ஸ்வயம் பிளஸ் மத்திய கல்வி அமைச்சகத்தின் முன்முயற்சியுடன், சென்னை ஐஐடி மெட்ராஸ் செயல்படுத்திவரும் ஸ்வயம் பிளஸ் (SWAYAM Plus), வெற்றிகரமாக இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. தற்போது பொறியியல், வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீடு, இந்திய அறிவுசார் அமைப்புகள், ஐடி/ஐடிஇஎஸ் உள்ளிட்ட 15-க்கும் அதிகமான துறைகளில் 500-க்கும் அதிகமான ஆன்லைன் படிப்புகளை இத்தளம் வழங்குகிறது. தற்போதுவரை, 5,50,000-க்கும் அதிகமான கற்போர் இத்தளத்தில் பதிவு செய்துள்ளனர். தேசியக் கட்டமைப்புகளுக்கு இணக்கமான, உயர்தரமான, வேலைவாய்ப்பை மையமாகக் கொண்ட கற்றல் வாய்ப்புகளை வழங்குவதில் ஸ்வயம் பிளஸ் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பாடப்பிரிவுகள், சென்னை ஐஐடி-யின் கல்வி அங்கீகாரம், கிரெடிட் மதிப்பீட்டு வசதிகளையும் வழங்குகின்றன. புதிய செயற்கை நுண்ணறிவுப் பாடப்பிரிவுகள் சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) 'அனைவருக்குமான செயற்கை நுண்ணறிவு' இயக்கத்தின் கீழ் மூன்று புதிய செயற்கை நுண்ணறிவுப் படிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், அதிநவீன டிஜிட்டல் திறன்களைப் பரந்த பார்வையாளர்களுக்குக் கிடைக்கச் செய்யும் தனது நோக்கத்தை அது மேலும் வலுப்படுத்தியுள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘வளர்ந்து வரும் பொறியாளர்களுக்கான செயற்கை நுண்ணறிவு’, ‘நிர்வாகிகளுக்கான செயற்கை நுண்ணறிவு’, ‘பொறியியல் தூண்டல்’ ஆகிய பாடப்பிரிவுகள் தொடக்க நிலையில் இருப்போருக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றை கற்க கோடிங் அல்லது செயற்கை நுண்ணறிவு குறித்த அனுபவம் எதுவும் தேவையில்லை. வெவ்வேறு கல்வி, தொழில் பின்னணி உடைய கற்போருக்காக தொடங்கப்பட்டுள்ள இந்தப் பாடப் பிரிவுகள், செயற்கை நுண்ணறிவின் நடைமுறைப் பயன்பாடுகளில் கவனம் செலுத்தும் விதமாக ஐஐடி நிபுணர்களால் கற்பிக்கப்படுகின்றன. டிஜிட்டல் கற்றல் தளமான ஸ்வயம் பிளஸ், சென்னை ஐஐடி-யின் பிரவர்தக்குடன் இணைந்து வழங்கப்படும். பதிவு செய்யும் முறை இந்த மூன்று படிப்புகளுக்கும் பதிவு செய்வதற்கு 2026, மே 10 கடைசி நாளாகும். இந்த மூன்று பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கை தற்போது ஸ்வயம் பிளஸ் இணையதளத்தில் தொடங்கியுள்ளது. பாடப்பிரிவுகள் பொறியியல் ஆர்வலர்களுக்கான செயற்கை நுண்ணறிவுப் பாடப்பிரிவில் பைதான், செயற்கை நுண்ணறிவு, எந்திரக் கற்றல் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படும். இதற்கானக் கட்டணம் ரூ. 500 + ஜிஎஸ்டி ஆகும். நிர்வாகிகளுக்கான செயற்கை நுண்ணறிவுப் பாடப்பிரிவு, மேலாண்மைத் துறையில் உள்ள வல்லுநர்கள் செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றைப் பயன்படுத்தித் தெளிவான முடிவுகளை எடுப்பதற்கு வழிவகை செய்கிறது. பொறியியல் தூண்டல் பாடப்பிரிவு, துல்லியமான, அர்த்தமுள்ள முடிவுகளைப் பெறுவதற்குச் செயற்கை நுண்ணறிவு அமைப்புகளுடன் எவ்வாறு திறம்பட உரையாடுவது என்பதைப் பயிற்றுவிக்கிறது. இந்தப் பாடப்பிரிவுகளுக்கான கட்டணம் ரூ. 100 + ஜிஎஸ்டி. கூடுதல் விவரங்களைப் பெற https://swayam-plus.swayam2.ac.in/ai-for-all-courses என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது pmu-sp@swayam2.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதலாம். மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2255268®=3&lang=2 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்