கல்லூரி மாணவர்களின் தொழில் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் ‘நான் முதல்வன்’ திட்டம், போட்டித் தேர்வு மாணவர்களுக்கு உதவும்வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு முன்னெடுப்பைச் செய்துள்ளது. குடிமைப்பணி தேர்வுகளுக்குத் தயாராகும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு உதவும் நோக்கில், 2023-24 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீட்டுத் தேர்வின் வாயிலாகத் தேர்வு செய்யப்படும் 1000 மாணவர்களுக்கு 10 மாதங்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகையாக ரூ. 7500 வழங்குவதற்கான சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், முதல்நிலைத் தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்குத் தயாராவதற்காக ரூ. 25000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களை ஊக்கப்படுத்துவதோடு அவர்களது செலவுகளைக் குறைக்கும் நோக்கத்தோடும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஐ.ஏ.எஸ். (IAS) ஆர்வலர்களுக்கான இந்த மாதாந்திர ஊக்கத்தொகைத் திட்டமானது, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் செயல்படுத்தப்படும். கடந்த சில ஆண்டுகளாக, ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெறும் தமிழ்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு அகில இந்திய போட்டித் தேர்வுகளில் மீண்டும் தமிழ்நாட்டை முன்னிலைக்குக் கொண்டுவருவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். மேலும், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சியும் பாடக்குறிப்புகளும் கிடைப்பதை இத்திட்டம் உறுதிசெய்ய முனைந்துள்ளது. தகுதி மதிப்பீட்டுத் தேர்வை எழுத ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது 21. பொதுப் பிரிவினருக்கான அதிகபட்ச வயது 32. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் சீர்மரபினருக்கும் அதிகபட்ச வயது 35, பட்டியல் வகுப்பினருக்கும் பழங்குடியினருக்கும் அதிகபட்ச வயது 37, மாற்றுத் திறனாளிகள் 42 வயதைக் கடந்திருக்கக் கூடாது. ஐஏஎஸ் தேர்வுக்கான வயது வரம்பின் அடிப்படையில் மதிப்பீட்டுத் தேர்வுக்கான வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நான் முதல்வன் யுபிஎஸ்சி முதல்நிலை உதவித்தொகை ஒரு மாணவருக்கு இரண்டு முறை மட்டுமே அளிக்கப்படும். மதிப்பீட்டுத் தேர்வுக்கு https://portal.naanmudhalvan.tn.gov.in/prelims_registration/ என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கக் கடைசி நாள் 10.07.2025. 26.07.2025 அன்று முற்பகல் தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களிலும் மதிப்பீட்டுத் தேர்வு நடைபெறவுள்ளது. சரியான விடைகளைத் தேர்வுசெய்யும் வகையில் 100 கேள்விகளைக் கொண்டதாக இத்தேர்வு அமையும். 90 கேள்விகள் பொது அறிவு பிரிவிலிருந்தும் 10 கேள்விகள் சிசாட் [Civil Services Aptitude Test (CSAT)] எனப்படும் குடிமைப் பணித் தேர்வுகளுக்கான திறனறிவு பிரிவிலிருந்தும் கேட்கப்படும். தவறான கேள்விகளுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் - 1/3 பங்கு வழங்கப்படும். வினாத்தாள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். தேர்வுக்கான கால அளவு 2 மணி நேரம். இத்தேர்வில் முதலிடம் பிடிக்கும் 1000 மாணவர்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்படும். இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி இந்தப் பட்டியல் தயாரிக்கப்படும். இந்த மதிப்பெண் பட்டியலிலிருந்து சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் இயங்கிவரும் அகில இந்திய குடிமைப் பணி பயிற்சித் தேர்வு மையம், கோயம்புத்தூரிலும் மதுரையிலும் இயங்கிவரும் அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணி பயிற்சி நிலையங்களுக்கும் சேர்க்கை நடைபெறும். சென்னை பயிற்சி மையத்தில் 225 மாணவர்களுக்கு உண்டு உறைவிட வசதியுடன் முழுநேரப் பயிற்சியும் 100 மாணவர்களுக்குப் பகுதிநேரப் பயிற்சியும் அளிக்கப்பட்டுவருகிறது. கோயம்புத்தூர், மதுரை பயிற்சி நிலையங்களில் தலா 100 மாணவர்களுக்கு முழுநேரப் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தை நடத்திவரும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி, டிஎன்பிஎஸ்சி (TNPSC), எஸ்எஸ்சி (SSC), சீருடைப் பணியாளர் தேர்வாணைம் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கும் உதவும் வகையில் இணையம் வழியாகப் பயிற்சியளித்து வருவது குறிப்பிடத்தக்கது. AIM TN என்ற யூ-டியூப் தளத்தில் இந்தப் பயிற்சிக் காணொளிகள் பார்க்கக் கிடைக்கின்றன. இது தவிர வங்கித் துறை, ரயில்வே துறை, எஸ்எஸ்சி உள்ளிட்ட ஒன்றிய அரசின் மற்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும்வகையில் கட்டணமில்லாப் பயிற்சித் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றுவருகிறது. இத்திட்டத்தின் கீழ் 5000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் கட்டணமில்லா பயிற்சி, பாடநூல்கள், வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஐஏஎஸ் தேர்வுகளுக்கு ஊக்கத்தொகையுடன் பயிற்சி, எஸ்எஸ்சி தேர்வுகளுக்கு இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் சிறப்புக் கவனம், ஊரக மாணவர்களுக்கும் பயன்படும்வகையில் வல்லுநர்களின் காணொளி வகுப்புகள் என்று போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்கு ஏற்ற ஒரு சூழலைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்திவருகிறது. அரசுப் பணிகளின் வாயிலாக நாடு முழுவதும் தமிழ்நாட்டின் முத்திரையைப் பதிக்க கல்லுரி மாணவர்கள் தயாராக வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை 9