திருக்கோயில் - பக்தர்களின் வழிகாட்டி தமிழ்நாட்டில் உள்ள பழமையான திருக்கோயில்களின் தலவரலாறு மற்றும் சிறப்புகளை அறிந்து கொள்ளும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை “திருக்கோயில்” என்னும் கைப்பேசி செயலியை உருவாக்கியுள்ளது. திருக்கோயில்கள் பற்றிய வரலாறுகள், திருவிழாக்களின் நேரடி ஒளிபரப்பு, முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள், மெய்நிகர் காட்சி போன்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன் விளங்கும் திருக்கோயில் செயலி பக்தர்களுக்கு ஒரு சிறந்து வழிகாட்டியாக இருக்கும். திருக்கோயில் செயலியின் சிறப்பம்சங்கள் தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் பற்றிய முழுமையான தகவல்களை மக்கள் எளிமையாக அறிந்துகொள்ளும் விதத்தில் திருக்கோயில் செயலி (Thirukkoil App) உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது பிரசித்தி பெற்ற முதுநிலை கோயில்கள் இந்தச் செயலியில் இடம் பெற்றுள்ளன. வரும் காலங்களில் மற்ற கோயில்களின் விவரங்களும் படிப்படியாக சேர்க்கப்படும். திருக்கோயில்களின் தல வரலாறு, தல புராணம் மற்றும் சிறப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. திருக்கோயில்களில் உள்ள சன்னதிகள் பெயர்கள் மற்றும் சன்னதிகள் இருக்கும் இடங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. திருக்கோயில்கள் நடை திறந்திருக்கும் நேரம் மற்றும் கோயிலில் நடைபெறும் பூசைகள் பற்றிய தகவல்கள் உள்ளன. செயலியில் உள்ள நிகழ்வு நாட்காட்டி கோயிலில் நடைபெறும் தினசரி மற்றும் சிறப்பு நிகழ்வுகள், முக்கிய திருவிழாக்கள் ஆகியவற்றைத் தெரிவிக்கிறது. கோயில்களில் உள்ள பல்வேறு வசதிகள் குறித்த அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. குடிநீர் தங்குமிடம் தங்கத் தேர் மின்கல ஊர்தி காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் பொருட்கள் பாதுகாக்கும் அறை கோயில் நடத்தும் பேருந்து வசதி திருமண மண்டபம் வாகன நிறுத்தம் முதலுதவி மருத்துவ மையம் தகவல் மையம் நூலக வசதி கருணை இல்லம் கம்பிவடவூர்தி மின் இழுவை ரயில் சேவை குடில்கள் குளியல் அறை கழிவறை உடை மாற்றும் அறை சக்கர நாற்காலி முடிகாணிக்கை செலுத்துமிடம் காது குத்தும் இடம் துலாபாரம் பக்தர்கள் தொலைதூரத்திலிருந்து வழிபட உதவும் வகையில் உற்சவர் தரிசனம், விழாக்கள் மற்றும் தங்கத்தேர் உலா ஆகியவற்றின் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. திருக்கோயில்களில் நடைபெறும் உற்சவங்கள் மற்றும் திருவிழாக்களின் காணொலிகள் கொடுக்கப்பட்டுள்ளன. நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்கும் அனுபவத்தை வழங்கும் விதத்தில் அனைத்து கோணங்களிலும் திருக்கோயில்களை கண்டுகளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள 360° மெய்நிகர் சுற்றுலா (360° Virtual Tour) திருக்கோயில் செயலியின் மிகவும் அற்புதமான பகுதியாகும். திருக்கோயில்களில் உள்ள சிற்பங்கள், ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவை விளக்கங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. திருக்கோயில்களில் நடைபெறும் பூசைகளும் அதற்கான கட்டண விவரங்களும் உள்ளன. அன்னதானம், திருப்பணி ஆகியவற்றுக்கான நன்கொடைகளையும் திருக்கோயில் செயலி மூலம் வழங்கலாம். பக்தர்கள் படித்தும் கேட்டும் மகிழும் வண்ணம் பன்னிரு திருமுறைகள் மற்றும் நாலாயிர திவ்யபிரபந்தம் ஆகியவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. திருக்கோயில்களுக்கு வருகை தரும் வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள சாய்தளம் மூலம் எளிதில் சுவாமி தரிசனம் செய்வதற்கு சக்கர நாற்காலிகள் முன்பதிவு செய்யும் இடம், பணியாளரின் பெயர் மற்றும் கைப்பேசி எண் ஆகியவை தரப்பட்டுள்ளது. பக்தர்கள் திருக்கோயில்களுக்கு சிரமமின்றி வருவதற்கு, செல்லும் வழி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அருகிலுள்ள திருக்கோயில்களையும் தெரிந்துகொண்டு அங்கும் சென்று வழிபடுவதற்கு ஏதுவாக அருகில் உள்ள கோயில்களின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. திருக்கோயில் பிரசாதங்களை இல்லங்களுக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கும் ‘அஞ்சல் வழி பிரசாதம்’ சேவை பற்றிய தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளது. திருக்கோயில் (Thirukkoil) செயலியை ஆண்ட்ராய்டு (Play Store) கைப்பேசி அல்லது iOS (App Store) கைப்பேசியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆதாரம்: இந்து சமய அறநிலையத்துறை