அரசினர் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி, மாமல்லபுரம் கலைகளின் கருவூலமான செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரி என அறியப்படும் இக்கல்லூரி 1957இல் சிற்பக்கலை பயிற்சி மையமாக தமிழ்நாடு அரசு தொழில் மற்றும் வணிகத் துறையால் உருவாக்கப்பட்டது. அறிவியல், தொழில்நுட்பம், இலக்கியம், பயிற்றுவிக்கும் கல்லூரிகள் அல்லாது கலைகளை மட்டுமே போதிக்கும் ஒரு சில கல்லூரிகளிலும் தனித்துவம் பெற்றது இக்கல்லூரி! இது மரபு கலைகளுக்கான போதிமரம்! சான்றிதழ் படிப்பை மட்டுமே வழங்கிக் கொண்டிருந்த இக்கல்வி நிறுவனம் 1974-75இல் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு, பல் தொழில் பயிலக படிப்புகளுக்கு இணையாக இம்மையத்தின் பயிற்சிகளை மேம்படுத்தும் வகையில் பாடத்திட்டங்கள் மற்றும் தேர்ச்சி திட்டங்கள் அமைக்கப்பட்டது. அத்துடன் தமிழ்நாடு கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைப் பயிற்சி மையம் என பெயர் மாற்றம் கண்டது. 1980-81இல் தமிழ்நாடு அரசின் அனுமதி பெற்று சென்னை பல்கலைக்கழக இணைவோடு கோவில் கட்டடக்கலையியலில் மூன்று ஆண்டு கால பட்டப்படிப்பை துவக்கியது. பின்னர் 1984இல் கற்சிற்பம், சுதைச்சிற்பம், உலோகச்சிற்பம் மற்றும் மரச்சிற்பம் என்ற நான்கு விருப்பப்பாடங்களை உள்ளடக்கிய மரபு சிற்பக் கலையியலில் பட்டப்படிப்பு (பி.எஸ்ஸி மரபு சிற்பக்கலை) என அதன் வளர்ச்சி தொடர்ந்தது. காலத்தின் தேவைக்கேற்ப, தொழில்நுட்பக் கல்விக்கழகம் நிர்ணயித்த தரத்திற்கு மேம்படுத்தும் வகையில் கலை, கைத்தொழில் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு இணையாக 2000-2001இல் நான்காண்டு பட்டப்படிப்பாக கோயில் கட்டடக்கலையியலில் இளங்கலை மற்றும் மரபு சிற்பக்கலையியலில் இளங்கலை பட்டமும் துவங்கப்பட்டது. கூடுதலாக மரபு ஓவியம் மற்றும் வண்ணப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பும் துவங்கப்பட்டது. இளங்கவின் கலைப் பட்டப்படிப்புகள் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் மாமல்லபுரம் அரசினர் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி செயல்படுகிறது. இக்கல்லூரியில் இளங்கவின் கலைப் பட்டப்படிப்பில் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது: மரபு கட்டடக்கலை (B.Tech. / Bachelor of Technology in Traditional Architecture) மரபு வண்ணக்கலை BFA / Bachelor of Fine Arts in Traditional Painting) மரபு சிற்பக்கலை BFA/ Bachelor of Fine Arts in Traditional Sculpture) சுதைச் சிற்பம் (Sudhai Sculpture), கற்சிற்பம் (Stone Sculpture), மரச்சிற்பம் (Wood Sculpture), உலோகச்சிற்பம் (Metal Sculpture) முதுகலைப் பட்டப்படிப்புகள் இளைய சமுதாயத்தினர் தமிழகத்தின் தொன்மையான மரபு கட்டடக்கலை மற்றும் மரபு சிற்பக்கலை ஆகியவற்றை கற்று உலகளவில் நமது தமிழகத்தின் பாரம்பரிய கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையை வெளிப்படுத்தும் வகையிலும், மாணவர்களின் நலன் மற்றும் வேலை வாய்ப்பு கருதியும், மாமல்லபுரம், அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பிரிவுகளில் இரண்டாண்டுகால முதுகலைப் பட்டப்படிப்பு தொடங்க அரசு ஆணையிட்டுள்ளது. மரபு கட்டடக்கலை (M.Tech. Traditional Architecture) மரபு வண்ணம் (MFA Traditional Painting) மரபு சிற்பக்கலை (MFA Traditional Sculpture) (கற்சிற்பம், சுதைச்சிற்பம், மரச்சிற்பம், உலோகச்சிற்பம்) இதன் அடிப்படையில் மாமல்லபுரம், அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியில் முதுகலைப் பட்டப்படிப்புகள் 2026-2027ஆம் கல்வியாண்டு முதல் தொடங்கப்பட உள்ளன. மாணவர் சேர்க்கை இப்படிப்பில் சேர தொடர்புடைய துறையில் இளங்கலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். சேருவதற்கான உயர் வயது வரம்பு இல்லை. மேற்காண் முதுகலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கு தகுதி வாய்ந்த மாணவர்கள் கலை பண்பாட்டுத்துறையின் www.artandculture.tn.gov.in இணையதள முகவரியில் 14.10.2026 அன்றுக்குள் விண்ணப்பிக்கலாம். இம்முதுகலைப் பட்டப்படிப்பிற்கான இதர விவரங்களை மேற்காண் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இயக்குநர்கலை பண்பாட்டுத் துறை வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9 ஆதாரம்: செய்தி வெளியீடு எண்: 740 (25.09.2026)