தொழிற்சாலைகளில் ஏற்படும் பணியிட விபத்துகளைச் சமாளிப்பது குறித்த பாடத்திட்டம் சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி), பொருள் உற்பத்தி, சுரங்கம், எரிசக்தி மற்றும் தொடர்புடைய துறைகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைப்பதற்கான புதிய படிப்பைத் தொடங்கியுள்ளது. செயல்முறைப் பாதுகாப்பு சவால்களை நிர்வகிப்பதில் ஊழியர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் பாதுகாப்பு செயல்பாடுகளுக்கான முதுநிலை டிப்ளமோ படிப்பு முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது. வேதியியல், சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல், இன்ஸ்ட்ரூமெண்டேஷன் இன்ஜினியரிங், பெட்ரோலியம் மற்றும் தொடர்புடைய பிரிவுகளில் பிஇ/பிடெக் பட்டம் பெற்றவர்கள் அல்லது வேதியியலில் முதுநிலைப் பட்டத்துடன் இரண்டாண்டு அனுபவம் உடையவர்களை இப்படிப்பு இலக்காகக் கொண்டுள்ளது. சென்னை ஐஐடி வளாகம் சாராத அனைத்து கல்வி மற்றும் புறவெளி நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் மக்கள் தொடர்பு மற்றும் டிஜிட்டல் கல்வி மையம் (சென்டர் ஃபார் அவுட்ரீச் அண்ட் டிஜிட்டல் எஜுகேஷன்) மூலம் இப்பாடத்திட்டம் ஆன்லைன் முறையில் செயல்படுத்தப்படும் விண்ணப்ப பதிவுக்கு மே 31, 2025 கடைசி நாள். ஜூலை 13, 2025 அன்று நுழைவுத் தேர்வு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பின்வரும் இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம். https://code.iitm.ac.in/processsafety இதுபோன்ற படிப்புகளின் அவசியத்தை எடுத்துரைத்த சென்னை ஐஐடி முதுநிலை டிப்ளமோ (செயல்முறை பாதுகாப்பு) பாடத்திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ராஜகோபாலன் ஸ்ரீனிவாசன் கூறுகையில், “இந்தியாவில் பொருள் உற்பத்தி, சுரங்கம், எரிசக்தி போன்ற துறைகளில் 240 பணியிட விபத்துகள் நிகழ்ந்ததாக இன்டஸ்ட்ரியல் குளோபல் யூனியன் 2024-ல் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 850-க்கும் அதிகமானோர் கடுமையாக காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரசாயனம், மருந்துத் துறைகள் மிகக் கடுமையான விபத்துகளை சந்தித்திருக்கின்றன. இவை முக்கியமாக தொழில்துறை பாதுகாப்பு நடைமுறைகள், நெறிமுறைகள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததால் ஏற்படுகின்றன” எனக் குறிப்பிட்டார். பேராசிரியர் ராஜகோபாலன் ஸ்ரீனிவாசன் மேலும் கூறும்போது, "தொழில்துறையில் பணிபுரியும் வல்லுநர்களுக்காக பிரத்யேகமாக இப்பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த தங்கள் அறிவை மேம்படுத்திக் கொள்ளவும், விரிவுபடுத்திக் கொள்ளவும் இயலும். தனிநபர்கள் தங்கள் திறனை மேம்படுத்தவும், பாதுகாப்பு நெறிமுறைகள் பற்றிய புரிதலை ஏற்படுத்தவும், சமகாலப் பாதுகாப்பு தரநிலைகளுக்கு இணையாக இருக்கவும் ஒரு வாய்ப்பாக அமையும். இதன் மூலம் பாதுகாப்பான, நெகிழ்ச்சியான பணியிட சூழலுக்கு பங்களிக்க முடியும்" என்றார். பணிபுரியும் வல்லுநர்களுக்குத் தேவையான நெகிழ்வுத் தன்மையை வழங்கும் அதே வேளையில், சென்னை ஐஐடி வழங்கும் பட்டப்படிப்பின் கல்வித் திறனை நிலைநிறுத்தும் வகையில் முதுகலை டிப்ளமோ படிப்பு (செயல்முறை பாதுகாப்பு) வடிவமைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் முதல் டிசம்பர் வரை, ஜனவரி முதல் ஏப்ரல் வரை, மே முதல் ஆகஸ்ட் வரை என மூன்று செமஸ்டர்களைக் கொண்டதாக இந்த டிப்ளமோ படிப்பு அமைந்திருக்கும். மாணவர்கள் ஒரு பருவத்திற்கு அதிகபட்சமாக மூன்று பாடநெறிகளை எடுத்துப் படிக்க அனுமதிக்கப்படுவார்கள். முழுப் பாடத்திட்டத்தையும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் முடிக்கலாம். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்