கற்றல் - கற்பித்தல் சிறப்பாக நிகழ ஆசிரியருக்கான சில பரிந்துரைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. கற்றல் - கற்பித்தல் சிறப்பாக நிகழ ஆசிரியருக்கான பரிந்துரைகள் பொருத்தமான ஆசிரியர் மாணவர் உறவினை ஏற்படுத்தல். வகுப்பிலுள்ள குழந்தைகளுக்கு ஆர்வமளிக்கக் கூடிய வகையில் இருத்தல். கற்போரிடம் பரிவு காண்பித்தல். தன் வேலையை நன்கறிந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் வேலை செய்பவராக இருத்தல். போதுமான கல்வி கற்பிக்கும் சாதனங்களைப் பயன்படுத்துதல். எளிய, தெளிவான மொழியில் கற்பித்தல், கதை கூறுவதற்கும் தெரிந்திருத்தல். பின்தங்கிய மாணவரிடம் தனிக் கவனம் செலுத்தக் கூடியவராக இருத்தல். குழந்தைகளிடையே கேள்வி கேட்கும் ஆர்வத்தைத் தூண்டுபவராகவும், கேள்விக்குப் பொருத்தமான பதிலளிக்கக் கூடியவராகவும் இருத்தல். பொறுமையாகவும், நகைச்சுவையுணர்ச்சி உடையவராகவும், நயமாகவும் அழகாகவும் பேசக் கூடியவராகவும் இருத்தல். மதிப்பெண்களை அளிப்பதில் நியாயமானவராகவும், குழந்தைகளிடத்து மனிதாபிமானமிக்கவராயும் ஆசிரியர்கள் இருத்தல் வேண்டும். கற்றல் கற்பித்தலின் ஏழு அடிப்படைகள் ஒரு ஆசிரியை தன் கற்பித்தலை மேலும் மெருகூட்ட கீழ்வரும் கருத்துக்களை மனதில் கொள்ள வேண்டும். யார் கற்பிப்பது? யாருக்கு கற்பிப்பது? ஏன் கற்பித்தல் வேண்டும்? எங்கே கற்பித்தல் வேண்டும்? எப்படிக் கற்பிக்க வேண்டும்? எதைக் கற்பிக்க வேண்டும்? எப்பொழுது கற்பிக்க வேண்டும்? இவ்வடிப்படைக் கருத்துக்கள் ஆசிரியருக்கு கற்பித்தலை மேலும் பயனளிக்க கூடிய வகையில் இருக்க உதவும். பள்ளி மட்டுமே கற்பிக்கும் ஸ்தாபனமில்லை. சம்பிரதாயமாக இல்லாமல் வீட்டில் பெற்றோர், உடன்பிறந்தவர்கள் (அண்ணன், தங்கை) போன்றோரும், சேர்ந்து விளையாடும் நண்பர்களும், மாணவச் சமுதாயம் போன்றவையும் வகுப்பறைக்கு வெளியே கற்பதற்கு உதவி செய்கிறது. பள்ளி, வீட்டிற்குத் துணையாகவும், வீடு பள்ளிக்குத் துணையாகவும் இருந்து கற்பித்தலுக்கு உதவி புரிதல் வேண்டும். முன்பள்ளி ஆசிரியரை மதிப்பிடுதல்: மதிப்பிடுதல் எதிர்காலத்தில் பாடத்திட்டங்களில் முன்னேற்றம் ஏற்படச் செய்ய உதவுகிறது. ஒரு முன்பள்ளி ஆசிரியை தன்னுடைய கல்வி பாடத்திட்டங்கள் மூலம் குழந்தைகள் எந்த அளவு பயன் அடைந்துள்ளார்கள் என்பதையும் தன் திட்டங்களை எந்த அளவு நிறைவேற்றியுள்ளார் என்றும் மதிப்பீடு செய்யலாம். வரையறை: மதிப்பிடுதல் என்பது ஒரு சரி பார்க்கும் செயலாகும். அது மேலும் முன்னேறிச் செல்வதற்கு உதவுகிறது. கற்றலின் குறிக்கோள் எந்த அளவு அடைந்துள்ளனர் என்றும் அதன் தரம், செயல்திறனையும் கண்காணிக்க உதவுகிறது. தெளிவான குறிக்கோள் இருப்பின் மதிப்பீடு செய்தல் எளிதாக இருக்கும். நிர்ணயிக்கப்பட்ட குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு திட்டத்தின் வெற்றியை அல்லது தோல்வியைத் தீர்மானிக்க முடியும். ஒவ்வொரு முன்பள்ளி ஆசிரியரும் நிர்ணயித்த குறிக்கோளின் மூலம் குழந்தைகள் எந்த