான மற்றும் வெளிப்படையான செயல்களும், குறிப்பாக நிறும மேலாண்மை மற்றும் திட்டங்கள் பற்றியும் அதே நிர்வாகத்தில் உள்ள இதர நிறுமங்களும் அதன் மேலாண்மை இடர்கள் பற்றியும் இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒப்புறுதி அளித்தல், முனைமத்திலும் தள்ளுபடியிலும் பங்குகளை வெளியிடுதல், உரிமைப்பங்கு வெளியீடு மற்றும் ஆதாயப்பங்கு வெளியீடு, வட்டி மற்றும் பங்காதாயம் ஆண்டறிக்கை மற்றும் பிற தகவல்களை இச்சட்டம் ஒழுங்குபடுத்துகிறது. பணச் சலவை செய்தல் தடுப்புச் சட்டம் 2002 இந்தச் சட்டம் கணக்கில் காட்டாத கருப்புப் பணத்தைச் சந்தையில் முதலீடு செய்து கணக்கில் காட்டப்பட்ட பணமாக மாற்றுவதைத் தடை செய்யும் எண்ணத்துடன் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் படி இது போன்ற நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு கணக்கில் காட்டாத பணத்தைப் பறிமுதல் செய்யும் அதிகாரத்தை அரசுக்கு அளிக்கின்றது. இதுவும் தவிர குற்றம் செய்யும் நோக்குடன் அயல் நாட்டிலிருந்தோ, அயல் நாட்டிலேயோ உள்நாட்டிலோ பணத்தைத் திரட்டி சந்தையில் முதலீடு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தையும் அரசுக்கு அளிக்கின்றது. வங்கிகள், பங்குத்தரகர்கள் மற்றும் ஏனைய இடையீட்டாளர்கள் அலுவலகத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் நடந்துவிடாமல் தடுக்கும் வண்ணம் ஒரு அதிகாரியை நியமித்து கண்காணித்து, அதற்கான பதிவுகளை எடுத்து பராமரித்து தவறுகள் ஏதும் நடப்பதாகச் சந்தேகம் வந்தால் அதை உடனுக்குடன் இந்திய அரசின் நிதி புலனாய்வுப் பிரிவிற்குத் தெரிவிக்கவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று இந்தச் சட்டம் அனைவரையும் கட்டாயப்படுத்துகின்றது. முதலீட்டாளார் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு பல்வேறு வழிகளில் முதலீட்டாளர் விழிப்புணர்வுக்கு ஏற்பாடு செய்து அதற்குண்டான தகவல்களை அனுப்பியும் நடவடிக்கைகளை எடுத்தும் வருதல். நிறுமங்கள் குறித்த முக்கிய தகவல்கள், தரகர்கள் குறித்த முக்கிய தகவல்கள் மற்றும் முதலீட்டாளர் புகார் கொடுக்கும் வசதிபோன்றவை பங்குமாற்றகத்தின் இணைய தளத்திலேயே தரப்படுகின்றது. பங்குகளைத் திட்டமிடுதல் மற்றும் பாதுகாப்பு அளித்தல். முதலீட்டாளர் சம்பந்தப்பட்ட முதலீடு குறித்த எச்சரிக்கைகள் விடுப்பது. வதந்தியாக வரும் செய்திகளைச் சரிபார்த்துச் சொல்வது. முதலீட்டாளர் பாதுகாப்பிற்காக உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளுங்கள் படிவம் (KYC) மற்றும் வருமானவரி நிரந்தரக் கணக்கு எண் (PAN) முதலியவற்றைக் கட்டாயமாக்கியது. வியாபாரத்திற்கான உத்தரவை வழங்கும் போதே முதலீட்டாளரின் தனிப்பட்ட குறியீட்டு அடையாளத்தைச் சேர்த்தது. முதலீட்டாளர் நடுவே கேட்கும் விலை மற்றும் ஒரே விலையில் கேட்பவர்களுக்கிடையே கேட்கும் நேரத்தை முன்னுரிமையாக வைத்தது. அன்றாடம் ஒப்பந்த (CONTRACTNOTE) குறிப்பு மற்றும் காலாண்டின் இறுதியில் கணக்கிற்கான அறிக்கையை அளிப்பதைக் கட்டாயமாக்கியது. உறுப்பினர்கள் முதலீட்டாளர்களுடன் வியாபார தியான கடமைகளைச் செய்யும் போது பல்வேறு விதமான நடைமுறைகளைக் கட்டாயப்படுத்துதல். அன்றாடம் செய்த வியாபரத்தினை முதலீட்டாளர்கள் பங்குமாற்றகத்தின் இணையதளத்திற்குச் சென்று சரி பார்க்கும் வசதி அங்கொன்றும் இங்கொன்றுமான முறைமையில் (random) முதலீட்டாளர்களுக்கு அவர்களுடைய வர்த்தகம் குறித்து அவ்வப்போது தகவல் வழங்கி சரிபார்க்கச் செய்தல். போன்ற செயல்கள் மூலம் முதலீட்டாளர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்விற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. முதலீட்டாளரின் பொறுப்புகள் உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் படிவத்திற்குத் தேவையான