நுழைவுத்தேர்வுகள் தமிழ்நாட்டில் கலை, அறிவியல். பொறியியல், வேளாண்மை, துணை மருத்துவம், மீன்வளம் மற்றும் கால்நடைக் கல்லூரிகளில் சேருவதற்கு நுழைவுத்தேர்வு தேவையில்லை. 12ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். பொறியியல் படிப்புகளில், பி.ஆர்க். (B.Arch.) படிப்பதற்கு நாட்டா (NATA) நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் (NEET) நுழைவுத்தேர்வு எழுதவேண்டும். தேசியத் தேர்வு முகமை (National Testing Agency) மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வினை [Common University Entrance Test (CUET-UG)] நடத்துகிறது. இவை தவிர, அகில இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு கல்வி நிறுவனங்களில் சேருவதற்குத் தனியே பல நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பல நுழைவுத்தேர்வுகள் குறித்த அறிவிப்புகள், மாணவர்களுக்குத் தெரியாமல் போகின்றன. திறமையும் தகுதியும் ஆர்வமும் இருந்தும் பல மாணவர்கள் இந்நுழைவுத்தேர்வுகளை எழுத முடிவதில்லை. குறிப்பிட்ட படிப்புகளில் சேர நினைக்கும் பல மாணவர்கள், அதற்கான நுழைவுத்தேர்வுகளுக்கு திட்டமிட்டுத் தயாராகிறார்கள். நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான குறிப்புகள் +2 முடித்துவிட்டு மருத்துவ, தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேருவதற்காக நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சில குறிப்புகள்: நுழைவுத்தேர்வுக்கான பாடத்திட்டத்தையும், கேள்வித்தாள் அமைப்பு முறையையும் தெரிந்துகொள்ள வேண்டும். நுழைவுத்தேர்வுக்கு மனப்பாடம் செய்வது முக்கியம் இல்லை. கோட்பாடுகள், சூத்திரங்கள் போன்றவற்றைத் தெரிந்துகொண்டு அவற்றை ஒன்றுடன் ஒன்று பொருத்திப் பார்த்து எழுதத் தெரிந்திருக்க வேண்டும். வழக்கமாக 12ஆம் வகுப்புத் தேர்வில் கேட்கப்படுவது போல நுழைவுத்தேர்வு வினாத்தாள் இருக்காது. அதாவது, வினாக்களுக்கு விடை எழுத வேண்டியதில்லை. ஒரு வினாவிற்குக் கொடுக்கப்பட்டுள்ள நான்கு விடைகளில் எது சரியானது என்பதைக் கண்டுபிடித்து குறித்த நேரத்துக்குள் குறியிட்டு விடையளிக்க வேண்டும். இணையதளம் மூலம் எழுத வேண்டி இருந்தால் முன்னதாகவே கம்ப்யூட்டர் முலம் நுழைவுத்தேர்வு எழுதப் பயிற்சி பெற வேண்டும். இதற்கு பிளஸ் ஒன், பிளஸ் டு, பாடப்புத்தகங்களில் உள்ள பாடங்களைப் புரிந்து படிக்க வேண்டியது அவசியம். அவ்வாறு படித்தால் எவ்வகையான வினாக்களுக்கும் மாணவர்களால் விடை அளிக்க முடியும். இதற்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் கூட்டு வெளியீடாகக் கொண்டு வந்துள்ள வினா வங்கிகள் உங்களுக்கு உதவக்கூடும். நாம் எழுத வேண்டிய நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன், நுழைவுத்தேர்வு முடிவு வந்ததும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு நுழைவுத்தேர்வு மதிப்பெண்களுடன் விண்ணப்பிக்க மறந்துவிடக்கூடாது. நுழைவுத்தேர்வுக்கான மாதிரித் தேர்வுகளை எழுதிப் பார்த்துப் பழகிக்கொள்ள வேண்டும். நுழைவுத்தேர்வில் கேட்கப்படும் வினாவைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் விடைகளில் எது சரியானது என்று பார்க்க வேண்டும். மேலெழுந்த வாரியாகப் படித்துவிட்டு ஏதாவது ஒரு விடையைத் தேர்வு செய்யக்கூடாது. பாடங்களைப் புரிந்துகொண்டு படித்தால்தான் சரியான விடையைக் கண்டுபிடிக்க முடியும். தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் கொடுக்கப்படுகிறதா என்பதையும் பார்க்கவேண்டும். அதுபோன்ற சூழ்நிலையில், தெரியாத, ஐயத்திற்கு இடமான விடைகளை எழுதக்கூடாது. நெகட்டிவ் மதிப்பெண்கள் இல்லை என்றால் எந்த வினாவிற்கும் விடையளிக்காமல் விட்டு விடக்கூடாது. நுழைவுத்தேர்வில் முதலில் தெரிந்த வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். தெரியாத வினாக்களுக்கு விடையளிப்பதற்கு நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருக்கக் கூடாது. தெரிந்த வினாக்களுக்கு விடையளித்த பிறகு சிரமமான வினாக்களுக்கு ஒவ்வொன்றாக விடையளிக்க முயலலாம். அப்போதுதான் நேரம் போதவில்லை என்ற பிரச்சினை எழாது. நுழைவுத்தேர்வு எழுதுவதற்குப் பதற்றப்பட வேண்டியது இல்லை. பாடங்களை நன்றாகப் படித்திருந்தாலே தன்னம்பிக்கை தானாக வந்துவிடும். நம்பிக்கையுடன் தேர்வை எழுதுங்கள். வெற்றி நிச்சயம்! ஆதாரம்: நான் முதல்வன்