அளவுக்கு பயன் அடைந்துள்ளனர் என்று சரிபார்த்தல் வேண்டும். மதிப்பிடுதலின் நோக்கங்கள் முதல் நிலையில் மதிப்பீடு செய்தல் சில கேள்விகளுக்கு விடை கிடைக்கச் செய்கிறது. கல்வித் திட்டக் குறிக்கோளை அடைய ஆசிரியை மேற்கொள்ளும் நடவடிக்கையின் முன்னேற்றம் ஆசிரியையின் குறிக்கோள்கள் அடையக் கூடியனவா? பள்ளிப் பாடத்திட்டத்தில் மாற்றம் தேவையா? மதிப்பீடு செய்யும் போது ஒரு ஆசிரியை, மற்றொரு ஆசிரியையுடன் கல்வித் தரத்தை மேம்படுத்த ஒப்புமைப்படுத்திப் பார்க்கலாம். ஒரு தனிப்பட்ட குழந்தையின் தேர்ச்சி அறிக்கையை பெற்றோரின் கவனத்திற்கு அனுப்பும் போது முன்பள்ளி பற்றி நல்ல எண்ணம் பொது மக்களுக்கு ஏற்படுத்துகிறது. மேலும் பொதுமக்களுக்கு பள்ளியைப் பற்றி நன்மதிப்பை வளர்த்து நட்பு நிலையை ஏற்படுத்தும். மதிப்பிடுதலில் முக்கிய குறிக்கோள், மாணவர்களின் குறிப்பிட்ட பழக்கங்கள் போன்றவற்றை அறிய சரியான அளவு கோலைத் தேர்வு செய்து, உருவாக்கி, செயல்படுத்துதல் போன்றவை அதன் முக்கிய படிகளாகும். முன்பள்ளியில் ஒவ்வொரு வருட முடிவிலும் பாலர் பள்ளி ஆசிரியர் கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என தன்னைத் தானே மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும். குழந்தையால் சிறு தசைகளை ஒருங்கிணைக்க முடிகிறதா? குழந்தையால் வடிவங்களை வெட்டவும், படங்களை வரையவும் முடிகிறதா? எந்த அளவிற்கு பெரிய தசைகளின் ஒருங்கிணைப்பை செய்ய முடிகிறது? அவனால் பந்தை ஒர் குறிப்பிட்ட திசையில் எறிய முடிகிறதா? அவனை நோக்கி எறியப்படும் பந்தைப் பிடிக்க முடிகிறதா? அந்தக் குழந்தை பள்ளிக்கு செல்ல தயார் நிலையில் உள்ளதா? வடிவங்களை அறிந்து கொண்டுள்ளதா? பலவித ஒலிகளை வேறுபடுத்தி அறிகிறதா? வண்ணங்களை அடையாளம் காண்கிறதா? குழந்தையால் சரளமாகப் புரிந்து கொண்டு எண்ணத்தை வெளியிட முடிகிறதா? படிக்கும் போது குழந்தையால் புரிந்து கொள்ள முடிகிறதா? தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலை பற்றி குழந்தையால் அறிந்துக் கொள்ள முடிகிறதா? முழு ஆண்டின் திட்ட செயல்பாட்டை மறுபடியும் ஆய்வு செய்து ஆசிரியை மதிப்பீடு செய்ய வேண்டும். திட்டத்தை மதிப்பீடு செய்ய ஆசிரியை அவரது பணியினைப் பற்றிய சில கேள்விகளுக்கு பதில் அளித்து அவரே மதிப்பிட்டு கண்டறிய வேண்டும். பாடத்தின் குறிக்கோளை அடைய முடிகிறதா? கற்றல் அனுபவங்களில் எவை மிகுந்த ஆர்வத்தை மாணவரிடையே ஏற்படுத்தியது. ஏன்? திட்டத்தின் எப்பகுதி தோல்வியடைந்தது. ஏன்? திட்டத்தில் ஏதேனும் மாறுதல் செய்யப்பட்டுள்ளதா? செயல்களுக்கென ஒதுக்கப்பட்ட நேரம் உகந்ததாக உள்ளதா? ஒவ்வொரு முன்பள்ளி ஆசிரியையும் திட்டத்தை மதிப்பீடு செய்து குழந்தைகளுக்கு திட்டமிட்டவாறு செயல்பட முடிந்ததா இல்லையா என்றும் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் இதனால் மாணவர்கள் பயன் அடைந்தனரா என்றும் அறிய வேண்டும். ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை