பல்லாவரம் அகழாய்வு அமைவிடம் பல்லாவரம் ஊர் பல்லாவரம் வட்டம் தாம்பரம் மாவட்டம் சென்னை கிடைத்த தொல்பொருட்கள் கைக்கோடரிகள் பண்பாட்டுக் காலம் தொல்பழங்காலம் கண்டறிந்த நபர் இராபர்ட் புரூஸ் பூட் மற்றும் வில்லியம் கிங் பல்லாவரத்தின் கற்காலக் கண்டுபிடிப்புகள் தமிழக தொல்லியல் ஆய்வுகளில், சென்னை பல்லாவரத்தில் கண்டெடுக்கப்பட்ட கற்காலக்கருவிகள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. 1863, மே, 31ம் தேதி அன்று, சென்னையை அடுத்த பல்லாவரத்தில், இராபர்ட் புரூஸ் புட் (Robert Bruce Foote) அகழாய்வு செய்தார். அடிப்படையில் மண்ணியல் ஆய்வாளரான அவர், தனது துறை தொடர்பாகவே, அகழாய்வு செய்தார். அங்கு, வேட்டையாடுவதற்கும், பிற காரியங்களுக்கும் பயன்படுத்தப்படும், கைக்கோடரி அவரால் கண்டெடுக்கப்பட்டது. இதுவே, தெற்காசிய ஆய்வுகளில், முதன் முதலில் கண்டெடுக்கப்பட்ட, கைக்கோடரி. இராபர்ட் புரூஸ் புட்டுக்கு, அவருடைய நண்பர் வில்லியம் கிங் (William King) துணையாக இருந்தார். பழங்கற்கால ஆய்வில் முக்கியப் பங்களிப்பு ராபர்ட் புரூஸ் பூட், தென் இந்தியத் தீபகற்ப பகுதியில் கண்டுபிடித்த, 459 வரலாற்றுக்கு முற்பட்ட காலப் பகுதிகளில், 42 பகுதிகள் பழைய கற்காலத்தையும், 252 பகுதிகள் புதிய கற்காலத்தையும் சார்ந்தவை. திருநெல்வேலி மாவட்டத்தில், தேரி பகுதிகளில் நுண்கற்காலக் கருவிகளை கண்டெடுத்து, அப்பகுதியில் நுண்கற்கால தொழிற்சாலை இருந்தமையை (Post Acheulean Industry) உறுதிப்படுத்தியுள்ளார். ஆதியிலேயே நுண்கற்கால தொழிற்சாலை அமைத்து ஆயுதம் தயாரித்தவன் ஆதித்தமிழன் என்பது பெருமைக்குரியது. ராபர்ட் புரூஸ் பூட் பழைய கற்கால, புதிய கற்கால கல் ஆயுதங்களை, அதன் உருவமைப்பு மற்றும் தொழில் நுட்ப முறையைக் கொண்டு வகைப்படுத்தும் பணியை மேற்கொண்டார். தென் இந்தியாவில் பழைய கற்காலத்திற்கும், புதிய கற்காலத்திற்கும் இடையேயுள்ள நீண்ட இடைவெளியைக் கண்டறிந்து, அதற்கான காரணத்தை அறியும் பொருட்டு மேற்கொண்ட அவரது ஆய்வு சிறப்பு வாய்ந்தது. பல்லாவரத்தின் தற்கால களஆய்வு தற்காலத்தில் இங்கு களஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது சில இடங்களில் உடைந்த நிலையில் முதுமக்கள் தாழி கிடைத்தது. அம்பேத்கர் விளையாட்டு திடல் பகுதியில் ஆய்வு செய்ததில் சுடு மணலால் செய்யப்பட்ட பழங்கால முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது. ஒன்றரை அடி அகலம், 6 அடி நீளமும் கொண்ட தாழியின் அடிப்பகுதியில் 1 அடியில் 12 கால்கள் மணலால் செய்யப்பட்டிருந்தன. ஆதாரங்கள் தமிழ் மின் நூலகம்தமிழர் தகவலாற்றுப்படை