நான் முதல்வன் திட்டம் நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால், 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட நான் முதல்வன் திட்டம், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கான விரிவான மற்றும் பயனுள்ள வழிகாட்டுதலை வழங்குவதற்கான அர்ப்பணிப்பு முயற்சியாக வளர்ந்து வருகிறது. பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகளின் கூட்டு முயற்சிகள் மூலம் தமிழ்நாட்டில் உயர் கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் (GER) கணிசமான அதிகரிப்பைக் காண முடியும் என்ற நம்பிக்கையால் இது இயக்கப்படுகிறது. இந்தத் திட்டமானது, சரியான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுடன் அவர்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய ஏராளமான அரசுப் பள்ளி மாணவர்களின் திறனை அங்கீகரிக்கிறது. நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கம் அனைத்து மாணவர்களும் தங்கள் பள்ளிக் கல்வியை முடித்தவுடன் அர்த்தமுள்ள உயர்கல்வி படிப்புகளைத் தொடர அதிகாரம் அளிப்பதாகும். நான் முதல்வன் இணையதளம் தமிழ்நாட்டில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, அடுத்து என்ன படிக்கலாம் என்று வழிகாட்டுவதற்காக "நான் முதல்வன்" என்ற இணையதளத்தைப் பள்ளிக் கல்வித் துறை தொடங்கியுள்ளது. பள்ளிப் படிப்பிற்கு பிறகு உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்புகள், எந்தப் படிப்பைப் படித்தால் எந்த வேலைக்குப் போக முடியும், எந்த வேலைக்குப் போவதற்கு எந்தப் படிப்புகளில் சேரவேண்டும் என்பது குறித்த விவரங்களை இந்த இணையதளத்தின் மூலம் மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் பற்றியும், 300க்கும் மேற்பட்ட வேலைகள் குறித்தும் 150க்கும் மேற்பட்ட கல்வி உதவித்தொகை குறித்தும் இந்த இணையதளத்தில் தகவல்கள் வெளியிடப்படும். அத்துடன், மாணவர்களின் பயன்பாட்டுக்கு உதவும் வகையில் நுழைவுத்தேர்வு அறிவிப்புகள் குறித்த விவரங்களையும் உடனுக்குடன் இந்த இணையதளத்தில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் உள்ள தகவல்களைப் பயன்படுத்துவது குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்களும், துறை சார்ந்த வல்லுநர்களும் தற்போது பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களுடன் கலந்துரையாடி, அந்த மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து ஆலோசனைகளை வழங்கி வழிகாட்டுவார்கள். அரசு வழங்கும் உதவித்தொகை மட்டுமல்ல, தொண்டு நிறுவனங்கள் வழங்கும் உதவித் தொகை குறித்த விவரங்களும் பெரிய தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவிகளும் மாணவர்களுக்குக் கிடைப்பதற்கான தகவல்களை வழங்கி வழிகாட்டுவதில் “நான் முதல்வன்” இணையதளம் உதவியாக இருக்கும். ஆதாரம்: நான் முதல்வன்