அத்தனை விவரங்கள் மற்றும் சேர்க்கை நகல்களைக் கொடுக்க வேண்டும். முதலீட்டு முடிவுகளை வேறொரு நபரிடம் விட்டுவிடாமலிருக்க வேண்டும். பங்குத் தரகருடன் (மாற்றக உறுப்பினர்) போடும் ஒப்பந்தத்தினை முழுமையாகப் புரிந்துகொள்ளுதல் வேண்டும். தன்னுடைய முதலீட்டைப் பாதிக்கும் சமீபத்திய நிகழ்வுகளைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். உரிய காலத்தில் பணம் மற்றும் பத்திரங்களைத் தரகரிடம் சேர்க்க வேண்டும். தன்னுடைய வர்த்தகத்தையும் அதற்காகத் தரப்படும் ஆவணங்களையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். உங்கள் முதலீடுகளை முனைப்புடன் பாதுகாக்கும் நடவடிக்கைகள் செபியால் அங்கீகரிக்கப்பட்ட பங்குத்தரகர் மற்றும் உபதரகர்கள் மூலமே உங்கள் வியாபாரத்தை நீங்கள் செய்யவேண்டும். பங்கு மற்றும் பணத்தை நீங்கள் பெறும் போதும் தரும் போதும் அது பங்குத்தரகரிடமிருந்து மட்டுமே பெற வேண்டும் மற்றும் தரவேண்டும். உங்களுடைய வியாபாரம் உங்கள் கணக்கில்தான் செய்யப்படுகின்றது என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். மிக அதிகமான சாத்தியமில்லாத லாபம் கிடைக்கும் என்று யார் சொல்வதையும் நம்பாதிருக்க வேண்டும். ஊக வணிகமா முதலீடா என்பதை முடிவு செய்ய வேண்டும். உங்களால் எந்த அளவு இடர்தனை நஷ்டத்தை) தாக்குப்பிடிக்க முடியுமோ அந்த அளவிற்கான வியாபரத்தினை மட்டுமே செய்ய முன்வர வேண்டும். இணையதளத்தின் மூலம் செய்யக்கூடிய வியாபார வசதி மற்றும் அனைத்து பரிவர்த்தனைகளையும் உங்களுக்குக் கணினி அனுபவம் இருந்தால் மட்டுமே ஒத்துக்கொள்ள வேண்டும். உங்களுடைய பயனாளர் அடையாளம் மற்றும் கடவுச்சொல்லை வேறொரு நபரிடமும் பகிர்ந்துகொள்ளாதீர்கள். தேவைக்கு அதிகமான பணத்தையும் / பங்குகளையும் உங்கள் நடப்புக் கணக்கில் விட்டுவைக்காதீர்கள். பணத்தையும் பங்குகளையும் கடனாகக் கொடுப்பது இடர்ப்பாடுகள் உள்ளதொரு செயல் என்று புரிந்துகொள்ளுங்கள். முதலீட்டாளரின் உரிமைகள் மற்றும் கடமைகள் தனிப்பட்ட குறியீடுதனைப் பெற்றுக்கொள்ளுதல். கே.ஒய்.சி படிவங்களைப் பெற்றுப் பூர்த்திசெய்து கொடுத்து அதனை செயல்படுத்துதல். தன்னுடைய குறியீட்டின்படியே தன்னுடைய வர்த்தகம் முழுவதும் நடக்கின்றது என்பதை உறுதி செய்துகொள்ளுதல். பத்திரங்களை வாங்க விற்பதற்கான உத்தரவை வழங்க முதலீட்டாளர் தரகரிடம் கோருதல். சந்தையில் சிறந்த விலை கிடைத்தல். ஒப்பந்த குறிப்புகளைப் (காண்ட்ராக்ட் நோட்) வாடிக்கையாளருக்கு அனுப்புதல். வர்த்தகத்தின் போது விதிக்கப்படும் கட்டண விவரம் குறித்து தெளிவாகத்தெரிந்துகொள்வது. பணம் மற்றும் பங்குகளைச் சரியான நேரத்தில் பெறுவது. தரகரிடமிருந்து கணக்கு விவரங்களைப் பெறுவது. கணக்கு நடவடிக்கைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு வேண்டுவது. கடமைகள் கே.ஒய்-சி படிவத்தைப் பூர்த்தி செய்தல் மற்றும் அதற்குண்டான ஆதார ஆவணங்களை வழங்குதல். தரகரின் நிபந்தனைகள் எதனையும் ஒப்புக்கொள்ளும் போது அவற்றை முழுமையாகப் புரிந்துகொள்ளுதல். தரகருக்குத் தாங்கள் கொடுக்கும் உரிமைகளை முழுமையாகப் புரிந்துகொள்ளுதல். வியாபாரத்தில் தோன்றும் இடர் குறித்து தரப்படும் ஆவணங்களைப் படித்து புரிந்துகொள்ளுதல். சந்தையில் வியாபாரம் செய்யும் பொருட்கள் மற்றும் செயல்கள் குறித்த சட்டதிட்டங்கள், கடைசித் தேதி போன்றவற்றை தெரிந்து கொள்ளுதல். விலை வேறுபாட்டினை அளித்தல். தீர்வு நேரத்தில் பணத்தைக் கொடுத்தல். தங்களுடைய வியாபார நடவடிக்கைகளை உடனுக்குடன் சரிபார்த்தல். பணம் மற்றும் பங்கு விவரங்களை வங்கி மற்றும் பங்கு வைப்பகத்தில் அவ்வப்போது சரிபார்த்துக்கொள்ளுதல். ஒப்பந்தக் குறிப்புகள் (காண்டிராக்ட்நோட்) மற்றும் கணக்கு அறிக்கைகளைச் சரிபார்த்தல். ஆதாரம் : தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்