மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் புதிய பாடத்திட்டதின் கீழ் பயிற்சி தொடக்கம் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் மத்திய காலணி பயிற்சி நிறுவனம் (CFTI), நாட்டில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் காலணி உற்பத்தித் துறைக்குத் தேவையான திறன்மிக்க மனிதவளத்தை உருவாக்கும் நோக்கில், தேசிய தொழிற்கல்வி மற்றும் பயிற்சி மன்றத்தின் (NCVET) அங்கீகாரம் பெற்ற புதிய தொழில்முறைப் பயிற்சிப் பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தி, இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையைத் தொடங்கியுள்ளது. 1957-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனம், கடந்த 69 ஆண்டுகளாகத் தொழில்முறை கல்வி, திறன் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சித் துறையில் முன்னோடியாகச் செயல்பட்டு வருகிறது. காலணி உற்பத்தித்துறை அதிக அந்நிய செலாவணி மற்றும் அதிக வேலைவாய்ப்புகளை கொடுக்கிறது. கடந்த 40 ஆண்டுகளில் இந்தியாவில் உற்பத்தியாகும் 50 சதவீத தோல் காலணிகள் தமிழகத்தில் உற்பத்தியாகிறது. மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் (Central Footwear Training Institute) புதிய பாடத்திட்டதின் கீழ் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. பத்தாவது, பன்னிரண்டாம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு தனித்தனியாக நடைபெறும் பயிற்சி வகுப்புகளில் 18 வயதிலிருந்து 35 வயதுக்கு உட்பட்டவர்கள் சேரலாம். இங்கு வழங்கப்படும் பயிற்சிகள் எல்லாம் தேசிய தொழிற்கல்வி மற்றும் பயிற்சி மன்றத்தின் அங்கீகாரம் பெற்றவை. தொழில்துறையின் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப, அனைத்து நீண்டகால மற்றும் நடுத்தரகால பயிற்சிப் பாடத்திட்டங்களும் 70% செய்முறைப் பயிற்சி மற்றும் 30% வகுப்பறைப் பயிற்சியை உள்ளடக்கிய என்சிவிஇடி (NCVET) பாடத்திட்டமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 2,66,000-க்கும் மேற்பட்டோர் இந்நிறுவனத்தின் மூலம் பயிற்சி பெற்று முன்னணி காலணி உற்பத்தி நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். பிற மாநிலங்களிலிலிருந்து இங்கு வந்து பயிற்சி பெறும் மாணவர்களுக்கு அவர்களின் மாநிலங்களில் முன்னுரிமை அளிக்கப்பட்டு பணி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 250 முதல் 300 பேர் வரை இந்நிறுவனத்தில் பயிற்சி பெறுகிறார்கள். தற்போதைய தேவை 10 மடங்கு அதிகமாக உள்ளதால், இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் உளுந்தூர்பேட்டை, வேலூர், பெரம்பலூர், கரூர், திண்டிவனம், ராணிப்பேட்டை, ஆம்பூர், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி மற்றும் ஜெயங்கொண்டம் உள்ளிட்ட தொழில் மையங்களில் முன்னணி நிறுவனங்கள் ₹15,075 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் புதிய உற்பத்தித் தொழிற்சாலைகளை அமைத்து வருகின்றன. இதன் மூலம் அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் சுமார் 1.76 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்களும், 3,900-க்கும் மேற்பட்ட மேற்பார்வையாளர்களும் தேவைப்படுவார்கள். இத்தேவையை எதிர்கொள்ள பன்னாட்டு மற்றும் இந்திய நிறுவனங்கள், மத்திய காலணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. விளையாட்டு காலணி உற்பத்தித் துறையில் அதிகரித்து வரும் தேவைகளைக் கருத்தில் கொண்டு, ஒரு வருட கால "விளையாட்டு காலணி உற்பத்தி" சிறப்புப் பயிற்சிப் பாடத்திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு https://cftichennai.in/ பார்க்கவும். தொடர்பு கொள்ள : 044-22501529, 9677943733, 9677943633 ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்