கருந்துளையின் இன்னிசை சமீபத்தில், இந்திய பல்சார் டைமிங் அரே [Indian Pulsar Timing Array (InPTA)] முதன்முதலாக தன்னுடைய ஆய்வுத்தரவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஆய்வுக்கட்டுரையின் 38 ஆசிரியர்களில் முக்கிய ஆசிரியரான ப்ரதிக் தரஃப்தரும், இணை-ஆசிரியரான மஞ்சரி பாக்சியும் சென்னையிலுள்ள கணித அறிவியல் நிறுவனத்தை [Institute of Mathematical Sciences (IMSc)] சேர்ந்தவர்கள். புனே அருகிலுள்ள அப்க்ரேடட் ஜெயண்ட் மீட்டர்வேவ் ரேடியோ டெலஸ்கோப்பைப் [Giant Metrewave Radio Telescope (uGMRT)] பயன்படுத்தி மூன்றரை ஆண்டுகளாக ஆய்வுகளை மேற்கொண்டதன் விளைவு இந்த வெளியீடு. சிறப்பு வகை ந்யூட்ரான் நட்சத்திரங்களான மில்லிசெகண்ட் பல்சார்களிலிருந்து புறப்படும் வானொலி துடிப்பலைகளில் உள்ள காலதாமதங்களை, முப்பத்தெட்டு வானொலி வானியலாளர்களைக் கொண்ட இந்திய-ஜப்பானிய குழுவானது அளவீடு செய்கிறது. இந்தத் தாமதங்கள், குறைவான-அதிர்வெண் ஈர்ப்பு அலைகளைக் கண்டுபிடிக்க மிக முக்கியானவை. யூ.எஸ்.ஏ, யூரோப், மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த குழுக்கள் InPTA உடன் இணைந்து கால-வெளியில் (spacetime) உள்ள பிடிப்படாத, சின்னஞ்சிறு அதிர்வலைகளான நானோஹெர்ட்ச் ஈர்ப்பு அலைகளைக் (nanohertz gravitational waves) கண்டுபிடிக்க முற்பட்டுள்ளது. இது குறித்து IMSc-ன் இயக்குநர் பேரா. வி ரவீந்திரன் கூறுகையில், “InPTA-ன் இந்த அற்புதமான சாதனைக்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். நம்முடைய IMSc ஆராய்ச்சியாளர்கள் உலகளாவிய முன்னெடுப்பான இதில் மிக முக்கியமான பங்குவகிக்கிறார்கள் என்பது பெரு மகிழ்ச்சியாக உள்ளது.” ஆசிரியர்கள் இதை பற்றி கூறும்போது, “பிரபஞ்சம் முழுவதும் ஈர்ப்பு அலை பின்னணி நிரம்பியுள்ளது. இது, ஆழமான இயற்கை இரகசியங்களுக்கான பதில்களைக் கொண்டுள்ளது. நாம் தற்போது ஆராயக்கூடிய அலைகள் திடமானது, ஆனால் மிகச் சொற்ப நேரமே நிலைக்கும். கடற்கரையில் பேரிரைச்சலுடன் மோதும் பெரிய அலைகளை நாம் கவனிக்கிறோம், ஆனால் சின்னஞ்சிறு அதிர்வலைகள் கால-வெளி முழுவதிலும் நிரம்பியுள்ளன. ஒரு இசைக்கச்சேரி ஒன்றை கற்பனைச் செய்யுங்கள். இதில், உயர்-சுருதி பகுதிகளின் ஒலி உச்சியில் இருக்கும்போது, அடிநிலைப் பகுதிகள் அடிப்படை தொடர்களையே வாசித்துக்கொண்டிருப்பார்கள். பிரபஞ்சத்தில் உள்ள ஈர்ப்பு அலைகளின் ஊடாட்டங்கள் இயற்கை வாசிக்கும் இன்னிசைக் கச்சேரி போன்றது. உச்சி ஒலிகளை நாம் இரகசியமாக கேட்கிறோம், ஆனால் பரவியிருக்கும் ஒரு அடித்தள ரீங்கார ஒலி இந்த பிரபஞ்ச இன்னிசையின் அடிப்படையாக உள்ளது. கோடான கோடி ஆண்டுகளாக இரண்டு மீப்பெரும் கருந்துளை ஜோடிகள் ஒன்றை ஒன்று சுற்றி வந்து மோதும் போது இந்த அலைகள் உருவாக்கப்படுகின்றன. பெருங்கடல் போன்று இருக்கும் நட்சத்திரங்களுக்கு இடையேயான வெளிதான் இவற்றை கண்டுபிடிக்க முதன்மை தடையாக உள்ளது. இந்த இடைவெளியின் ‘வானிலையை’ பதிவிட்டு கூடிய விரைவில் கண்டுபிடிப்புகளுக்கு வழி செய்ய InPTA-ன் ஆய்வுத்தரவுகள் மிக முக்கியமானவை.” பப்ளிகேஷன்ஸ் அஃப் தி அஸ்ட்ரனாமிக்கல் சொசைட்டி அஃப் ஆஸ்திரேலியா என்ற ஆய்விதழில் இந்த ஆய்வுமுடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்