ஜீவன் செயலி, முதியோர் பராமரிப்பாளர் தகவல் பலகை ‘ஷதாயு’ அறிமுகம் மூத்த குடிமக்களுக்காக “ஜீவன்” (முதியோருக்கு அதிகாரமளித்தல், மெய்நிகர் உதவிக்கான வலையமைப்பு) [JEEVAN (Joint Elderly Empowerment & Virtual Assistance Network) Mobile Application for Senior Citizens] என்ற செல்பேசி செயலியையும், “ஷதாயு” (மூத்த குடிமக்களுக்கு முழுமையான பராமரிப்பு உதவி, பயன்பாட்டிற்கான பயிற்சி) [SHATAYU (Senior Holistic Care Assistance and Training For Your Utility) Geriatric Caregiver Dashboard] என்ற முதியோர் பராமரிப்பாளர் தகவல் பலகையையும் மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம் அறிமுகம் (Ministry of Social Justice & Empowerment) செய்துள்ளது. இது மூத்தக் குடிமக்களின் பாதுகாப்பு, பராமரிப்பு, கண்ணியம், அதிகாரமளித்தலை நோக்கிய ஒரு நடவடிக்கை என்பதோடு, தொழில்நுட்பப் பராமரிப்பு ஆதரவின் மூலம் முதியோர் பராமரிப்புச் சூழலமைப்பைச் செயல்படுத்துவதும் ஆகும். நாடு முழுவதும் உள்ள மூத்த குடிமக்களுக்கான ஆதரவு அமைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை, இந்தியாவில் மூத்தக் குடிமக்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு, சுகாதார அணுகல் மற்றும் சமூக உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு தனித்த டிஜிட்டல் தளமான ஜீவன் செல்பேசி செயலியை தொடங்கி வைத்துள்ளது. மூத்தக் குடிமக்களின் தேவைகளையும் கவலைகளையும் நிவர்த்தி செய்யும் நோக்கில், அரசுத் திட்டங்கள், நலத்திட்டங்கள் குறித்த தகவல்கள், அவசரகால உதவி, ஆதரவு சேவைகள், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையால் ஆதரிக்கப்படும் மூத்த குடிமக்கள் இல்லங்களின் விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை இந்தச் செயலி வழங்குகிறது. வயதான பயனர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, இந்தத் தளம் பயன்படுத்த எளிதான இடைமுகம் மற்றும் அணுகல் அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு சேவைகளை ஆதரித்து வலுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட தகவல் பலகையான “ஷதாயு” என்ற செயலியும், “நன்கு செயல்படும் பராமரிப்புப் பொருளாதாரத்தை உருவாக்குதல்” என்ற தலைப்பிலான தேசியப் பயிலரங்கின் போது அறிமுகம் செய்யப்பட்டது. ஒரு குறிப்பிட்ட மாவட்டம், மாநிலத்தில் மூத்த குடிமக்களுக்கான முதியோர் பராமரிப்பாளர்கள் கிடைப்பது குறித்த தகவல் போன்ற அம்சங்களை இது வழங்குகிறது. எளிதான அணுகலையும் திறமையான சேவை வழங்கலையும் உறுதி செய்வதற்காக, இந்தத் தளம் எளிமைப்படுத்தப்பட்ட செயல்பாடுகள், இடைமுகத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்