நோக்கம்

தமிழகத்தில் பொதுமக்களின் குறைகளை தொலைபேசி மூலம் நேரடியாக பதிவு செய்யும் வகையிலான டெலிபோனிக் கேர் ‘‘அம்மா அழைப்பு மையம்'' என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளது . இந்த மையத்திற்கு 1100 என்ற இலவச எண் தரப்பட்டுள்ளது. இந்த நம்பரை எளிதாக மனதில் வைத்துக் கொள்ளலாம். எந்த இடத்தில் இருந்தும் இந்த நம்பரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

ஏழை-எளிய மக்களும், சாமானியர்களும் அரசிற்கு தங்கள் குறைகளைத் தெரிவித்து உரிய தீர்வுபெறும் நோக்கத்துடன் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு இயங்கி வருகிறது.

பொதுமக்களின் குறைகளை விரைந்து பெற்று, அதனைக் களைந்திடும் நோக்கில், கணினி வழி தொலைபேசி அழைப்பு ஒருங்கிணைத்தல், குரல் பதிவு மற்றும் பிரித்தறிதல் போன்ற புதிய தகவல் தொழில்நுட்ப வசதிகளுடன், 24/7 மணி நேரமும் செயல்படும், கட்டணமில்லா தொலைபேசி எண் 1100 மூலம் எங்கிருந்தும், எப்போதும் பொதுமக்கள் தொடர்புகொள்ளும் வகையில் ‘‘அம்மா அழைப்பு மையம்” அமைக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக நாளொன்றுக்கு 15 ஆயிரம் அழைப்புகளை ஏற்கும் வகையில், 138 அழைப்பு ஏற்பாளர்களுடன் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தேவைக்கேற்ப அழைப்பு ஏற்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

செயல்படும் முறைகள்

இந்த மையத்தின் மூலம், பொதுமக்களிடமிருந்து அழைப்பு பெறப்பட்டு, அழைப்பவர் விவரம், குறைகள் ஆகியவை கணினியில் பதியப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிக்கு மின்னஞ்சல், தொலைபேசி மற்றும் குறுஞ்செய்தி மூலம் அனுப்பிவைக்கப்படும்.

அதுமட்டுமின்றி, எந்த துறையின், எந்த அதிகாரிக்கு அவரது குறைகள் குறித்த விவரம் அனுப்பப்பட்டுள்ளது என்ற விவரம், அழைத்தவருக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். மேலும், அவரது குறை குறித்து சம்பந்தப்பட்ட துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த விவரமும் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும்.

இடங்கள்

அம்மா அழைப்பு மையத்தின் ஒரு மையம் சென்னை தியாகராயநகர் பாண்டிபஜாரில் உள்ள வைரம் காம்பிளக்சின் 2-வது மாடியில் சுமார் 50 இணைப்புகளுடன் செயல்படுகிறது.

ஆதாரம் : தமிழக அரசு