ஆதிச்சநல்லூர் அகழாய்வு அகழாய்விடத்தின் பெயர் ஆதிச்சநல்லூர் ஊர் ஆதிச்சநல்லூர் வட்டம் ஸ்ரீவைகுண்டம் மாவட்டம் தூத்துக்குடி அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட காலம் பொ.ஆ. 1876 மற்றும் பொ.ஆ. 2004 அகழாய்வு தொல்பொருட்கள் முதுமக்கள் தாழிகள் மனித எலும்புகள் கருப்பு-சிவப்பு பானையோடுகள் பானையோட்டில் உள்ள புடைப்பு உருவங்கள் தங்கத்திலான நெற்றிப்பட்டம் கத்தி மற்றும் வாள் போன்ற இரும்புப் பொருட்கள் வெண்கலப் பொருட்கள் அகழாய்வு மேற்கொண்ட நிறுவனம் இந்தியத் தொல்லியல் துறை தொல்லியல் கண்டுபிடிப்புகள் ஆதிச்சநல்லூரில் மூன்று அடுக்குகளில் தாழிகள் மண்ணில் புதைக்கப்பட்டுக் காணப்படுகின்றன. ஆனால் இந்த இடத்துடன் தொடர்புடைய வாழ்விடம் எங்கு இருந்தது என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. இங்கு பல்லயிரக்கணக்கான தாழிகள் காணப்படுகின்றன. இவை சிவப்பு நிறத்தில் உள்ளன. சில தாழிகள் கருப்பு-சிவப்பு நிறத்திலும் உள்ளன. மனித எலும்புக்கூடுகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் எல்லா தாழிகளிலும் மனித எலும்புகள் அதிக அளவில் காணப்படவில்லை. எனவே இறந்தவர்களின் உடல் சில சடங்குகளுக்கு உட்படுத்தப்பட்டு, பிறகு எல்லா எலும்புகளுமோ அல்லது சில எலும்புகள் மட்டுமோ எடுக்கப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளன. இங்கு கருப்பு-சிவப்பு, சிவப்பு, கருப்பு ஆகிய வகைப் பானைகள் கிடைத்துள்ளன. ஒரு பானையின் மீது ஒரு பெண்ணுருவம், நெற்கதிர்கள், ஒரு மான் மற்றும் ஒரு பல்லி ஆகியவற்றின் உருவங்கள் ஒட்டுருவமாகக் (Applique) காணப்படுகின்றன. தங்கத்திலான நெற்றிப்பட்டம், கத்தி மற்றும் வாள் போன்ற இரும்புப் பொருட்கள் மற்றும் வெண்கலப் பொருட்கள் இங்கு கிடைத்துள்ளன. காலக்கணிப்பு வெப்ப உமிழ் காலக்கணிப்பு (Thermoluminescence Dating) வழியாக இந்த இடம் பொ.ஆ.மு. 1500 லிருந்து பொ.ஆ. 500 ஆண்டுகளுக்கு உட்பட்டது என்று கருதப்படுகின்றது. அதாவது இன்றிலிருந்து 3000 முதல் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனலாம். அகழாய்வு வெளிப்படுத்திய வரலாறு ஆதிச்சநல்லூர் ஓர் இரும்புக்கால மற்றும் வரலாற்றுத் துவக்ககாலத் (பெருங்கற்காலம்) தொல்லியல் இடமாகும். இரும்புக்கால மக்கள் இறந்தவர்களைத் தாழிகளில் வைத்துப் புதைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். ஆதிச்சநல்லூரில் இரும்புக்காலத்தில் இறந்தவர்களைப் புதைத்த தாழிகள் ஆயிரக்கணக்கில் காணப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள பெருங்கற்கால இடங்களில் மிகப்பெரிய இடம் இதுவாகும். இது சுமார் 116 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்படுகின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் அமைந்துள்ளது. இது திருநெல்வெலியிலிருந்து 24 கி.மீ. தொலைவில் ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் உள்ளது. இங்கு நடந்த அகழாய்வுகளில் பல அரிய இரும்புக்காலத்தைச் சேர்ந்த தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. தொல்லியல் ஆய்வுகள் இந்த இடத்தில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜாகோர் (F. Jagor) 1876ல் அகழாய்வுகள் நடத்தினார். பின்னர் இந்தியத் தொல்லியல் துறையைச் சார்ந்த அலெக்ஸாண்டர் ரீ (Alexander Rea) 1905ல் அகழாய்வுகள் செய்து பல தொல்பொருட்களைக் கண்டுபிடித்தார். இவை சென்னை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 2004ல் இந்திய அரசின் தொல்லியல் துறை அதிகாரி சத்தியமூர்த்தி அவர்கள் அகழாய்வுகள் நடத்தி உள்ளார். இந்த அகழாய்வில் 150க்கும் மேற்பட்ட தாழிகள் அகழாய்வு செய்யப்பட்டன. இந்த இடம் பல நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஈமக்காடாகப் பயன்படுத்தப்பட்டது. மேலும் தகவல்களுக்கு இந்தியத் தொல்லியல் துறை [Archaeological Survey of India - ASI)] வெளியிட்டுள்ள Excavations at Adichchanallur ஆவணத்தைப் பார்க்கவும். ஆதாரங்கள் தமிழ் மின் நூலகம் தமிழ் இணையக் கல்விக்கழகம் Excavations at Adichchanallur