போஷன் டிராக்கர் இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடுகளைக் களைந்து, ஆரோக்கியமான எதிர்காலத் தலைமுறையினரை உருவாக்கும் நோக்கில் ஊட்டச்சத்து இயக்கத்தின் (போஷன் அபியான்) கீழ் 'போஷன் டிராக்கர்' (Poshan Tracker) என்ற மொபைல் செயலி அடிப்படையிலான டிஜிட்டல் தளம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் 2021 மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்ட இந்த தளம், அங்கன்வாடி மையங்களின் சேவைகளை நிகழ்நேரத்தில் கண்காணிக்கும் நிர்வாகக் கருவியாகத் திகழ்கிறது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய 781 மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடி மையங்கள் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. தற்பொழுது இத்தளத்தில் தகுதியுள்ள சுமார் 8.93 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். பயனாளிகளுக்கான சேவைகள் இந்த டிஜிட்டல் தளம் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு அங்கன்வாடி பணியாளர்கள் 11 கையேடு பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டியிருந்தது, இது சேவை வழங்கலில் காலதாமதத்தை ஏற்படுத்தியது. தற்பொழுது போஷன் டிராக்கர் செயலி மூலம் அங்கன்வாடி உள்கட்டமைப்பு வசதிகள், பயனாளிகளின் விவரங்கள், குழந்தைகளின் வளர்ச்சி நிலை ஆகியவை நிகழ்நேரத் தரவுகளாகப் பதிவு செய்யப்படுகின்றன. இதற்காக அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட்போன்களும், ஆண்டுதோறும் இணைய வசதிக்கான செலவாக 2,000 ரூபாயும் வழங்கப்படுகின்றன. இத்தளத்தில் போலிப் பதிவுகளைத் தவிர்க்கவும், தகுதியான பயனாளிகளுக்குச் சேவைகள் நேரடியாகச் சென்றடைவதை உறுதி செய்யவும் பயோமெட்ரிக், முக அங்கீகார சரிபார்ப்பு முறைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் நலன் மற்றும் வளர்ச்சி குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை உலக சுகாதார அமைப்பின் தரநிலைகளின்படி துல்லியமாகக் கணக்கிட இந்தச் செயலியில் பிரத்தியேக ஊட்டச்சத்துக் கணக்கீட்டுக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் குழந்தைகளின் வயது, பாலினம், உயரம், எடை ஆகியவற்றின் அடிப்படையில், குறைவான எடை கொண்ட குழந்தைகள் குறித்த விவரங்கள் நிகழ்நேரத்தில் கண்காணிக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கைகளின் காரணமாக, கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 2023 மே மாதத்தில் 7 சதவீதத்தில் இருந்து, 2026 மே மாதத்தில் 3 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2024 மார்ச்-ல் தொடங்கப்பட்ட ‘ஆதார்ஷிலா’ தேசிய பாடத்திட்டத்தின் கீழ், 3 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஆரம்பகால பராமரிப்பும் கல்வியும் வழங்கப்படுகிறது. அங்கன்வாடி மையங்கள் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டம், பொம்மைகள், கலை, இசை, கதைசொல்லாடல் ஆகியவற்றைப் பயன்படுத்தி விளையாட்டு அடிப்படையிலான கற்றலை ஊக்குவிக்கிறது. ‘அடித்தளம்’ என்று பொருள்படும் ஆதார்ஷிலா, குழந்தைகளின் அறிவாற்றல், சமூக, உணர்ச்சி, உடல் ரீதியான வளர்ச்சியை ஆதரிப்பதோடு, அவர்களை ஒன்றாம் வகுப்பிற்குத் தயார்படுத்துகிறது. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282421®=6&lang=11 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்